COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 16, 2012

மண்ணில் பாதி
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி..

‘புதிய புதிய வெற்றிகள்... புதிய புதிய திருமணங்கள்... இரண்டுக்கும் அவற்றுக்கே உரிய முக்கியத்துவம் உண்டு. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல வெற்றி பழையதாகிவிடும். நாட்கள் செல்லச்செல்ல மனைவிக்கும் வயதாகிவிடும். அந்தக் கவர்ச்சி தங்காது. அதன் பிறகு அந்த அனுபவம் இருப்பதில்லை’.
கான்பூரில் கவிதை மாநாடு துவக்கிவைக்க சென்ற மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் பேசிய வன்மொழிகள் இவை. அவர் துவக்கி வைத்துக் கொண்டிருந்த போது டி 20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை இந்தியா வென்றுவிட்ட செய்தி வந்தபோது பட்டாசு வெடித்து கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது அவர் இப்படிச் சொல்லியுள்ளார்.
அவர் பேசும்போது அதற்கு இடையூறாக யார் பட்டாசு வெடிக்கிறார்கள்? உண்மையில் அவருக்கு எரிச்சல் மேலிட்டிருக்கிறது. எரிச்சலை வெளிப்படுத்த இப்படி சொல்லியுள்ளார். பேச்சில் எவ்வளவு வன்மம்? எவ்வளவு வக்கிரம்? எவ்வளவு ஆணாதிக்க ஆணவம்? பொது நிகழ்ச்சியில் இப்படிப் பேச என்ன துணிச்சல்?
நாடு முழுக்க கண்டனங்களும் எதிர்ப்பும் எழுந்ததும் காங்கிரஸ் அவரிடம் விளக்கம் கேட்க அவரும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். விளக்கத்திலும் அது கவிதை விழா, நகைச்சுவை கூட்ட அப்படிச் சொன்னதாகச் சொல்கிறார். அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், அனைத்தும் அங்கேயே முடிந்துவிட்டது என்று காங்கிரசின் அதிகாரபூர்வ பேச்சாளர் மனீஷ் திவாரி சொல்கிறார். அப்படியானால், பெண்களை தரக்குறைவாக பேசிய ஒருவர், அப்படி பேசுவது நகைச்சுவை என்கிற ஒருவர் அமைச்சராக நீடிப்பார்.
அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆணாதிக்க அரசியல்வாதிகளும் பெண்கள் எப்போதும் போகப் பொருட்கள், அவர்கள் அடக்கஒடுக்க மாக வீட்டுக்குள் அடைந்துகிடக்க விதிக்கப்பட்டவர்கள் என்று சர்வசாதாரணமாக சொல்லி விடுவது பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு உரிமம் வழங்கி விடுகிறது. 2001 - 2011 காலகட்டத்தில் 30 லட்சம் பெண் குழந்தைகளைக் காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை சமீபத்திய ஆய்வொன்று தருகிறது.
அரியானாவில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அரியானாவில் ஒருமாத காலத்தில் 15 பாலியல் வன்முறை குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்களை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவிட வேண்டும் என்ற காப் பஞ்சாயத்துக்கள் சொல்வது சரியே என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா. இந்த மாதம் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்களில் ஒருவர் திருமணம் ஆனவர். இதற்கு என்ன பதில் உள்ளது அவரிடம்? சவுதாலா சமூகத்தை பின்னோக்கித் திருப்பப் பார்க்கிறார்.
அரியானாவில் ஜிந்த் பகுதியில் இரண்டு பேரால் கூட்டுபாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சோனியா அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொல்கிறார். சோனியா, ஜெய்ஸ்வாலின் வக்கிரக் கருத்துக்கள் பற்றி இன்னும் எதுவும் சொல்லவில்லை.
பெண்களை இழிவுபடுத்திய ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலும் பெண்கள் மீது நடத்தப்படுகிற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டாத ஹ÷டாவும் சோனியாவின் ஜிந்த் விஜயத்தால் பாதுகாக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பேசிய அமைச்சருக்கும்தான் வயதாகிறது. அவர் மனைவிக்கும்தானே இவரைப் பார்த்து பார்த்து சலித்து போயிருக்கும்? அவர் மனைவி என்ன செய்ய வேண்டும் என்று அவர் சொல்கிறார்? அந்தப் பெண் சுதந்திரம் விரும்பும் ஒரு  பெண்ணாக இருந்து வேறுவிதமாக முடிவுகள் எடுத்தால் ஜெய்ஸ்வால் போன்றவர்களின் நிலைமை என்னவாகும்?
ஆளும் வளரணும், அறிவும் வளரணும் என பட்டுக்கோட்டையார் சின்னப்பயலுக்குப் பாடிய பாடல் நமது அமைச்சருக்குப் பொருந்தும். ஜெய்ஸ்வால் மத்திய அமைச்சர் பதவியில் தொடரும் தகுதியை இழந்துவிட்டார். அவர் பதவி விலக வேண்டும். காங்கிரசும் சோனியாவும் அவரைப் பாதுகாப்பதை விட்டுவிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Search