COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, October 6, 2012

திராவிட இயக்கத்தின் பரிணாமம்
மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இழந்து, தனிமைப்பட்டு நிற்கிறபோது, கருணாநிதிக்கு திராவிட இயக்கத்தின் முன்னோடி என்ற அடையாளம் தேவைப்படுகிறது. திராவிட இயக்கத்தில் எஞ்சியிருக்கிற ஏகபோக வாரிசு தானே என்று சொல்லி அதை முன்னிறுத்தும் போது கூடவே ஜெயலலிதாவுக்கு பார்ப்பன முத்திரை குத்திவிட முடியும் என்பதாலும் ஜெயலலிதா திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று சொல்ல முடியும் என்பதாலும் அதைக் கையில் எடுக்கிறார்.
திராவிட இயக்கத்தில் கொண்டாட இப்போது ஏதுமில்லை என்ற தெளிவு பெற்றவராக ஜெயலலிதா இருப்பது போல் தெரிகிறது. அவர் போட்டியில் இறங்கவில்லை.

முதலாளித்துவத்திற்கு முற்போக்கு பண்புகள் இருந்ததை மார்க்சியக் கொள்கைகளைக் கடைபிடிப்பவர்கள் மறுப்பதில்லை. திராவிட இயக்கத்தில் இருந்த முற்போக்கு அம்சங்களை மறுப்பதற்கில்லை. இறுகிப் போன ஒரு சமூக கட்டமைப்புக்கு ஓர் அடி தருவது மேல் கீழ் அடுக்குகளில் தலைகீழ் மாற்றங்கள் என்று இல்லாவிட்டாலும் மாற்றங்களைக் கொண்டு வருவது என்ற அளவில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகத் தன்மையை திராவிட இயக்கம் கொண்டிருந்ததை மறுக்க முடியாது. கடுமையான, இறுக்கமான வர்ணாசிரம தரும ஒடுக்குமுறை இருந்த காலத்தில் பார்ப்பனியத்துக்கு, பிற்போக்கு கருத்துக்களுக்கு சவால்விட்ட ஜனநாயக உள்ளடக்கம் திராவிட இயக்கத்துக்கு அன்று இருந்தது. அன்று நடந்த அந்த இயக்கங்களுக்கு இன்றைய திராவிட கட்சிகள் மட்டும் சொந்தக்காரர்கள் அல்ல. பல்வேறு பிரிவு தமிழக மக்களின் பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியப்படவில்லை.
திராவிட இயக்கத்தில் இருந்த ஒரு சில முற்போக்கு விழுமியங்களை இந்த நூறு ஆண்டுகளில் அவற்றின் எதிர்மறைகளாக மாற்றியுள்ளவர்கள் இன்று அந்த போராட்ட மரபை தனது என்று சொந்தம் கொண்டாடப் பார்க்கிறார்கள். திராவிட இயக்கத்தை தாம்தான் கட்டிக்காப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் சங்கர மடமும் (பார்ப்பனர்) திருப்பனந்தாழ், மதுரை மடங்களும் (வெள் ளாளர்) செல்வாக்கு பெற்றவை. இந்த இரு வகை மடங்களின் கட்டுப்பாட்டில் ஏராளமான நிலங்கள் சொத்துக்கள் உள்ளன. இவை இன்றும் நிலப்பிரபுத்துவத்தின் அச்சு அடையாளங்களாக இருந்து வருகின்றன. இவை பல நூற்றாண்டு கால வரலாற்று கொண்டவை. இது திராவிட இயக்க வரலாற்றிற்கு முந்தைய காலம். இவ்விரு வகை மடங்களுக்கும் இடையிலான முரண்பாடு பல வகைகளில் இருந்து வந்தன. இருந்து வருகின்றன. வைணவம் என்றும், சைவம் என்றும் இவற்றுக்கிடையிலான மோதல்களைப் பார்க்க முடியும். இந்த மோதல்கள் நிலப்பிரபுத்துவத்தின் இரண்டு கூறுகளுக்கு இடையில் நடந்த மோதல். இந்த வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து திராவிட இயக்கத்தின் வரலாற்றைத் துவங்க வேண்டும்.
பார்ப்பனிய சமூகம் படிநிலை சாதி ஆதிக்கமும், வர்ணாசிர்ம தர்மமும் கொண்ட அமைப்பு. ‘பார்ப்பனியம்’ இந்திய வகையிலான நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு. வெள்ளாளர் ஆதிக்கமும் பார்ப்பனிய வகை நிலப்பிரபுத் துவம்தான் சொத்துடைய வர்க்கங்களிடையே நடந்த போராட்டம். ஒருவகையில் சொல்லப் போனால் பார்ப்பனியத்தின் உள்குத்து.
நீதிக்கட்சி பிறப்பெடுப்பதற்கு முன்பே தலித் இயக்கங்கள் இருந்து வந்தன. சென்னை நகரில் திராவிட மகாசபா, ஆதி திராவிட மகாசபா, பறையர் மகாசபை போன்ற தலித் அமைப்புகள் ‘தலித்துகளுக்கு தனித் தொகுதி’ போன்ற கோரிக்கைகளை எழுப்பி வந்தன.
1912ம் ஆண்டையே கருணாநிதி திராவிட இயக்கத்தின் துவக்க ஆண்டாக வரையறுக்கி றார். திராவிட இயக்கத்தின் முக்கிய நிகழ்வாக 1916 நவம்பர் 20யைக் குறிப்பிடலாம். அன்று வேப்பேரியில் எத்திராஜ் முதலியார் வீட்டில் பார்ப்பனர்கள் அல்லாத தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டாக்டர் சி.நடேச முதலியார் தலைமையில் டி.எம். நாயர், பிட்டி தியாகராய செட்டியார், திவான் பகதூர், பி.ராஜரத்தின முதலியார், திவான் பகதூர் பி.எம். சிவஞான முதலியார், திவான் பகதூர் ராமநாயநிங்கர் திவான் பகதூர் எம்.ஜி. ஆரோக்கியசாமிப்பிள்ளை திவான் பகதூர் ஜி.நாரயணசாமி ரெட்டி, ராவ்பகதூர் கே. வெங்கட ரெட்டி, ராவ்பகதூர் ஓ.தணிகாசலம் செட்டியார், ராவ்பகதூர், எம் ராஜா, டாக்டர் முகமது உஸ்மான் சாகிப், ஜே.எம். நல்லுசாமி பிள்ளை, ராவ்பகதூர் வெங்கட்ட ரெட்டிநா யுடு, ராவ்பகதூர் ஏபி.பாத்ரோ, ஓ.கந்தசாமி செட்டியார், ஜேஎன் ராமநாதன், கான்பகதூர் ஏகேஜி.அகமது தம்பி மரைக்காயர், அலமேலு மங்கை தாயாரம்மாள், ஏ.ராமசாமி முதலியார், திவான்பகதூர், கருணாகர மேனன், டி.வரதரா ஜ÷லு நாயுடு, எல்கே.துளசிராம், கே.அப்பாராவ் நாயுடுகாரு, எஸ்.முத்தையா முதலியார், மூப்பில் நாயர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.’ பெயர் பட்டியலைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுடைய வர்க்கப் பின்னணி சொல்லாமலே விளங்கும். ராவ்பகதூர் முதல் திவான் பகதூர் வரை பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்திற்கு கிடைத்த பட்டங்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியைச் சேர்ந்தவர்கள். அதனாலேயே தென் இந்திய நலவுரிமைச் சங்கம் என்று பெயர் வைக்க வேண்டியிருந்தது. இதற்கு முன்பு 1912 நவம்பர் 12ல் இருந்து செயல்பட்ட சங்கத்திற்கு திராவிட சங்கம் எனப் பெயரிடப்பட்டிருந்தது. தென் இந்திய நலவுரிமைச் சங்கத்தின் ஆங்கிலப் பத்திரிகையின் பெயர் ‘ஜஸ்டிஸ்’. தென் இந்திய நலவுரிமைச் சங்கம் பத்திரிகையின் பெயருடன் ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’, நீதிக்கட்சி ஆனது. 1938ல் பெரியார் நீதிக்கட்சியின் தலைவரானார். 1944ல் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றினார்.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது, நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் 13 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்திருக்கிறது. காங்கிரஸ் 9 ஆண்டுகள் இருந்திருக்கிறது. 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் 20 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது. திராவிட கட்சிகள் 45 ஆண்டுகள் ஆள்கின்றன. ஆக, கருணாநிதி சொல்கிற திராவிட இயக்கத்தின் நூறாண்டு வரலாற்றில் 58 ஆண்டுகள் ஆட்சி செய்த வரலாறே.
அன்று இருந்த திராவிட இயக்கத்திலும் மொழிப் போருக்குப் பிறகு, அதை ஆட்சியைப் பிடிக்க பயன்படுத்தியதற்கு அப்பால் ஏதும் இல்லை. திராவிட இயக்கம் என்று கருணாநிதி ஏதாவது சொல்வாரானால் இது அங்கேயே முடிந்து விடுகிறது. அதற்கும் முன்பு கூட பார்ப்பன எதிர்ப்பு இருந்ததே தவிர, திராவிட இயக்கத்தில் சாதிய எதிர்ப்பு இல்லை.
பார்ப்பன எதிர்ப்பும், இனவாதமும் திராவிட இயக்கத்தின் முக்கிய கூறுகள். திராவிட இயக்கத்தின் நூறாண்டு வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம். நீதிக்கட்சியின் ஆரம்ப கால வர்க்க அடித்தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கேற்ப திகவிலிருந்து திமுக, திமுகவில் இருந்து அதிமுக என காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது. ‘திராவிட நாடு’ ‘தனித் தமிழ்நாடு’ பின்பு ‘மாநில சுயாட்சி, ‘மாநிலத்திற்கு அதிக அதிகாரம்’ என்பதெல்லாம் சொற்சிலம்பமானது. அண்ணாத்துரையின் ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்ற முழக்கம் இப்போது பெருமுதலாளித்துவ மூலதனத்தோடு சங்கமித்து காலவதியாகிவிட்டது.
மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டதால் புதிய கட்சியாக திமுக வரவில்லை. திராவிட கழகத்துக்கு தலைவராக, கட்சியில் இருந்த நிதிக்கு பொறுப்பாளராக மணியம்மை வர வேண்டும் என்று பெரியார் பார்த்ததால் திமுக உருவானது. அன்றே  பெண்ணடிமை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு எல்லாம் துடைத்தழிக்கப்பட்டுவிட்டது. பெண்கள் பற்றிய கழிசடைக் கருத்துக்கள் செழித்தது அண்ணா - கருணாநிதி காலத்தில்தான்.
பெரியார் கருத்துக்களை அங்கேயே புதைத்துவிட்ட சிஎன் அண்ணாதுரை ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றார்; ஏழையின் சிரிப்பில் இறைவனைப் பார்த்தார்; தான் முற்றும் துறந்த முனிவரல்ல, ஒரு பெண்ணை பத்தினி அல்ல என்றார். கொள்கை வேட்டி எப்போதும் பதவி துண்டுக்கு வழிவிட்டது. அரசியலில் நிரந்தர நண்பரோ எதிரியோ இல்லை என்ற மகத்தான தத்துவத்தை தந்தார். ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே நடந்த வெண்மணிப் படுகொலையில் நெல் உற்பத்தியாளர் சங்கம் பக்கமே நின்றார். தமிழகம் முழுவதும் எழுந்து வந்த குலக் பிரிவினருக்கு, கிராமப்புறப் பணக்காரர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று துணிச்சல் தந்தார்.
மஞ்சள் துண்டுடன் காட்சி தருகிற கருணாநிதி அவர் எப்போதும் சொல்வதுபோல் இந்த அண்ணாத்துரை வழியைத்தான் அயராது பின்பற்றுகிறார். ஜெயலலிதாவை அரசியல் எதிரி என்று தளத்தில் எதிர்கொள்வதற்கு மாறாக, அவரை பெண் என்ற தளத்தில் எதிர்கொள்வதே அவருக்கு பெரும்பாலான நேரங்களில் கைப்படுகிறது. நெருக்கடி கால கட்டத்தில் நெருப்பாக இருந்த இந்திரா காந்தியை நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று வரவேற்றார். படுக்கையறைக்குள் புகுந்த நச்சுப்பாம்பாக இருந்த பாஜக மத்தியில் செல்வாக்கு வேண்டும் என்பதால் கூட்டணிக் கட்சியானது. உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதில் முன்னுதாரணமாய் தமிழ்நாட்டை மாற்றினார். விஞ்ஞானரீதியான ஊழலை வளர்த்தெடுத்தார்.
திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தை தமிழக மக்களின் மிகவும் இருண்ட காலம் என்று சொல்லலாம். பசுமை புரட்சியால் ஏற்பட்ட விவசாய நெருக்கடியால் கோவையை மய்யமாகக் கொண்டு நாராயணசாமி நாயுடு தலைமையில் சாகுபடியாளர் இயக்கமும், தருமபுரியில் பாலன், கண்ணாமணி தலைமையில் விவசாய கூலித் தொழிலாளர் இயக்கமும் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில்தான் உருவாயின. சாகுபடியாளர் இயக்கம் தமிழகத்தின் அனைத்து அடுக்கு விவசாயிகள் குலக்குகள் தலைமையில் வெகுமக்கள் இயக்கமாக இருந்தது. இந்த இரண்டு இயக்கங்களையுமே எம்ஜிஆர் அரசாங்கம் ஒடுக்கியது. சாகுபடியாளர் இயக்கத்தின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கோவையில் பெருமாநல்லூர், நெல்லையில் வாகைகுளம், திண்டுக்கல்லில் வேடசந்தூர் என விவசாயிகள் கொல்லப்பட்டனர். நெல்லையில் காவல்துறை அதிகாரி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ராணுவம் வரவழைக்கப்பட்டது.
கிராமப்புறங்களில் பாலன், கண்ணாமணி தலைமையில் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தின் ஊடே கந்துவட்டிக் கொடுமையாளர்கள் மக்கள் போராட்டங்களால் வீழ்த்தப்பட்டனர். இளைஞர்கள் போராட்டங்களில் ஈர்க்கப்பட்டிருந்தனர். இந்தப் போராட்டங்களின் மீது எம்ஜிஆர் அரசாங்கம் ஏவிய ஒடுக்குமுறையில் 23 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அப்போதுதான் நக்சல்பாரி ஒழிப்பு தனிப்பிரிவு கியு பிரான்ச் உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவுதான் பிறிதொரு கட்டத்தில் ஈழ ஆதரவாளர்களை வேட்டையாடியது. காவல்துறை ராஜ்ஜியம் உருவானது, தேவாரம் போன்ற மாதிரிகள் உருவானது இந்தக் கட்டத்தில்தான். சென்னையில் கடற்கரையை அழகுபடுத்த மீனவர் குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன. இதற்கெதிராக எழுந்த போராட்டங்களை தேவாரம் ஒடுக்கினார்.
இந்தக் காலகட்டத்தில்தான் திராவிட கட்சிகளில் முதலியார் செட்டியார் வேளாளருடன் முக்குலத்தோர்  வெள்ளாள கவுண்டர் அடித்தளம் இணைந்தது. எம்ஜிஆர் ஆட்சியின் இறுதியில் வன்னியர் இடஒதுக்கீட்டிற்கான இயக்கம் துவங்கியது. விழுப்புரத்தில் 20க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வன்னியர், தலித் இயக்கங்கள் மீதான ஒடுக்குமுறை என குலக் கட்சியாக அதிமுக தன்னை உறுதிப்படுத்திக் கொண்டது. பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் குலக் நலன்கள் இணைக்கப்பட்டன.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான் முதன் முதலாக மத்திய அரசாங்கத்தில் இரண்டு அஇஅதிமுக அமைச்சர்கள் பதவி வகித்தனர். கட்சியின் பெயரில் இருந்த ‘அகில இந்திய’வுக்கு ஏற்றவாறு இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக அஇஅதிமுக தெளிவாக தன்னை நிறுத்திக் கொண்டது.
ஆரம்பக் கல்வியில் சத்துணவு என்று போக்கு காட்டி, உயர்கல்வியை தனியார்மயம் ஆக்கியதில் முன்னோடி எம்ஜிஆர். பால் பண்ணை தொழிலாளர் போராட்டத்தை கைதிகளை வேலைக்கமர்த்தி முறியடித்தவர் எம்ஜிஆர். தபால் ஊழியர் போராட்டத்தை எதிர்கொள்ள ராணுவம் வேண்டும் என்றவர் எம்ஜிஆர். என்ன வதம் இல்லை எம்ஜிஆர் ஆட்சியில்? ஜெயலலிதா இன்று வரை எம்ஜிஆர் ஆட்சியை பிசகின்றி தொடர்கிறார்.
கருணாநிதி, கனிமொழியை ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து விடுவிக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா ஆருயிர் தோழி சசிகலாவுடன், வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுபட பெங்களூர் நீதிமன்ற படிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த விதத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள் ஊழல் தேசிய நீரோட்டத்தில் ஒன்றுகலந்து விட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழலும் கோல்கேட் ஊழலும் சந்தித்து கை கொடுத்துக் கொண்டன. பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் சோனியா  - மன்மோகன், அத்வானி - மோடி ஆகியோருடன் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அணிவகுத்து நிற்கின்றனர்.
தமிழ் இனத் தலைவர் என உலா வந்த கருணாநிதி தமிழ் இனத் துரோகியாக உலா வந்து கொண்டிருக்கிறார். காலங்கடந்த டெசோ மாநாடு கவைக்குதவவில்லை. இலங்கைத் தமிழ் மக்கள் நலனுக்கு எதிராக எப்போதும் பேசி வந்த ஜெயலலிதா, தமிழர் நலம் பேணுபவராக வேடம் தரித்துள்ளார். வரலாற்றில் இதுபோன்ற நகைமுரண்களுக்குப் பஞ்சமில்லை. திராவிட கட்சிகளின் வரலாற்றிலும் இதற்குப் பஞ்சமில்லை.

Search