COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 16, 2012

பயணம்
கூடன்குளம் போராட்டம் ஜனநாயகத்துக்கான, உண்மைக்கான, நியாயத்துக்கான போராட்டம்
திபங்கர் பட்டாச்சார்யா
2012, செப்டம்பர் 30 அன்று, டில்லி மவலங்கர் அரங்கில், ஆழமடைந்து வரும் தேசத்தின் நெருக்கடியில் தலையீடு செய்ய இடதுசாரி மற்றும் ஜனநாயக நிகழ்ச்சிநிரல் பற்றி விவாதிக்க, டில்லி மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இடதுசாரி செயல்வீரர்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் வெகுதொலைவில் இருந்து ஒருவரும் கலந்து கொண்டார். ஒரு காணொளி செய்தியில் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கூடன்குளம் அணுஉலையை எதிர்ப்பதற்குத் துணிந்ததால், இந்திய அரசாங்கத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் கூடன்குளத்தில் உள்ள போராடுகிற மக்களோடு இடதுசாரிகள் நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாôர். கூடன்குளம் மக்களின் நியாயமான கோரிக்கைக்கும் போராட்டத்துக்கும் ஆதரவாக அக்டோபர் 1 முதல் 15 வரை நாடு தழுவிய இருவார கால இயக்கம் நடத்த கருத்தரங்கம் முடிவு செய்தது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, மாலெ கட்சியின் தலைவர்கள், அரசு ஒடுக்குமுறையையும் மீறி, 400 நாட்களுக்கும் மேலாக உள்ளூர் மக்கள் துணிச்சலுடன் போராட்டம் நடத்திவரும் இடிந்தகரைக்கு செல்ல முடிவு செய்தனர்.

ஆசியாநெட் செய்தியாளர் ஒருவர், அங்கே செல்ல நான் அனுமதிக்கப்படுவேன் என்று நினைக்கிறேனா என்று என்னைக் கேட்டபோது, அடுத்த நாள் அங்கு எங்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய முதல் அறிகுறி எனக்குத் தெரிந்தது. தங்கள் நிலங்கள் போஸ்கோ நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்படவுள்ளதற்கு எதிராக போராடுகிற ஒடிஷா மக்களுக்கு ஒருமைப்பாடு தெரி விக்க ஜகத்சிங்பூரின் தின்கியா மற்றும் பல கிராமங்களுக்கு பல முறை சென்றுள்ளோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறாமல் தடுக்கப்பட்ட போதும், கிராமங்களுக்குச் செல்வதில், மக்களை சந்திப்பதில் வெளியில் இருந்து செல்லும் செயல்வீரர்களுக்கு பிரச்சனை இருந்ததில்லை. ஜெயலலிதா, நவீன் பட்நாயக் வழியை பின்பற்றுகிறார் என்றும் தமிழ்நாட்டில் ஒடிஷா மாதிரியை அமலாக்குகிறார் என்றும் நான் முன்பு கருதினேன். ஆனால், அக்டோபர் 1 அன்று தூத்துக்குடி விமானநிலையத்தை அடைந்தபோது, ஜெயலலிதா அவரது புதிய கூட்டாளியை விஞ்சிவிட்டார் என்று தெரிந்து கொண்டேன். அவர் இடிந்தகரையை நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மறைத்து, கூடன்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடுகிற வீரமிக்கப் போராட்டக்காரர்களை, தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் உள்ள எண்ணிலடங்கா நண்பர்களிடம் இருந்தும் ஆதரவாளர்களிடம் இருந்தும் பௌதீகரீதியாக தனிமைப்படுத்தப் பார்க்கிறார்.
முதலில் திருநெல்வேலியில் எங்கள் தோழர்களுடன் ஓர் ஒருமைப்பாட்டு கூட்டம் நடத்திவிட்டு பிறகு அங்கிருந்து இடிந்தகரை செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடிந்தகரை நோக்கி தோழர்கள் செல்வதைத் தடுக்க பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. நாங்கள் எங்கள் திட்டத்தை மாற்றி நேராக இடிந்த கரைக்கு பயணப்பட்டோம். கட்சிக் கொடி ஏதும் கட்டப்படாத, வெளியில் இருந்து பார்த்தால் இகக மாலெ தலைவர்கள் செல்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு வாகனத்தில் இடிந்தகரைக்கு மிக அருகில் சென்றுவிட்டோம். ஆனால், ராதாபுரத்தை அடைந்தவுடன், காவல்துறையினர் எங்களை தடுத்துவிட்டனர். நாங்கள் ‘சுதந்திரமாக’ திரும்பிச் செல்வது அல்லது கைது செய்யப்படுவது என்ற இரண்டில் ஒன்றை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். சில நாட்களுக்கு முன்பு தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனும் கேரளா - தமிழ்நாடு எல்லையில் இருந்து அப்படித்தான் திருப்பி அனுப்பப்பட்டார் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. இந்த பொருளற்ற சந்தேகத்துடனான அச்சத்துக்கு எதிராக, தங்கள் சொந்த நாட்டில், சுதந்திரமான குடிமக்களின் சுதந்திரமாக நடமாடும் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராக காவல்துறையினருடன் நாங்கள் வாதாடினோம். ஆனால் அதனால் பலனின்றி போனது. காவல்துறையினர் எங்களை கைது செய்தனர். திருநெல்வேலியில் இருந்து புறப்பட்ட தோழர்களும் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தியும் வந்தது.
இந்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் பொய்களை எதிர்கொண்டு, உண்மையின், நியாயத்தின் பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிற, வீரமிக்க எங்கள் சகோதர, சகோதரிகளை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல நாங்கள் இடிந்தகரை செல்ல விரும்பினோம். பாதுகாப்புதான் முக்கியமானது என்று உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் இந்த விசயத்தில் மிகவும் முக்கியமான பாத்யதை கொண்டவர்கள் என்று அது கருதவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகி றது. கூடன்குளத்தின் வீரமிக்க, போராடுகிற மக்கள் எங்கள் அனைத்து ஆதரவுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உரித்தானவர்கள். ஏனென்றால் உள்ளாற்றல்மிக்க ஒரு பேரழிவை வரவேற்கிற ஆட்சியாளர்களின் அப்பட்டமான காரணகாரியமற்ற, எதேச்சதிகார நடவடிக்கைக்கு எதிராக மொத்த உலகத்தின் கவனத்தையும் திருப்பியிருக்கிறார்கள். பேரழிவு ஏற்பட்ட பிறகுதான் செர்னோபிள், புகுஷிமா என்ற பெயர்களை உலகம் கேட்டது. ஆனால், ஜெய்தாபூரும் கூடன்குளமும் வேறு வகையைச் சேர்ந்தவை. ஆட்சியாளர்களின் ஆபத்தான அணுவிழைவுக்கு எதிரான மக்களின் வீரமிக்க போராட்டங்கள் நடக்கும் இடங்கள் என்று மொத்த உலகமும் தெரிந்து கொண்டுள்ளது. கூடன்குளம் மற்றும் ஜெய்தாபூர் மக்கள் தங்கள் சொந்த நிலங்களை வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள மட்டும் போராடவில்லை; ஆனால் எதிர்வருகிற சந்ததியினரின் பாதுகாப்புக்காகப் போராடுகிறார்கள். பேரழிவு ஏற்படுத்திய சுனாமியின் பெருந்துயரத்தை தமிழ்நாடு ஏற்கனவே அனுபவித்துவிட்டது. இப்போது, அந்த மக்கள் அணுசுனாமியின் அச்சத்தின் நிழலிலேயே வாழ விதிக்கப்பட வேண்டுமா?
உலகம் முழுவதும் உள்ள வளர்ந்த நாடுகள் அணுஆற்றலை கைவிடுகின்றன. ஆனால் இந்திய ஆளும் வர்க்கம், ஆகக்கூடுதல் செலவு பிடிக்கிற, காலாவதியாகிப் போன இருபதாம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தை, உலகம் முழுவதும் இன்னும் பாதுகாப்பான இன்னும் மலிவான, இன்னும் சுத்தமான மின்சாரத்தை பயன்படுத்தப் பார்க்கும் இருபத்தியோராம் நூற்றாண்டில் திணிக்கிறது. ராதாபுரத்தில் காவல்துறையினரின் காவலில் இருந்தபோது நாங்கள் இருந்த இடத்தைச் சுற்றி காற்றாலைகள் இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. மின்சாரத்துக்கு அவற்றை பயன்படுத்த முடியும் என்று அவை காட்டுவதாக இருந்தன.
நமது அடிப்படையான தேச நலன்களை அந்நிய நேரடி முதலீட்டின் பலிபீடத்தில், ஏகாதிபத்திய சக்திகளின் அவமானகரமான ஒப்பந்தங்களின் பலிபீடத்தில் நமது அரசாங்கங்கள் திட்டமிட்ட விதத்தில் பலி தரும்போது, கூடன்குளத்தில் உண்மைக்காக, நீதிக்காக எழுகின்ற குரலை, ‘அந்நிய நிறுவனங்களால் தூண்டப்படுகிற போராட்டம்’ என்று சொல்லி இழிவுபடுத்துவதும் நசுக்குவதும் நகைமுரணாக உள்ளது. இந்தப் போக்கில், அணுசக்தி நிறுவனங்களின் நலன்கள், இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை விட மேலானவையாக கருதப்படும் கூடன்குளத்தை, அரசாங்கம் அந்நியப் பிரதேசமாக கருதத் துவங்கிவிட்டது.
கூடன்குளம் தோழர்களை எங்களால் பௌதீகரீதியாக சந்திக்க முடியவில்லை. ஆனால், தேசத்தின் தலைநகரத்தில் செப்டம்பர் 30 அன்று நடந்த கருத்தரங்கத்தில் கூடன்குளம் மக்கள் குரல் ஒலிப்பதை தடுக்க முடியாதது போல், தோழர் உதயகுமாருடன் நாங்கள் தொலைபேசியில் பேசுவதை காவல்துறையினர் தடுக்க முடியவில்லை. நமது பெரிய உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படும் போது இது போன்ற சிறிய சுதந்திரங்கள் உண்மையில் பெரியவையே. கூடன்குளம் போராட்டத்தின் உறுதி குறையாது என்று உதயகுமார் உறுதி தெரிவித்தார். அக்டோபர் 29 அன்று மாநில சட்ட மன்றம் அமைக்கப்பட்டதன் வைர விழாவைக் கொண்டாட மாநில அரசாங்கம் சிறப்பு அமர்வு கூட்டஉள்ள அக்டோபர் 29 அன்று தமிழ்நாட்டின் சட்டமன்றத்தை முற்றுகையிட மக்கள் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். இகக மாலெயின் நாட்டில் உள்ள பிற இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் மாறாத ஆதரவு அவர்களுக்கு உண்டு என்று நாங்கள் உறுதி கூறினோம்.
கூடன்குளம் போராட்டம் ஜனநாயகத்துக்கான போராட்டம். மக்கள் பாதுகாப்புக்கான போராட்டம் போலவே, உண்மைக்கான, நீதிக்கான போராட்டம். நாம் அனைவரும் அதனுடன் இணைந்து வெற்றி எட்டும் வரை போராட வேண்டும்.

Search