தலையங்கம்
கருப்புக்கும் பச்சைக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை
அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடிச்சுப் போட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் நமது மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்ற அதுபோன்ற முடிச்சுப் போட்டுப் பார்க்கிறார்கள். வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டதற்காக சிறைவாசம் அனுபவித்த கனிமொழியும் ராசாவும் கல்மாடியும் முறையே மின்சாரம், உள்துறை மற்றும் வெளியுறவு துறைகளின் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் உறுப்பினர்களாக்கப்பட்டுள்ளனர். மத்தியில் சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர் பதவிகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக கருணாநிதி அறிவித்ததை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மன்மோகன் ஊழலை ஒழிக்க சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருவது பற்றி பேசுகிறார். தமிழ்நாட்டில் கொடியன் குளம், பரமக்குடி என்று தலித் மக்கள் ரத்தத்தால் கறை படிந்த கரங்கள் கொண்ட ஜெயலலிதா தலித் மக்கள் மத்தியில் அருந்ததியர் இனத்தில் இருந்து ஒருவரை தமிழகத்தின் சபாநாயகர் ஆக்கியதும் சமூகநீதி வீராங்கனையாகிவிட்டார்.
சட்டமன்றத்தில் இதற்காக ஜெயலலிதாவின் பெருமை பாடும் அஇஅதிமுககாரர்கள் தமிழில் சொற்கள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் கரங்களைப் பற்றி மேலே கொண்டு வருவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான் என்கிறார்கள். இந்தக் கேலிக்கூத்தை பார்க்கும் தமிழக மக்கள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய்விட வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
ஆனால் என்ன செய்தாலும் சொன்னாலும் தப்பித்துவிட முடியாத சில கேள்விகளை தமிழக மக்கள் முன்வைக்கிறார்கள். பரமக்குடியில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஓராண்டுக்கு மேலாகியும் நியாயம் கிடைக்கவில்லையே? இது எந்தக் கணக்கில் வரும்? துப்பாக்கிச் சூடு நடத்தி தலித் மக்களை குருவிகள் போல் சுட்டுத்தள்ளிய காவல்துறையினர்தானே இன்றளவும் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்படுகின்றனர்?
கூடன்குளம் போராட்டம் தொடர்கிறது. அங்கு மக்கள் சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. மாவோயிஸ்டுகளைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி கிராம மக்களை அச்சத்தில் வைத்திருக்கும் சட்டிஸ்கர் அரசாங்கம் போல், தீவிரவாதிகளை ஒழிப்பதாகச் சொல்லி மக்கள் தொகையைவிட அதிகமாக காவல்துறையினரும் பிற படையினரும் காஷ்மீரில் குவிக்கப்பட் டிருப்பதுபோல் கூடன்குளத்திலும் போராடும் மக்கள் காவல்துறையினரின் கண்காணிப்பிலேயே இருக்கிறார்கள். அவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. யார் இந்த போராட்டக்காரர்கள்? உயர்சாதியினரா? அவர்கள் பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தானே? ஜெயலலிதாவின் கருணை பார்வை ஏன் இவர்கள் பக்கம் இன்னும் திரும்பவில்லை?
நிலஅபகரிப்பு வழக்குகள் போட்டு நிலப் புரட்சி நடத்துவதாகச் சொல்லும் ஜெயலலிதா சிறுதாவூர் நிலம் மற்றும் அதுபோன்ற தலித் மக்களுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்கள் கைகளில் தர ஏன் சுட்டுவிரலைக் கூட உயர்த்துவதில்லை? அவர்களிடம் இருக்கிற நிலங்களும் அல்லவா பறிக்கப்படுகின்றன?
காவிரி நீர் கிடைக்காமல் தவிக்கும் டெல்டா பகுதிகளை பார்வையிட மத்தியக் குழு ஒன்றும் வந்து சென்றுவிட்டது. பெரும் பணக்கார விவசாயிகள் சமாளித்துக் கொள்வார்கள். அவர்கள் சமாளிக்கவில்லை என்றாலும் நமக்குப் பிரச்சனையில்லை. ஆனால், சிறுகுறு விவசாயிகள், விவசாய காலத்தில் விவசாய வேலையை நம்பியிருக்கும் விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வுரிமை இழந்தல்லவா இருக்கிறார்கள்? அவர்கள் பெரும்பாலும் தலித் மக்கள்தானே? ஏன் அந்த தாழ்த்தப்பட்ட, வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பக்கம் ஜெய லலிதாவின் கருணைக் கரம் நீண்டு, வேலையில்லா காலத்துக்கான இழப்பீடு தரக்கூடாது? தலித் மக்களே பெருமளவில் செய்யும் நூறுநாள் வேலைத் திட்டத்தில் சட்டக்கூலி தருவதைக் கூட உறுதி செய்ய முடியாத ஜெயலலிதாவுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்?
ஜெயலலிதாவும் கருணாநிதியுமாகச் சேர்ந்து டெல்டா மாவட்ட பாசனப் பிரச்சனையைத் தீர்க்க வழிகண்டு பிடித்துவிட்டனர். நிலம் இருந்தால்தானே விவசாயம், பாசனம், காவிரி, பிரச்சனை எல்லாம்? ஏற்கனவே நாகை மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள விவசாய நிலங்களில் அரசு - தனியார் கூட்டு முயற்சி அடிப்படையில் அனல்மின் நிலையங்கள் அமைக்க பல பத்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன. இப்போது அழகிரி மத்திய ரசாயன அமைச்ச ராக இருக்கும்போது, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 25000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அழகிரி இந்த ஒப்புதல் பற்றி மகிழ்ச்சியுடன் தெரிவிக்க, ஜெயலலிதா அதை அமல்படுத்துவார். இந்த நிலங்கள் பறிபோவதால் பாதிக்கப்படுவது அந்தப் பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான தலித் மக்கள்தானே. வாழ்வாதாரம் இழப்பார்களே. ஜெயலலிதாவின் ஆதரவுக் கரம் அவர்களுக்கு நீள்வதில்லையே. இதில் மட்டும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் அழகிரியும் எப்படி ஒற்றுமை காண்கிறார்கள்?
விவசாய நெருக்கடி விரட்டியடிக்க கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறம் நோக்கி ஒப்பந்தக் கூலிகளாக, தற்காலிகத் தொழிலாளர்களாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு உழைத்து ஓடாகிப் போகும் இளைஞர்கள் பெரும்பாலும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இளைஞர்கள்தானே? அவர்கள் வேலையை, வருமானத்தை, வாழ்க்கையைப் பாதுகாக்க ஜெயலலிதா இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துவிட்டார் என்று புதிய சபாநாயகர் தனபால் முதல் அமைச்சர்கள் ஊடாக அம்மா திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதில் சொல்ல வேண்டும்.
கிராமப்புறங்களில், நகர்ப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிலும், அவற்றின் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் எல்லாம் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தானே? ஏன் ஜெயலலிதா அவர்களைப் பற்றியெல்லாம் அக்கறைப்படுவதே இல்லை?
உலகமே ஒரு நாடக மேடை, நாமெல்லாம் அதில் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர். கருணாநிதிக்கு தமிழ்நாட்டு அரசியலே ஒரு நாடக மேடை அதில் அவர் நிரந்தர கதை வசனகர்த்தா. மத்தியில் கருணாநிதி பங்குவகிக்கிற அய்முகூ அரசாங்கம் அடுத்தடுத்த மக்கள் விரோத சீர்திருத்த நடவடிக்கைகளால் மக்கள் வாழ்க்கையை இருளில் தள்ளும்போது கருப்புச் சட்டை அணிந்து துண்டு பிரசுரம் தருவது, கர்நாடகத்தில் அரசைக் கலை என்று கூப்பாடு போடுவது என்று விதவிதமான நாடகங்களை அரங்கேற்றுகிறார். அவர்கள் கருப்பு அணிவார்கள் என்றால் நாங்கள் பச்சை அணிவோம் என்று அஇஅதிமுக அமைச்சர்கள் கருப்புப் படைக்கு எதிராக பச்சைப் படை அமைத்து அம்மா ஆட்சியின் சாதனைகள் பற்றி துண்டு பிரசுரம் விநியோகிக்கிறார்கள்.
கருப்பையும் பச்சையையும் அவர்கள் நாடகங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிற தமிழக மக்கள் அவர்களுக்கு தங்கள் விடாப்பிடியான போராட்டங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அக்டோபர் 29 அன்று நடத்த வேண்டிய சட்டமன்ற வைர விழாவையே நவம்பர் 30க்கு தள்ளிப் போட வேண்டிய பரிதாபகரமான நிலைதான் ஜெயலலிதா அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்ட மாலெ கட்சியின் செயலாளரும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து, கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் மேரி ஸ்டெல்லா, கட்சி குமரி மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சுசீலா ஆகியோர் மீது அவதூறு செய்யும் நோக்கத்துடன் குமரி மாவட்டம் குளச்சலில் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளதை மாலெ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த அவதூறுப் பிரச்சாரத்துக்குக் காரணமானவர்கள் மீது தமிழக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாலெ கட்சி கோருகிறது.