COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 16, 2012

இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா
கருத்தரங்கில் ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகள்

பொருளாதார நெருக்கடி இருப்பதை ஆளும் வர்க்கங்கள் கூட இனிமேலும் மறுக்க முடியாது. ஆளும் வர்க்கங்கள், அந்த நெருக்கடியை தீர்ப்பது என்ற பெயரில், நெருக்கடியின் சுமையை சாமான்ய மக்கள் தலையில் போட, நவதாராளவாத தாக்குதலை தீவிரப்படுத்த, அந்த நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்துகின்றன. போராடுகிற, இடதுசாரி, ஜனநாயக சக்திகளும், இந்த நெருக்கடியை ஒரு புரட்சிகர வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நவதாராளவாதத் தாக்குதல் முதன்முதலாக கட்ட விழ்த்துவிடப்பட்ட போது, 1992 நவம்பரில், செங்கொடி ஏந்திய தொழிலாளர் வர்க்க அமைப்புக்கள் தேசத்தின் தலைநகரில் மிகப்பெரிய பேரணி நடத்தினார்கள். தொழிலாளர் வர்க்கத்தின் அந்த எதிர்ப்புக்கு இடது சாரிகள் ஒரு தொடர்ச்சியான அரசியல் வடிவம் தர முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து பாஜக, பாபர் மசூதியை இடித்து, நாட்டை மதவெறிப் படுகொலைபயில் மூழ்கடித்தது.

இப்போது, நவதாராளவாதத் தாக்குதலுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் மீண்டும் எழுந்துள்ள நேரத்தில், இடதுசாரி சக்திகள் மதவெறி நிகழ்ச்சிநிர லுக்கு எதிராக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பாஜக - தேஜமு ஆட்சியின் அனைத்து வடிவங்களையும், அப்பட்டமான மதவெறிப் படுகொலையை அடிப் படையாகக் கொண்ட குஜராத் மாதிரியாக இருந்தாலும் சரி, நல்லாட்சி என்ற உள்ளீடற்ற கூற்றுக்களின் பின்னால், மதவெறி, நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு துணிச்சல் தருவதை அடிப்படையாகக் கொண்ட பீகார் மாதிரியாக இருந்தாலும் சரி இடதுசாரி சக்திகள் முறியடிக்க வேண்டும். எதிர்க்க வேண்டும்.
மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், இடது முன்னணி அரசாங்கங்கள், நவதாராளவாதக் கொள்கைகளை எதிர்ப்பதற்கு மாறாக, அவற்றை அமலாக்கியதால், தாங்களாகவே நெருக்கடியில் சிக்கி, இடதுசாரிகளை பலவீனப்படுத்திவிட்டன. இன்று மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கம் கைவிட்டுவிட்ட வெளியைக் கைப்பற்ற மம்தா பானர்ஜி முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அவர் இடதுசாரி நிகழ்ச்சிநிரலை கடத்திச் சென்றுவிட்டார் என்று இன்று சில மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் சொல்கிறார்கள். இடதுசாரிகளின் நிகழ்ச்சிநிரல் விடாப்பிடியான எதிர்ப்பு. எனவே மம்தாவின் வேடம் விரைவிலேயே அம்பலமாகிவிடும். ஆனால், மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த அந்த இடதுசாரி கட்சிகள், தங்கள் சொந்தப் பிரச்சனைகளை, தங்கள் சொந்த வெகுமக்கள் அடித்தளத்தை ஏன் கைவிட்டார்கள் என்று பரிசீலிக்க வேண்டும். இடதுசாரிகளின் இந்த செயல்பாடு பற்றிய கேள்விகளை தவிர்ப்பதற்கு மாறாக, இவற்றை எதிர்கொள்வதன் மூலம்தான் இடதுசாரி ஒற்றுமை உருவாக்கப்படும்.
செர்னோபிள், ஃபுகுஷிமா போன்ற இடங்களின் பெயர்கள், அங்கு பயங்கரமான அணுவிபத்து ஏற்பட்ட பிறகு நன்கறியப்பட்டன. ஆனால், கூடன்குளமும், ஜெய்தாபூரும், ஒரு பேரழிவு நிகழ்வதைத் தடுக்கும் வீரமிக்க போராட்டங்களுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. இந்த மக்களின் போராட்டங்களுடன் இடதுசாரிகள் உறுதியாக நிற்க வேண்டும்.
மாவோயிசம் அல்லது பயங்கரவாதத்தை எதிர்கொள்வது என்ற பெயரில் நடக்கும் வேட்டைக்கு எதிராக, கருப்புச் சட்டங்களுக்கு எதிராக, ஜனநாயகத்தை பாதுகாப்பது, இடதுசாரி அரசியலின் கருவான நிகழ்ச்சிநிரலின் மய்யமாக இருக்க வேண்டும்.
பல்வேறு பிராந்திய ஆளும் வர்க்கக் கட்சிகள், காங்கிரசுடனோ, பாஜகவுடனோ, நேரத்துக்கேற்ப எந்த மூன்றாவது மாற்றுடனும் இணையும் சந்தர்ப்பவாத தயார்நிலையை நிரூபித்துள்ளன. இந்தக் கட்சிகள் நம்பிக்கை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதாகத் தெரி யவில்லை. இடதுசாரிகள்தான் தங்கள் மய்ய நிகழ்ச்சிநிரலில் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமல் தங்களை சுதந்திரமாக அறுதியிட்டுக் கொள்ள மக்கள் நம்பிக்கையை பெற வேண்டியுள்ளது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகம் முழுவதும் இடதுசாரி புத்தெழுச்சி காணப்படுமென்றால், இந்தியாவிலும், இடதுசாரிகள், மேற்கு வங்கத்திலோ, கேரளாவிலோ, வேறு மாநிலத்திலோ சந்தித்த தேர்தல் தோல்விக்கு அப்பால் தங்களை நிச்சயம் மீட்டெடுக்க முடியும்.
மக்களின் நிலம், வாழ்வுரிமை, ஜனநாயக உரிமைகள் மீதான ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் எதிராக, விடாப்பிடியான, சமரசமற்ற மக்கள் எதிர்ப்புதான் இடதுசாரி ஒற்றுமைக்கு, இடதுசாரி புத்தெழுச்சியை உறுதி செய்வதற்கு திறவுகோல். இந்தப் போராட்டங்களில், ஜனநாயகப் போராட்டங்களில் விடாப்பிடித்தன்மை என்பது, முக்கியமான அளவு கோல் என்பதால், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் என்பவற்றுக்கு இடையிலான வேறுபாடு கூட மங்கிப் போகும். மாவோயிஸ்ட் நீரோட்டங்களுடனும், போராட்டங்களில் ஓர் ஒன்றுபட்ட இடதுசாரி நோக்குநிலையை வளர்த்தெடுப்பதற்கான தொடர் முயற்சிகள் எடுக்கப்படும்.

Search