COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, October 6, 2012

சிறப்புக் கட்டுரை
இசுலாமிய சீற்றமும் அரசு ஒடுக்குமுறையும்
எஸ்.குமாரசாமி
இசுலாம் என்றால் வன்முறை. இசுலாம் என்றால் சகிப்புத்தன்மை இல்லாதது. இசுலாம் என்றால் ஜனநாயக விரோதமானது. இந்தக் கருத்துக்களை, ஏகாதிபத்தியம் உருவாக்கி உலகெங்கும் உலவ விட்டுள்ளது. சோவியத் ஒன்றிய சரிவிற்குப் பிறகு, கலாச்சாரங்களின் மோதல் என்ற நூலில், ஏகாதிபத்திய சிந்தனையாளர் ஹண்டிங்டன், கிறிஸ்துவமும் இந்துத்துவாவும் இணைந்து, எதிர்கொள்ள வேண்டிய எதிரி இசுலாம் என்று குறிப்பிட்டார். நியுயார்க் இரட்டை கோபுரங்கள் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா, இசுலாமிய பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்றுதான் அறிவித்தது.

இப்போது, நபிகளையும் இசுலாமியரையும் நையாண்டி செய்தும் சாடியும், இன்னொசன்ஸ் ஆஃப் இஸ்லாம் என்ற ஒரு திரைப்படம் அமெரிக்காவின் ஆசியுடன் வெளியிடப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள இசுலாமியர்கள் சீற்றத்துடன் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். லிபியாவில் அமெரிக்கா தான் கொடுத்த விஷ மருந்தை தானே உண்ண நேர்ந்தது. அதன் தூதர் படுகொலை செய்யப்பட்டார். அரபு வசந்தம் துனிசியாவில், எகிப்தில் சூறாவளியாய் வீசிய காலங்களில் கூட அது உள்நாட்டு ஏகாதிபத்திய அடிவருடிகளையே குறிவைத்தது. நேரடியாக அமெரிக்காவையோ, ஏகாதிபத்திய - இஸ்ரேல் அச்சையோ, குறி வைக்கவில்லை. ஆனால் இப்போது அமெரிக்க சாத்தான் மீது குறிவைக்கப்படுகிறது. எதிர்ப்பு அலைகள், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வரை, சீறி எழுந்தன. பல்லாயிரம் இசுலாமிய ஆண்களும் பெண்களும் அமெரிக்க தூதரக வளாகத்தையும் அண்ணா சாலையையும் போராட்டக் களமாக மாற்றினர்.
வழக்கம் போல் ஜெயலலிதா அரசின் போலீஸ் ஆட்சி முகம் அப்பட்டமாய் வெளிப்பட்டது. சென்னை மாநகரக் காவல் ஆணையர் மாற்றப்பட்டார். ஒடுக்குமுறைக்குப் பெயர் போன அதிகாரி ஜார்ஜ் ஆணையராக்கப் பட்டார். பதவியேற்பு வைபவம் நடந்தது. இரும்புக்கரம் பேசும் என உறுமினார் ஜார்ஜ். நெல்லையில் போராடிய இசுலாமியப் பெண்களின் பர்தாக்களைப் பிடித்து இழுக்கவும் காவல்துறை தயாரானது. மேலப்பாளையத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இசுலாமியர் எதிர்ப்புக்கள் நியாயமானவையே
உலகளாவிய அளவில், காற்றில், இசுலாமிய எதிர்ப்பு நஞ்சு கலக்கப்பட்டுள்ளது. அய்ரோப்பா, தனது தாராளவாத முகமூடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரான்சில் ஜெர்மனியில் இங்கிலாந்தில் சுவிட்சர்லாந்தில், இசுலாமிய எதிர்ப்பில் முனைப்பு காட்டுகிறது. இசுலாமியரின் சிறுபான்மை கலாச்சாரத்திற்கு அடையாளங்களுக்கு இடமில்லை என்கிறது. இஸ்ரேல், இன்றுவரை தான் விரட்டி அடித்து கைப்பற்றிய பாலஸ்தீனிய பூமியைத் திருப்பித் தர மறுக்கிறது. அமெரிக்கா, இராக், ஆப்கான் ஆக்கிரமிப்போடு நின்றுவிடாமல், லிபியாவை வேட்டையாடியது. சிரியாவை நிலைகுலைய வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இரானைச் சுற்றி வளைத்து முற்றுகையிடத் தொடர்ந்து முயற்சிக்கிறது. சன்னி ஷியா உட்பிரிவு மோதல்களைத் தூண்டிவிட்டு குளிர் காயப் பார்க்கிறது. அமெரிக்காவின் எல்லா கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கும் சவுதி அரேபியா துணை போகிறது. துருக்கி எகிப்து பாகிஸ்தான் ஆட்சியாளர்களையும் தன் பக்கம் நிறுத்தி வைக்க நிர்ப்பந்தங்கள் கொடுக்கிறது.
இந்தப் பின்னணியில், நபிகளையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தப் பார்க்கும் படத்தை, தங்களுக்கு எதிரான, சிறுபான்மையினர் கவுரவம் மற்றும் உரிமைகளுக்கெதிரான ஒரு போர் நடவடிக்கை என, இசுலாமிய மக்கள் பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? கருத்துச் சுதந்திரத்தை முடக்க முடியாது, திரைப்படத்தைத் தடுக்க முடியாது என ஒபாமா சொல்வது மோசடி வாதம். விக்கி லீக்சின் ஜ÷லியன் அசாங்கே, ஈக்வடார் நாட்டின் லண்டன் தூதரகத்தில் தஞ்சம் புகுந் துள்ளார். அமெரிக்காவின் போர்க் குற்றங்களை வெளிப்படுத்திய அமெரிக்கப் போர்வீரர் பிராட்லி மானிங் இன்னமும் கொடும் சிறைவாசத்தை அனுபவிக்கிறார். அமெரிக்க மற்றும் ஏகாதிபத்திய நிதி மூலதன ஊடகங்கள், உண்மைகள் மக்களுக்குச் சென்று சேராமல் இருக்க இரட்டிப்பு நேரம் செலவிடும்போது, கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேச அமெரிக்காவிற்கோ, ஒபாமாவிற்கோ எந்த யோக்கியதையும் இல்லை.
இசுலாமியர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் நாடுகளில், அமெரிக்க எடுபிடி சர்வாதிகார ஆட்சிகளால் ஒடுக்கப்படுகிறார்கள். பிழைக்கச் சென்று வாழும் மற்ற எல்லா நாடுகளிலும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, வேட்டையாடப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். இசுலாமே சாத்தானாகக் காட்டப்படுகிறது. அமெரிக்காவின் கை ஓங்கும் போதும் அத்துமீறல்கள் அளவுமீறும் போதும், இசுலாமியர் சீற்றம் வெளிப்படாமல் இருந்தால்தான், அது இயற்கைக்கும் மனித இயல்புக்கும் முரணானது.
இந்தியாவில் தமிழகத்தில் இசுலாமியர் நிலை என்ன?
சச்சார் ஆணையப் பரிந்துரைகள், கல்வியில் வேலை வாய்ப்பில் இசுலாமியர் மிகவும் பின்தங்கி இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளன. மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில், சிறைகளில் கூடுதலான வீதத்தில் இருப்பவர்கள், இசுலாமியர்களும் பட்டியல் சாதியினரும் வெள்ளையர் காலத்தில் குற்றப் பரம்பரையினர் எனப் பெயர் சூட்டப்பட்ட பழங்குடியினருமே.
மசூதி இடிப்பும், குஜராத் படுகொலையும், போலியான, பெயரளவிலான மதச்சார் பின்மையின் எல்லைகளை அம்பலப்படுத்தின. இந்தியாவில் அமெரிக்க அடிமைத்தனம் ஊக்குவிக்கப்படுகிறது. தேசபக்தி என்பது பாகிஸ்தான் எதிர்ப்பு இசுலாமியர் மீது வெறுப்பு என மாற்றப்பட்டுள்ளது. பாஜக அப்பட்டமான கடுமையான இந்துத்துவா கட்சி என்றால், காங்கிரஸ் முகமூடி அணிந்த மென்மையான இந்துத்துவா கட்சி. தமிழகத்தின் திமுகவும் அஇஅதிமுகவும் இரத்தக் கறை படிந்த இந்துத்துவாவுடன் கரம் கோர்க்க எப்போதுமே தயார்தான் என்பது பாஜகவுடன் மாறி மாறி அவர்கள் உறவாடியதில் இருந்து திட்டவட்டமாக அம்பலமாகிவிட்ட விசயமே.
தமிழ்நாட்டில் இசுலாமியர்கள்
திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து இசுலாமியர்கள் பெருமளவுக்கு தங்களுக்கான அரசியல் கட்சிகளாக திராவிடக் கட்சிகளை இனங்கண்டனர். முஸ்லீம் லீக்கும் எப்போதும் தேர்தல் அரசியலில் திராவிடக் கட்சிகளிடம் கூட்டு சேர்ந்தது. பாப்ரி மசூதி இடிப்பு, குஜராத் படுகொலை ஆகியவற்றிற்குப் பிறகு, இசுலாமியர்கள், தங்களை முஸ்லீம் லீக்கால் காக்க முடியாது என்பதையும், திராவிடக் கட்சிகள் இந்துத்துவாவோடு கரம் கோர்க்கத் தயங்காது என்பதையும் கூடுதலாய் உணரத் துவங்கி உள்ளனர்.
தலித் அடையாள அரசியல் கட்சிகள், குறிப்பாக, தலித் அறுதியிடலின் வெளிப்பாடாக தெற்கில் எழுந்த புதிய தமிழகமும், வடதமிழகத்தில் எழுந்த விடுதலைச் சிறுத்தைகளும், மாறி மாறி தேர்தல் அரசியல் போக்கில், திமுக அஇஅதிமுகவின் கடைநிலைக் கூட்டாளிகளாக மாற்றப்பட்டு, தலித் அறுதியிடலிலிருந்து விலகி நிற்கின்றனர்.
இந்த உண்மையை, போராடும் இசுலாமிய அமைப்புக்கள், மறக்கவும் மறுக்கவும் முடியாது. சரிந்து வரும் காங்கிரசை எதிர்கொள்ள. பாஜக, இந்துத்துவா துருப்புச்சீட்டை மூர்க்கமாக தேடிக் கொண்டிருக்கிறது. அசாமில் இசுலாமியர்கள், இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் இசுலாமியர்கள் அந்நிய தேசத்தவர்கள், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற வெறித்தனமான கூப்பாடு எழுப்ப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில், புதிதாக எழுந்துள்ள இசுலாமியக் கட்சிகள், அமெரிக்க எதிர்ப்பு, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போன்ற நிலைப்பாடுகளை எடுப்பது, நல்ல அறிகுறிகளே.
இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகள், ஒடுக்கப்படும் இசுலாமியர், தலித்கள் நோக்கி ஆதரவுக் கரம் நீட்டுவதும், இசுலாமியர்களும் தலித்களும் தமது இயல்பான கூட்டாளிகளான போராடும் இடதுசாரிகளுடன் நெருங்குவதும், பொதுவான ஜனநாயக இயக்கங்களில் பங்கேற்பதும் அவற்றை பலப்படுத்துவதும், தமிழக அரசியலை மாற்றி அமைக்க நிச்சயம் உதவும்.

Search