COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 1, 2014

ஜாதவ்பூர் பல்கலை கழகத்தில் மாணவர் எழுச்சி

ஆகஸ்ட் 28 அன்று, ஜாதவ்பூர் பல்கலை கழக மாணவி ஒருவர் விடுதியில் தங்கியிருப்பவர் சிலரால் துன்புறுத்தலுக்கும் பாலியல் தொந்தரவுக்கும் ஆளாக்கப்பட்டார். ஆகஸ்ட் 29 துணை வேந்தருக்கு புகார் அளித்தபோது சிறிது நேரம் கழித்து வரும்படி சொல்லப்பட்டது. பின்னர் அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளில் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய பின்பும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பல்கலைக் கழகத்திலுள்ள புகார் குழுவிற்கு புகார் அளித்தபோது, விசாரிக்க குழு அமைப்பதற்கே 15 நாட்கள் ஆகும் என்றும் அதுவரை அவர் கல்லூரிக்கு வர வேண்டாம் என்றும் சொல்லப்பட்டது.

இதன் பிறகு கூடிய மாணவர் பேரவை, விசாகா பரிந்துரைப்படி பாரபட்சமற்ற கமிட்டி உடனடியாக நிறுவப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தது. இதையொட்டி நடைபெற்ற இயக்கங்களுக்குப் பிறகு புகார் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்று விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண் மீதே குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். அவருடைய உடை அன்றைய தினம் எப்படியிருந்தது அவர் அன்று நிதானமான நிலையில்தான் இருந்தாரா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

செப்டம்பர் 8 அன்று 11 பேர் கொண்ட முற்போக்கு பெண்கள் கழக குழு போராடும் மாணவர்களை சந்தித்ததோடு, பல்கலை துணை வேந்தர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தது. செப்டம்பர் 10 அன்று துணை வேந்தர் அலுவலகம் முன் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆதரவு தெரிவித்து அய்சா மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒருமைப்பாடு தெரிவித்தன. 150 மணி நேரம் தொடர் தர்ணாப் போராட்டம் நடத்தப்பட்டது. தினமும் பல்கலைக் கழகம் வரும் துணை வேந்தர் போராடும் மாணவர்களுடன் பேசுவது தனக்கு கவுரவக் குறைச்சல் என நினைத்திருந்தார்.

செப்டம்பர் 16 அன்று, கோரிக்கைக்கு பதில் சொல்லாமல் துணை வேந்தரை வெளியில் விடமாட்டோம் என்று அவரது அறை முன்பு மாணவர்கள் படுத்துக் கொண்டனர். வெளியே செல்ல வேண்டுமென்றால் எங்கள் உடல் மீது ஏறிச் செல்லட்டும் என்றனர் மாணவர்கள். இந்தச் சூழலில் இரவு 2.30 மணிக்கு போலீஸ் வரவைக்கப்பட்டது. துணை வேந்தரின் கட்டளைப்படி ஜாதவ்பூர் மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்தபோது, நடு இரவிலும் அவசர அழைப்பை ஏற்று பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் குவிந்தார்கள். 

போலீசும், திரிணாமூல் குண்டர்களும், கூலிப் படையினரும் சேர்ந்து மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அய்சா செயல்வீரர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஆண் காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டனர். தாக்குதலை பத்திரிகையாளர்கள் படம் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன, இவ்வளவுக்குப் பிறகும் துணை வேந்தர், காவல்துறை அமைதி காத்ததாகவும் மாணவர்களே வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் சொன்னார்.

இதற்கு எதிராக 5,000 மாணவர்கள் திரண்டனர். பின்னர் 10,000 ஆன இந்த வலிமை, செப்டம்பர் 20 அன்று கொல்கத்தா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 50 கல்லூரிகளிலிருந்து கிட்டத்தட்ட 50,000 மாணவர்கள் பங்கேற்ற பேரணியாக மாறியது. பல்கலைக்கழக வேந்தரான ஆளுனரிடம் மனு கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் கொல்கத்தா ஸ்தம்பித்தது. பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள், கரிசனம் கொண்ட குடிமக்கள் என மக்கள் திரள் லால்பஜார் காவல் நிலையம் சென்று தாக்குதலை கண்டித்தது.

எப்போதும் போல போராட்டத்திற்கு மாவோயிஸ்ட் பின்புலம் உள்ளதென்றும், குடிக்கும், போதைக்கும் அடிமையான மாணவர்கள் செயல் என்றும் பொய்ப் பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது. செப்டம்பர் 23 அன்று திரிணாமூல் எதிர்ப்புப் பேரணி ஒன்றைக் கட்டமைத்தது. அதில் குழப்பமே நிலவியது. போலீஸ் ஒடுக்குமுறைக்கு எதிரான பேரணி என்று நினைத்து தாம் வந்ததாக சிலர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

போராட்டத்தை உடைக்க, சமரசத்திற்கு துணை வேந்தர் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், அவரது ராஜினாமாவிற்குக் குறைவான எந்த சமரசத்திற்கும் தயாரில்லை என மாணவர்கள் அறிவித்துவிட்டனர். ஆசிரியர் சங்கங்கள் ஆதரவாக கருப்புப்பட்டை அணிந்து பணிக்கு செல்ல முடிவு செய்துள்ளன.


Search