‘ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே ஆளும் கருத்தாக அதாவது சமுதாயத்தின் ஆளும் பொருளாயத சக்தியாக இருக்கிறது. அதே சமயம் அதன் ஆளும் அறிவு சக்தியாகவும். பொருளாயத உற்பத்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வர்க்கமே மூளை உற்பத்தியின் மீதும் கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது. அதன் மூலம், பொதுவாகக் கூறினால், மூளை உற்பத்திக்கான சாதனங்களைக் கொண்டிருக்காதோரின் கருத்தையும் கட்டுப்படுத்துகிறது.... எனவே, அவர்கள் ஒரு வர்க்கமாக ஆளுகிற வரை, மற்றவற்றை ஆட்சி செலுத்துவதைப் போல, சிந்தனையாளர்களாகவும் ஆட்சி செய்கிறார்கள். கருத்துக்களை உற்பத்தி செய்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களது சகாப்தத்தின் கருத்துக்களை உற்பத்தி செய்கிறவர்களாகவும் விநியோகிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அவர்களது கருத்துக்கள் அந்த சகாப்தத்தின் ஆளும் கருத்துக்களாக இருக்கின்றன’ ஜெர்மன் சித்தாந்தம் நூலில் வரும் இவ்வரிகள் மார்க்ஸ், எங்கெல்சால் 1845 - 46லேயே எழுதப்பட்டன. இந்த வரிகள், நமது காலத்திலும் முதலாளித்துவ ஊடகங்கள், ‘கலாச்சாரத் தொழிலகத்தின்’ சாரமான மேலாதிக்க பாத்திரத்தை வெளிக்கொண்டு வருகிறது. ஆயினும், இன்றைய ‘மூளை உற்பத்திச் சாதனங்களின்’ உரிமையாளர்கள் உண்மையில் எவ்வாறு கருத்துக்களின் ‘உற்பத்தி, விநியோகத்தை கட்டுப்படுத்துகிறார்கள்’ என்பது ஊடகங்களின் மீது என்ன விதமான குறிப்பான உரிமை கொண்டுள்ளார்கள் என்பதைப் பொறுத்தும் ஊடக நிறுவனங்கள் மீது கொண்டுள்ள கட்டுப்பாடு, செயல்பாட்டு முறை மட்டுமின்றி தற்போதைய நவதாராளவாத கட்ட முதலாளித்துவப் போக்குகளாலுமே தீர்மானிக்கப்படுகின்றன'
- (இகக மாலெ ஒன்பதாவது காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட மக்கள் முற்போக்குக் கலாச்சாரம் மற்றும் நவீன ஊடகங்கள் மீதான தீர்மானத்தில் இருந்து)
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும், வசந்த் அன்டு கோ உரிமையாளரும் தங்கள் நிறுவனங்களின் தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றி வணக்கம் சொல்வதுபோல், உங்கள் அலைபேசியில் உங்கள் நண்பரையோ, வேறு யாரையோ அழைக்க நீங்கள் முயற்சி செய்யும்போது, முகேஷ் அம்பானி நேரில் தோன்றியோ, அல்லது அவரது குரலோ, இந்தியிலோ, ஆங்கிலத்திலோ, உங்கள் தாய்மொழியில் கூட, உங்களை வரவேற்று வணக்கம் சொன்னால் எப்படி இருக்கும்?
உலகின் ஃபார்ட்ச்சூன் 500 நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த 8 ஊடக கார்ப்பரேட் நிறுவனங்கள் இடம்பெற்றன. பென்னட், கோல் மேன் அண்டு கோ லிமிடெட் 162ஆவது இடத் திலும், ஜீ என்டர்டெயின்ட்மென்ட் என்டர் பிரைசஸ் லிமிடெட் 263ஆவது இடத்திலும் சன் டிவி நெட்வொர்க் 367ஆவது இடத்திலும் எச்டி மீடியா லிமிடெட் 375ஆவது இடத்திலும் நெட் வொர்க் 18 மீடியா அண்டு இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் 379ஆவது இடத்திலும் உள்ளன. இவை தவிர டிபி கார்ப், என்டிடிவி, டெக்கான் கிரானிகிள் ஆகிய நிறுவனங்களும் முறையே 487, 490, 493 என்ற இடங்களில் முதல் 500 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. இது 2010ல் இருந்த மதிப்பின் அடிப்படையில் அப்போது வெளியிடப்பட்டது.
2013ல் நாட்டிலுள்ள கேளிக்கை மற்றும் ஊடக துறையின் மதிப்பு ரூ.1.12 லட்சம் கோடி. 2018ல் இது ரூ.2.27 லட்சம் கோடியாக உயரும் என்று மதிப்பிடப்படுகிறது. 2013ல் விளம்பரங்கள் மூலம் வந்த வருமானம் மட்டும் ரூ.35,000 கோடி. பத்திரிகை விளம்பரங்களை விட இணையதள விளம்பரங்கள் மூலம் வந்த வருமானம் கூடுதல். மத்திய தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடே கர் 2014ல் ஊடக துறையின் மதிப்பு 50 பில்லியன் டாலர் (ரூ.3 லட்சம் கோடி) என்கிறார்.
இவ்வளவு செல்வம் புரளும் ஒரு துறையில் இன்று முகேஷ் அம்பானியின் வர்த்தக சாம் ராஜ்யம் விரிகிறது. திட்டமிட்டோ, திட்டமிடா மலோ, 2008லேயே இது நோக்கிய நகர்வுகளை அம்பானி செய்யத் துவங்கினார்.
ராகவ் பால், நெட்வொர்க் 18 செய்தி நிறுவனத்தை 1993ல் துவங்கினார். நெட்வொர்க் 18, 17 செய்தி மற்றும் கேளிக்கை அலைவரிசைகள் கொண்டது. மின்னணு மற்றும் இணைய தள வர்த்தகத்தில் கணிசமான இடம் பிடித்துள்ளது. சிஎன்பிசி டிவி 18, சிஎன்என் அய்பிஎன், சிஎன்பிசி ஆவாஸ், இணையதளங்கள் மணி கன்ட்ரோல்.காம், பர்ஸ்ட்போஸ்ட். காம், பத்திரிகைகள் போர்ப்ஸ் இந்தியா, ஓவர் டிரைவ், பொழுதுபோக்கு அலைவரிசை கலர்ஸ், சிறுவர்த்தக இணையதளம் ஹோம் ஷாப் 18, புக் மை ஷோ, கிரிக்கெட் நெக்ஸ்ட்.இன் உட்பட பல்வேறு ஊடக மற்றும் ஊடகம் அல்லாத வர்த்தகம் செய்கிறது. இருபதாண்டு காலத்தில் நாட்டின் முன்னணி செய்தி நிறுவனமாக வளர்ந்தது. ராஜ்தீப் சர்தேசாயின் விவாத மேடைகள், கரன் தாப்பரின் டெவில்ஸ் அட்வகேட் ஆகியவை பிரபலமான நிகழ்ச்சிகளாக இருந்தன. செய்திகளை முந்தித் தரும், துணிந்து தரும் செய்தி நிறுவனம் எனப் பெயர் பெற்றது. நாட்டின் ஊடகச் சந்தையில் மிக முக்கியமான இடம் பிடித்தது. வளர்ச்சி மட்டுமே எப்போ தும் இருக்கவில்லை. நெருக்கடியும் வந்தது.
நெருக்கடியை சமாளிக்க ராகவ் பால் முகேஷ் அம்பானியின் உதவியை நாடினார். அவரும் நிதி உதவி செய்தார். இந்த நிதி உதவியின் ஒரு நிபந்தனையாக, நெட்வொர்க் 18 நிறுவனத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை பெற்றார். ராமோஜி ராவ் நடத்திய உஷோதயா நிறுவனம் (ஈடிவி குழுமம்) 2008ல் நிதி நெருக்கடியில் சிக்கியபோதும் முகேஷ் அம்பானி அந்த நெருக் கடியை சமாளிக்க நிதி உதவி செய்திருந்தார். 2012ல் முகேஷ் அம்பானியின் நிதி உதவியுடன், நெட்வொர்க் 18 நிறுவனம், ஈடிவியின் அந்தப் பங்குகளை வாங்கியது. 2012ல், முகேஷ் அம் பானி உள்ளே வந்ததும், டிவி 18 நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த 300 பேருக்கு இளஞ்சிவப்புச் சீட்டு தரப்பட்டது. அதாவது, பணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
முகேஷ் அம்பானியின் நிதி உதவியும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து நேரடியாக அல்லாமல், இன்டிபென் டன்ட் மீடியா ட்ரஸ்ட் என்ற, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மட்டுமே பயனாளியாக இருக்கிற நிறுவனத்துக்குத் தரப்பட்டு, அந்த நிறுவனம் மூலம் இந்த பரிவர்த்தனை எல்லாம் நடந்தது. 2014ல் ஒரு ரூ.4,000 கோடி கொடுத்து முகேஷ் அம்பானியின் இன்டிபென் டன்ட் மீடியா ட்ரஸ்ட் நிறுவனம் நெட்வொர்க் 18 மற்றும் டிவி 18 நிறுவனங்களை வாங்கிவிட்டது.
நிறுவனத்தைத் துவக்கிய ராகவ் பால், முன்னணி செய்தி ஆசிரியர்களான ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஸ் உட்பட பலரும் நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நெட் வொர்க் 18, டிவி 18, ஈடிவி நிறுவனங்கள் முகேஷ் அம்பானி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன.
கடந்த டில்லி சட்டமன்ற தேர்தல்களின் போது, அர்விந்த் கேஜ்ரிவால் நெட்வொர்க் 18 செய்தி சேவையில் மிகமுக்கியமான இடம் பெற்றிருந்தார். 2014 தேர்தல்களின்போது, இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் அம்பானிக்கு ஆதரவாக அரசுகள் செயல்படுவது பற்றி அர்விந்த் கேஜ்ரிவால் பிரச்சனைகள் எழுப்பியபோது, ஒரு கட்டத்தில் அந்தச் செய்திகள் ஒளிபரப்பப்படுவது தடை செய்யப்பட்டது. அம்பானி மீது அர்விந்த் கேஜ்ரிவால் அரசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு அவர் பற்றிய செய்திகள் கிட்டத்தட்ட நெட்வொர்க் 18 செய்தி சேவைகளில் இடம்பெறவில்லை.
சன், கலைஞர் தொலைக்காட்சிகள் 2 ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிய செய்தியையோ, ஜெயா தொலைக்காட்சி சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியோ, கனிம மணல் கொள்ளை பற்றியோ செய்தி வெளியிடாததுபோல்தான் இதுவும். ஜெயலலிதா தண்டனை பெற்று சிறைக்குச் சென்ற பிறகு, தந்தி தொலைக் காட்சியில் ‘சொத்துக் குவிப்பு வழக்கு’, ‘சொத்து வழக்காக’ மாறிவிட்டது. நடுநிலையாக செய்திகள் வெளியிடுவதாகச் சொல்லும் நெட்வொர்க் 18 உட்பட்ட அலைவரிசைகள், பதானி தோலா படுகொலையில் கீழமை நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாட்னா உயர்நீதிமன்றத் தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்ட போது, அந்தச் செய்தியை முற்றிலுமாகப் புறக்கணித்து, சச்சின் ஓய்வு பெற்றதைப் பற்றி விரிவாக விவாதித்துக் கொண்டிருந்தன.
அந்த ஆண்டு டிசம்பர் 18 அன்று பதானி தோலா படுகொலைக்கு நியாயம் கேட்டு, டில்லியில் நடந்த பொது விசாரணையில் படு கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தாரு டன் 2,000க்கும் மேற்பட்ட கிராமப்புற வறியவர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கோரி, சிஎன்என் அய்பிஎன்னின் ராஜ்தீப் சர்தேசாய், டைம்ஸ் நவ்வின் அர்னாப் கோஸ்வாமி ஆகியோருக்கு நேராகவும், இன்ன பிற தொலைக்காட்சி மற்றும் பிரதான நீரோட்ட பத்திரிகைகளுக்கும் இகக மாலெ அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கவிதா கிருஷ்ணன் செய்தி அனுப்பினார். அதில், பதானி தோலா படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை உயர்நீதிமன்றம் விடுவித்தபோது, அந்தச் செய்தியை வெளியிடா மல் விட்டுவிட்ட நீங்கள், இப்போது இந்த பொது விசாரணை செய்தியை உங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிட்டாவது அதை சரி செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர்களுடன் அலைபேசியிலும் பேசி நிகழ்ச்சி பற்றிய செய்தியை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். டில்லியில் ஜந்தர்மந்தரில் 2000 பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி எந்த தொலைக்காட்சியிலும் வெளியாக வில்லை.யாரும் வரவில்லை. விவாத அமர்வுக ளில் விவாதத்தில் கலந்துகொள்பவர்களை வளைத்து வளைத்து கேள்வி கேட்கும் ராஜ்தீப் சர்தேசாயோ, அர்னாப் கோஸ்வாமியோ, இப்போது, ஹெட்லைன்ஸ் டுடே தொலைக் காட்சி அலைவரிசைக்குச் சென்றுவிட்ட கரன் தாப்பரோ தங்கள் ஊடக சுதந்திரத்தை, அறிவாற்றலை, துணிச்சலை பதானி தோலா படுகொலை தீர்ப்பு தொடர்பாக இன்று வரை வெளிப்படுத்தவில்லை.
ஊடக சுதந்திரம், நடுநிலை, பன்மை தன்மை என்று ஆடம்பரமாகப் பேசப்படுகிற இன்றைய நிலைமைகளிலேயே ஊடகத் துறை பாரபட்சமாகத்தான், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான், ஆளும்வர்க்கக் கருத் துக்களின் பிரதிநிதியாகத்தான், பதானி தோலா படுகொலை பிரச்சனையில் நடந்ததுபோல்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வகை ஊடகத்தின் பெரிய, முன்னேறியதாகக் கருதப்படுகிற ஒரு பிரிவு இன்று முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. கருத்துக்களை உற்பத்தி செய்யும் இந்த எந்திரம், இன்னும் தீவிரமாக அம்பானிகளுக்கு ஆதரவான கருத்துக்களை உற்பத்தி செய்யும்.
இது இன்று பொதுவாக அறியப்பட்ட உண்மையே. ஆக, அம்பானி ஊடகத் துறைக் குள் நுழைவதில் என்ன புதிதாகப் பிரச்சனை வந்துவிடக் கூடும்? பல தொழில்கள் செய்யும் அவர் இந்தத் தொழிலும் செய்யப் போகிறார்.அவ்வளவுதானே? இந்தக் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று எளிதான பதில்கள் சொல்ல முடியும்தான். ஆனால், விளைவுகள் அவ்வளவு எளிமையானவை அல்ல.
வரும் ஆண்டுகளில் இந்தியா டிஜிட்டல் சூப்பர் பவர் ஆகிவிடும் என்று ஜூன் மாதம் நடந்த முதலாளிகள் கூட்டம் ஒன்றில் முகேஷ் அம்பானி சொல்லியிருக்கிறார். கடந்த ஆட்சி தனது சட்டைப் பையில் இருக்கிறது என்றார் அம்பானி. இந்த ஆட்சியும் அப்படித்தான் இருப்பதாகத் தெரிகிறது. மோடியும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்வைக்கிறார். தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவற்றில் உள்ள பழைய செய்தி தொகுப்புக்களை, மின் னணுமயப்படுத்த ஆறு தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும், நல்ல நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து அலைபேசி சேவைகளில் கூட வெளியிடலாம் என்றும் மத்திய தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடே கர் சொல்கிறார். அம்பானி, மோடி, பிரகாஷ் ஜவடேகர் மூவரும் ஒரே நேரத்தில் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்வது தற்செயலாக நடக்கவில்லை.திட்டமிட்டபடி நடக்கிறது.
தொலைதொடர்பு நிறுவனம், தொலைக் காட்சி நிறுவனத்தை வாங்குவது இந்தியாவில் முகேஷ் அம்பானியால் துவக்கி வைக்கப்பட்டுள் ளது. அய்க்கிய அமெரிக்காவின் ஏடிஅண்டுடி நிறுவனம் அங்குள்ள டைரக்ட் டிவி நிறுவனத்தை வாங்கிய முன்னுதாரணம் இருக்கிறது.
ரூ.70,000 கோடி முதலீட்டில் துவங்கப்பட் டுள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் 2015ல் 4 ஜி அலைக்கற்றை சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. 5,000 நகரங்கள், 2,15,000 கிராமங்களுக்கு சேவை வழங்கப்படும் என்று நிறுவனம் சொல்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லின் 4,000 மொபைல் கோபுரங்களை, மாத வாடகை அடிப்படையில், தனது அலைபேசி சேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும். இதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் சலுகைகளும் வழங்கும். கேபிள், செட் டாப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகள் சேவை தருவதுபோல், இந்தத் தொழில்நுட்பத்தில் இணையம் மூலம் அந்த சேவைகளை தர முடியும்.
2011 விவரங்கள்படி, நாட்டில் 14.6 கோடி குடும்பங்கள் 6,232 தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்க்கின்றனர். இந்த எண்ணிக்கை பார்த்த மாத்திரத்தில் பிரம்மாண்டமானதாக இருந்தாலும், நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களில் 60%மும் மொத்த மக்கள் தொகையில் 45%மும் மட்டும்தான் தொலைக்காட்சி பார்க்கின்றன. அப்படியானால், தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு இன்னும் மிகப்பெரிய சந்தை காத்திருக்கிறது.
தொலைக்காட்சி அலைவரிசைகள் மீதான அம்பானியின் கட்டுப்பாடும், அதன் மூலம், அந்த அலைவரிசைகளும் இன்ன பிற இணைய தள சேவைகளும் தருகிற நிகழ்ச்சிகள், தகவல்கள் மீது அம்பானிக்கு கிடைக்கும் கட்டுப்பாடும், இந்த பிரம்மாண்டமான கேளிக்கை தகவல்தொடர்பு, செய்திகளை அதிவேகமாக எடுத்துச் செல்லும் 4 ஜி அலைக்கற்றை சேவையும் சேர்ந்தால், அது எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு சாம்ராஜ்யம்! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சந்தைக்கு அதிவேகமாக எடுத்துச் செல்ல 4 ஜி அலைக்கற்றை, 4 ஜி அலைக்கற்றை சேவையை பயன்படுத்தும் அலைபேசிகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் பிரம்மாண்டமாக தொகுக்கப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட, அழ கூட்டப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள், செய்திகள், விளம்பரங்கள், இணையதள சேவைகள் என்ற இணைப்பு நாட்டில் நடக்கும் அனைத்தையும் அம்பானியின் கட்டுப்பாட்டில் வைக்கும். இது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை அல்ல. அடுத்து செயல்படுத்தப்படவுள்ள தொழில்நுட்ப அதிசயம்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் ஊடக நிறுவனச் சொந்தக்காரர்தான். கலாநிதி மாறன். அவரிடம் 4 ஜி சேவை இருக்காது.துரித மான சேவைக்கு, அவர் அம்பானியிடம் இருந்து அந்த சேவையை பெற்றுக்கொள்வார்.
4 ஜி சேவை தொழில்நுட்பம், கலாநிதி மாறனின் கேபிள் டிவி வர்த்தகத்துக்கு போட்டி யாக மாறலாம். நகர்ப்புற வாடிக்கையாளர்கள் சன் நிறுவனத்தின் கேபிள் சேவைக்கு பதில் ரிலையன்ஸ் ஜியோ தரும் அய்பிடிவி சேவைக்கு மாறிவிடும் நிலைமையும் வரலாம். சன் நிறுவனம் போல் இன்னும் பல ஊடக நிறுவனங்கள், நெட்வொர்க் 18 - ரிலையன்ஸ் ஜியோ ஒத்திசைவுடன் போட்டி போட நேரலாம்.
இந்தப் போட்டிகளில் சாமான்ய மக்களின் உரிமைகளுக்கு, விருப்பங்களுக்கு, முன்னுரிமைகளுக்கு, பிரச்சனைகளுக்கு என்ன இடம் இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்வி.
மக்கள் தேவைக்கான பொருளுற்பத்தி, சேவை உற்பத்தி ஆகியவை அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.அப்படி இருப்ப தில்லை. ஊடகங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.அங்கு, அரசு தலையீடு கூடாது என்றும் வலியுறுத்தப்படுகிறது. அதை நான்காவது தூண் என்கிறார்கள். அரசை, அதன் தவறான நடவடிக்கைகளை இடித்துரைக்கும் கண்காணிப்பு பொறியமைவாக அது இருக்க வேண்டும் என்கிறார்கள். வெளிப்பாட்டுச் சுதந் திரத்தில் அரசு தலையீடு கூடாது என்கிறார்கள்.
இங்கு ஒரு விந்தை நடக்கிறது. அரசு ஆளும் வர்க்கக் கருத்துக்களின் முகவராக இருந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லாமல், அந்தக் கருத்துக்களுக்குச் சொந்தக்காரர்களே அந்தக் கருத்துக்களை உற்பத்தி செய்யும், பரப்பும் பொறியமைவுகளை நேரடியாகவே நடத்திக்கொள்கிறார்கள். தங்களுக்கு இசைவாக செயல்படாதபோது அரசையும் விமர்சிக்கிறார்கள். ‘கொள்கை முடக்குவாதம்’ என்ற பிரயோகம் இப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்றைய நிலைமைகளில், தொலைக்காட்சிகளில், அலைபேசிகளில், இணையதளத்தில் பார்ப்பது, கேட்பது தவிர வேறேதும் நம்மைச் சுற்றி நடப்பதில்லை என்ற பிரமை உருவாக்கும் முயற்சிகளில், ஒரு பிரிவு மக்கள் மத்தியில் ஊடக ஊடுருவல் வெற்றி பெற்றுள்ளது. மானும் மயிலும் ஆட, சூப்பர் சிங்கர்கள் பாட, கலக்கப் போவது யாரு என்ற போட்டிகள்தான் உலகை வெல்லும் வழி என்று காட்டப்படுகிறது. குட்டி முதலாளித்துவ கருத்து அரிப்புகளுக்கு தீனி போட நானா நீயா வகை விவாதங்கள் நடத்தப்படுகின்றன.
எந்த ஒரு பிரச்சனையையும் சமூகப் பிரச்சனை என்று முன்னிறுத்தி, அரசு சமூகத்துக்கு அப்பாற்பட்ட ஓர் அமைப்பு என்று காட்டி, பிரச்சனையில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதாக அரசை உயர்த்தி நிறுத்தி, மக்களுக்கிடையேயான முரண்பாடுகளை களைவதே முக்திக்கு வழி என்று சொல்லப்படுகிறது. செய்தி ஊடகங்கள் ‘சுத்தப்படுத்தப்பட்ட’ செய்திகளை வெளியிடுகின்றன. தொகுத்துச் சொல்வதானால், ஒரு முழுமையான அரசியலகற்றும் பணியை இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள் வெற்றிகரமாக செய்துகொண்டிருக்கின்றன.
இந்தத் துறையில் மிகப்பெரும் அளவில் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. சன் குழுமத்தில் 1,900 பேர் வரை பணியில் இருக்கிறார்கள். நாட்டின் ஆகப்பெரிய ஊடக நிறுவனமான பென்னட், கோல்மேன் நிறுவனத்தில் 11,000 பேரும், தற்போது அம்பானியின் கைவசம் வந்துள்ள நிறுவனத்தில் 4,400 பேரும் வேலை செய்கிறார்கள். துறையின் வளர்ச்சி, வேலை வாய்ப்பு கதவுகளை அகலத் திறக்கும் சாத்தியப்பாடு கொண்டதே. இதற்கான சிறப்பு கல்வித் திட்டங்களுக்கு இன்று நல்ல சந்தை உள்ளது.
ஆக, பிரம்மாண்டமான முதலீடு, அதிநவீன தொழில்நுட்பம், திறன்மிக்க அறிவுசார் ஊழியர் கள், ஆகப் பரந்த, நாளும் வளருகிற சந்தை, பல பத்தாயிரக்கணக்கான வேலைவாய்ப்பு கொண்ட இந்தத் துறை உற்பத்தி செய்யும் சேவை, அதில் நடக்கும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் நாட்டின் வாழ்வின் மீது மிகப்பெரிய தாக்கம் செலுத்துவதாக இருக்கும். இந்தத் தாக்கத்தின் இயல்பு எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் முகேஷ் அம்பானி இருப்பார்.
இணையதள சேவைகள் மனித வாழ்வை நிச்சயம் துரிதமாக்கி, எளிதாக்கி இருக்கின்றன. எந்த புதிய தொழில்நுட்பமும் சமூக உற்பத்தியின் விளைவேயன்றி எந்தத் தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. அது மனித வாழ்வின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இணைய தொழில்நுட்பம் பொறுத்தவரை, எந்த நவீன தொழில்நுட்ப ஆயுதம் கொண்டு முதலாளித்துவம் தனது அடிமைகளை மேலும் அடிமைப்படுத்திவிடலாம் என முனைகிறதோ அதே ஆயுதம் அவர்களை திருப்பித் தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மறுபுறம், இன்றைய கேளிக்கை துறை சேவைகளில் செலுத்தப்படும் பிரம்மாண்டமான முதலீட்டில் உற்பத்தியாகும் சேவைகள் இன்றி இந்தியா உய்ய முடியும். ஒரு வகையில் அவை பழைமைக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கின்றன.
மக்கள் நலப்பணியாளர்களை அரசு பணிக்கமர்த்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை ஒட்டி தந்தி தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடக்கிறது. உங்கள் சேவை தேவை இல்லை என்று அரசு சொல்கிறதே, அதற்கு உங்கள் பதில் என்ன என்று ஒரு விவாத நெறி யாளர் மக்கள் நலப் பணியாளர் பிரதிநிதி ஒருவரிடம் கேட்கிறார். மிகவும் புத்திசாலித்தனம் என்று கருதி அவர் கேட்கும் கேள்வி எவ்வளவு கூருணர்வற்றது? மனிதர்களை தேவையற்றவர் கள் என்று அடையாளப்படுத்தக் கூடிய ஒரு கருத்தை, அந்தக் கருத்தை முன்வைக்கும் ஒரு தொலைக்காட்சியை என்னவென்று வகைப் படுத்துவது? அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவருக்கு, அந்தக் கேள்வி, மக்கள் நலப் பணியாளர்களை அரசு தெருவில் நிறுத்தியிருக்கிறபோது, அவர்கள் பால் அனுதாபம் கொள்வதற்குப் பதிலாக, அரசின் நடவடிக்கையில் நியாயம் இருக்கிறதே என்ற தாக்கத்தை உருவாக்காதா? இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம் மட்டுமே.இப்படித் தான் பொதுவாக இதுபோன்ற விவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன.
ஊடகங்கள் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பது, துடிப்புடன் வைத்திருப்பது ஆகியவற்றை விட, மக்கள் கவலை போக்கும் கேளிக்கை, ஆளும் வர்க்கக் கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்தாத, மேலோட்டமான கருத்து மோதல்கள், கேள்வி பதில்கள் என்ற பெயரில், முன்னேறுகிற அதிநவீன தொழில் நுட்பம் கொண்டு, இருக்கிற நிலைமைகளை தக்கவைக்கும் முயற்சிகள் வலுப்படுத்தப் படுமா என்று பார்க்க வேண்டியுள்ளது.
ரூபர்ட் முர்டாக் ஆஸ்திரேலியாவில் பிறந்து அய்க்கிய அமெரிக்கா வந்து ஊடக தொழில் நடத்தி அய்க்கிய அமெரிக்க குடியுரிமை பெற்று தனது உலகளாவிய ஊடக சாம்ராஜ்யத்தை நிறுவியவர். 2012ல் அவரது ஊடக நிறுவனங்க ளின் சொத்து மதிப்பு 53 பில்லியன் டாலர். அவர் லண்டனில் நடத்தும் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் பத்திரிகை சமீபத்தில் பெரிய குற்றச் சாட்டுக்கு ஆளானது. மில்லி என்கிற 13 வயது சிறுமி காணாமல் போய் கொல்லப்பட்ட சம்பவத்தில், பரபரப்புச் செய்திகளுக்காக, காவல் துறையினருக்கு கையூட்டு, சாதாரண குடிமக்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு உட்பட பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. பத்திரிகை இழுத்து மூடப்பட்டது. இந்த முறைகேடு வெளியே வரும்வரை, ரூபர்ட் முர்டாக்குக்காக, இங்கிலாந்தில் அந்நியர்கள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்த முடியாது என்ற விதி தளர்த்தப்பட்டது உட்பட, அவர் கொண்டாடப்பட்டார்.
சர்வதேச அளவில் ஊடகத் துறையில், ஊடகத் துறை ஜனநாயகத்தில் பெரிய மாற்றம் நிகழ்த்தியவர் என்று போற்றப்பட்டார். அரசியல்வாதிகளை மிரட்டுவது, அவர்களுடன் சிநேகம் பாராட்டுவது என விதவிதமான ‘வழி முறைகள்’ ரூபர்ட் முர்டாக் வெற்றியின், அவரது ஊடக ஏகபோகத்தின் பின்னால் இருந்தன.
ரூபர்ட் முர்டாக் விசயத்தில் நாம் பார்த் தது போன்ற அத்துமீறல்கள், கிட்டத்தட்ட அவர் நிறுவியது போன்ற ஒரு கட்டுப்பாட்டை இந்தியாவில் நிறுவும் வாய்ப்புக்கள் கொண்ட முகேஷ் அம்பானி விசயத்தில் நடக்காது என்று நாம் ஏன் நம்ப வேண்டும்?