COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 1, 2014

தலித், முத்தரையர், பெண்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு எதிராக

நாடு முழுவதும் நடைபெறும் தலித், முத்தரையர், பெண்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு எதிராகவும், இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறுகிற மத்திய, மாநில ஆட்சிகளைக் கண்டித்தும், மாடக்கோட்டை தோழர் சுப்பு நினைவு நாளில் செப்டம்பர் 13, 2014 அன்று, கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் அ.இராசங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி கண்டன உரையாற்றினார். மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மத்திய, மாநில அரசுகளே !

  •     வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் திருத்த மசோதா 2014அய் உடனே நிறைவேற்று.
  •     தலித் மக்கள் மீதான சாதிய தாக்குதலுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்து.
  •     தலித் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமை பற்றிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டர், எஸ்.பி யை நேரடி பொறுப்பாக்கு.
  •     வன்கொடுமைகளை தடுக்கத் தவறும், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4ன்படி நடவடிக்கை எடு.
  •     2011 மக்கள் தொகை கணக்கு அடிப்படையில் தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 20%ஆக உயர்த்து.
  •     தமிழக அரசின் பல்வேறு துறைகளிலுள்ள பின்னடைவு பணியிடங்களை உடனடியாக நிரப்பு.
  •     கந்தர்வகோட்டை ஒன்றியம் மட்டங்கால், கிராமத்தில் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் தொடுத்த, தலித் கோவிந்தராஜை கொலை செய்ய முயற்சித்த வெள்ளாளர் சமூக சாதிவெறிக் கும்பல் மீது நடவடிக்கை எடு.
  •     தலித் மற்றும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, ஊர் சொத்தில் உள்ளூர் அதிகாரத்தில் உரிய பாத்தியதை வழங்கு.
  •     தலித் மக்களுக்கான (பஞ்சமி நிலங்கள்) கோவில், மடங்கள், அறக்கட்டளை நிலங்கள் மற்றும அரசு ஒதுக்கி கொடுத்த புறம்போக்கு நிலங்களுக்கு சட்டபூர்வ உரிமை வழங்கு.
  •    நிலமற்ற, வீட்டு மனையற்ற, ஆடு மாடு இல்லாத கிராமப்புற குடும்பங்கள் அனைத்திற்கும் 5 சென்ட் வீட்டுமனை, 2 ஏக்கர் நிலம், ஆடு, மாடு உடனடியாக வழங்கு.
  •   தனிக்குவளை முறை, தனிச்சுடுகாடு, சாதிரீதியான அடிமை வேலைகள் போன்ற அனைத்து விதமான சாதிய தீண்டாமை தாக்குதலுக்கும் முடிவு கட்டு.
  •   விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் போல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதம் ஒரு முறை தலித் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்து.
  •   ஆதி திராவிடர் நலத் துறை மூலம் நிலம், வீட்டுமனை வழங்கவும், ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடு.
  •   தங்கு தடையின்றி தாட்கோ கடன் நேரடியாக மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடு.
இதே கோரிக்கைகள் மீது செப்டம்பர் 15 அன்று கறம்பக்குடியில் மாலெ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கட்சி ஒன்றியச் செயலாளர் தோழர் வைசி. கலைச்செல்வன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ம.விஜயன், கே.தங்கப்பா, சி.ரெங்கசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் சிறப்புரையாற்றினார்.


Search