COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 1, 2014

அன்றும் இன்றும்

திமுக அரசு 2006ல் இருந்து கிட்டத்தட்ட 2010 முடியும் வரை, கண்ணுக்குத் தெரிந்து பகைவர்களே இல்லை என்ற நினைப்பில் மிதப்பில் இருந்தது. 2006ல் இருந்து நடந்த எல்லா இடைத்தேர்தல்களிலும் வென்றது. இப்போது, அஇஅதிமுக அரசின் முறை. அவர்களுக்கும் பகைவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. இந்த நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும்.

அன்று கோவையில்

2007ல் கோவையில் ஏஅய்சிசிடியு தலைமையில், முன்உதாரணம் இல்லாத பிரிக்கால் தொழிலாளர் போராட்டம், தொழிலாளர் எழுச்சி துவங்கியது. மூலதனக் கூட்டம், ‘மாவோயிச ஆபத்து’ ‘கோவையில் நக்சல் நடமாட்டம்’ ‘நக்சல்பாரி குடும்பங்கள் குடியேற்றம்’ எனக் கூப்பாடு போட்டனர். 2007 மே தினப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தோழர் குமாரசாமி தொழிலாளர் அமைச்சர் மற்றும் பகுதி அமைச்சருடன் பேசிய பிறகு, அனுமதி தரப்பட்டது. ஆயிரமாயிரம் செங்கொடிகள் அணி வகுக்க, பீதி அடைந்தனர் முதலாளிகள். தோழர் குமாரசாமி முதலமைச்சரை கருணாநிதி என்று பெயரிட்டு அழைத்து விட்டார், அதனால் 10 பி அரசாணை போட மாட்டேன் என அடம் பிடித்தார் அமைச்சர். கோவையிலிருந்து சென்னை சென்று பேரணி நடத்தி, தொழிலாளர் அலுவலகத்தை, அமைச் சர் இல்லத்தை முற்றுகையிட்டனர் தொழிலாளர்கள். அரசாணை போடப்பட்டது. 2009ல் பிரிக்கால் சங்கத்தின் எந்த முறையீட்டுக்கும் பதிலளிக்க வேண்டாம் என முதல்வர் அலுவலகம் சொன்னது. தொழிலாளர்கள் 14 நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து, சட்டமன்ற விவாதப் பொருளாக்கி, மீண்டும் அரசாணை போட வைத்தனர்.

கோவையை விட்டே வெளியேற்றிவிடுவோம், அடக்குங்கள் அவர்களை என மூலதனம் பேசி வந்த நேரத்தில், ஆலைக்குள் ஓர் அதிகாரி இறக்க நேர்ந்தது. தொழிலாளர்களை சங்கத்தை முற்றுகையிட்டு, கதையை முடிக்க, முதலாளிகள் - அரசு - காவல்துறை கூட்டு முயற்சி நடந்தது. மத்திய அமைச்சர்கள் மல்லி கார்ஜ÷ன் கார்கே, ப.சிதம்பரம் ஆகியோர் போராடும் தொழிலாளர்களை தொழிற்சங்க இயக்கத்தை நசுக்குமாறு கோவை காவல் துறையையும் அரசையும் நிர்ப்பந்தித்தார்கள். இந்தப் பின்னணியில்,  முற்றுகையைத் தகர்க்க ஏஅய்சிசிடியு கோவையிலிருந்து சென்னைக்கு நெடும்பயணம் நடத்த அனுமதி கேட்டது.

21.03.2010 அன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.என்.கண்ணன் அனுமதி மறுத்தார். அவர் அனுமதி மறுக்கும் போது, காவல் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து தமக்குத் தாமே (செசன்ஸ் நீதிபதி) பதவி உயர்வு வழங்கிக் கொண்டு(!), 21.09.2009 அன்று பிரிக்கால் மனிதவளத் துறை துணைத் தலைவர் திரு.ராய்.கே.ஜார்ஜை ஏஅய்சிசிடியு உறுப்பினர்கள் கொலை செய்ததாகச் சொன்னார். இரண்டு வருடங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு 24 குற்றவியல் வழக்குகளைச் சந்திப்பதாகச் சொன்னார். 13.04.2010 அன்று தமிழ்நாடு காவல் தலைவர், மாவட்டக் கண்காணிப்பாளர் சொன்னதைத் திரும்பச் சொன்னார். அதன் பின்னர், அவர் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் தலைவர், இன்டெலிஜென்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், கோவை கண்காணிப்பாளர், மேற்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகியோரோடு பேசியதில், ஏஅய்சிசிடியு செயல் வீரர்கள் கொலை செய்தனர், அமைப்பின் தலைவர் குமாரசாமி முதல் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார், 25 வன் முறை வழக்குகள் எனத் திரும்பவும் சொல்லி அனுமதி மறுத்தார்.

பின்னர் என்ன நடந்தது?

உயர்நீதிமன்ற வழக்கிற்குப்பின், கோவையில் பொதுக் கூட்டம் தமிழகம் எங்கும் பிரச்சார நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தரப்பட்டது. அந்த ஆண்டின் மிகப் பெரிய மே தினப் பொதுக் கூட்டம் சென்னையில் ஏஅய்சிசிடியு வால் நடத்தப்பட்டது. முற்றுகை தகர்க்கப்பட்டது. பிரிக்காலில், 08.06.2012 மற்றும் 02.08.2014 என்ற அடுத்தடுத்த இரண்டு 12(3) ஒப்பந்தங்கள் தோழர் குமாரசாமி தலைமையில், அரசின் முன்னிலையில், கையொப்பமிடப்பட்டன. 25 குற்றவியல் வழக்குகளில் 20 வழக்குகள் தள்ளுபடி ஆகிவிட்டன. சங்கம் தாண்டி, இகக (மாலெ) கட்சி கோவையில் நிறுவப்பட்டு, கட்சியின் மாநில மாநாடு எழுச்சியுடன், தோழர் அப்பு அரங்கில் நடத்தப்பட்டது. கட்சி மற்றும் சங்க வேலைகள், சூலூர் சிங்காநல்லூர் கோவை மாநகரம் என முன்னேறியது. ஆயிரம் உறுப்பினர் சேர்ப்பு என்ற இலக்குடன் கட்சியும், அமைப்புசாரா தொழிலளார் இயக்கம், குடியிருப்புப் பகுதி வேலைகள் என்ற கனவுடன் ஏஅய்சிசிடியுவும், பீடு நடை போடுகின்றன.

இன்று திருபெரும்புதூரில்

தமிழ்நாட்டின் முதலீட்டு வருகை மண்ட லம், திருபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் பகுதியே ஆகும். திமுக, அஇஅதிமுக அரசுகள், முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தருகின்றனர். சலுகைகளை அள்ளித் தருகின்றனர். பொது பயன்பாட்டு சேவை அறிவிப்புக்கள் மூலம், போராட்டம் இல்லா மண்டலம் ஆக்கப் பார்க்கின்றனர். முதலாளிகளுக்கு, தொழிற்சங்கங்கள் இருப்பது, அதிலும் குறிப்பாக தொழிலாளர் விரும்பும் சங்கங்கள் இருப்பது பிடிக்காதுதான்; ஒப்பந்த முறை, பயிற்சியாளர் முறை மோசடிகளை, கூட்டுபேர உரிமை மறுப்பைத் தட்டிக் கேட்பவர்கள், இருக்கக் கூடாதுதான். அரசின் தொழிலாளர் துறை, அம்மணமாய் தான் முதலாளிகள் பக்கம் எனச் சமீபத்தில் துள்ளிக் குதித்து புறப்பட்டுள்ளது. 13.09.2014 அன்று, 30.08.2014 நடந்த ஒரு பொதுக் கூட்டம் தொடர்பாக, திருப்பெரும்புதூர் பகுதி தொழிலாளர் உதவி ஆணையாளர் திருமிகு தர்மசீலன்(!) காவல்துறைக்கு ஒரு புகார் தந்துள்ளார். மூலதன சேவையில், நிதானமிழந்து, புகாரில் ஏதேதோ சொல்கிறார். லஞ்சம் வாங்கியதாக சிறையில் வைக்கப்பட்ட திரு.சோம்பு ராஜன் இடத்திற்கு வந்துள்ள திரு.ரவிசங்கர் மற்றும் அவருக்கு மேலே உள்ள வர்கள் ஆசியுடன் - தூண்டுதலுடன் புகார், தரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது; பகுதி காவல்துறை உயர்அதிகாரிகள், தர்மசீலன் புகார் சொல்வதில் பெரும்பங்காற்றியுள்ளனர் என்பதும் தெரிகிறது. தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பகைவர்கள், தமது உண்மையான பகைவர்களை சரியாகவே உள்ளுணர்வுடன் அடையாளம் காண்கின்றனர்.

30.08.2014 கூட்டம்

சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கச் சென்ற கெஸ்ட்டம்ப் சங்வூ ஹைடெக்கின் 167 தொழிலாளர்களை தமிழக அரசின் காவல்துறை சிறையில் தள்ளியது. பிணையில் வந்தவர்கள் நிர்வாகத்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மூலதனத்திற்குச் சுதந்திரம். உழைப்பிற்குச் சிறையா எனக் கேட்க, அதனைக் கண்டிக்க, பொறுக்க மாட்டோம் என எச்சரிக்கக் கூட்டம் நடந்தது. ஏசியன் பெயிண்ட்ஸ் தொழிலாளர் சங்கத் தலைவரும் ஏஅய்சிசிடியு புரட்சிகர இளைஞர் கழக காஞ்சி மாவட்ட தலைவர்களில் ஒருவருமான தோழர் ராஜேஷ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலரும், வழக்கறிஞருமான தோழர் பாரதி சிறப்புரை ஆற்றினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலர் தோழர் சிவா, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பாக தோழர் சிறீதர் ஆகியோர் பேசினர்.

மன்மோகன், மோடி, கருணாநிதி, ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்ய அரசியலமைப்புச் சட்டம் இடம் தருகிறது. ஆனால் தொழிலாளர் துறை அதிகாரி திரு.தர்மசீலனும் அந்தத் துறை மேலிடமும் தம்மை விமர்சிக்கக் கூடாது என்கின்றனர். தோழர்கள் ராஜேஷ், பாரதி, சிவா, சிறீதர் மேல் வழக்கு போடப்பட்டு, தோழர் சிவா ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். தோழர்கள் ராஜேஷ், பாரதி 24.09.2014 அன்று முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.

தர்மசீலனின் புகார்

  •     அரசு அலுவலரைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தனர்.
  •     முற்றுகையிடுவதாக பயமுறுத்தினர். மிரட்டினர்.
  •     அரசுப் பணி செய்ய விடாமல் தடுக்கப் போவதாக மிரட்டினர்.

தர்மசீலனின் எல்லை மீறல்கள்

  •     30.08.2014 பொதுக் கூட்டம் பற்றிப் புகார் செய்பவர், ஏஅய்சிசிடியு 2007ல் பிரிக்கா லில் கொலை செய்தது என்கிறார்.
  •     அந்த வழக்கில் ஏசியன் பெயிண்ட்ஸ் சங்கத் தலைவர் திரு.குமாரசாமி குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிறார்.
  •     ஏஅய்சிசிடியு சங்கத்திற்கு தொழிலாளர் நலனில் அக்கறை கிடையாது என்கிறார்.
  •     ஏஅய்சிசிடியு சங்கம் நிர்வாகிகளையும் அரசு அதிகாரிகளையும் மிரட்டும், வன்முறையைக் கையில் எடுக்கும் என்கிறார்.
  •     30.08.2014 கூட்டம் பற்றிய தம்முடைய தாமதமான மற்றும் பலவீனமான 13.09.2014 தேதிய புகாருக்கு வலு சேர்ப்பதாக கருதி, 24.02.2014 அன்று தாம் தம் அலுவலகத்தில் முற்றுகையிடப்பட்டதாக, பின் சிந்தனையுடன், சொல்லியுள்ளார். 
விவகாரம் தர்மசீலனுக்கும் தனிப்பட்ட சில தோழர்களுக்கும் அமைப்புக்களுக்கும் இடையிலானது அல்ல. விவகாரம் இரு வர்க்கங்களுக்கு இடையிலானது.

பைக்குள்ளிருந்த பூனை
வெளியே குதித்துவிட்டது

தர்மசீலனுக்கு அரசு பணி பாதிக்கப்படுகிறதே என்பதில் அக்கறை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், அவருக்கு சமரச அதிகாரி என்பவர், தோற்ற அளவிலாவது நடுநிலையாளர் என்பது கூட, மறந்து விட்டது. புரட்சிகர இளைஞர் கழகம், ஏஅய்சிசிடியு, ஏசியன் பெயிண்ட்ஸ் தொழிலாளர்கள், அநியாயமான பயிற்சியாளர் முறைக்கு ஒப்பந்த முறைக்கு எதிராகப் போராடுகிறார்கள், ரூ.15,000 குறைந்தபட்ச சம்பளம் கேட்கிறார்கள், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மறியல், ஒரு நாள் வேலை நிறுத்தம், 28.10.2014 சிறை நிரப்பும் போராட்டம் என்றெல்லாம் முயற்சிக்கிறார்கள்; இவர்கள் முயற்சிகளை முடக்க வேண்டும் இவர்கள் முன்னேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தர்மசீலனை இயக்கும் கூட்டம் திட்டமிட்டு செயல்படுகிறது. அதனால்தான் சட்டவிரோத அவதூறுகளில் இறங்குகிறார். எல்லை தாண்டிப் போகிறார். தமிழக அரசு, இவர் புகாருக்குப் பின்னால் நிற்கிறது. ஆட்டோமொபைல் தொழிலை பொது பயன்பாட்டு சேவை என அறிவிக்க விடாமல் தடுக்கும் ஏஅய்சிசிடியுவை, மூலதனத்தின் பகைவர்களான இகக (மாலெ), புரட்சிகர இளைஞர் கழக தோழர்களை  திருபெரும்பு தூர் மண்டலத்தில் இருக்கக் கூடாது எனப் பார்க்கிறது. எய்தது, மூலதன விசுவாச தமிழக அரசு. தர்மசீலன் அம்பு மட்டுமே.

ஒரு சவால்

தமிழக அரசுக்கு அதன் தொழிலாளர் துறைக்கு நாம் ஒரு பகிரங்கமான சவால் விடுக்கிறோம். தொழிலாளர் துறையின், தொழிற்சாலை ஆய்வகத்தின் அதிகாரிகள் நேர்மையானவர்களா இல்லையா என அறிய, தொழிலாளர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட சங்க நிர்வாகிகள் அல்லது மய்ய சங்க நிர்வாகிகள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்த, தமிழக அரசு தயாரா?

உங்கள் துறையில் லஞ்சம் வாங்காதவர்கள் யார்யார் என்று பட்டியலிட்டு சொல்ல முடியுமா? (இரு கைவிரல்கள் தாண்டி பெயர்கள் வராது) கீழேயிருந்து மேலே வரை வசூலில் பங்கு என்ற முறை தொடர்கிறதா, இல்லையா? அறம் சார்ந்த துணிச்சல் இருந்தால், தமிழக அரசு இந்த சவாலை ஏற்கட்டும்.

தர்மசீலனால் தமிழக அரசால்,
தமிழகத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின்
முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது

திருபெரும்புதூரில், தர்மசீலன் மூலம் மூலதனம், கூலி உழைப்பிற்குச் சவால் விட்டுள்ளது. திருப்பூரில் அக்டோபர் 4 - 5, 2014 எட்டாவது மாநாடு நடத்தும் ஏஅய்சிசிடியு, நிச்சயம் இந்தச் சவாலை ஏற்கும். இந்தச் சவாலை எதிர்கொள்ள மற்ற சங்கங்களின் ஆதரவையும் திரட்டும். தொழிற்சங்கத் தலைவர்களை பேச்சுவார்த்தைகளுக்கு வரவிடாமல் மிரட்டும், சங்கம் நடத்த விடாமல் தடுக்கும் தொழிலாளர் துறைக்கு, தொழிற்சங்க இயக்கம் தக்க பதிலடி கொடுத்தாக வேண்டும்.
  
திமுக அரசின் தாக்குதலை முற்றுகையை முறியடித்தவர்களால், நிச்சயமாய் அஇஅதிமுக அரசின் தாக்குதலையும் முறியடிக்க முடியும். தமிழக அரசின் பகைவர்கள் தமிழக மக்களே.

தமிழக மக்களின் தோழர்களான பாட்டாளி வர்க்கப் போராளிகள், பகத்சிங்கின் மரபை உயர்த்திப் பிடிக்கும் இளைஞர்கள், மூலதனக் கூட்டத்திற்கும் அதன் விசுவாசிகளுக்கும் தக்க பதிலடி தருவார்கள்.


Search