COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, October 16, 2014

தமிழ்நாட்டில் பாலின் நிறம் கருப்பு

சென்னை, அண்ணாநகர், சாந்தி காலனி சென்னையின் பணக்காரர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் வசிக்கும் பகுதி. அங்குள்ள ஒரு வீட்டில், தினமும் மாலை நான்கு மணியளவில் வீட்டு உரிமையாளரின் நேரடி பார்வையில், பசு மாட்டில் பால் கறந்து தந்துவிட்டு போவார் ஒரு பால்காரர். சில நேரங்களில் அவரது சிறு பிள்ளை ஒன்று உடனிருப்பதுண்டு. ஒரு நாள் அந்த வீட்டின் உரிமையாளர், பால்காரர் பால் கறந்துகொண்டிருந்தபோது, அந்தப் பசுவின் வாயில் ஒரு முழு ஆப்பிளை திணித்தார். பசுவும் தின்றது. ஆப்பிளை பசுவுக்கு தருவதை, அந்தக் குழந்தை பார்த்துவிடாமல் இருக்க, அந்த வீட்டின் உரிமையாளர் சிரத்தை எடுத்துக் கொண்டார். (இதில் இதற்கு மேல் என்ன சொல்ல?)

முந்தைய ஆட்சியில், பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் போது, தொழிலாளர் அமைச்சரை சந்திக்க அவர் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. அவர் வீட்டில் பசுக்கள் இருந்தன.

ஆக, தமிழ்நாட்டில் வசதி படைத்தவர்கள் பசுவின் மடியில் இருந்து நேரடியாக அவர்கள் பாத்திரத்துக்கு வரும் அதிசுத்தமான பால் அருந்த வாய்ப்பு இருக்கிறது. (ஆட்டுப்பால் உடலுக்கு நல்லதாம். அது மகான்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்).நகர்ப்புறங்களில் கோடானுகோடி சாமான்ய தமிழர்கள் ஆவின் பாலை நம்பித்தான் இருக்கிறார்கள். (சற்று கூடுதல் விலையில் சில தனியார் நிறுவனங்கள் பால் கிடைக்கிறது). அந்தப் பாலில் தண்ணீர் மட்டுமின்றி, விசமும் கலந்திருப்பது, சமீபத்தில், தர்மத்தாய் ஆட்சியில் அம்பலப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் வி.மூர்த்தி பதவி இழந்துள்ளார். அதற்கு மேல் அவர் மீது நடவடிக்கை ஏதும் இல்லை. ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பிரதாய நடவடிக்கைகள் இந்த அளவில் நிற்கின்றன.

ஜெயலலிதா மீது பொய் வழக்கு போடப்பட்டு பழிவாங்கப்படுவதாக அஇஅதிமுககாரர்கள் கலவரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அக்கம்பக்கமாக ஆவின் பால் ஊழலில் கைதுகள், விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன. செப்டம்பர் 27க்கு முன்பே வைத்திய நாதன் கைது செய்யப்பட்டுவிட்டார்.

காக்கைச் சிறகினில் கண்ணனின் கரிய நிறத்தைக் கண்ட கவிகள் உண்டு. தமிழக மக்களுக்கு பாலில் கரிய நிறம் காணும் பேறு கிடைத்துள்ளது. உபயம்: அஇஅதிமுக ஆட்சியாளர்கள்.

‘அரசின் முனைப்பான நடவடிக்கைகள் மூலம், தமிழகத்தில் இரண்டாவது வெண்மைப் புரட்சி விரைவில் நிறைவேறும்’. - 17.04.2013ல்    மாண்புமிகு முதலமைச்சர். திருக்குறளுக்குப் பதில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்தக் கூற்றோடு துவங்குகிறது தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சகத்தின் கொள்கை விளக்கக் குறிப்பு. 2013ல்தான் ஜெயலலிதா இப்படிச் சொல்லியிருக்கிறார். ஆனால், 2011ல் புரட்சித் தலைவி அதை ஒரு வகையில் துவங்கி விட்டார். ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை உயர்த்தப்பட்டு மக்கள் தலையில் இடி இறக்கியது அந்தப் புரட்சியில் முதல் படி.

உழைக்கும் மக்கள் குடும்பப் பெண்கள் பொதுவாக முழு ஆரோக்கியத்துடன் இருப்பதில்லை. இவர்கள் பெறும் குழந்தைகள் பெரும் பாலும் ஆவின் பாலை நம்பி வளர்கின்றன. டீ, காபிக்கு மேல் பால் குடிக்கச் செலவு செய்வது சாமான்ய மக்கள் குடும்பங்களைப் பொறுத்த வரை ஆடம்பரம். அது அவர்களது நிதிநிலைக் குள் அடங்காதது. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மட்டும் நோய் குணமாகும் காலத்தில் மிகுந்த சிரமத்துக்கிடையில் பால் தரப்படுகிறது. ஆக, பால் வெறும் ஊட்ட உணவு அல்ல. அத்தியாவசியமான உணவு.இதில் நஞ்சு கலந்தது இரண் டாவது படி.

நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்டு அதற்கு ஈடாக வேதிப்பொருள் கலந்த தண்ணீர் கலக்கப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள வைத்தியநாதன் பால் வளத்துறை அமைச்சர் வி.மூர்த்திக்கும் இன்னும் சில மூத்த அமைச்சர்களுக்கும் நெருக்கமானவர் என்று ராமதாஸ் சொல்கிறார்.

ஜெயலலிதா எப்போதும் சொல்லும் அவர் தலைமையிலான அரசில்தான் ஆவின் கலப்பட ஊழல் நடந்துள்ளது. அவர் சொன்ன வெண்மை புரட்சி இதுதானா? இந்த ஊழலின் கதாநாயகனான வைத்தியநாதன் முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே ஆவின் பால் தொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தார் என்றும் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சற்றுபம்மியிருந்தார் என்றும் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி வந்தவுடன் முழுவீச்சில் ஆவின் பால் முறைகேடுகளில் இறங்கினார் என்றும் செய்தி கள் சொல்கின்றன.

மாதவரத்தில் பால் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் உள்ளது. சென்னையில் ஒரு நடமாடும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகமும் உள்ளது. 2013 - 2014ல் 1,334 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆவின் பால் மாதிரிகள் 720. மற்றவை தனியார் பால் பண்ணை மாதிரிகள். உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படும் பால், நுகர்வோரைச் சென்றடையும் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த எந்தக் கட்டத்திலும், எந்த மாதிரி ஆய்விலும் வேதிப்பொருள் கலந்த தண்ணீர் கலந்தது தெரியாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு முன்பும் ஒவ்வோர் ஆண்டும் பால் மாதிரி சோதனைகள் நடந்திருக்க வேண்டும். இப்போதுதான் பிரச்சனை வெளியே வருகிறது என்றால், மாதிரி சோதனைகள் எல்லாம் ‘ஒரு மாதிரி’ நடந்திருக்கின்றன என்றுதான் முடிவு செய்ய முடியும். ஆவின் நிர்வாகத்தின் பல படிநிலை அதிகாரிகள் உதவியுடன் நடந்திருக்கி றது என்றும் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

ஜெயலலிதாவின் வெண்மைப் புரட்சியில், வறிய மக்களுக்குத் தரப்பட்ட கறவை மாடுகள் வாங்கப்பட்டது பற்றி தெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை, தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு மாடுகள் முதல் நாள் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு விற்கப்பட்டு, மறுநாள் அதே மாடுகள், தமிழக அரசின் திட்டத்துக்காக வாங்கப்பட்டன என்கிறது.

வெண்மைப் புரட்சியைக் கொண்டு வர கறவை மாடுகள் தரப்பட்ட காலத்தில் ஒரு லட்சம் லிட்டருக்கும் மேல் பால் கொள்முதல் குறைந்துள்ளது. இதற்கு வறட்சி காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் விலையில்லா கால்நடைகள் கோமாரி நோய் தாக்கி செத்துப் போயின.

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 1.5 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் 22.5 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் வாங்கு கிறது. தனியார் நிறுவனங்கள் 30 லட்சம் லிட்டர் பாலை, ஆவினை விட கூடுதலாக லிட்டருக்கு ரூ.6 கொடுத்து வாங்குகின்றன. பால் உற்பத்தியாளர்கள் கூடுதல் கொள்முதல் விலை கேட்டுப் போராடுகிறார்கள். பிறகு போராட்டத்தை விலக்கிக் கொள்கிறார்கள்.போராட்டத்தை விலக்கிக் கொள்ளக் காரணம் ஆளும் கட்சிக்காரர்களின் மிரட்டல் என்கிறார்கள்.

திமுக ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டதை விட தனது தலைமையிலான ஆட்சியில் கூடுதல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் நவம்பர் 20, 2012 அன்று ஆகக் கூடுதலாக 27.15 லட்சம் லிட்டர் கொள் முதல் செய்யப்பட்டதாகவும் 2013 ஏப்ரலில் ஜெயலலிதா சொல்லியிருந்தார். ஜெயலலிதா சொல்லாத செய்தி ஒன்று உள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க டாஸ்மாக் பாட்டில்களில் ஒட்ட அரசு கலால் சீட்டுக்கள் தருகிறது. மாதத் துக்கு 22.26 கோடி சீட்டுக்கள் தேவைப்படுகின்றன. அதாவது மாதம் 22.26 கோடி பாட்டில்கள், நாளொன்றுக்கு 74,20,000 பாட்டில்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. டாஸ்மாக் நாளொன்றுக்கு 11,60,000 பீர் பாட்டில்கள் விற்கிறது.

ஆவின் மூலம் சென்னையில் மட்டும் சராசரியாக நாளொன்றில் 11.28 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. சென்னை தவிர பிற 17 ஒன்றியங்களில் பால் கையாளும் திறன் மொத்தம் நாளொன்றுக்கு 25,94,000 லிட்டர் தான். மொத்த கொள்முதல் சராசரியாக நாளொன்றுக்கு 23,22,000 லிட்டர். பால் விற்பனை நாளொன்றுக்கு மொத்தம் 9,91,894 லிட்டர் மட்டும்தான். பால் விற்பனைக்கு மிக அருகில் சாராய விற்பனை உள்ளது. ஆனாலும், சாராய கொள்முதல் மொத்த மாநிலத்துக்குமான பால் கொள்முதலை விட மிகவும் அதிகம். நடப்பது, நடந்தது வெண்மைப் புரட்சியா? சாராயப் புரட்சியா?

வருடாந்திர நெல் உற்பத்தியின் மதிப்பை விட வருடாந்திர பால் உற்பத்தியின் மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகம் என்றும், 2012 - 2013ல் தமிழ்நாட்டில் 70 லட்சம் மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், இரண் டாவது வெண்மை புரட்சி மூலம், பால் உற்பத் தியை பெருக்குவது, கிராமப்புற மக்களின் வருமானம், தனிநபருக்குக் கிடைக்கும் பாலின் அளவை உயர்த்துவது ஆகியவற்றுக்கு புரட்சித் தாய் வழிவகை செய்துள்ளதாகவும் கொள்கைக் குறிப்பு சொல்கிறது.

ஒன்றியங்களில் 2012 - 2013 கொள்முதலை விட 2013 - 2014 கொள்முதல் குறைந்துள்ளது. இதற்கு மாநிலத்தில் நிலவிய வறட்சி காரணம் என்கிறது அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு. ஆனால், இந்த கால கட்டத்தில் பால் விற்பனை வருமானம் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடனேயே, மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தருவதாகச் சொல்லி பால் விலையில் ஏற்றம் அறிவிக்கப்பட்டு, ஆவின் பாலில் கலக்கப்பட்ட நஞ்சுக்கும் தண்ணீருக்கும் சேர்த்து, தமிழக மக்கள் கூடுதல் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனாலும் இந்த வருமான அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

ரூ.1.76 லட்சம் கோடி இமாலய ஊழல் பற்றி அஇஅதிமுககாரர்களும் ஜெயா தொலைக் காட்சியும் பேசிக் கொண்டே இருக்க, மறுபுறம் அஇஅதிமுக அமைச்சர்களும் அதிகாரிகளும் அன்றாட முறைகேடுகளில் ஈடுபட்டுக்கொண் டிருப்பதைத்தான் ஆவின் ஊழல் காட்டுகிறது. இந்த ஊழலுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? இன்றைய முதலமைச்சரா? முன்னாள் முதலமைச்சரா?

 ஊழலின் அளவை இன்னும் கணக்கிட முடியவில்லை என்று விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர். மாதத்தில் 60 லட்சம் லிட்டர்.ஒரு லிட்டர் பால் விலை ரூ.28. மாதத்தில் ரூ.16 கோடியே 80 லட்சம். ஆண்டுக்கு ரூ.201 கோடியே 60 லட்சம். அஇஅதிமுக ஆட்சியின் மூன்று ஆண்டுகள் மட்டும் கணக்கிட்டால் ரூ.604 கோடியே 80 லட்சம் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. அஇஅதிமுககாரர்கள் இதையும்  பொய் என்பார்களா?

மவுலிவாக்கம் விபத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஆவின் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் என்பது பற்றி இன்னும் எந்த செய்தி யும் கசியவில்லை.

முதல் வெண்மைப் புரட்சி பற்றி இன்னும் பெருமை பேசுபவர்கள் உண்டு. ஆனால், கால்நடை வளர்க்கும் கடைமனிதர்கள் வீடுகளில் அது எப்படி கன்றுக் குட்டிகள் குடிக்கும் பாலையும் வீட்டில் குழந்தைகள் குடிக்கும் பாலையும் மோரையும் பறித்தது என்று கி.ராஜ நாராயணன் தனது ‘ஒரு வெண்மைப் புரட்சி’ சிறுகதையில் நெஞ்சு கரைய சொல்லியிருந்தார்.

ஜெயலலிதாவின் இரண்டாவது வெண்மைப் புரட்சியில் பாலுக்குப் பதில் மக்களுக்கு விஷம் தரப்படுகிறது. தரம், விலை, கொள்முதல், விலையில்லா கறவை மாடு என அனைத்து விதத்திலும் தமிழக மக்களுக்கு, ஆவின் மூலம், ஜெயலலிதா தலைமையிலான அரசு தந்தது ஏமாற்றம் மட்டுமே. உயிர் காக்க பால் இல்லா விட்டால் என்ன, உயிர் போக்க சாராயம் குடியுங்கள் என்கிறது அஇஅதிமுக ஆட்சி. தமிழ் நாட்டில் மீண்டும் வெண்மைப் புரட்சி நடப் பதை விட, வெள்ளைப் பால் கிடைத்தால், தமிழக மக்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள்.

Search