COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 17, 2019

ஜாலியன் வாலாபாக் படுகொலையின்  நூறாவது ஆண்டு

13 ஏப்ரல் 2019 கொடூரமான ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூறாவது ஆண்டு நாள் ஆகும்.
காலனிய எதிர்ப்பு இந்திய சுதந்திர போராட்டத்தில், அதன் ஆழ்ந்த, நீண்ட கால தாக்கத்தை, அதன் கூட்டு நினைவை குறிக்கும் நாளாகும்.
இன்றைய இந்தியாவில் ஜாலியன் வாலாபாக்கை நினைவு கூருவது, வெறுமனே கடந்த கால வரலாற்றின் நிகழ்வொன்றுக்கு நினைவஞ்சலி செலுத்தும் ஒரு செயல் மட்டுமல்ல. 2019 ஏப்ரலில், இந்தியாவை இனவாத அடிப்படையில் தங்களால் இயன்ற வரை பிளவுபடுத்திக் கொண்டிருக்கிற, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் துரோகம் இழைத்த சக்திகள் ஆட்சியில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என தீர்மானிக்கவிருக்கிற மிக முக்கியமானதொரு தேர்தலுக்கு மத்தியில் நாம் நிற்கிறோம். அது போன்ற ஒரு தருணத்தில், ஜாலியன் வாலாபாக்கை நினைவு கூரும்போது, 1857 முதலாம் சுதந்திரப் போரின் காலனிய எதிர்ப்பு தேசிய உணர்வில் ஆரம்பத்திலேயே வெளிப்பட்ட, காலனிய ஆட்சியாளர்களால் பூதமாகப் பார்க்கப்பட்ட ஒற்றுமை, இந்து - முஸ்லீம் அய்க்கியத்தால், ஒன்றுபட்ட எதிர்ப்பால் ரொம்பவே பயந்துபோன பிரிட்டிஷ் காலனியவாதிகளின் அச்சத்தின் விளைபொருள்தான் அந்த கொடூரப் படுகொலைகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ரவுலட் சட்டத்திற்கு எதிராகவும் இந்திய தலைவர்களை கைது செய்வதற்கு, நாடு கடத்துவதற்கு எதிராகவும் ஜாலியன் வாலாபாக்கில் மக்கள் அணிதிரண்டதை, பிரிவு 144ன் படி சட்ட விரோதமாக கூடுதல் என்று சொன்னது பிரிட்டிஷ் அரசாங்கம். அந்த கொடூரமான படுகொலைக்கு அதுவே காரணம் என்றும் சொன்னது.
இன்று நாம் ஜாலியன் வாலாபாக்கை நினைவு கொள்ளும்போது, கருப்பு காலனியவாதிகள், (நவீன இந்திய ஆளும் வர்க்கம்) என்று பகத்சிங் விவரித்த இன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சியிலும் கூட ஜாலியன்வாலாபாக்கின் நிழல் இருப்பதையும் நினைவு கொள்ள வேண்டும். இந்திய அரசு, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் கொடூரமான ஆயுதங்களான ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம், தேசத்துரோகச் சட்டம், பிரிவு 144 ஆகியவற்றையும் ரவுலட் சட்டத்தைப் போல, தானே உருவாக்கிய தடா, பொடா, மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (பஅஈஅ, டஞபஅ, ஙஇஞஇஞஅ, மஅடஅ) ஆகியவற்றையும் ஏன் வைத்துக் கொண்டிருக்கிறது?
அராஜகவாத மற்றும் புரட்சிகர குற்றங்கள் சட்டம் 1919 அல்லது ரவுலட் சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டம், 1919 மார்ச்சில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திலும் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் நிரந்தர அம்சமாக இருந்த இந்திய போர்க்கால பாதுகாப்புச் சட்டம் (1915)ன் கொடூர ஷரத்துக்களையும் கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. கத்தார் மாதிரியான புரட்சிகர கிளர்ச்சி போல் இங்கும் எழுச்சி ஏற்படலாம் என்றும் இந்தியா மற்றும் இதர பிரிட்டிஷ் காலனிய நாடுகளில் ருஷ்ய புரட்சியின் தாக்கத்தால் எழுச்சிக்கான சாத்தியப்பாட்டை கண்ணுற்றதாலும் அச்சத்தின் காரணமாகவே பிரிட்டிஷ் அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
சர் சிட்னி ரவுலட் தலைமையிலான ரவுலட் கமிட்டியின் பரிந்துரைகளின் பேரில் உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என சந்தேகிக்கப்படும் எவரையும் கைது செய்வதற்கும் விசாரணையே இல்லாமல் 2 ஆண்டுகள் வரை சிறையில் வைத்திருக்கவும் நீதிமன்ற உத்தரவு இல்லாமலேயே எவ்விடத்தையும் சோதனையிடவும் பத்திரிகை சுதந்திரத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அதிகாரமளித்தது. 
ரவுலட் சட்டத்திற்கு எதிராக பரந்த அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. காந்தி அழைப்பு விடுத்த முழுஅடைப்புக்கு பெரிய அளவில் ஆதரவு இருந்தது.
வரலாற்று அறிஞர் கிம் ஏ வாக்னெர் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி எழுதிய புத்தகம் இந்த ஆண்டு வெளிவந்துள்ளது. (ஒஹப்ப்ண்ஹய்ஜ்ஹப்ஹஆஹஞ்ட்: அய் உம்ல்ண்ழ்ங் ஞச் ஊங்ஹழ் அய்க் பட்ங் ஙஹந்ண்ய்ஞ் ஞச் பட்ங் அம்ழ்ண்ற்ள்ஹழ் ஙஹள்ள்ஹஸ்ரீழ்ங், டங்ய்ஞ்ன்ண்ய் தஹய்க்ர்ம் ஏர்ன்ள்ங், 2019, ஜாலியன் வாலாபாக்: அச்சத்தின் பேரரசும் அம்ரிஸ்தர் படுகொலை உருவாக்கமும், பென்குயின் ரேண்டம் ஹவுஸ், 2019) அந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலேயே  ‘பிரிட்டிஷ் காலனிய கற்பனையில், கலகம் முடிவு றவே இல்லை. இந்தியாவில் ஆளும் வர்க்கம், உள்நாட்டு கலகங்களின் உள்ளாற்றல்மிக்க ஆபத்தின் தொடர்ச்சியான நினைவூட்டல்களால் சூழப்பட்டிருந்தது... ஒரு குறிப்பிட்ட காலனிய கண்ணோட்டத்தில் இருந்து, கலகம் என்ற கருத்தே சாதாரணமாக ஒரு வரலாற்று நிகழ்வை மட்டும், ஒரு நிரந்தரமான பீதிக்கு காரணமாக மட்டும் குறிப்பிடுவதாக இல்லை. அதீத தண்டனை, மனம்போன போக்கிலான வன்முறை என்ற வடிவத்தில் காலனிய கட்டுப்பாட்டை தக்க வைப்பதற்கான ஒரு செயல் திட்டமாகவும் இருந்தது’. (பக்கம் 16). 1919 ஏப்ரலில் அமிர்தசரசில் நடந்த சிறிய சிறிய  நிகழ்வுகளே - அகிம்சை வழியில், நிராயுதபாணியான மக்கள், கைது செய்யப்பட்ட தங்கள் தலைவர்களை, நாடு கடத்தப்பட்ட தலைவர்கள் டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் சய்பூதின் கிச்லு ஆகியோரை, விடுவிக்கக் கோரியது, இந்து - முஸ்லிம் ஒற்றுமை முழக்கம் - ஆகியவையே, 1857 திரும்பிவிடக்கூடும் என்கிற அச்சத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்த, 1857அய் தொடர்ந்து இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டது போல் மீண்டும் படுகொலை செய்ய எந்திரத் துப்பாக்கிகள், படைகள் போன்ற ராணுவ ஆதாரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என கேட்க போதுமானதாக இருந்தது.
வாக்னர் சொல்வதுபோல், ரவுலட் குழுவின் அறிக்கையே, ஒரு தந்திரமான கதையாடலை முன்வைத்தது. ‘விஷம்’ அல்லது தொற்று நோயை பரப்பும் ‘கிருமி’ எனும் இனவெறி சொற்களை பயன்படுத்தி புரட்சிகர தேசியவாதம் என்ற அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டது.  இந்த இனவெறி மொழிநடை, 1857 எழுச்சி பற்றிய காலனிய விவாதங்களின் போதும் காணப்பட்டது. (வாக்னர், பக்கம் 43-44). இந்தியர்களுக்கு அறிவார்ந்த அரசியல் நோக்கங்கள் இருக்க முடியாது என்பதால், தேச விரோத கலகத் தலைவர்களால் பரப்பப்படும் அகவயப்பட்ட, காரணகாரியமற்ற வெறுப்பின் விளை பொருளே காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள் என்ற காலனிய இனவெறி கண்ணோட்டம் அறிக்கையில் பிரதிபலித்தது. ஒட்டுமொத்த போராட்டத்தையும் அரசியல் இயக்கமாகப் பார்ப்பதற்கு மாறாக பகுத்தறிவற்றதாகவும் ஒரு சில குழப்பவாதிகளால் தூண்டப்பட்டு ஏமாற்றப்பட்ட இளைஞர்களால் நடத்தப்படுவதாகவும் பார்த்ததால் அங்கு உரையாடலுக்கு இடமில்லை. அடக்குமுறை மட்டுமே தீர்வாக இருந்தது.
ராம நவமி, அடிப்படையில் ஓர் இந்து திருவிழா. ஆனால் 1919 ஏப்ரல் 9 அன்று இந்துக்களும் இஸ்லாமியர்களும் வெளிப்படையாக ஒரே பாத்திரத்தில் தண்ணீர், பால் மற்றும் பானங்கள் அருந்துவதன் மூலம் அது இந்து -முஸ்லிம் ஒற்றுமையைக் குறிப்பதாக இருந்தது என்று வாக்னரின் புத்தகம் குறிப்பிடுகிறது. அது, அந்த ஆண்டு அமிர்சரசில் நடைபெற்ற விழாக்கள் பற்றி சமகால பத்திரிகையாளர் கே.டி.மால்வியா விவரித்துள்ளதை மேற்கோள் காட்டுகிறது. ‘பேரணி, சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்றதிலேயே பிரமாண்டமானதாக இருந்தது. இந்துக் கடவுளின் வெற்றி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், டாக்டர் கிச்லு தலைமையில் இணைந்து கொண்டனர். இந்து - முஸ்லீம் ஜெய் எனும் ஆத்மார்த்தமான முழக்கம் விண்ணை முட்டியது. டாக்டர் கிச்லுவையும் சத்யபாலையும் வாழ்த்தி ஆயிரக்கணக்கானோர் முழக்கமிட்டனர். அந்த உற்சாக தினத்தில் அவர்கள் மகாத்மா காந்தியையும் வாழ்த்த மறக்கவில்லை’. இந்து ஊர்வலத்தில் இஸ்லாமிய சிறுவர்கள் ஒரு தெரு நாடகத்தை நடத்துவதைக் கண்ட அமிர்தசரஸ் துணை ஆணையர் இர்விங் எவ்வாறு கோபமும்  அச்சமும் கொண்டார் என்பதை வாக்னர் எழுதுகிறார். ‘இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு நேர்மையாகவே ஒரு பொதுக் காரணம் இருந்தது. அது இர்விங் போன்ற மனிதர்கள் மீதான பெரும் கவலை. மத மோதல்கள்தான் இந்திய சமூகத்தின் இயல்பான நிலை என்பதாக முன்கூட்டியே வரையறுக்கப்பட்டு இருந்தது. எனவே, ஏப்ரல் 9ல் காணப்பட்ட ஒற்றுமை, பெரும் சந்தேகத்தின் விளைநிலமானது’.
1919 ஏப்ரல் 10 அன்று டாக்டர் கிச்லு மற்றும் டாக்டர் சத்யபால் இருவரும் கங்ரா பள்ளத்தாக்கிற்கு நாடு கடத்த கொண்டு செல்லப்பட்டனர். அதற்கு முதல் நாளே காந்தி கைது செய்யப்பட்டுவிட்டார். தங்கள் தலைவர்கள் நாடு கடத்தப்பட உள்ள செய்தியை கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அமிர்தசரசின் தெருக்களில் திரண்டார்கள். முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார்கள். ஊர்வலமாகச் சென்று தங்கள் தலைவர்களை விடுவிக்கக் கோரினார்கள். இந்த பெரும் கூட்டமும் அமைதியாக இருந்தது. யாரையும் தாக்கவில்லை. ஆயினும் 1860 ஆண்டின் சட்டப் பிரிவு 144க்கு புறம்பாக அபாயகரமான சட்ட விரோதமாக கூடுதல் என்பதாக அது பார்க்கப்பட்டது. அதன் விளைவாக பிரிட்டிஷார் துப்பாக்கி சூடு நடத்தி நிராயுதபாணியாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள் பலரைக் கொன்றார்கள். இந்த தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூடு மக்களை மேலும் சீற்றமுறச் செய்தது. பின்னர், சில ஆங்கிலேயர் கள் - இரண்டு ரயில்வே காப்பாளர்கள், ஒரு பெண் மருத்துவர், இவர்கள் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி இனவெறியுடன் பேசினவர்கள் - மற்றும் ஒரு ஆசிரியர் மிஸ் செர்உட் ஆகியோர் சீற்றம் கொண்ட கூட்டத்தினருக்கு இலக்கானார்கள்.
ஏப்ரல் 13 பைசாகி. சீற்றமுற்றிருந்த மக்கள் கூட்டம் அந்த நாளில் அமைதியாகிவிட்டிருந்தது. அன்று மாலை 4.30 மணிக்கு சுமார் 20,000 பேர் ஜாலியன் வாலாபாக்கில் கூடினார்கள். பலர், நாடு கடத்தப்பட்ட தலைவர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மீது நடத் தப்பட்ட துப்பாக்கிச் சூடு பற்றி அரசியல் தலைவர்கள் பேசவிருப்பதைக் கேட்பதற்காக அங்கு வந்திருந்தனர். ஆனால், பெரும் பகுதியினர் கிராமங்களில் இருந்து பைசாகிக்காக அமிர்தசரஸ் வந்திருந்தனர். முக்கியமாக அவர்கள் படுகொலை பற்றிய பயமோ அல்லது எந்த அறிகுறியும் அறியாதவர்கள். அன்று காலை ஜெனரல் டயரின் படைகள் நகரில் அணி வகுப்பு நடத்தி, கூட்டம் போட்டால் தேவைப்படின் ஆயுதப் படை கொண்டு அவை கலைக்கப்படும் என்று அறிவித்தது. கிராமத்தில் இருந்து வந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு பற்றி தெரியாது. பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த மற்றவர்களும் உண்மையில் வன்முறையை எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெனில் காவல் துறையினர் மக்கள் கூடுதவதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. செயற்பாட்டாளர்கள் மக்களை கூட்டத்திற்கு அழைப்பதற்காக தெருக்களில் மேளம் அடித்து அறிவிப்பு செய்தபோது அதைக் கூட காவல்துறை தடுக்கவில்லை.
திடலின் வாயிற்கதவுகள் மிகவும் குறுகியவையாக இருந்ததால் எந்திரத் துப்பாக்கிகள் கொண்ட கவச கார்களை திடலுக்கு வெளியே நிறுத்திவிட்டார் ஜெனரல் டயர். படைகள் திடலுக்குள் வந்து இடம் பார்த்து நின்று இலக்கை குறி வைத்தன. அப்போதும் கூட்டத்தினர், கலைந்து செல்லச் சொல்லி எவ்வித அறிவிப்பும் இல்லாததால், துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கவில்லை. எவ்வித அறிவிப்புமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 1,650 சுற்றுகள் சுடப்பட்டன. குறைந்தபட்சம் 379 பேர் குழந்தைகள் உட்பட கொல்லப்பட்டார்கள்.
ஒரு வாரம் கழித்து ஜெனரல் டயர் ‘ஊர்ந்து செல்லும்’ உத்தரவை அமல்படுத்தினார். மிஸ் செர்உட் தாக்கப்பட்ட தெருவில் இந்தியர்கள் ஊர்ந்து செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டனர்.
டயர் தனது நடவடிக்கையை  நியாயப்படுத்தினார். ‘அவசியமான தார்மீகரீதியான, பரந்த தாக்கத்தை உருவாக்கியிருக்கும் இந்த மிகக் குறைந்த அளவிலான துப்பாக்கிச் சூடு, அதை உருவாக்க வேண்டியது எனது கடமை என நான் கருதுகிறேன்... கூட்டத்தை வெறு மனே கலைப்பது என்பதாக அந்த பிரச்சனை இல்லை. போதுமான தார்மீக விளைவை உருவாக்க வேண்டியது பிரச்சனையாக இருந்தது.  அங்கிருந்தவர்கள் மத்தியில் மட்டுமல்ல, குறிப்பாக ஒட்டுமொத்த பஞ்சாபிலும்’.
ஆங்கிலேய ஆட்சியாளர்களும் டயர் போன்ற படையினரும் இந்திய மக்களை எவ்வாறு பார்த்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும்போது இந்தியாவின் சொந்த ஆட்சியாளர்களும் படையினரும் ஏன் அந்த வழியி லேயே பெரும் பகுதி மக்களைப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றியும் நாம் எவ்வாறு இந்தி யாவில் உள்ள அமைப்புமுறை ஜாலியன் வாலாபாக்குகளையும் டயர்களையும் திரும்பத் திரும்ப உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது என்பது பற்றியும் கேள்வி எழுப்ப வேண்டும்.


செடி கொடிகளும் மலர்களும்
தீய்ந்துவிட்டன. உலர்ந்துவிட்டன.
வாசனை பறிக்கப்பட்ட மகரந்தம்
பூமியெங்கும் கரையாய்ப் படிந்துள்ளது.
அய்யோ! இந்த அற்புதமான தோட்டம்
இரத்தத்தால் நனைந்துள்ளது.

பருவங்களின் அரசனே, வசந்தமே வா,
ஆனால் ஓசை இல்லாமல் வா
இது ஒரு துயரம் தோய்ந்த நினைவிடம்
ஆகவே எந்த சத்தமும் போடாதே

- சுபத்ர குமாரி சவுஹான்
ஜாலியன் வாலாபாக்கில் வசந்தம்

தமிழில்: ஜி.ரமேஷ்

Search