COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 1, 2019

அடிமை பழனிச்சாமி ஆட்சிக்கு முடிவு கட்ட 
சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அதிமுகவை தோற்கடிப்போம்

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது, தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது, மோடி பாதுகாப்பான ஆட்சி தருகிறார் என்று
முதலமைச்சர் பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் சொல்லிக் கொண்டிருந்தபோது, பொள்ளாச்சியில் நடந்துவந்த பாலியல் வன்முறை தொழிலில் தொடர்புள்ளவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், கோவையில் ஆறு வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்முறை செய்து அடித்து கொலை செய்து போட்டு விட்டு போய்விட்டார்கள். எந்த அமைதிப் பூங்கா, என்ன பாதுகாப்பு பற்றி முதலமைச்சர் பேசுகிறார்? தினமும் ஏதாவது ஓர் ஊரில் பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சர், கோவை சிறுமிக்கு நடந்துள்ள கொடுமை பற்றி எங்கும் பேசவில்லை. பொள்ளாச்சியில் குற்றம் செய்த கும்பலை பாதுகாப்பதில் அக்கறை காட்டுபவர்களுக்கு ஓர் ஏழைச் சிறுமிக்கு என்ன ஆனால் என்ன? பெற்றவர்களின் கதறல் காதுகளில் விழாத அளவுக்கு அதிகார மமதை அவர்களுக்கு ஏறிப் போயுள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள சர்வதேசப் பள்ளியில் சிறுவர்கள் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுவதாக இன்னும் ஒரு செய்தி வந்து அச்சுறுத்துகிறது. (தனியார் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முட்டாள்தனமாக கத்துபவர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?) ஏதேதோ முதலிடம் பற்றி ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தார். பாலியல் வர்த்தகத்தில் முதலிடத்துக்கு கொண்டு வர பழனிச்சாமி தலைமையிலான அரசு முயற்சி செய்வதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சனைகள் எழ எழ தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்று மீண்டும் மீண்டும் முதலமைச்சர் சொல்கிறார். மோடி தருகிற பயிற்சி.
வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்துக் கொள்ளாத வறிய மக்கள் 4 கோடி பேரிடம் இருந்து ஸ்டேட் பேங்க் இந்தியா மட்டும் கடந்த மூன்று மாதங்களில் ரூ.235.06 கோடி பிடித்தம் செய்துள்ளது. இப்படி மக்கள் பணத்தை பகல் கொள்ளை அடிக்கும் மோடி தலைமையிலான ஆட்சியை சிறப்பான ஆட்சி என்று எல்லா பரப்புரைகளிலும் சொல்கிறார்.
மோடி, பழனிச்சாமி ஆட்சிகள் நடக்கும் போது எதிர்ப்பார்க்க முடியாத ஒரு விசயமாக, இன்னும் இரண்டாண்டுகளுக்கு ஆட்சிக் காலம் இருக்கும்போது, அதற்கு ஆபத்து ஏற்படுத்தி விடக் கூடிய இடைத் தேர்தல்களும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டன. இப்போதும் இன்னும் மூன்று இடங்கள் நிரப்பப்பட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த கண்டத்தில் இருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி முயற்சி செய்வது போலவே, நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தமிழக மக்களும் காத்திருக்கிறார்கள்.
நீர் உரிமை பறிபோனது. விவசாயம் நாச மாக்கப்பட்டுவிட்டது. பொது விநியோகம் சீர் குலைக்கப்பட்டுவிட்டது. கல்வி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. வேலை வாய்ப்புகள் கண்ணில் தெரியவில்லை. (இந்தி பேசுபவர்கள் அரசு சேவை துறைகளில் இருக்கிறார்கள்). சுகாதார உரிமைகள் நசுக்கப்படுகின்றன. (கர்ப்பிணிப் பெண்களுக்கு கெட்டுப் போன ரத்தம் ஏற்றும் அளவுக்கு கெட்டுப் போன நிர்வாகம் நடத்தும் அமைச்சரை மோடி, பழனிச்சாமி அரசுகள் பாதுகாக்கின்றன). மொழி உரிமை, பேச்சுரிமை, போராடும் உரிமை என எல்லாவற்றையும், அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மோடி காலில் போட்டுவிட்டு, அன்றாட வாழ்க்கை நடத்த மூச்சுத் திணறும் நிலைக்கு மக்களை தள்ளி விட்டுவிட்டு, அதற்குக் காரணமானவர்கள் மத்தியில் மீண்டும் ஆட்சி நடத்த வேண்டும் என பழனிச்சாமி கேட்கும்போது மக்களின் குமுறல் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அது வெடிக்கக் காத்திருக்கிறது. 18 சட்டமன்ற தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத் தேர்தல்களை, அடிமை பழனிச்சாமி ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்களாக தமிழக மக்கள் மாற்ற வேண்டும்.

Search