COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 17, 2019

பாஜக வெற்றி பெறாவிட்டாலும்
வலதுசாரி அபாயம் தொடரும்
இடதுசாரி அரசியலே அவசர அவசியம்


ஆதி

ஏப்ரல் 18 அன்று, தமிழ்நாட்டு மக்கள், கார்ப்பரேட் சனாதன சர்வாதிகார மோடி  அரசுக்கும், மோடி எடுபிடி கொள்ளைக்கார  பழனிச்சாமி அரசுக்கும், சாதி ஆதிக்க சந்தர்ப்பவாத சக்திகளுக்கும் பலத்த அடி தந்திருப்பார்கள்.

ஆனபோதும் பாஜகவே, அரசியலை  தீர்மானிக்கிறது, அது மய்ய இடத்தில் உள்ளது என்ற விவரங்களை நாம் மறக்க முடியாது. 2014ல் பாஜக 282 காங்கிரஸ் 44 இடங்கள் பெற்றன. இது 2019ல் தலைகீழாக மாறாது. பாஜக படுதோல்வி, பாஜக தனிப்பெரும் கட்சி, பாஜகவுக்கோ பாஜக கூட்டணி கட்சிகளுக்கோ பெரும்பான்மை என்ற பொருளில்தான், தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றன.
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெறுவது சாத்தியம் இல்லை. அப்படி ஒன்று நடந்தால் அது பாஜகவின் படுமோசமான தோல்வியாகவும் பேரதிசயமாகவுமே இருக்கும். அய்க் கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 3ன் முதன்மைக் கட்சியாக வேண்டும் என்பதே காங்கிரசின் கணக்காகும்.
பாஜக காங்கிரஸ் அல்லாத கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றாலும், அவர்கள் பாஜக - காங்கிரஸ் எதிர்ப்பு மூன்றாம் அணி ஆக மாட்டார்கள்.
பாஜகவை, பாகிஸ்தான் எதிர்ப்பு தேசியவாதம் என்ற அதன் தளத்தில், இந்துக்களின் பாதுகாவலன் என்ற அதன் தளத்தில் விடாப்பிடியாகவும் விட்டுக் கொடுக்காமலும் எதிர்க்கிற நிலைப்பாடு காங்கிரசிடம் இல்லை. காங்கிரசின் முக்கிய கூட்டாளிகளிடம் இல்லை. பாஜக காங்கிரஸ் அல்லாத கட்சிகளிடம் இல்லை. இதுதான் வலதுசாரி அரசியலின் பலம்.
உலகம் முழுவதும் வலதுசாரி அரசியல் புத்தாயிரமாண்டில் பலப்பட்டுள்ளது. மேலை  நாடுகளின் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகம், மக்களின் நல்வாழ்க்கையை உறுதி செய்யவில்லை. அது, செல்வமும் வருமானமும் பிரும்மாண்டமாய்  சிலர் கைகளில் குவிவதை உறுதி செய்துள்ளது. மக்களுக்கு, நாம் துன்பப்படுகிறோம், பிரும்மாண்டமான ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என நன்றாகப் புலப்படுகிறது. ஆனால் ஒரு சோசலிச மாற்று  இல்லை.
விலை உயர்வைக் கட்டுப்படுத்திய, மக்கள் அனைவருக்கும் உணவு, உடை, கல்வி, மருத்துவம், வீடு, வேலை வழங்கிய, ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுக்குள் வைத்திருந்த சோசலிச சோவியத் முகாம் 80களில் சரிந்துவிட்டது. ஏகபோகங்களும் நிதி மூலதனமும் கொழுத்துப் போய், நல அரசு பின்வாங்கி, வன்மையான அரசும் கடுமையான சட்டங்களும் முன்னேறித் தாக்கத் துவங்கிய காலங்களில், ராணுவ அதிகாரத்துவ கட்டமைப்பு முதலாளித்துவப் பொருளாதாரத்தைச் செலுத்தும், வாழ வைக்கும் ஓர் அங்கமான காலங்களில், அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமையிலான, இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்புப் போர் துவங்கியது. சமூக பொருளாதார அரசியல் வாழ்வில் கார்ப்பரேட் - இனவெறி - நிறவெறி - மதவெறி வலதுசாரி அரசியல் மேலோங்கியது.
இதே கதை, உலகெங்கும் அந்தந்த உள்ளூர் வேறுபாடுகளுடன் அரங்கேறியது. பாஜக 1980களில் 2 இடங்கள் என்பதில் இருந்து 2014ல் 282 இடங்கள் என முன்úறியது. வட இந்திய, மேற்கு இந்திய கட்சி 2014க்குப் பிறகு இந்தியா எங்கும் காலடித் தடம் பதித்துள்ளது. நாடெங்கும் பிற்போக்கு வெறிவாத சக்திகள் உள்ளன. ஜனநாயக உள்ளடக்கம் இல்லாத  பிராந்திய கட்சிகள் உள்ளன. இவர்களோடு உறவாட இவர்களை உள்வாங்க பாஜகவுக்கு எந்த தயக்கமும் இல்லை.
பாஜக தோற்றுப் போய்விடும் என்ற வலுவான நம்பிக்கை உருவான காலத்தில், புல்வாமாவும் பாலகோட்டும் நிகழ்ந்தன. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்திய ராணுவத்தை மோடியின் இராணுவம் என்கிறார். மோடி, பாகிஸ்தானைப் பழி வாங்கும் படையினர்க்கு, தம் வாக்குகளை மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று சொல்கிறார். இந்து மதத்திற்கு ஆபத்து வருவதை அனுமதிக்க மாட்டேன் என்கிறார். காவலர் என்பது ஒரு ‘பெரும் கதையாடல்’ ஆகியுள்ளது. அம்பானி அதானியைக் காப்பவர், ஜனநாயக நிறுவனங்களை  அழிப்பவர், மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தர முடியாதவர்,  திசைதிருப்பி  பிளவுபடுத்த, மிகவும் திறமையாக ‘மற்றமை’ அரசியலைக் கையில் எடுத்துள்ளார். தேசத்திற்கு, இந்து இந்திய தேசத்திற்கு, பாகிஸ்தானிடமிருந்து இசுலா மியரிடமிருந்து, காஷ்மீரிகளிடமிருந்து, நகர்ப்புற நக்சல்களிடமிருந்து ஆபத்து வந்துள்ளது என்கிறார்; பாகிஸ்தானோடு நல்லுறவு, மத நல்லிணக்கம், கருத்து சுதந்திரம், ஜனநாயகம், மக்கள் உரிமைகள் என்று பேசுபவர்கள் எல்லாம் தேச விரோதிகள், வெறுக்கத்தக்க ‘மற்றமைகள்’ என்ற பெரும் கதையாடலைக் கட்டமைத்துள்ளார்.
உலகெங்கும் அய்க்கிய அமெரிக்கா தலைமையிலான இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்புப் போரில், இந்தியா ஓர் இளநிலை கூட்டாளி, அந்த வேலையை  தாமே  சிறப்பாகச் செய்ய  முடியும் என்பதும் கூட, காவலர் முழக்கம் மூலம் மோடி சொல்லும் செய்தி ஆகும்.
இந்த தேர்தல் அறிக்கையில், தான் இந்து ராஷ்டிராவுக்கு தயார் என பாஜக  சொல்கிறது.  தற்போதைய, வருங்கால கூட்டாளிகளிடம் இணக்கமும் கறார் தன்மையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறது. கூட்டாளிகளுக்கு இடம் ஒதுக்குவதில், மகாராஷ்டிராவில், பஞ்சாபில், பீகாரில், தமிழ்நாட்டில், வடகிழக்கில் நெளிவுசுளிவு காட்டி உள்ளது. நாளை கூட்டணி ஆட்சி என வந்து கூட்டணி கட்சிகள் மோடியை ஏற்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில், நிதின் கட்கரி பிரதமர் என ஒரு செய்தியை ஆர்எஸ்எஸ் கசிய விட்டது. மோடி, சிறிய சக்திகளோடு சுயேச்சைகளோடு சேர்ந்து ஆட்சி நடத்தவும் தயார் என்று சொல்லி, ஆர்எஸ்எஸ் மாற்று தேட வேண்டியதில்லை என்கிறார்.
ஆனால் காஷ்மீரின் தனித்தன்மையைக் காக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 35ஏ, 370 நீக்கப்படும், பொது சிவில் சட்டம் வரும், அதாவது மதச் சிறுபான்மையினரின் தனிச்சட்டங்கள் ஒழிக்கப்படும், சட்டப்படி ராமர் கோயில் கட்டப்படும் எனத் திரும்பவும் சொல்கிறார். அய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைவது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தடுமாறுகிறது. உயர்சாதியினர்க்கு 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து  எதிர்க்கட்சிகளிடம் இருந்து குரலே எழவில்லை. புல்வாமா, பாலகோட் வந்தவுடன் எதிர்க்கட்சிகள் பயந்து தயங்கித் தடுமாறி மெல்ல மெல்லதான் பேசுகிறார்கள்.
65 கோடி இந்தியர்களிடம் உள்ள செல்வம் வெறும் ஒன்பது இந்தியர்களிடம் மட்டுமே குவிந்துள்ளபோது, பொருளுள்ள நிலச் சீர்திருத்தம், வீடு, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு ஆகியவற்றை மக்கள் உரிமையாக்குவது, ஜனநாயக உரிமைகளைப் பலப்படுத்துவது என்ற தளங்களில் எதிர்க்கட்சிகள் பாஜகவை சந்திக்காமல் இருப்பது, வலதுசாரி அரசியலைப் பலப்படுத்துகிறது.
உழைப்பும் இயற்கையும் நவீன தொழில்நுட்பத்தால் பிரும்மாண்டமான  செல்வத்தைக் குவிக்கின்றன. அதனால் வறுமையின் பழைய அளவுகோல்கள் தன்மை மாறும். ஆனால் உழைப்பு உருவாக்கிய மதிப்பை பிரித்துக் கொள்வதில் உள்ள ஏற்றதாழ்வு தீவிரமாக தீவிரமாக, வலதுசாரி அரசியல் தீவிரமாவதும் நடக்கும்.
உலகின் முன், இந்தியாவின் முன் வலதுசாரி பாதை மட்டுமே இல்லை. இடதுசாரி மக்கள் சார்பு பாதையும் நிச்சயம் உள்ளது. ஆடுகளம் மூலதனத்துக்கு, முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக, அவர்கள் மேட்டிலிருந்து மேலிருந்து, பள்ளத்தில் கீழே உள்ள நம்மைத் தாக்க தோதானதாகவே உள்ளது. ஆனாலும் மக்கள் போராட்டங்கள் ஸ்டெர்லைட்டை மூட வைக்கின்றன. எட்டு வழிச் சாலையை முறியடிக்கின்றன.
மக்கள் தேர்வு செய்யத் தக்கதாய் இடதுசாரி அரசியலை முதலாளித்துவ ஊடகங்கள், கருத்துருவாக்குபவர்கள் ஒருபோதும் முன் நிறுத்த மாட்டார்கள்.
இடதுசாரிகள், தாமே, 21ஆம் நூற்றாண்டுக்குரிய இடதுசாரிகளாக, புதிய ஆயிரமாண்டு துவங்கிய பின் 18 வயது நிறைந்தவர்களை, நடுத்தரப் பிரிவினரை, தொழில்நுட்பத்திறன்  உடையோரைச் சென்று சேர்ந்ததாக வேண்டும். அடிப்படையாக, உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்டவர்களின் காவலராக இடதுசாரிகள் மட்டுமே உள்ளனர் என, அந்த மக்கள் நம்பும் நிலையை ஏற்படுத்த வேண்டும். சிறிய சக்தி, பெரிய சக்தியாக வேண்டும். வால் பிடித்தால் முடியாது. சுதந்திரமாக நின்றால்தான் முடியும். சாத்தியமானதை மட்டும் அல்லாமல், அவசியமானதையும் செய்தாக வேண்டும். நம் கனவுகள் மக்கள் கனவுகளாக வேண்டும்.  நம் நடவடிக்கைகள், நம் திட்டம் மக்கள் திரள் ஆதரவைப் பெறும் வகையில், நம் அமைப்பு நடவடிக்கைகள் மாறியாக வேண்டும்.

Search