COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 1, 2019

மோடி அரசின் கடைசி நிமிட கார்ப்பரேட் ஆதரவு 
மற்றும் மதவெறி நடவடிக்கைகள்

ஒரு கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கை

சிரம் அறுத்தல் வேந்தருக்கு பொழுது போக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின் வாதை என்று பாரதிதாசன் வரிகள் உண்டு.
அதானியைப் பொறுத்தவரை அவர் இந்திய, ஆசிய, உலக பணக்காரர்கள் பட்டியல்களில் முதல் சில இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் அதற்காக அவரது நண்பர் மோடி நடத்தி வந்த ஆட்சி, பதவிக் காலம் முடியும் கடைசி சில நாட்களை கூட வீண் செய்யாமல், எந்த மட்டத்தில், எந்த அளவில் முடியுமோ அந்த அளவில், மட்டத்தில் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எடுக்கிறது. அதானி, பணக்காரர்கள் பட்டியலில் முன் செல்ல முயற்சி செய்யும்போக்கில், பெரும்பாலான சாமான்ய மக்கள் வாழ வழியின்றி மடிந்து போவார்கள். வனம் பாறைகளால் ஆன பாலையாக மாறும்.
வனப் பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றி அது பற்றி அறிக்கை தர வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு எழுந்த பின்னணியில் அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவு பிப்ரவரி 13 அன்று பிறப்பிக்கப்பட்டு, பிப்ரவரி 20 அன்று வெளியிடப்பட்டு, பிப்ரவரி 28 அன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் சட்டிஸ்கரின் 1,70,000 ஹெக்டேர் பரப்பில் உள்ள அடர்த்தியான, தொடர்ச்சியான ஹஸ்தியோ ஆரண்ட் வனத்தில் பர்சா என்ற பகுதியில் 841 ஹெக்டர் பரப்பில் நிலக்கரிச் சுரங்கப் பணிகளுக்கு பிப்ரவரி 21 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. 
இந்த சுரங்கங்கள் ராஜஸ்தான் ராஜ்ய வித்யூத் உத்படன் நிகாம் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு இந்த சுரங்கப் பணிகளை செய்யவிருக்கும் ஒப்பந்த நிறுவனமான ராஜஸ்தான் கோலியரீஸ் லிமிடெட் நிறுவனம் அதானிக்குச் சொந்தமானது. சுரங்கப் பணிகள் கூடாது என்று 2009ல் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட வனப்பகுதி இது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, பொதுத்துறை நிறுவனத்துக்குத்தான் வன நிலம் தரப்பட்டுள்ளதாக தெரியும். பின்னிருந்து அதானி இயக்கி லாபம் பார்ப்பார். இந்த சுரங்கப் பணிகள் செய்ய தற்போதுள்ள மரங்கள் முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும். அங்கு வாழும் மக்கள் வெளியேற்றப்பட வேண்டும். பிறகு அந்த பூமிக்கடியில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படும்.
2016 ஜனவரி 8 அன்று, வன உரிமைகள் கீழ் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட நில உரிமையை ரத்து செய்து சட்டிஸ்கர் அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. (நாட்டில் முதல்முறையாக வன உரிமைகள் கீழ் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட நில உரிமையை ரத்து செய்தது சட்டிஸ்கரின் பாஜக அரசாங்கம்தான்). அந்த நிலத்தை இந்த பொதுத்துறை நிறுவனத்துக்கு வழங்கியது. இங்கும் இந்த வேலையைச் செய்யும் ஒப்பந்ததாரர் அதானியின் நிறுவனம். இப்போது அங்கு தண்ணீர் கூட கிடைக்காமல் பழங்குடியினர் துன்பப்படுகின்றனர்.
2014 மார்ச் 14 அன்று பசுமை தீர்ப்பாயம் சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் அந்த உத்தரவுக்கு தடை தந்தது. அதன் பிறகு அங்கு சுரங்கப் பணிகள் தொடர்கின்றன. ஆட்சி துவங்கியது முதல் ஆட்சி முடியும் வரை மோடியின் நடவடிக்கைகள் அதானியின் செல்வம் பல மடங்கு பெருகுவதை உறுதி செய்துவிட்டன. விளைவாக லட்சக்கணக்கான சாமான்ய, எளிய மக்கள் வாழ்க்கை நாசமாக்கப்பட்டுவிட்டன.
இப்போது பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. மத்திய பாஜக அமைச்சகம் அனுமதி தந்தாலும் இப்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான சட்டிஸ்கர் அரசாங்கம் வனப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமா, வனத்தை, சுற்றுச்சூழலை பாதுகாக்குமா, உச்சநீதிமன்றத் தடையை நீக்க முயற்சி செய்யுமா, அதிகாரத்தைப் பயன்படுத்தி அதானியை வெளியேற்றுமா என்று பார்க்க வேண்டியுள்ளது. இந்த அனுமதி தொடர்பாக சட்டிஸ்கர் அரசாங்கம் இன்னும் எதுவும் பேசவில்லை.
ஒரு மதவெறி நடவடிக்கை
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, குஜராத் மனிதப் படுகொலை வழக்கில் மோடி, சொரபுதீன் படுகொலை வழக்கில் அமித் ஷா விடுவிக்கப்பட்டனர்; விடுதலையாயினர். நாட்டின் பிற பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் குற்றங்களில் கைதான ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து பிணையில் விடுதலையாயினர். சட்டங்களும் நீதிமன்றங்களும் பாஜக விருப்பம்போல் வளைந்து கொடுத்தன. குற்றம் சுமத்தப்பட்ட சங்கிகள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். விடுதலையானார்கள். பதவிக் காலம் முடியும்போது, அசீமானந்தாவும் குற்றம் சாட்டப்பட்ட இன்னும் மூன்று பேரும் விடுதலையாகிறார்கள்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சம்ஜ÷வாதா ரயில் இயங்குகிறது. இந்த ரயிலில் 2007 பிப்ரவரி 18 அன்று குண்டு வெடித்து தீப்பிடித்து ரயில் பெட்டிகள் எரிந்து 68 பேர் தீக்கிரையாக்கப்பட்டார்கள். இவர்களில் 25 பேர் இந்தியர்கள். 43 பேர் பாகிஸ்தானியர்கள்.பலர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள்.
அந்த 68 பேரை கொன்றது யார்? சம்ஜ÷வாதா ரயிலில் வெடிகுண்டுகள் வைத்தது யார்? நவகுமார் சர்க்கார் என்கிற அசீமானந்தாவே கேரவன் பத்திரிகைக்கு அளித்த பேட்டிகளில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதற்கு முன்பே நீதிமன்றத்தில் வெவ்வேறு நாட்களில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். (காவலில் இருக்கும்போது அவர் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்படவில்லை).  பின்னர் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் ஒப்புக்கொண்டதாகச் சொன்னார்.
மார்ச் 11 அன்று பாகிஸ்தானைச் சேர்ந்த ரஹீலா வகீல், சம்பவம் பற்றிய ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தனது கருத்தை நீதிமன்றம் கேட்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். அவரது கூற்று தகுதியற்றது என்று தேசிய புலனாய்வு மய்ய நீதிமன்றம் சொல்லி அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
அசீமானந்தா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி அந்த நீதிமன்றம் மார்ச் 20 அன்று அவரை விடுதலை செய்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு மய்யம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்கவில்லையாம். விடுதலையாகிவிட்டார்கள்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சுனில் ஜோஷி 2007ல் கொல்லப்பட்டார். இன்னும் மூன்று பேர் குற்றவாளிகள் என்றும் காணாமல் போய்விட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டது. இன்று வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. காணாமல் போய்விட்டார்கள் என்று சொல்ல ஒரு தேசிய புலனாய்வு மய்யம் மோடி ஆட்சியில் இயங்குகிறது.
2007 மே மாதம், அய்தராபாதின் மெக்கா மசூதியில் நடந்த குண்டி வெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான முக்கியமான ஆவணங்கள் காணாமல் போயின. 2007 அக்டோபரில் ராஜஸ்தானின் ஆஜ்மீர் தர்காவில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். (இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் சாத்வி பிரக்யா தாகூர் விடுதலை செய்யப்பட்டார்). இந்த இரண்டு தாக்குதல்களிலும் அசீமானந்தா மீது வழக்கு போடப்பட்டது. அந்த வழக்குகளிலும் அவர் விடுதலையானார். 40 பேர் கொல்லப்பட்ட மலேகான் குண்டு வெடிப்பு தாக்குதல்களிலும் அசீமானந்த் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சம்ஜ÷வாதா ரயில் வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக அறிவிக்கிறார். சம்ஜ÷வாதா ரயில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் 25 பேர் இந்தியர்கள். பாகிஸ்தானியர் பற்றிய சங் பரிவாரின் வெறுப்பு நாடறிந்ததுதான். நாட்டுப் பற்று, பாதுகாப்பு என்று பேசிக் கொண்டு, சவுகிதார் என்ற அடைமொழியுடன், மீண்டும் ஆட்சி நடத்த வாக்குகள் கேட்டு மக்களை சந்திக்க வருபவர்கள், இந்தியர்கள் 25 பேரின் சாவுக்கு நியாயம் கேட்கப் போவதில்லை என்கிறார்கள். சங்கிகளின் இந்துத்துவ வெறியாட்டத்துக்கு பலியாகிக் கொண்டிருப்பது இந்திய மக்கள்தான், இந்தியாவின் பெரும்பான்மை இந்துகள்தான் என்பதை அசீமானந்தா விடுதலையும், அந்த விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு இல்லை என்று பாஜக சொல்வதும் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்திய மக்கள் விரோத, இந்து மக்கள் விரோத பாஜகவை இப்போது இந்தத் தேர்தலில் தோற்கடிப்பது மட்டுமே, பிளவுவாத அரசியலை, வெறுப்பு அரசியலை தோற்கடிப்பதாக, நாட்டின் மதச்சார்பின்மையை, ஜனநாயகத்தை மீட்பதாக அமையும்.
ஒரு கடைசி நேர குட்டு
கார்ப்பரேட் ஆதரவு, மதவெறி பாஜக, ஆட்சிக் காலம் முடியும் நேரம், மிகவும் விதிவிலக்காக உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கியுள்ளது. லோக்பால் அமைக்கப்பட்டுவிட்டது என்பதை மட்டும் முன்னிறுத்தும் சங் பரிவார் ஆதரவு ஊடகங்கள், அதற்காக மோடிக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் பற்றி யாருக்கும் கேட்காமல் பேசுகின்றன.
புதிதாக உருவாக்கப்பட்ட லோக்பால் உறுப்பினர்கள் எட்டு பேர் மார்ச் 27 அன்று பதவி யேற்றுக் கொண்டார்கள். தலைவர் பினாகி சந்திர கோஸ், மார்ச் 23 அன்று பதவியேற்றார்.
எதிர்க்கட்சி என ஒன்று இல்லை என்பதை லோக்பால் அமைக்காததற்கு காரணமாக மோடி சொல்லி வந்தார். 2017 ஏப்ரலில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் லோக்பால் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று உச்சநீதிமன்றம் சொன்னது. அப்போதும் மோடி அரசாங்கம் அதைச் செய்ய வில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்ட பிறகுதான், ஊழல் எதிர்ப்பு அலை மீதேறி ஆட்சியைப் பிடித்த மோடி அரசாங்கம் லோக்பால் அமைத்தது.
பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்சநீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதியால் நியமிக்கப்பட்ட, மோடியின் ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகள் அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோஹத்கி ஆகியோர் சேர்ந்து இப்போது பினாகி சந்திர கோசை தேர்ந்தெடுத்துள்ளார்கள். மோடி ஆட்சியில் நாம் கண்டு வரும் நடப்புகளில் இருந்து இந்த நால்வர் மத்தியில் மாற்றுக் கருத்து என்ற ஒன்று இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்த நான்கு பேர் கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் மல்லிகார்ஜ÷ன் கார்கேவுக்கும் அழைப்பு இருந்தது. முடிவு எடுப்பதில் பங்காற்ற முடியாத அந்தக் கூட்டத்துக்கு அவர் செல்லவில்லை.
இப்படியாக ஊழல் தடுப்பு அமைப்பு எந்த விதத்தில் அமைக்கப்படக் கூடாதோ, அந்த விதத்தில் ஆட்சிக் கால இறுதியில், உச்சநீதிமன்றத்தின் நிர்ப்பந்தத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தகவல் உரிமை அறியும் சட்டத்தை கொண்டு வந்த அந்தச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்கள் கொண்டே அய்முகூ அரசாங்கம் குற்ற வாளி கூண்டில் ஏற்றப்பட்டதுபோல், லோக்பால் அமைத்துள்ள மோடி அரசாங்கமும் விரை வில் அதன் முன்னாலேயே குற்றம் சுமத்தப்பட்டுநிறுத்தப்படும். 2014 மே முதல் 2019 மே வரையிலான காலம், இந்தியா இதுவரை பார்த்திராத மிகவும் இருண்ட காலம்.அந்தக் காலம் இனி ஒருபோதும் திரும்பக் கூடாது.

Search