COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 1, 2019

மக்களவைத் தேர்தல்களில் 
இகக (மாலெ) (விடுதலை)

மக்களவைத் தேர்தல்களில் இகக (மாலெ) (விடுதலை) இந்தியா எங்கும் 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பீகாரில் 4 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 3 தொகுதிகள், பஞ்சாபில் 3 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 2 தொகுதிகள், ஜார்கண்ட்டில் 2 தொகுதிகள், ஒடிஷாவில் 2 தொகுதிகள், ஆந்திராவில் 2 தொகுதிகள், தமிழ்நாட்டில் 2 தொகுதிகள், உத்தர்கண்டில் 1 தொகுதி, புதுச்சேரியில் 1 தொகுதி எனப் போட்டியிடுகிறது. நாடெங்கும் கட்சியின் சின்னம் மூன்று நட்சத்திரக் கொடி ஆகும்.
இந்தத் தேர்தல்களில், சுதந்திர அறுதியி டல், இடதுசாரி சுயமரியாதை ஆகிய கடமைகளை, பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளை முறியடிக்கும் உடனடி அவசியக் கடமையுடன், கட்சி திறம்பட இணைத்துள்ளது.
பீகாரில் அரா, சிவான், கராகட், ஜெகனாபாத் ஆகிய நான்கு தொகுதிகளில் இகக (மாலெ) போட்டியிடுகிறது. இகக(மா)வை உஜியாபூர் தொகுதியிலும், இககவை பெகுசராய் தொகுதியிலும் ஆதரிக்கிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் 19 தொகுதிகளில், காங்கிரஸ் 9 தொகுதிகளில், உபேந்திர குஷ்வாஹாவின் கட்சி 5 இடங்களில், முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் கட்சி 3 இடங்களில், விகாஷில் இஸ்தான் மஞ்ச் 2 இடங்களில் போட்டியிடுகின்றன. தனிக்கட்சி நடத்திய ஷரத் யாதவ் லாந்தர் விளக்கு என்ற லாலு கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
பாஜக - நிதிஷை முறியடிக்க வேண்டிய கட்டாயம் உள்ள இந்தச் சூழலில், பீகாரின் மகாகூட்டணி இடதுசாரிகளை தனிமைப்படுத்துவதும் சாதிய கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கியதும் துரதிர்ஷ்டவசமானது என இகக (மாலெ), விமர்சித்தது. மகாகூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் ஒரு தொகுதியை (அரா) ராஷ்ட்ரிய ஜனதா தளம் இகக மாலெவுக்கு ஒதுக்கியுள்ளது. இகக (மாலெ) ஏற்கனவே முடிவு செய்திருந்த 5 தொகுதிகளில் போட்டியிடாமல் 4 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. பாடலிபுத்ரா தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ஆதரிக்கிறது.
ஜார்கண்டில், இகக(மாலெ) கொடர்மா மற்றும் பலாமு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இடதுசாரிகளோடு சேர்ந்து போட்டியிட தாம் விரும்பியதாகவும், அப்படி முடியாததற்கு வருந்துவதாகவும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் ஊடகங்களிடம் தெரிவித்தார். உத்தர்கண்டில் இடதுசாரி கட்சிகள் மத்தியில் உடன்பாடு வந்துள்ளது.
புதுச்சேரி தொகுதியில் கட்சி புதுவை மாநிலக் குழு உறுப்பினர் தோழர் மோதிலால் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டில் திருச்சி தொகுதியில் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் பழ.ஆசைத்தம்பி, திருபெரும்புதூர் தொகுதியில் கட்சியின் முதன்மைத் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான தோழர் பழனிவேல் போட்டியிடுகின்றனர்.
இடதுசாரி அடையாளமும் இருத்தலும் கம்யூனிஸ்ட் அரசியல் வாழ்க்கைக்கு அடிப்படையானவை. அதே நேரம், சமகால நிலைமைகளில் இந்தியா முழுவதும் பாஜக மற்றும் அதன் கூட்டாளிகள் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் உதவுவதன் அவசியம், இந்தக் கடமைகளுக்கேற்பவே இகக(மாலெ) (விடுதலை) தேர்தல் களத்திலும் செயல்படுகிறது.

Search