COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 17, 2019

நிர்வாகத்தால் கொடூரமாக பழிவாங்கப்பட்டுள்ள நிலையிலும் பிரிக்கால் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள முன்முயற்சிகள்

ஜெயபிரகாஷ் நாராயணன்

17ஆவது மக்களவைத் தேர்தலில் இகக (மாலெ) விடுதலை தமிழகத்தில் திருச்சி, திருபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இகக (மா), இகக மற்றும் விசிக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஆதரவாக தனி மேடைகளில் தனியாக பிரச்சாரம் செய்வது எனவும் மற்ற தொகுதிகளில் பாசிச பாஜக, ஊழல் அஇஅதிமுக கூட்டணியை தோற்கடிப்போம் என்ற முழக்கத்துடனும் வேலைகள் துவக்கப்பட்டன.
கோவையில் இகக (மா) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தோழர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து 07.04.2019 அன்று பெரியநாயக்கன்பாளையத்தில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரையில் இருந்து:
1919 ஏப்ரல் மாதம் 13 அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்தப்பட்டது. சூரியன்  அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி அன்று துவங்கியது. தற்போது மோடியின் வீழ்ச்சி துவங்கியுள்ளது.
நடைபெறும் தேர்தல், வெற்றி பெறப் போவது ஜனநாயகமா, சனாதன சர்வாதிகாரமா என்பதை தீர்மானிக்கப் போகிறது. கார்ப்பரேட் மதவெறி பாசிசம் வீழ்த்தப்பட வேண்டும். இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால் இதுதான் கடைசி தேர்தல் என்றும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு மாறாக மனுதர்ம சட்டம் வேண்டும் என்று பரிவாரங்கள் சொல்கிறார்கள். எனவே இந்த வாழ்வா, சாவா தேர்தல் போராட்டத்தில் பாசிசத்தை முறியடித்தே ஆக வேண்டும்.
அதே சமயம் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு சிபிஅய்எம்எல் இந்தத் தேர்தலில் தேர்தல் செயல்தந்திரத்தை வகுத்துள்ளது. இந்தியா முழுவதும் 22 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இடதுசாரி ஒற்றுமையை அடிப்படையாக கொண்டு தேர்தலை சந்திக்கிறோம். பகத்சிங், அம்பேத்கர், பெரியார், சிங்காரவேலர், சீனிவாசராவ் போன்றவர்களின் கனவுகளை நிறைவேற்ற இடதுசாரிகளை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். கோவையில் பாசிச பாஜகவிற்கு இடமில்லை. அதனால், இககமா வேட்பாளர் தோழர் பி.ஆர்.நடராஜன் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
நாக்பூரில் ஆர்எஸ்எஸ் ஆதரவு நாக்பூர் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பு பாஜக கூட்டணி தோற்கும் என சொல்கிறது. இந்த கருத்து கணிப்பால் பாஜக பதறுகிறது. தேச வெறி ஊட்ட முயற்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக, தேமுதிக தலைவர்கள் பேசும்போது உளறுகிறார்கள். பிரேமலதா மோடிதான் புல்வாமா தாக்குதல் நடத்தினார் என்று சொல்கிறார்.
நாட்டில் அனைத்து விதமான சமூக பிளவுகளையும் உருவாக்க சங் பரிவார் சக்திகள் முயற்சி செய்கிறார்கள். எழுத்தாளர்கள், ஜனநாயகவாதிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். விண்வெளியில் நாட்டை காப்போம், செயற்கைகோளை ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தும் திறன் வந்துவிட்டது என மோடி சொல்கிறார்.
திமுக ஏழைகள் கட்சி, திமுகவில் ஒரு லட்சாதிபதியை காட்ட முடியுமா என அண்ணாதுரை கேட்டார். தற்போது அதன் வழி வந்த அதிமுகவில், இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், செயலாளர்களில் கோடீஸ்வரர் அல்லாதவர்களை அவர்களால் ஒருவரையாவது காட்ட முடியுமா?
சனாதன கூட்டத்தை ஆதரிக்கும் அதிமுக, பாசிச பாஜக கூட்டணியை 40 தொகுதியிலும் தோற்கடிக்க வேண்டும்.
பிரிக்கால் வழக்கு நிலைமைகள் பற்றியும் சொல்வது அவசியம் என நினைக்கிறேன். சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பார்த்திபன் தீர்ப்பை எதிர்த்து பிரிக்கால் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வத்தில் 22.03.2019 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றே வழக்கு முடிந்தது. டிவிசன் பெஞ்சின் தீர்ப்பில் தெளிவுபடுத்தல் கோரி சங்கம் தாக்கல் செய்த மனுவில் 02.04.2019 அன்று தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. 10 (1) ரெஃபரன்ஸ், 10 பி ஆணை இரண்டும் ஒரே நேரத்தில் வரவேண்டும் எனவும், ஆணை பிறப்பிப்பதற்கு முன்பு இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டிய அவசியம் இல்லாமல் அவசரமாக ஆணைகள் போட வேண்டும் என்றும் சங்கம் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
தனி நீதிபதி, வேலை நீக்கத்திற்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு தந்த அன்றே, நிர்வாகத் தரப்பு வழக்கறிஞர், தொழிலாளர்கள் வேலை கேட்டு ஆலை வாயிலுக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக இடைக்கால தடை உத்தரவு காலத்திற்கு சம்பளம் மற்றும் இதர படிகள் தருவதாக சொன்னதை, எமது கட்சிக்காரருக்கு தெரியப்படுத்துவதாக நிர்வாக தரப்பு வழக்கறிஞர் டிவிசன் பெஞ்சில் தெரிவித்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி நிர்வாகம் 15.02.2019 முதல் 27.02.2019 வரை சம்பளம் மற்றும் இதர படிகள் தர கடமைப்பட்டுள்ளது.
நீதிமன்றம் சம்பளம் தர உத்தரவிடவில்லை, ஆனால் நிர்வாகம் சம்பளம் தர முடிவெடுத்துள்ளது, உடனடியாக தர நிர்ப்பந்திக்க வேண்டாம் என மலர்வண்ணன் சொல்கிறார். சங்கத் தரப்பில் உடனடியாக வழங்கக் கோரி கடிதம் அனுப்பப்படும்.
பழைய 2007 பணியிட மாற்ற வழக்கில், கோவை நீதிமன்றம், அமல்கமேஷன் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யக் கோரும் நிர்வாகத்தின் மனுவை அனுமதித்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சங்கம் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த் தடை உத்தரவு தந்துள்ளார். 60 பேர் வழக்கில், நிர்வாகத் தரப்பில் வழக்கறிஞர் மாறிவிட்டதால் அவகாசம் கோரியதை அடுத்து 20.04.2019 அன்று வந்த வழக்கு 22.04.2019 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் திமுகவின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் திரு.அறிவரசு, கோவை நாடாளுமன்ற தொகுதி இகக(மா) வேட்பாளர் தோழர் பி.ஆர்.நடராசன் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திரு.அறிவரசு பேசும்போது இந்தப் பகுதியில் தொழிலாளர் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் தலைவர் எஸ்.குமாரசாமி பல சாதனை வெற்றிகளை பெற்றுள்ளார், பகுதி தொழிலாளர்களுக்காக பத்து ஆண்டுகளுக்கு மேலாக தலைமையேற்று இயக்கத்தை வழிநடத்தி வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், உங்களால், எங்களோடு ஒரே மேடையில் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள முடியா விட்டாலும் பாசிச மதவாத கார்ப்பரேட் ஆதரவு பாஜக அஇஅதிமுக தோற்கடிக் கப்படவேண்டும் என்ற நிலையை வரவேற்கிறேன், தேர்தல் முடிந்தவுடன், அரசு, சங்கம் கோரியது போல் 10 பி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும், இல்லையேல் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்படும், உங்கள் போராட்டங்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம் என்றார். மதயானையை சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்தித்து அடக்கி, கோவையில் சங்கிலி போட்டு கட்டி வைத்துள்ள தலைவரின் கோரிக்கைகளை மத்தியிலும் மாநிலத்திலும் அமையவுள்ள அரசுகள் சாதகமாகப் பரிசீலிக்கும் என்றார்.
தோழர் பி.ஆர்.நடராசன் பேசும்போது இந்தத் தொகுதி மற்ற தொகுதிகளைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது, காவியும் கம்யூனிஸ்ட் நேரடியாக மோதும் தொகுதியாகும், பாசிச பாஜக ஆட்சி தோற்கடிக்கப்பட வேண்டும், தொழிலாளர் போராட்டங்களை தீர்க்காமல் இருப்பதற்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது, இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும், தேர்தல்கள் முடிந்த பின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக மாநிலக்குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன், கோவை மாநகரச் செயலாளர் தோழர் வேல்முருகன், அகில இந்திய மக்கள் மேடையின் தோழர் பெரோஸ் பாபு, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க கோவை பொறுப்பாளர் தோழர் லூயிஸ், பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், நடராஜன் ஆகியோர் பேசினர்.
600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொது மக்களும் திரண்டு நின்று கூட்டத்தை கேட்டனர்.
பிரிக்கால் சங்க நிர்வாகிகள் ஜெயப்பிர காஷ்நாராயணன், நடராஜன் ஆகியோர், ஏப்ரல் 9, 10, 11 தேதிகளில் திருபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் இகக(மாலெ) சார்பில் போட்டியிடும் தோழர் க.பழனிவேல் அவர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்று வந்தனர்.
அதனூடேயே பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு 10 (1) ரெஃபரன்ஸ் மற்றும் 10 பி உத்தரவு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என அரசு செயலாளர் (தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை), தொழிலாளர் கூடுதல் ஆணையரை நேரில் சந்தித்து கடிதம் தரப்பட்டது.
ஏப்ரல் 13, 14. 15 தேதிகளில் இகக(மாலெ) கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், கோவை மாநகரச் செயலாளர் தோழர் எம்.எஸ்.வேல்முருகன் ஆகியோர் திருபெரும்புதூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் இகக (மாலெ) சார்பில் போட்டியிடும் தோழர் பழ.ஆசைத்தம்பிக்கு பிரிக்கால் தொழிலாளர்கள் தேர்தல் நிதியாக ரூ.10,000 அனுப்பியுள்ளனர்.

Search