COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 1, 2019

கிறைஸ்ட்சர்ச் தாக்குதலும்
இந்திய மக்களவைத் தேர்தலும்

அன்பு

கிறைஸ்ட்சர்ச் நகரின் இரண்டு மசூதிகளில் தொழுகைக்கு வந்த 50 பேர், 2019 மார்ச் 15 அன்று, வெள்ளை நிற/இன வெறியின் செமி ஆட்டோமாட்டிக் துப்பாக்கி தாக்குதலுக்கு பலியானார்கள்.

கிறைஸ்ட்சர்ச், நியூசிலாந்து நாட்டில் உள்ள, 3,75,000 மக்கள் தொகை கொண்ட ஒரு நகரம்.
பெயரில் கிறிஸ்து இருக்கிறார். சர்ச்சும் இருக்கிறது. ஆப்ரஹாமிய நம்பிக்கை மதங்களே யூத, கிறிஸ்துவ, இசுலாமிய மதங்களாகும். கிறிஸ்துவ, யூத மதங்களில் ஆப்ரஹாம் என்ற பெயரும் இசுலாத்தில் இப்ராஹிம் மிகவும் பொதுவான பெயர்கள். இஸ்லாம், பெருமளவில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் செல்வாக்கு கொண்டது. மேற்கு ஆசியாவில் ஜெருசலத்தை எப்போதும் மறக்காத ஒடுக்கப்பட்ட, அய்ரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் மத்தியிலிருந்து புறப்பட்ட சிலர், அரசியல் யூதமான ஜியானிசம் கொண்டு இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பு நாட்டை நிறுவினார்கள். கிறிஸ்துவ மதம் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இருந்தாலும், அதில் மேலோங்கி செல்வாக்கு செலுத்துவது, அய்ரோப்பிய அமெரிக்க வெள்ளையர் கிறிஸ்துவமே ஆகும். 21ஆம் நூற்றாண்டு நாகரிகங்களின் மோதலில், குறிப்பாக, அய்க்கிய அமெரிக்கா தொடுத்த பயங்கரவாத எதிர்ப்புப் போரில், ஏகாதிபத்திய வெள்ளை கிறிஸ்துவமும், அரசியல் யூத வெள்ளை ஜியானிசமும், கருப்பும் பழுப்புமான இசுலாத்தின் மீது தாக்குதல் கள் தொடுத்துள்ளன.
2018ல் இசுலாமியர்க்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் பெரிதும் அதிகரித்தன. இந்த அம்சத்தில் 2019ஆம் ஆண்டு படுமோசமாகவே நகர்கிறது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட இந்துக்களை, யூதர்களை, கிறிஸ்தவர்களை, இந்து பயங்கரவாதிகள், யூத பயங்கரவாதிகள், கிறிஸ்தவ பயங்கரவாதிகள் என ஒரு போதும் சொல்லாத ஊடகத்தினர், சற்றும் தயங்காமல் இசுலாமிய பயங்கரவாதிகள் என்று வாடிக்கையாகச் சொல்வது, சமகால யதார்த்தமாகிவிட்டது. சோவியத் முகாம் சரிந்த பிறகு, மேற்கத்திய தாராளவாத முதலாளித்துவம் கடும்நெருக்கடியில் சிக்கி மீளமுடியாமல் தவித்தபோது, உலகெங்கும், விளிம்பு நிலை வலதுசாரி சக்திகள், அரசியலின் மய்ய நீரோட்டத்திற்கு வந்துவிட்டனர். ‘நாம் எதிர் அவர்கள்’‘மற்றமை’ கோட்பாடுகள் அரசியல் அரங்கில் வேண்டாத விருந்தாளிகளாய் நுழைந்துவிட்டன.
உலக வளங்களை சூறையாடும் ஏகாதிபத்தியம், ஆப்கானிஸ்தான் மீதும் இராக் மீதும் பொய்க் காரணங்கள் சொல்லி ஆக்கிரமிப்புப் போர்களை தொடுத்தது. லிபியாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தது. தலிபான் அல் கொய்தா அய்எஸ்அய்எஸ் அமைப்புகளுக்கு நிதியும் ஆயுதங்களும் தந்தது. வஹாபி அடிப்படைவாதம் பலப்படுதலும், லட்சக்கணக்கான அகதிகள் உருவாகி, அய்ரோப்பா நோக்கி புறப்படுதலும் நகர்தலும், இவற்றின் விளைவுகளே. ஆட்கொல்லி ஏகாதிபத்தியம் ஏகபோக மாய், நிதிமூலதனமாய், ஒட்டுண்ணியாய் வீங்கிப் பெருத்துள்ள ஏகாதியத்தியம், மாறி மாறி அழுகிக் கொண்டும் பிழைத்துக் கொண்டும் இருக்கும் ஏகாதிபத்தியம், மேலை நாடுகளிலும் மக்களுக்கு நல்வாழ்க்கை தர வக்கற்றதாகிவிட்டது. இசுலாமியர்களும் குடி பெயரும் அகதிகளும் லத்தின் இனத்தவர்களும் வெள்ளை கிறிஸ்தவர்களை, அசல் வெள்ளையர்களை நாசமாக்குகிறார்கள், இசுலாமியர்களும் அரபுகளும் கருப்பர்களும் லத்தினோக்களும் சோம்பேறிகள், பொய்யர்கள், குற்றவாளிகள் என ஓயாமல் பரப்புரை செய்து, ‘நாம் எதிர் அவர்கள்’, ‘மற்றமை’ என்ற பெரும் கதையாடலை அய்க்கிய அமெரிக்க ஆட்சியாளர் டிரம்ப் முதல் ஹங்கேரியின் விக்டர் ஓர்பன் வரை, கட்டமைக்கின்றனர். பொய்ச் செய்திகள் நாளும் உண்மை போல் வலம் வரும், உண்மைக்குப் பிந்தைய காலத்திற்குள் உலகம் நுழைந்துவிட்டது.
15 மார்ச் 2019 அன்று கிறைஸ்ட்சர்ச்சின் அல் நூர் மசூதியில், சகோதரரே அஸ்லாமு அலைக்கும், (சகோதரரே, சமாதானத்தில் வரவேற்கிறோம்) என அன்புடன் அழைக்கப்பட்ட மனிதனே, வெள்ளை நிற வெறியும் இன வெறியும் இசுலாமிய வெறுப்பும் தலைக்கேற, இரண்டு மசூதிகளில் 50 பேரைச் சுட்டுக் கொன்றான். கொலை செய்தவனுக்கு சொந்த நாடு ஆஸ்திரேலியாவாக இருக்கலாம். ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு ஹிட்லரிடம், முசோலினியிடம் ஈர்ப்பு இருந்தது.  கிரைஸ்ட்சர்ச் கொலையாளியின் போற்றுதலுக்குரிய அரசியல் தலைவர் டொனால்ட் டிரம்ப். அய்க்கிய அமெரிக்க உள்நாட்டுப் போர் இசை பின்னணியில் ஒலிக்க, செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி சடசட என மனிதர்களைச் சுட்டு வீழ்த்துவதை,  அரை மணி நேரம் முகநூலில் நேரடியாக ஒளிபரப்பு செய்தவன், அந்தக் கொலையாளி. துப்பாக்கி கலாச்சாரம், முகநூல், வெள்ளை இனவெறி என்ற ஆபத்தான கலவை, 50 உயிர்களைப் பலி கொண்டது. வெள்ளை இனவெறி, அதி நவீன தொழில் நுட்பத்தால் உலகளாவிய வலைப்பின்னல் பெற்றுள்ளது; பெரிய சர்வதேச ஆபத்தாக மாறியுள்ளது.
இதற்கெல்லாம் பல வருடங்கள் முன்பே, குஜராத்தில் அரசு ஆதரவுடன் இசுலாமியரைக் கொன்று குவிக்கும், அவர்கள் சொத்துகளை, குடியிருப்புகளை அழிக்கும், அவர்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் ஒரு போரை மோடி தலைமையில் 2002ல் இந்துத்துவா நடத்திக் காட்டியது. அந்த மோடிதான் 2014 முதல் இந்தியாவின் பிரதமர். அவரது குஜராத் கூட்டாளி அமித் ஷாதான் நாடாளும் கட்சியின் தலைவர். டிரம்ப், இஸ்ரேலின் நெதன்யாஹ÷, மோடி எல்லோருமே சர்ப் விளம்பரம் போல் கறை நல்லது என நம்புபவர்கள். கைகளில் படியும் இரத்தக் கறை, வாக்குகளாக அரசியல் செல்வாக்காக மாறும் என நம்புகிறவர்கள்.
மோடி, இசுலாமியர்களும் இசுலாமிய பாகிஸ்தானும் ஆபத்தானவர்கள், தீயவர்கள் என்கிறார். இஸ்லாத்திலிருந்து, இசுலாமியர்களிடமிருந்து, இந்து இந்தியர்களை இந்தியாவை காக்கும் காவல்காரர் தாமே என்கிறார். புல்வாமாவுக்குப் பழிவாங்க, விமானத்தில் பறந்து எல்லை தாண்டி பாகிஸ்தானிலிருக்கும் பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது தாமே, விண் வெளியில் ஏவுகணை ஏவி செயற்கைக்கோளை வீழ்த்தியதும் தாமே, தம்மைப் போல் அனைவரும் காவலன் நானே எனச் சொல்ல வேண்டும் என்கிறார். அம்பானி, அதானி என கார்ப்பரேட் கள்வர் கூட்டம், இந்திய கருவூலத்தை, இயற்கை வளங்களை, மனித வளங்களைச் சூறையாட வழிசெய்த மோடி, காவலர் நாடகம் போடுகிறார். எதிரிகளாக பகைவர்களாக, பாகிஸ்தானை, இசுலாமியரை, தலித்துகளை, நகர்ப்புற நக்சல்களை நிறுத்துகிறார். மோடி ஆட்சியில்தான் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. பகுத்தறி வாளர்கள் கொல்லப்பட்டனர். தண்டனை பற்றிய அச்சமின்றி பசு குண்டர்கள் கும்பல் படுகொலை செய்கிறார்கள்.
மோடியின் வெறுப்பரசியலும், ராமதாசின் வெறுப்பரசியலும், கிறைஸ்ட்சர்ச் நகரில் கொலைகாரன் துப்பாக்கியில் இருந்து வெளியேறி இசுலாமியர்கள், குடியேறியவர்கள் உயிர்களை குடித்த தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. டிரம்ப் - மோடி கால வெறுப்பரசியலின்  அடையாளச் சின்னங்களில் கிறைஸ்ட்சர்ச் ஒன்று.
கிறைஸ்ட்சர்ச் நிகழ்வுக்கு ஒரு மறு பக்கமும் உண்டு. அந்த நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், தாக்கப்பட்டவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் வகையில், தலையில் கருப்பு துப்பட்டா சுற்றிக் கொண்டு, அவர்களது வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி, பரஸ்பர பரிவில், பரஸ்பர கருணையில், பரஸ்பர அனுதாபத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஓர் உடலைப் போன்றவர்கள் ஆவார்கள், உடலின் ஒரு பகுதிக்கு பாதிப்பு என்றால் மொத்த உடலுக்கும் வலி ஏற்படும், நியூசிலாந்து உங்களோடு சேர்ந்து துயரப்படுகிறது, நாம் ஒன்றாக இருக்கிறோம் என்றார். அகதிகளும் குடியேறியவர்களும் நம்மவர்கள் என்றும், அவர்களைத் தாக்கிய கொலைகாரன் தான் நம்மவன் இல்லை என்றும் சொன்னார்.
நியூசிலாந்தில் இசுலாமியர் 1% பேர்.இந்தி யாவில் இசுலாமியர் 14% பேர். என்றாவது, எப்போதாவது துயருற்ற, கொல்லப்பட்ட இசுலாமியர் குடும்பங்களுக்கு மோடி ஆறுதல் அளித்தாரா, அவர்களை அரவணைத்தாரா, பாதுகாத்தாரா, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா என்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன.
இந்த நேரத்தில் பகத்சிங்கின் கருத்துகள் நம் சமகால உலகத்துக்கும் இந்தியாவுக்கும் எவ்வளவு அவசியமானவை எனக் காண்பது நல்லது. 1924ல் தனது 14ஆவது வயதில் மத்வாலா என்ற இந்தி பத்திரிகையில் ‘எங்கும் நிறைந்த சகோதரத்துவம்’ என்ற தலைப்பில் பகத்சிங் ஒரு கட்டுரை எழுதினான். அவன் கனவு கண்ட அந்த உலகத்தில், அனைவரும் ஒருவராக இருப்பார்கள். எவரும் மற்றவர்களாக இருக்க மாட்டார்கள். ‘கருப்பு நிறத்தவர், வெள்ளை நிறத்தவர், நாகரிகமடைந்தோர், அநாகரிக நிலையில் உள்ளோர், ஆள்வோர், ஆளப்படுவோர், ஏழை, பணக்காரன், தீண்டத் தகுந்தவர், தீண்டத்தகாதவர் என்ற வேறுபாடுகள் இருக்கும் வரை எங்கும் நிறைந்த சகோ தரத்துவம் சாத்தியம் ஆகாது. நாம் சமத்துவத்திற்காக நீதிக்காகப் போராடுகிறோம். அப்படி ஓர் உலகைப் படைப்பதை எதிர்ப்பவர்களைத் தண்டித்தாக வேண்டும்’ என்று சொல்கிறான். 1926ல் பகத்சிங் தயாரித்த இளைஞர்களுக்கான அறிக்கை சொன்னது: ‘நமது முன்னேற்றத்திற்கு மத மூட நம்பிக்கைகளும் வீண் பிடிவாதமும் தடைகளாகும். இந்தத் தடைகளை நாம் அழித்தாக வேண்டும். சுதந்திர சிந்தனையை சகித்துக் கொள்ள முடியாத அனைத்தும் அழிந்தாக வேண்டும். அரசியலில் இருந்து மதத்தை விலக்கி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய பகத்சிங்கின் இந்தக் கருத்துகள், மற்றமைப்படுத்தலுக்கு (Othering) சரியான சவுக்கடி.
மோடி 2019 மே மாதம் மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் இனி தேர்தலே நடக்காது என்றும் இந்து ராஷ்டிரா நிச்சயம் என்றும் மோடி பக்தர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். சுதந்திர சிந்தனையின் விரோதிகளை, ஜனநாயகத்தின் விரோதிகளை முறியடிப்பது, பகத்சிங்கின் அழைப்புக்குச் செவிசாய்ப்பதாகவும், கிறைஸ்ட்சர்ச்சில் பலியானவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிப்பதாகவும் அமையும்.

Search