COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 1, 2019

மோடியே திரும்பிப் போ என்று மட்டுமே 
தமிழ்நாடு சொல்லும்

ஜெயலலிதா இருந்தவரை பேசியறியா தமிழக அஇஅதிமுக அமைச்சர்கள் இன்று பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
என்ன பேசுகிறோம் என்று புரியாமல் திணறி உளறி மீம்சுகளின் நாயகர்களாக இன்று உயர்ந்து நிற்கிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாமக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு பேசிய கூட்டத்தில் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவர் இப்படி வாக்கு கேட்பதற்கு சில நாட்கள் முன்னரே, ராமதாஸ், அவர் பேசிய ஒரு கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்றார். கூட்டணி உருவாவதற்கு முன்பு வரை அவர் பேசிக் கொண்டிருந்தது தானாக வெளியே வந்தது.
பிரேமலதா இவர்களை எல்லாம் மிஞ்ச என்ன பேசுவது என்று யோசித்திருக்க வேண்டும். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு பிரேம லதா படத்துடன் அவர் பிரச்சாரத்தில் பேசியதை வெளியிட்டது. தேசத்திற்கு ஆபத்து இருக்கும்போது, புல்வாமா தாக்குதலை தொடுத்ததன் மூலம் மோடி, உலகத்திலேயே தான்தான் துணிச்சலான பிரதமர் என நிரூபித்து விட்டார் என்றார் அவர்.
பிரேமலதா மிகவும் விவரமானவர். அவருக்கு நாக்கு குழறாது. டங் ஸ்லிப் ஆகாது. உளவியலில், ஃபிராய்டியன் ஸ்லிப், அதாவது மனதில் இருப்பது தன்னையும் அறியாமல் பேச்சில் வந்துவிடுவது என்று சொல்வார்கள். எது எப்படியானாலும், மோடியிடம் இருந்துதான், மோடியின் போலி தேசபக்தியில் இருந்துதான், இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும், தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற மக்கள் விருப்பம், பிரேமலதாவின் பேச்சில் வெளிப்பட்டிருக்கும்.
புல்வாமா, பாலகோட், செயற்கைக்கோளை ஏவுகணை கொண்டு தாக்கும் கண் கட்டு வித்தைகள் கொண்டு, மோடியால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், விவசாய நெருக்கடி, வேலையின்மை, ஜனநாயக பறிப்பு, தமிழ் நாட்டு உரிமைகள் பறிப்பு, தமிழ்நாட்டு மக்கள் மீதான போர், ஊழல் - மதவெறி - சாதி ஆதிக்க - சந்தர்ப்பவாத கூட்டணி என்ற உண்மைகளை மறைக்க முடியாது என ராமதாஸ், பிரேமலதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் கும்பல் உணரும் நாட்கள் நெருங்கிவிட்டன.
2014ல் நாடெங்கும் 432 இடங்களில் போட்டியிட்ட பாஜக, அவர்கள் ஆட்சிக் காலத்தில் சாதனை மேல் சாதனை செய்ததாக பெருமை பேசியபோதும் 2019ல் 435 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் 1984ல் மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் போட்டியிட்டது. தோற்றது. 1991ல் 15, 1996ல் 37 இடங்களில் போட்டியிட்ட பாஜக, தோற்றது. 1998ல் அஇஅதிமுகவின் தோளேறி 5 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றி பெற்றது. 1999ல் திமுகவின் தோளேறி 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி  பெற்றது. 2004ல் அஇஅதிமுகவுடன் சேர்ந்து 7 இடங்களில் போட்டியிட்டு  எல்லாவற்றிலும் தோற்றது. 2009ல் அரசியலில் அனைவராலும் கைவிடப்பட்டு, சரத்குமார், கார்த்திக் பாரதிய பார்வேட் பிளாக்குடன் மெகா கூட்டணி அமைத்து 40க்கு 40லும் தோற்றது. 2014ல் தேமுதிக, பாமக, மதிமுக மற்றும் இரண்டு வெளிப்படையான சாதிய கட்சிகளுடன் கூட் டணி அமைத்து எல்லா இடங்களிலும் கூட்டணியாய்ப் போட்டியிட்டு, பாஜக ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
சட்டமன்ற தேர்தல்களில் 1991ல் ஓர் இடத்தில் வெற்றி பெற்றது. 2001ல் திமுக கூட்டணியில் 21 இடங்கள் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. அய்யா வைகோ எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டாலும், பாஜகவை 21 இடங்களிலும் ஆதரித்தார். 2011ல் 204 இடங்களில் போட்டியிட்டு 2.22% வாக்குகளுடன் 198 இடங்களில் டெபாசிட் இழந்து மொத்தமாய் தோற்றது. மோடி பிரதமரான பிறகும், மோடி மந்திரம் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. 2016ல் 188 இடங்களில் போட்டியிட்டு 180 இடங்களில் டெபாசிட் இழந்தது.2.84% வாக்குகள் பெற்றது.
மக்கள் விரோத, தேசவிரோத பாஜக - அஇஅதிமுக கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும். மோடியை வர விடாத தமிழ்நாடு  ஏப்ரல் 18 அன்றும் மோடியே திரும்பப் போ என்றே சொல்லும்.

Search