COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 1, 2019

ஒரு சதத்தினருக்கான இந்தியா அல்ல 
99 சதத்தினருக்கான இந்தியா வேண்டும்

அகில இந்திய மக்கள் மேடை கோவை கருத்தரங்கம்

அகில இந்திய மக்கள் மேடையின் கருத்தரங்கம் 24.03.2019 அன்று கோவையில் தோழர் பெரோஸ்பாபு தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வித்யாசாகர் முன்னிலை வகித்தார். தேசிய பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.
2019 தேர்தலுக்கான மக்கள் கோரிக்கை சாசனத்தை அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதய குமார் வெளியிட எழுத்தாளர்கள் எஸ்.வி.ராஜதுரை, பாமரன், சம்சுதீன் ஹீரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள இயலாத கல்வியாளர் வசந்திதேவி, இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோர் வாழ்த்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர். மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியையும், மாநில எடப்பாடி ஆட்சியையும் அதன் மதவெறி, வெறுப்பு அரசியலையும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளையும், இரண்டுமே ஊழலில் சிக்கித் தவிப்பதையும் அம்பலப்படுத்தி தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, சம்சுதீன் ஹீரா, பியுசிஎல் தோழர் பாலமுருகன், தலித் விடுதலைக் கட்சி செங்கோட்டையன், தமிழ்புலிகள் கட்சியின் தோழர் இளவேனில், தகவல் தொழில்நுட்ப பணியாளர் அமைப்பின் தோழர் பாரதிதாசன், உழைப்போர் உரிமை இயக்கத்தின் தோழர் வேல்முருகன், பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் சுதந்திரன், அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய செயற்குழு உறுப்பினரும் இககமாலெ அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர் கவிதா கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.
கல்வியாளர் வசந்திதேவி, தனது செய்தியில், 2019 தேர்தல், சுதந்திர இந்தியாவில் இது வரை நடந்த தேர்தல் போன்றதல்ல, இது அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியல்ல, இது இந்தியக் குடியரசு, அதன் ஜனநாயகம், அரசியல் சாசனம், அடிப்படை விழுமியங்கள், மானுட நெறிகள் தொடரப் போகின்றனவா அல்லது செத்து மடியப் போகின்றனவா என்பதை தீர்மானிக்க நடக்கும் அக்னிப் பரீட்சை எனக் குறிப்பிட்டு இதை அலட்சியம் செய்து மீண்டும் அதே ஆட்சியை அரியணையில் ஏற்றினால் வரும் தலைமுறைகளுக்கு நாம் துரோகம் செய்தவர்களாவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தனது செய்தியில், மூளை சலவை செய்யப்பட்டு நடத்தப்பட்டு வரும் வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊடே பல உயிர்கள் பலியாக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர் இடது வலது என்பதல்ல பிரச்சனை, நம் மனசாட்சி நீதி நியாயத்தின் பக்கம் நிற்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். பல்வேறு கருத்துகள் கொண்ட சக்திகளின் கூட்டமைப்பு பலவீனமான ஒன்றல்ல, அது நமது சமூக, பொருளாதார வலிமையின் வெளிப்பாடு என்று  குறிப்பிட்ட அவர் இன்னும் 5 ஆண்டு காலத்துக்கு இந்த ஆட்சி நீடித்தால் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பைக் கொண்டு வரும் என்று சொல்லியிருந்தார்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட எழுத்தாளர் பாமரன் பேசும்போது இந்த மோடி ஆட்சி போரை விளையாட்டாகவும் விளையாட்டை போராகவும் பார்க்கிற ஆட்சியாக இருக்கிறது என்றார்.
எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற வெறுப்புப் பிரச்சாரம் சோட்டா பீம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சிறுபான்மை சமூக குழந்தைகளைக் கூட பொது வெளியில் பாதிப்புக்குள்ளாக்குகிறது என்றார்.
பியுசிஎல் தோழர் பாலமுருகன், வனப்பகுதிகளில் கார்ப்பரேட் நலனிலிருந்து இலட்சோப லட்சம் பழங்குடிகளை வெளியேற்ற இந்த அரசு ஆயத்தமாகி வருகிறது என்றும் இந்த ஆட்சியை இனியும் தொடர விடக்கூடாது என் றும் சொன்னார்.
கருத்தரங்கில் வெளியிடப்பட்டுள்ள மக்கள் சாசனம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்ட எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, இடது ஜனநாயக சக்திகளை பிளவுபடுத்துவதில் பாசிசத்தின் பலம் உள்ளது என்று குறிப்பிட்டார். சுற்றுச்சூழல், தலித்துகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை, வன அழிப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு போன்ற பல பிரச்சனைகளை இனங்கண்டு ஒரு புள்ளியில் இணைக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு என்றார். பாசிஸ்டுகளுக்கு தமிழகத்தில் 5 இடங்களிலும் படுதோல்வியை உத்தரவாதம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தோழர் கவிதா கிருஷ்ணன் தனது உரையில், இன்று பாஜககாரர்கள் 2019 தேர்தலில் ஜெயித்துவிட்டால் போதும் எல்லா ஜனநாயக நிறுவனங்களையும் ஒழித்துக்கட்டி விடுவோம் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள், ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது, பாஜக ஆட்சி வெறுப்பு வன்முறை ஆட்சி மட்டுமல்ல, அது மனுதர்ம ஆட்சியும் கூட என்ற அவர், இருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டங்களையெல்லாம் ஒழித்துக் கட்டி விட்டு மோடியால் நானும் ஒரு மஸ்தூர் என்று சொல்ல முடிகிறது, குடும்ப ஆட்சி பற்றி பேசும் மோடி, கார்ப்பரேட்டுகளின் பரம்பரை சொத்துரிமை நிர்வாகம் பற்றி பேசுவதில்லை, பரம்பரை சொத்துரிமை உரிமை வரி பற்றிப் பேசமாட்டார், தொழிலாளர் வர்க்கம், சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவதை எளிதாக புரிந்துகொண்டு அந்த மக்களுக்கு ஆதரவளித்து நிற்க முடியும், தலித், பெண் விடுதலை, காஷ்மீர் பிரச்சனை பற்றி புரிந்துகொண்டு பேச முடியும், வேலை வாய்ப்பு எங்கே, பிரிக்கால் தொழிலாளர்கள் இரண்டு பேர் ஏன் சிறையில் இருக்க வேண்டும், முகிலன் எங்கே என நாம் கேள்வி எழுப்ப வேண்டும், மோடியே திரும்பிப் போ முழக்கத்தின் மூலம் தமிழகம் முன்கையெடுத்து அந்த முழக்கம் இந்தியா முழுவதும் எதிரொலிக்க வழிவகை செய்ததுபோல் 2019 மக்களவைத் தேர்தலிலும் பாசிச சக்திகளை தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றார்.
கருத்தரங்கில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், அவிகிதொச மாநிலத் தலைவர் தோழர் பாலசுந்தரம், இகக மாலெ மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், பாலசுப்பிரமணியன், தேசிகன், வேல்முருகன், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் லூயிஸ், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர்கள் தோழர்கள் கே.கோவிந்தராஜ், எ.கோவிந்தராஜ், மூத்த வழக்கறிஞர் ரத்தினம், கவிஞர் பொதியவெற்பன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் கோவையின் உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொகுப்பு: தேசிகன்

Search