COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 17, 2019

வேலை உறுதித் திட்ட கூலி உயர்வு அறிவிப்பு, 
வறிய மக்கள் மீது பாசிச பாஜக கொண்டுள்ள வெறுப்பின் வெளிப்பாடு

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மார்ச் 28 அன்று 2019 ஆண்டுக்கான, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலைக்கான கூலி உயர்வு அறிவித்தது.
இதில் ஆறு மாநிலங்களுக்கான கூலியில் எந்த உயர்வும் இல்லை. இமாச் சலபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களுக்கு ரூ.1, சட்டிஸ்கர், மத்தியபிரதேச மாநிலங்களுக்கு ரூ.2 உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச உயர்வு ரூ.17. தமிழ்நாட்டுக்கு ரூ.229. சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட கூலியை விட ரூ.5 கூடுதல். அய்ந்து ரூபாய் நாணயத்தை யாசகம் செய்பவர்களுக்குக் கூட இன்றைய நிலைமைகளில் தர முடிவதில்லை. ஒரு ரூபாய் நாணயம் தெருவில் கிடந்தால் கூட யாரும் எடுப்பதில்லை. உத்தரபிரதேசத்துக்குக் கூட ரூ.7தான் உயர்வு. சண்டிகர் பட்டியலிலேயே இல்லை.
2018 - 2019ல் 267.7 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரூ.47,389.74 கோடி கூலி தரப்பட்டுள்ளது. சராசரியாக ஆண்டில் 23 நாட்கள் வேலை தந்து அதில் நாளொன்றில சராசரியாக ரூ.177 கூலி தரப்பட்டுள்ளது. அதாவது ரூ.4,071 சென்ற ஆண்டில் கூலி பெற்றுள்ளார் திட்டத்தின் தொழிலாளி. இந்த ஆண்டில் அந்த 177அய் 178 முதல் 184 வரை உயர்த்தித் தர தாராளமான மனதுடன் முன்வந்திருக்கிறது மோடி ஆட்சி.
வளர்ச்சி என்கிறார்கள். காவலாளி என்கிறார்கள். நல்ல நாட்கள் என்கிறார்கள். புதிய இந்தியா, நல்லாட்சி என்று சொல்கிறார்கள். இன்னும் ஏதேதோ இந்தியா என்றெல்லாம்  சொல்கிறார்கள். ஒரு தேநீர் கூட ரூ.8 விற்கிற நிலை வந்துவிட்ட நாட்டில் ரூ.1 கூலி உயர்வு என்பது என்னவித வளர்ச்சி? உழைக்கும் மக்களை கிள்ளுக்கீரையாக கருதுவது என்பதற்கு மிகப்பொருத்தமான எடுத்துக்காட்டு இது.
இந்த  ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கூலி உயர்வு அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னும் பின்னுமாய் சில நாட்களில், பணமதிப்ப கற்ற நடவடிக்கையை ஒட்டி, ரூ.3 லட்சம் கோடி பணம் அச்சடிக்கப்பட்டதில் அமித் ஷா பெயர், பிரான்சில் ரூ.1,114 கோடி வரிவிலக்கு பெற்றதில் அனில் அம்பானி பெயர், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்ததில் மோடி ஆட்சியின் பெயர் எல்லாம் அடிபட்டன. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருபவர்கள் விவரங்கள் மூடப்பட்ட உறையில் தரப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமும், அந்த விவரங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டியதில்லை என்று மத்திய அரசின் வழக்கறிஞரும் சொல்கின்றனர். இன்னொரு பக்கம், தேர்தல் காலம் என்பதால், கணக்கில் வராத பணமாக ரூ.1,000 கோடிக்கும் மேல் நாடெங்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
நாடெங்கும் எங்கு திரும்பினாலும் பணம் கொட்டிக் கிடக்கிறது. உழைப்பவர்களுக்குத் தரும்போது மட்டும் கோடிகளில் பேசுபவர்கள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று பேசுகிறார்கள். 25 கோடியே 69 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ள திட்டத்தில் 11 கோடியே 37 லட்சம் பேர்தான் ‘செயலூக்கமாக’ இருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறார்கள். உடனடியாக ரூ.2,000, ஆண்டில் ரூ.6,000 என அரைகுறை அறிவிப்பு தந்துவிட்டு, அது பற்றியே திரும்பத் திரும்பப் பேசி, மிகப் பெரிய உழைக்கும் மக்கள் பிரிவை படுமோசமாக ஏமாற்றிவிட்டார்கள். இந்த கேடுகெட்ட அறிவிப்புக்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் வேறு பெற்றுவிட்டார்களாம்!
ஆட்சி முடியும் நேரத்தில் கூட, அடுத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு கேட்டு மக்கள் மத்தியில் செல்ல நேரும்போது கூட, அவர்கள் வயிற்றில் அடிப்பதில் இருந்து மோடி அரசு சற்றும் பின்வாங்கவில்லை. இனி இந்த ஆண்டு முழுவதும், அடுத்து பாஜக தோற்கடிக்கப்பட் டாலும், வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் இந்த அற்ப உயர்வுக்குத்தான் வேலை செய்தாக வேண்டும். பாசிச பாஜகவுக்கு, இசுலாமியர் வெறுப்பு, பெண்கள் வெறுப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு வறிய மக்கள் மீதும் வெறுப்பு இருக்கிறது.

Search