COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 1, 2019

அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகளில்
வறுமை ஒழிப்பும் வேலை வாய்ப்பும்

2014மக்களவைத் தேர்தல்களில் 432 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதனால் அஇஅதிமுக அப்போது பெற்ற 37 இடங்கள் வெற்றி பூஜ்ஜியத்திற்கு சமமாகவே இருந்தது. ஆனால் 13 மாநிலங்களவை உறுப்பினர்களுடன், 50 இடங்கள் பெற்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக, நாடாளுமன்றத்தின் தரைத் தளத்தில் அலுவலகத்துக்கு ஓர் இடம் பெற்றது, திராவிட இயக்க வரலாற்றில் ஒரு சாதனை என அஇஅதிமுக தேர்தல் அறிக்கை சொல்கிறது.
50 இடங்களும் தரைத்தள அலுவலகமும், மானமும் அறிவும் இல்லாதவர்கள் வசம் இருந்ததால், மாநில உரிமைகளுக்காக, மக்கள் உரிமைகளுக்காக இபிஎஸ் - ஓபிஎஸ் கும்பல் குரல் கொடுக்கவே இல்லை. இப்போது 23 இடங்களில் மட்டுமே (இரட்டை இலை) போட்டியிட்டும், அஇஅதிமுக, தமிழ்நாட்டு உரிமைகளைப் பட்டியலிட்டு, மத்திய அரசிடம் அவற்றை வலியுறுத்தப் போவதாக 20.03.2019 நமது அம்மா நாளேட்டில் பிரசுரமான தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி உள்ளது.
எழுவர் விடுதலையை ஆளுநர் மூலம் எளிதில் முடித்திருக்க வேண்டியவர்கள், இனி விடாமல் வலியுறுத்தி வலியுறுத்தி சாதிக்கப் போகிறார்களாம். கடினப்பட்டு வலியுறுத்தும் சிரமம் அஇஅதிமுகவுக்கு ஏற்படாமல் தமிழ்நாட்டு மக்கள் உதவ வேண்டும்.
5 கோடி குடும்பங்களின் 25 கோடி பேருக்கு நியாய் திட்டத்தில் ஆண்டுக்கு உத்தரவாதமான குறைந்தபட்ச வருமானம் ரூ.72,000 (மாதம் ரூ.6,000) தந்து வறுமையின் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப் போவதாக ராகுல் காந்தி சொன்னார். பாஜகவின் நிதின் கட்கரி அதற்கு ரூ.3.5 லட்சம் கோடி தேவை, அவ்வளவு பணத்திற்கு எங்கே போவார்கள் எனக் கேள்வி எழுப்பினார். இப்போது அவர்களது கூட்டாளியான அஇஅதிமுக, கழகத் தேர்தல் அறிவிப்பில் மகிழச்சி பொங்கும் அறிவிப்பு என்ற தலைப்பில் சொல்கிறது:
‘பிறப்பால் யாருக்கெல்லாம் குறைவாக கொடுக்கப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் சட்டத்தால் நிறைவாக வழங்கப்பட வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரேமோன் மச்சசே சொன்னார். இதனைப் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வாழ்நாள் முழுக்கச் செய்தார். அந்த அடிப்படையிலேயே அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை முன்வைக்கிறோம்’.
‘நாடு முழுவதும் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளோர், கைவிடப்பட்ட பெண்கள், வருமானமற்ற விதவைப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாழும் உடல் உழைப்புத் தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியவர்கள் ஆகியோரின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,500 நேரடியாகச் செலுத்த மத்திய அரசை கழகம் வலியுறுத்தும்’.
அஇஅதிமுக சொல்கிற இலக்கணத்தில் 10 கோடி குடும்பங்களாவது நாட்டில் இருப்பார்கள். ராகுல் சொல்வதில் 50% குடும்பங்கள் அஇஅதிமுக சொல்வதில் வரும். அஇஅதிமுக, இதற்கான நிதி, புதிய ஜிஎஸ்டி வரி, நேரடி மறைமுக வரிகள் மூலம் வரும் என்கிறது. அஇஅதிமுக தேர்தல் அறிக்கை பிரும்மாண்டமான அளவில் உள்ள வறுமையை அங்கீகரிக்கிறது. உழுது பிழைக்க அனைத்து வசதிகளுடன் நிலம், நல்ல சம்பளம் உள்ள பாதுகாப்பான வேலைகள் பற்றி அஇஅதிமுகவுக்குச் சொல்வதற்குக் கூட எதுவும் இல்லை. மாதம் ரூ.1,500ல் வறுமை எப்படி ஒழியும் என ஈபிஎஸ் - ஓபிஎஸ் கும்பல்தான் விளக்க வேண்டும்.
20.03.2019 முரசொலியில், 124ஏ என்ற இந்திய தண்டனைச் சட்ட தேச விரோதம் தொடர்பான பிரிவு அகற்றப்பட வேண்டும் என திமுக அழுத்தம் திருத்தமாகத் தலையங்கம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் மக்கள் எதிர்பார்ப்புகளுடன் பொருந்துபவை. ஆனால் வேலை வாய்ப்பு பிரச்சனையில், திமுகவின் தேர்தல் அறிக்கையும், உருப்படியாக எதுவும் சொல்லவில்லை. திமுகவும் உழுது பிழைக்க சகல வசதிகளுடன் நிலம் பற்றிப் பேசவில்லை. நாடெங்கும் உள்ள 10ஆம் வகுப்பு வரை படித்த ஆண்களில் 1 கோடி பேரை 13,000 கி.மீ. நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க சாலைப் பணியாளர்களாக நியமிக்கவும் 10ஆம் வகுப்பு வரை படித்த பெண்களில் 50 லட்சம் பேரை மக்கள் நலப்பணியாளர்களாய் நியமிக்கவும் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்கிறது. அவர்களது சம்பளம், பணி நிலைமைகள், அந்தஸ்து பற்றி கவனமாக எதுவும் சொல்லாமல் தவிர்க்கிறது.
கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் கண்காணிப்பில், கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தில், அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள 20 கி.மீ. பகுதிக்குள் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 50 லட்சம் பேருக்கு மாதம் ரூ.10,000 சம்பளத்தில் வேலை என மத்திய அரசை வலியுறுத்துவார்களாம். திமுக, நாடெங்கும் தோராயமாக ஒரு கணக்கு சொன்னால், 2 கோடி பேருக்கு மாதம் ரூ.10,000 சம்பள வேலைக்கு வலியுறுத்துமாம். 2 கோடி பேர் போக மீதமுள்ளவர்கள் என்ன ஆவார்கள்? ரூ.10,000 மாதச் சம்பளம் 5 பேர் கொண்ட குடும்பத்தில் எப்படிப் போதுமானதாக இருக்கும்? இந்த கேள்விக்கு மு.க.ஸ்டாலின் கூட்டாளிகளும் பதில் சொல்லட்டும்.
இகக(மாலெ) விடுதலையின் திருச்சி வேட்பாளர் தோழர் பழ.ஆசைத்தம்பியும், திருபெரும்புதூர் வேட்பாளர் தோழர் க.பழனி வேலும் சொல்கிறார்கள்:
டஉழுது பிழைக்க அனைத்து வசதிகளுடன் நிலம் வேண்டும்.
டவிவசாய நிலப்பகுதிகள், டெல்டா, பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக வேண்டும்.
டவிவசாயக் கடன்கள் தள்ளுபடி ஆக வேண்டும். விளைபொருட்களுக்கு லாபமான விலை வேண்டும்.
டஉழைப்பவர் எவரானாலும், வாரத்தில் 5 நாட்கள் வேலை நாளில் 8 மணி நேர வேலை, மாதம் ரூ.26,000 சம்பளம் வேண்டும்.
டசம வேலைக்கு சம ஊதியம் வேண்டும். பயற்சியாளர் உள்ளிட்ட நிரந்தரமற்றோர் நலன் காக்க, புதிய மாதிரி நிலையாணைகள் விதிகள் வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும்.
டபெண்களின், தலித்துகளின், அனைத்து வகை சிறுபான்மையினரின் அச்சமற்ற சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
டஜனநாயகம் வேண்டும்.
டசிங்காரவேலர், சீனிவாசராவ், பெரியார் கனவு கண்ட தமிழ்நாடு, பகத்சிங் அம்பேத்கர் கனவு கண்ட இந்தியா வேண்டும்.

Search