COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 31, 2018

தமிழ்நாட்டின் பல லட்சக்கணக்கான நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்க 
புதிய மாதிரி நிலையாணைகள் இயற்றக் கோரி 
ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் குமாரசாமி தலைமையில் 
பத்து பேர் கொண்ட குழு கோவையில் 
22.10.2018 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்

நூறு சதம் பயிற்சியாளர்கள் கொண்டு உற்பத்தி நடக்கும், இளம்பெண்களை மிகக் கடுமையானச் சுரண்டலுக்கு உள்ளாக்கும் சுமங்கலித் திட்டத்துக்கு எதிராக
தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததன் விளைவாக பயிற்சியாளர் நலன் காக்க, தொழிலக நிலையாணைகள் சட்டத்தின் அட்டவணையில் அயிட்டம் 10 எ மற்றும் 10 பி ஆகியவற்றை சேர்த்து, 14.05.2008 அன்று தமிழக சட்டமன்றம் ஒரு மனதாக நிலையாணைகள் திருத்தச் சட்டம் நிறைவேற்றியது.
ஏஅய்சிசிடியு எடுத்த தொடர்ச்சியான விடாப்பிடியான முயற்சிகளின் விளைவாக எட்டு ஆண்டுகள் கழித்து 2016ல் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டாண்டுகள் ஆகியும் திருத்தங்கள் அமலுக்கு வரவில்லை. தமிழக அரசு, புதிய நிலையாணைகள் மூன்று மாதங்களுக்குள் கொண்டு வர வேண்டும் என்று 20.07.2016ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2016 அக்டோபரில் மய்யத் தொழிற் சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய தொழிலாளர் துறை செயலர், தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை தாம் அரசுக்குப் பரிந்துரைப்பதாக கூட்டத்தில் சொன்னார். பிறகு, இதே அதிகாரி கையொப்பத்துடன், தொழிலக நிலையாணைகள் சட்டம், தொழிற்தகராறு சட்டம், தொழிற்சங்க சட்டம் ஆகியவற்றை இணைத்து மத்திய அரசு புதிய சட்டத் தொகுப்பு கொண்டு வரவுள்ளதால் இந்தத் திருத்தங்கள் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 03.11.2016 அன்று பதில் மனு தாக் கல் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி 2018ல் போடப்பட்ட பொதுநல வழக்கிலும் இதே பதில் தமிழக அரசு தரப்பில் 05.09.2018 அன்று தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு 01.10.2018 அன்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
தொழிலக நிலையாணைகள் சட்டம், தொழிற்தகராறு சட்டம், தொழிற்சங்க சட்டம் ஆகியவற்றை இணைத்து மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வருவது பற்றி எந்தத் தயாரிப்பும் இன்னும் துவங்கவில்லை. மத்திய அரசின் ஆட்சிக் காலம் விரைவில் முடிகிறபோது, அது போன்ற எந்த முயற்சிக்கும் கால அவகாசமும் இல்லை. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு தரப்பில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் சட்ட விதி என்ற ஒன்றை சொல்லி, தமிழக அரசே கொண்டு வந்த, பல லட்சக்கணக்கான நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்கும் சட்டத் திருத்தத்தை அமலாக்க மறுப்பது நியாயமற்றது.
நிலையாணைகள் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு தாமதிக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தத் திருத்தங்கள் முதலீடு வருவதைப் பாதிக்கும் என்று சொல்லப்பட்டது. இந்தத் திருத்தங்கள் 1976 முதல் மகாராஷ்டிராவில் இருப்பதையும் அதனால் அங்கு முதலீடு பாதிப்பு எதுவும் நிகழவில்லை என்றும் மாறாக தொழில் வளர்ச்சியில் இன்று வரை மகாராஷ்டிராதான் முதல் மாநிலம் என்றும் அரசுக்கு சுட்டிக் காட்டப்பட்டது. மகாராஷ்டிராவில் அமலில் இருக்கும் அதே திருத்தங்களைத்தான் இந்தப் போராட்டமும் எழுப்புகிறது.
புதிய மாதிரி நிலையாணைகள் வேண்டும் என்று வலியுறுத்தி ஏஅய்சிசிடியுவும் புரட்சிகர இளைஞர் கழகமும் 31.05.2017, 31.01.2018, 14.08.2018 ஆகிய தேதிகளில் பெருந்திரள் போராட்டங்கள் நடத்தியுள்ளன. இந்தப் போராட்டங்களை ஒட்டி துணை முதலமைச்சர், தொழிலாளர் அமைச்சர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் ஏஅய்சிசிடியு, தேசியத் தலைவர் தோழர் குமாரசாமி தலைமையில் பத்து பேர் கொண்ட குழு, தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்க புதிய மாதிரி நிலையாணைகள் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, கோவையில் 22.10.2018 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தியது.
தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர் விதிகள் 25 (2) (5) படி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவும் பட்டினிப் போராட்டம் வலியுறுத்தியது.
போராட்டச் செய்தியை, கோரிக்கையை தொழிலாளர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல அக்டோபர் 12, 13, 14 தேதிகளில் கோயம்புத்தூர் முதல் திருபெரும்புதூர் வரை வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய மய்யங்களில் பிரச்சார வாகனம் வந்ததை ஒட்டி தொழிலாளர்கள் தெருமுனைக் கூட்டம் நடத்தினர். திருபெரும்புதூரில் சில நூறு தொழிலாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் வாகனப் பிரச்சாரம் நிறைவுற்றது. கோவையில் வாகனப் பிரச்சாரத்தை ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் துவக்கி வைத்தார்.
பட்டினிப் போராட்டம் துவங்குவதற்கு முன் தொழிலாளர் துறை செயலரைச் சந்தித்த தோழர் எ.எஸ்.குமாரிடம், கோரிக்கை பற்றி முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கூட்டம் அக்டோபர் 24 அன்று நடத்தப்பட உள்ளதாக செயலர் தெரிவித்தார். உங்கள் கோரிக்கை அரசின் பரிசீலனையில் ஏற்கனவே உள்ளது என தெரிவித்தார்.
இககமா, இகக தலைவர்களையும் மய்யத் தொழிற்சங்கத் தலைவர்களையும் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு கோரிய தோழர் எ.எஸ்.குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரையும் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு கோரினார்.
வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் யமஹா, என்பீல்ட், எம்எஸ்அய் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிக்க அவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் மத்தியிலும் பட்டினிப் போராட்டச் செய்தி எடுத்துச் சொல்லப்பட்டது.
ஏஅய்சிசிடியு மய்ய அலுவலகத்தில் இருந்தும் மேற்குவங்கம், ஜார்க்கண்ட், கர்நாடகா ஆகிய மாநில மய்யங்களில் இருந்தும் கோரிக் கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.
ஒரு நேரத்தில் ஒரு போராட்டத்தில்தான் இறங்க முடியும், ஒரு கோரிக்கை மீதுதான் கவனம் செலுத்த முடியும் என்று தொழிலாளர்கள் சொல்வார்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுவதையும் பிரிக்கால் தொழிலாளர் முன்னோடிகள் பட்டினிப் போராட்டத்தில் உடைத்துக் காட்டினார்கள். காலவரையற்றப் பட்டினிப் போராட்டம் துவங்கிய அக்டோபர் 22 அன்று பிரிக்கால் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 63ஆவது நாளில் நுழைந்திருந்தது. தங்கள் உடனடி மற்றும் நீண்டகால கோரிக்கைகளுக்காக, கவுரவத்துக்காக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பிரிக்கால் தொழிலாளர்கள், ஒட்டுமொத்த தமிழக தொழிலாளர் வர்க்கத்தின், தமிழ்நாட்டின் பல லட்சக்கணக்கான இளம்தொழிலாளர்களின் எதிர்கால நலன் காக்கும் கோரிக்கை மீது நடத்தப்பட்ட காலவரையற்றப் பட்டினிப் போராட்டம் தொடர்பாகவும் அவர்களுக்கே உரிய அக்கறையுடன் செயல்பட்டனர்.
கோவையில் பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தின் அலுவலகத்தில் நடந்த காலவரையற்ற பட்டினிப் போர் தமிழகம் முழுவதும் கவனம் ஈர்த்தது. பட்டினிப் போராட்டத்தின் இரண்டாவது நாளான அக்டோபர் 23 அன்று இகக(மா) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் போராட்டக்காரர்களைச் சந்தித்து ஒருமைப்பாடு தெரிவித்தார்.
எச்எம்எஸ் மாநிலத் தலைவர் தோழர் ராஜாமணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் முகுந்தன், மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் தங்கராசு,  சிஅய்டியு, டபுள்யுடியு தோழர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தும் தோழர்களைச் சந்தித்து ஒருமைப்பாடு தெரிவித்தனர். மத்திய அரசு அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் தோழர்கள் பட்டினிப் போராட்டத்துக்கு ஒருமைப்பாடு தெரிவித்து செய்தி வெளியிட்டனர்.
போராட்டம் மூன்றாம் நாளில் நுழைந்தபோது, உயர்நீதிமன்றம் அருகே ஒரு பெரிய போராட்டத்திற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத் தோழர்கள் சில நூறு பேர் திரண்டனர். பிரிக்கால் தோழர்களும் அவர்களோடு இணைந்து கொண்டனர்.
துணை முதலமைச்சரின் சிறப்புச் செயலர் தொழிலாளர் பிரதிநிதிக் குழுவை அழைத்துப் பேசி, துணை முதலமைச்சரோடு பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்வதாகவும், முதலமைச்சரோடு கலந்து பேசி புதிய மாதிரி நிலையாணைகள் பற்றி முடிவெடுக்கப்படும் எனவும், இந்தப் பின்னணியில் பட்டினிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டார்.
பட்டினிப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம், அரசியல் சூழல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, இகக (மாலெ) புதுச்சேரி செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியம் போராட்டக்காரர்களுக்கு பழச்சாறு தர, நூற்றுக்கணக்கான பிரிக்கால் தோழர்கள் முன்னிலையில்  24.10.2018 மாலை 5 மணிக்கு காலவரையற்ற பட்டினிப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும்.
காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்திய தோழர்கள்
தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலச் செயலாளர் இகக மாலெ, தேசியத் தலைவர் ஏஅய்சிசிடியு
தோழர் கே.பாலசுப்ரமணி, மாவட்டச் செயலாளர், இகக மாலெ
தோழர் கே.ராஜேஷ், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர், புரட்சிகர இளைஞர் கழகம்
தோழர் பாபு, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கம்
தோழர் துரைசாமி, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கம்
தோழர் குருமூர்த்தி, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கம்
தோழர் ஜெயகுமார், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கம்
தோழர் செந்தில்குமார், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கம்
தோழர் ஜானகிராமன், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கம்
தோழர் சக்திவேல், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கம்
மாதிரி நிலையாணைகள் தொடர்பான கோரிக்கைகள்
1. நிரந்தரத் தொழிலாளி என விவரிக்கும்போது, நிரந்தரத் தொழிலாளி வேலையைப் பயிற்சியாளர் பார்க்கும் போது அல்லது அதற்காகவே அவர் பணியமர்த்தப்பட்டுள்ளபோது, சம்பளம் வழங்குவதற்காக, அவர் நிரந்தரத் தொழிலாளியாகவே கருதப்படுவார்.
2. பயிற்சிக் காலம் ஒரு வருடம் தாண்டக் கூடாது. உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் பயிற்சி மட்டுமே தரப்படும் போது, ஓராண்டு முடிவில், அவருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்பட வேண்டும்.
3. தகுதிகாண் பருவ நிலை காலம் (புரோபேஷன்) மூன்று மாதங்கள் தாண்டக் கூடாது. மிகவும் அவசியமென்றால், அதிகபட்சம் மூன்று மாதங்கள் மட்டுமே நீட்டிக்கலாம். நீடித்து எழுத்து மூலம் உத்தரவு தரப்படாவிட்டால், அவர் நிரந்தரமானதாகக் கருதப்பட வேண்டும்.
4. தற்காலிகத் தொழிலாளி வருடத்தில் 240 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் ஆக்கப்பட வேண்டும். வேலை தரப்படாதவர்கள் பெயர்கள், அவர்களது வேலை, வேலை தருவது நின்ற நாள் விவரங்களோடு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட வேண்டும். புதிதாக ஆள் எடுக்கும்போது, காத்திருப்போர் பட்டியல் படியே வேலைக்கு எடுக்கப்பட வேண்டும்.
5. ஒரு தொழிலகத்தில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் நிரந்தரமற்ற தொழிலாளர்களது எண்ணிக்கை 5%த்தை தாண்டக் கூடாது.

Search