COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 1, 2018

ஆள் தூக்கி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்  சட்டம்
உச்சநீதிமன்றத்தையும் அழுத்தவே செய்துள்ளது

எஸ்.குமாரசாமி

உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர், மசூதி இசுலாமிய வழிபாட்டு தலமல்ல என்ற
முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்பை, ஏழு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற சிறுபான்மை தீர்ப்பை எழுதும்போது, அயோத்தி விஷயத்தில் தேவதைகளும் தயங்கும் என்றார். மறு உலக தேவதைகள் அல்ல, இந்த உலக நீதிதேவதைகளே தயங்குவார்கள் என அவர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். எவரும் நுழையத் தயங்கும் இடம் என்ற சொற்றொடரை, ஆங்கிலத்தில் where angels Fear to tread என்கிறார்கள்.
ஊபா, ஆள்தூக்கி சட்ட (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், Unlawful Acivities (Prevention) Act (UAPA)) விஷயத்தில், புகழ் பெற்ற மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், அரசின் பறித்தெடுத்தல் மூலம் மூலதனத் திரட்சி என்ற கொள்கையை எதிர்ப்பவர்கள் 5 பேர் கைது விஷயத்தில், உச்சநீதிமன்றம், சுதந்திரத்தின் பக்கம் நிற்கத் தவறியது. நம்பிக் கைகளை, சாட்சி ஆதாரமாக நீதிமன்றங்கள் ஏற்கும் காலங்களில், ஆட்சியாளர்கள் புராண இதிகாசங்களை மூடநம்பிக்கைகளை வரலாறு, பாரம்பரிய நம்பிக்கை எனக் கூவி விற்கும் காலங்களில், உச்சநீதிமன்றமும், தேச விரோதிகள் பக்கம் தான் நிற்கவில்லை, தேசத்தின் பக்கம்தான் நிற்கிறேன் என்று நீதிபதிகள் கன்வில்கர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சார்பில் பிரகடனம் செய்தது.
இரண்டு சங்கடமான விஷயங்கள் நினைவில் வருகின்றன. ஒன்று பிரிட்டிஷ் தாராளவாத அறிவாளிகள், அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேச பக்தி என்பார்கள். இரண்டாவதாக, அம்பேத்கர், இந்தியா வெவ்வேறு சாதிகளின் தொகுப்புதானே தவிர, அது ஒரு தேசமே அல்ல என்பார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் = பயங்கரவாத நடவடிக்கைகள் = தேசவிரோத நடவடிக்கைகள். இப்படிச் சொல்லி, பிணையே இல்லாமல், வெகுகாலம் தேசவிரோத முத்திரையுடன், போராட்டக்காரர்களை எதிர்ப்பு இயக்கங்களை சிறையில் முடக்குவது, அடுத்த எவரும் எதிர்த்து எழாவண்ணம் அச்சுறுத்துவது என்பதே, தடா, பொடா, ஊபா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களின் நோக்கமாகும்.
டிசம்பர் 31 அன்று, ஒரு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏற்பாடு செய்த, புனே எல்கார் பரிஷத் கூட்டத்தில் தேசவிரோத சக்திகள் கூடினார்கள், பேசினார்கள், இந்தியாவுக்கு எதிராக வெறுப்பை விதைத்தார்கள், இவர்களெல்லாம் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்றது புனே காவல்துறை. கலந்து கொண்டவர்கள் தலித் பழங்குடியினர் மத்தியில் செயல்படுபவர்கள்.
ஜுன் மாதம், சுரேந்திர கட்லிங், சோமா சென், ரோனா வில்சன், சுதிர் தவாலே, மகேஷ் ராவத் ஆகியோர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ரோனா வில்சன் மடிக்கணினியில் மோடியை கொல்லும் சதித்திட்டம் இருந்ததாக புனே காவல்துறை சொன்னது.
ஆயுதங்கள் வாங்க, தேசவிரோத போர் தொடுக்க, மோடியைக் கொலை செய்ய சதி செய்தவர்களோடு கரம் கோர்க்க, மாவேயிஸ்ட் கட்சியுடன் அதன் முன்னணி அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவுவதாக, அருண் பெரேரா, வெர்னான் கன்சால்வஸ், வரவரராவ், கவுதம் நவலகா, சுதா பரத்வாஜ் என்ற மக்கள் செயல்பாட்டாளர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையுடன், புனே காவல்துறை, அவர்களைக் கைது செய்ய ஆகஸ்ட் 28 அன்று விரைந்தது. மாற்றுக் கருத்து இருந்தால் கைதா என ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட இந்தியாவின் முக்கிய அறிவாளிகள் பலர், இந்த அநீதி பற்றி உச்சநீதிமன்றம் தன் கண்காணிப்பில் சிறப்பு விசார ணைக்கு ஆணையிட வேண்டும் என வழக்கு தொடுத்தனர்.
மூவரில், கட்டுப்படுத்தும் பெரும்பான்மை தீர்ப்பை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவோடு அமர்ந்த நீதிபதி கனிவால்கரே எழுதி உள்ளார். இப்போது 28.09.2018 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.
1. 4 வாரங்கள் வீட்டுக் காவல் தொடரும், அதற்குள் உரிய நீதிமன்றத்தை அணுகி சம்பந்தப்பட்டவர்கள் நிவாரணம் நாடலாம். (இது வரையாவது சொல்லி உள்ளார்கள்).
2. முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களைக் காணும்போது, மாறுபட்ட அரசியல் கருத்துகளுக்காக, இவர்களுக்கு எதிராகக் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவில்லை.
3. ஆவணங்களை நன்கு பரிசீலித்த பிறகு, எங்களது நன்கு ஆய்ந்தறிந்த கருத்துப்படி, இவர்களது கைது, மாற்றுக் கருத்துக்கள் வெளிப்படுத்தியதாலோ அல்லது மாற்று அரசியல் கொண்டுள்ளதாலோ ஏற்பட்டதல்ல. மாறாக தடைசெய்யப்பட்ட அமைப்புடன் அதன் நடவடிக்கைகளுடன் இவர்களுக்குள்ள தொடர்பால் ஏற்பட்டதாகும்.
கிட்டத்தட்ட, விசாரணை ஏதும் துவங்காத நிலையிலேயே, பார்த்த மாத்திரத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பொருந்தும் என்கிறார்கள். இந்திய ஜனநாயகத்திற்கு இந்த தீர்ப்பு வலு சேர்க்கவில்லை என்று சொல்லும் அதே நேரம், இந்திய ஜனநாயகம் எவ்வளவு பலவீனமானது என்பதையும் இந்தத் தீர்ப்பு புலப்படுத்தும்.
இந்திய ஜனநாயகத்தில் எதிர்ப்புக் குரல்களும் உயிர்ப்பும் இருப்பதன் பிரதிபலிப்பாக நீதிபதி சந்திரசூட்டின் தீர்ப்பு அமைந்துள்ளது. அதே சாட்சியம் அடிப்படையில்தான் இவரும் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
சுதந்திரத்தை, ஊகங்களின் பீடத்தில் பலியிட்டுவிடக் கூடாது.
நியாயமான விசாரணை இல்லாவிடில், நாம், சுதந்திரத்துக்கு இதயபூர்வ அஞ்சலி செலுத்தலாம்.
குற்றம் நடந்துள்ளதாக தீர்ப்பு வழங்கும் வேலை காவல்துறையுடையது அல்ல.
புனே போலீஸ், மின் அணு ஊடகத்தில், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் இருப்பதாக பேட்டி தந்தது, அவர்களது வழக்குக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கை.
வெளிநாடுகளிலிருந்து ஆயுதம் வாங்குகிறார்கள், மோடியைக் கொல்ல சதி செய்தார்கள் என்பவை, ஆதாரமற்ற புகார்கள்.
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரான லட்சியங்களுக்காக குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நெறிக்கக் கூடாது. மாற்றுக் கருத்து, ஜனநாயகத்துக்கான துடிப்பான அறிகுறி ஆகும்.
ஊபா சட்டம் எவ்வளவு கொடூரமானது என்பதை, 90% மாற்றுத் திறனாளி, சக்கர நாற்காலியில் மட்டுமே செல்லக் கூடிய பேராசிரியர் சாய்பாபா இந்த சட்டத்தில் தண்டிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளதே காட்டும். அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்யும் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார், அத்தகைய பேட்டிகள் தந்தார், அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை களில் உதவிட முன்வந்தார், இவற்றோடு, இவருக்கு பிரகாஷ் என்ற புனைபெயர் உண்டு, இவரோடு புனை பெயர்கள் உள்ளவர்கள் தொடர்பு கொண்டார்கள் என்பது குற்றச் சாட்டு. தடைசெய்யப்பட்ட அமைப்பில் இவர் உறுப்பினர், இந்திய அரசாங்கத்துக்கு எதிராகப் போர் புரிய இவர் குற்றச் சதியில் ஈடுபட்டார், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட உதவினார் என்றுதான் இவர் தண்டிக்கப்பட்டார்.
தடா, பொடா வரிசையில் ஊபா சட்டம் வந்தது. ஆனால் அது 1967லிருந்தே அமலில் உள்ளது. இந்த சட்டம் வந்தபோது குஜராத் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.தேசாய், நீங்கள் இன்று சட்டவிரோதமானவை என்று சொன்னவற்றை, பிரிட்டிஷ் காலனிய எசமானர்கள் உப்பு சத்தியாகிரகம் நடந்தபோது, லார்ட் வெலிங்டன் காலத்தில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் மூலம் தண்டனைக்குரியவையாக்கினர் எனக் குறிப்பிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை இந்தியா ஒரு ஜனநாயக குடியரசும் இல்லை, இந்திய மக்கள் உரிமைகளுடைய குடிமக்களும் அல்ல.
இப்போது ஊபா சட்டம், ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் இந்தியா இளைய கூட்டாளியானதை அறிவிக்கும் வகையில் திருத்தங்களைக் கொண்டுள்ளது. அய்நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு ஏற்பவே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்தச் சட்டம் 2008 இயற்றப்படுவதாக அதன் முன்னுரையின் நோக்கம் சொல்கிறது.
இந்த சட்டத்தில் பிணை கிடைப்பது மிகவும் கடினம். குற்றச்சாட்டு வனையப்படவில்லை என பிணை முதலில் மறுக்கப்படும். குற்றச்சாட்டு வனையப்பட்டு, பார்த்த மாத்திரத்தில் சாட்சியம் இருப்பதாக பிணை மறுக்கப்படும். 2014, 2015, 2016ல் ஊபா வழக்குகளில் 75% வழக்குகள், விடுதலையில் அல்லது தள்ளுபடி ஆவதில் முடிவடைந்தன.
மும்பை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மிஹர் தேசாய், ஊபா சட்டத்தின் செயல்பாடு, மனிதர்களைத் தண்டிப்பதற்கு அல்ல, சிறைவாசத்தில் வைப்பதற்கே ஆனதாகும் என்றார். மாவோயிஸ்ட்கள் என்று சொல்லப்பட்ட இரு பெண்களுக்கு மதுரை வழக்கறிஞர் முருகன் ஆஜரானார். அதற்காகவே அவரையும் மாவோயிஸ்ட் அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி, அவர் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிறை வைக்கப்பட்டார். பிணை மனுவின் மீது உத்தரவு போட வழக்கு, 11.05.2017 அன்று ஒத்திவைக்கப்பட்டது. அசாதாரண தாம தம் ஏற்பட்ட நிலையில், அவரை எப்படியும் உள்ளே வைக்கும் நோக்கத்தில் புதிய ஊபா வழக்கும் போடப்பட்டுள்ளது. அரூப் பையான் வழக்கில், தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருப்பது மட்டுமே குற்றமாகாது, ஏதாவது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும் அல்லது தூண்டி இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது. ஆனால் இதை தற்போதைய உச்சநீதிமன்ற அய்வர் வழக்கு வரை ஆட்சியாளர்கள் பொருட்படுத்தவே இல்லை.
பாகிஸ்தானுக்குள் நுழைந்து 29.09.2016 அன்று துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.  அந்த தினத்தை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என முடிவெடுக்க சங் பரிவார் வற்புறுத்துகிறது. அரச வன்முறையும் போர் வெறியும் நிறைந்துள்ள சூழலில் ஒடுக்குமுறை சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன, அமல்படுத்தப்படுகின்றன.
ஊபா சட்டத்தையும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தையும், தொடர்புபடுத்திப் பார்ப்பது சரியாக இருக்கும். சட்ட நீதி முறைகளுக்கு அப்பாற்பட்ட மோதல் படுகொலைகளில் பலியானோர் குடும்பங்களின் அமைப்பு, 1979 முதல் 2012 வரை 1579 போலி மோதல் படுகொலைகள் நடந்ததாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஅய் விசாரணையில் 14 பேருக்கு இரண்டு குற்றச்சாட்டுக்கள் வனையப்பட்டன. சாட்சியம் கலைப்பது, குற்றச்சதி, அப்பாவி குடிமக்களைப் படுகொலை செய்தது என்ற குற்றச்சாட்டுக்கள் வனையப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் உச்சநீதிமன்ற நீதிபதி லோகுர், சிபிஅய் இயக்குனர் அலோக் குமார் வர்மாவிடம், ‘அப்படியானால், உங்கள் கணக்குப்படி 14 நபர்கள் கொலைகாரர்கள், அவர்கள் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களில் எவரையும் கைது செய்யவில்லையா?’எனக்கேட்டார். முன்னாள், இந்நாள் இராணுவத்தினர், நீதிபதியின் இந்த கருத்து, தமது கடமைகளைச் செய்யவிடாமல் தம்மை பலவீனப்படுத்துகிறது என இராணுவ அமைச்சக அனுமதியின்றி மனு தாக்கல் செய்துள்ளனர். இப்போது மத்திய அரசு இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்கிறது. அதாவது ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் படியான சூறையாடல், பாலியல் வன்முறையில் ஈடுபட, படுகொலை செய்ய உரிமம் தொடர வேண்டும், கேள்வி கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதியே வேண்டாம் என்கிறார்கள்.
அய்ந்து பேர் வழக்குக்கு அப்பால், பாசி சத்தை வீழ்த்த, ஜனநாயகத்தை நிலைநாட்ட, தேசப் பாதுகாப்பு சட்டம், ஊபா சட்டம், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் போன்ற சட்டங்களும், அவதூறு தேசவிரோதம் போன்ற சட்டப் பிரிவுகளும் நீக்கப்பட வேண்டும் என மக்கள் இயக்கங்கள் வலியுறுத்தியாக வேண்டும்.

Search