COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 15, 2018

போர் விமானம் வேண்டாம். ஏவுகணைகள் வேண்டாம் 
கழிவகற்றும் எந்திரங்கள் வேண்டும் 
மலக்குழி மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ரூ.39,000 கோடி மதிப்பில் எஸ் 400 வகை ஏவுகணை கட்டமைப்புகள் வாங்க இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அனில் அம்பானியின் ராணுவ தளவாட உற்பத்தித் தொழில் ஆதாயம் பெற போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம் பற்றி, இதனால் அரசாங்க கருவூலத்துக்கு ரூ.40,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது பற்றி, எழுப்பப்படும் கேள்விகளுக்கு மோடி பதில் சொல்லாதபோது, அவர் பதிலை எதிர்ப்பார்த்து நாட்டு மக்கள் காத்திருக்கும்போது அடுத்த ராணுவ ஒப்பந்தம் போடப்படுகிறது.
ரஷ்யாவுடன் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமும் அனில் அம்பானியின் ராணுவ தளவாட உற்பத்தி தொழிலை வளர்க்கவே போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2015ல் மோடி மாஸ்கோவுக்குச் செல்லும் முன்பு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம், ரஷ்யாவின் ரோசோபோரான் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அல்மாஸ் - அன்டே என்ற நிறுவனத்துடன் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் போட்டது. அல்மாஸ் - அன்டே நிறுவனம் எஸ் 400 வகை ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்கிறது. 2015, டிசம்பர் 24 அன்று ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட பத்திரிகை செய்தி ஒன்றில், இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.40,000 கோடி எனச் சொல்லியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மேக் இன் இந்தியாவின் ஒரு பகுதி என்றும் பத்திரிகை குறிப்பு சொல்கிறது. மோடி பிரதமரான சில மாதங்களிலேயே முகேஷ் அம்பானி சொன்னார்: இந்த அரசாங்கம் எனது பாக்கெட்டில் உள்ளது!
இந்தச் சந்திப்பில், இந்தியாவில் இன்னும் ஆறு அணு உலைகள் அமைக்கவும் இதற்காக அடுத்து  ஒப்பந்தம் போடவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இப்போது கூடன்குளத்தில் உள்ள இரண்டு அணுஉலைகளுடன் மூன்று மற்றும் நான்காவது உலைகள் கட்டுமானப் பணிகள் 2025, 2026 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு, அய்ந்து மற்றும் ஆறாவது உலைகள் அமைக்கப்படுவதுடன், இந்தியாவில் இன்னும் ஓர் இடத்தில் இன்னும் ஆறு அணுஉலைகள் அமைக்கப்படும் என்று ரஷ்ய அணுஉலை உற்பத்தி நிறுவனம் சொல்கிறது.
ராணுவ தளவாட உற்பத்தியும் அணுமின் உற்பத்தியும் வேண்டும் என்று நாட்டு மக்கள் கேட்கவில்லை. அதை விட அவசியமாக ஒரு பெரிய பிரிவு மக்கள் ஆபத்தில் இருப்பதைத் தடுத்து பாதுகாத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய பணி ஒன்று உள்ளது. மனித மலத்தை கையால் அள்ளும் வேலையை இன்னும் மனிதர்கள் செய்துகொண்டிருக்கிற நாடு ராணுவ தளவாட உற்பத்தியை பெருக்குவதில் பெருமைபட்டுக் கொள்ள முடியாது.
இந்த மனிதத்தன்மையற்ற முறையை முற்றிலும் ஒழிக்க 2013ல் சட்டம் வந்தபோது, இது போன்ற வேலை செய்பவர்கள் எண்ணிக்கை நாட்டில் 12,742 என்று சொல்லப்பட்டது. 2014 முதல் 2017 வரை நடந்த கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 13,370 என அதிகரித்தது. 2018 பிப்ரவரியில் துவங்கிய கணக்கெடுப்பில் 20,596 பேர் நாடெங்கும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் 6,126 பேர் உத்தரபிரதேசத்தில் உள்ளனர்.
அரசு தரும் வேறு புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த எண்ணிக்கையும் யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை. இது போன்ற தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் வளர்ச்சிக் கழகம் தரும் விவரங்கள்படி 2017ல் மட்டும் கழகத்தின் வெவ்வேறு திட்டங்களில் பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை 23,565. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 7,40,078 வீடுகளில் உலர்கழிப்பறைகள் இருப்பதாக சொல்லப்பட்டது. 03.07.2015 அன்று, 2011 சமூக பொருளாதார கணக்கெடுப்பு வெளியிட்ட விவரங்களில் நாட்டில் 1,82,505 பேர் இந்த வேலைகளைச் செய்வதாக சொல்லப்பட்டுள்ளது.
2018ல் வந்துள்ள 20,596க்கும் 2011ல் வெளியிடப்பட்ட விவரத்துக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் மோடி அரசின் அலட்சியத்தை, வஞ்சகத்தைக் காட்டுகிறது. 2017ல் மத்திய அரசு தந்துள்ள விவரத்துக்கும் 2018 கணக்கெடுப்பில் காட்டப்படும் எண்ணிக்கைக்கும் கூட 3,000 வித்தியாசம் உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் மத்திய அரசு ஒதுக்கியுள்ளபோது, இந்த மனிதத்தன்மையற்ற பணி சில மனிதர்கள் மீது மட்டும் சுமத்தப்படும் நிலையில் மாற்றம் வர நடவடிக்கைகள் இல்லை. மாறாக, இருக்கும் நிலையை அறிந்துகொள்ளக் கூட மோடி அரசு தயாராக இல்லை என இந்த விவரங்கள் வித்தியாசம் தெளிவுபடுத்துகிறது.
2018 கணக்கெடுப்பு 18 மாநிலங்களில் 164 மாவட்டங்களில் மட்டும் நடந்தது. மீதமுள்ள மாநிலங்களில் உள்ள இதுபோன்ற மனிதர்கள் அரசின் திட்டங்களுக்குள் வர மாட்டார்கள்.
2018 ஜனவரியில் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப்சிங் தமிழ்நாடுதான் இறப்புகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகச் சொன்னார். 1993ல் இருந்து நாடு முழுவதும் நடந்த 323 உயிரிழப்புகளில் தமிழ்நாட்டில் மட்டும் 144 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 ஆண் டுகளில் நாடு முழுவதும் 1,340 உயிரிழப்புகளும் அவற்றில் 294 தமிழ்நாட்டிலும் நிகழ்ந்துள்ளன. கழிவுநீர் குழாய்களை அகற்றும்போது நடக்கும் உயிரிழப்புகளில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், கோவை, திருச்சி, மதுரை, குமரி என ஆறு மாவட்டங்களில்தான் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சென்னை முகாமில் 700 பேர் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் சொல்கின்றனர்.
தமிழ்நாட்டில் இந்தப் பணியில் 334 பேர் இருப்பதாக 2011ல் சொல்லப்பட்டது. 2015ல் 462 பேர் என்றார்கள். இந்த எண்ணிக்கை தவறு என்று சொல்லி, 2015ல் எட்டு மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்திய சபாய் கர்மாசாரி அந்தோலன் இந்த மாவட்டங்களில் 3,032 பேர் இருப்பதாகக் கண்டறிந்து அந்த விவரங்களை அரசுக்கும் சமர்ப்பித்தது. இந்த விவரமும் இப்போது வந்துள்ள விவரத்துடன் ஒன்றவில்லை. கழிவகற்றும் பணியில் உயிரிழப்பு ஏற்பட்டால் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தரப்படுவதை சட்டம் கட்டாயமாக்கியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கையை குறைத்துச் சொல்ல மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் மட்டும் ஒன்றி நிற்கின்றன.
ஆட்சிக் காலம் முடிகிற நேரத்தில் மிச்சம் உள்ள கார்ப்பரேட் சேவைகளை செய்து முடிக்க மோடி அரசு தீவிரம் காட்டும்போது, சாமான்யர் சிலர், கழிவுநீர் குழாய்களில் இந்தத் தொழிலாளர்கள் சாவது கண்டு சிந்தையிரங்கி சில முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். கேரளத்தின் இளைஞர்கள் சிலர் சேர்ந்து பன்டிகூட் என்ற ஒரு ரோபோவை வடிவமைத்தார்கள். இது கழிவுநீர் குழாய்களில் ஆழம் வரை சென்று அடைப்புகளை நீக்குகிறது. இதை வாங்க தமிழக அரசாங்கமும் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வந்தன. இப்போது கர்நாடகத்தின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் கள் இரண்டு பேர் நான்கு விதமான எந்திரங்களை வடிவமைத்துள்ளார்கள்.
கே.பாலகிருஷ்ணன், ஜெர்மியா ஓங்கோலு ஆகியோர் வடிவமைத்துள்ள இந்த எந்திரங்கள் இந்த மனிதத்தன்மையற்ற பணிகளை தானாகவே பார்க்கும். பாலகிருஷ்ணன் ஹெலிகாப்டர் வடிவமைக்கும் பிரிவில் பணியாற்றியவர். ஓங்கோலு கணினி பிரிவில் பணியாற்றியவர்.
தண்ணீர் பீய்ச்சியடிக்கும் கருவிகொண்ட சியூவர் கிராக் மற்றும் ரொபோடிக் கேமரா சிஸ்டம் என்ற இவை இரண்டுமாக சேர்ந்து கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கும். ஓவர்ஃப்ளோ டிடக்ஷன் மற்றும் லிட் ஓபனிங் இன்டிகேட்டர் என்ற கருவிகளில் சென்சார்கள் இருக்கும். குழாயில் உள்ள கழிவுநீர் ஓட்டத்தை கண்காணித்து ஓவர்ஃப்ளோ இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்கும். லிட் பேஸ்ட் கேஸ் டிடக்டர் மாடுயுல், மூடியை திறக்கும் முன், அதற்குள் நச்சு வாயு இருக்கிறதா என்று கண்டறியும். இருந்தால் முழுவதுமாக வெளியேற்றும். சியுவர் லைன் கேஸ் டிடக்டஷன் த்ரூ ஆம்பிபியன் என்ற கருவி, குழாயில் 30 மீட்டர் நீளம் வரை கூட நச்சு வாயு இருக்கிறதா என பார்த்துச் சொல்லும்.
2017ல் இந்தக் கருவிகளை வடிவமைக்க துவங்கி ஓராண்டுக்குள் முடித்துவிட்டனர். இவர்கள் இருவருமாகச் சேர்ந்து இந்த எந்திரங்களை வடிவமைக்க அஜந்தா டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தை நடத்துகின்றனர். தலித்துகள் 65% பங்குகள் கொண்டுள்ள சேனிடர் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து அஜந்தா டெக்னாலஜீஸ் இந்த எந்திரங்களை தயாரிக்கிறது. அஜந்தா டெக்னாலஜீஸ் எந்திரங்களை வடிவமைக்க, சேனிடர் உருவாக்குகிறது.
தெலுங்கானாவின் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் முன் இந்தக் கருவியின் செயல்பாட்டை பொறியாளர்கள் இருவரும் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர். அதன் பிறகு களத்திலும் செய்து காட்டியிருக்கின்றனர். விசாகபட்டின அதிகாரிகள் இந்த எந்திரங்களை வாங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கேரள இளைஞர்கள் வடிவமைத்துள்ள ரோபோ செய்ய ரூ.10 லட்சம்தான் செலவு ஆகும் என்கிறார்கள். உற்பத்தி கூடினால் விலை குறையும் என்கிறார்கள். ஒரு பத்து லட்சம் ரூபாய் ஒரு சமூக இழிவை மாற்றும், ஒரு மக்கள் பிரிவை வாழ்க்கையை மாற்றும், பாதுகாக்கும் என்றால் அதற்கல்லவா முன்னுரிமை தரப்பட வேண்டும்? வளர்ச்சி, வளர்ச்சி என்று பேசுகிற மோடி அரசாங்கம் உண்மையிலேயே வளர்ச்சி வேண்டுமென்றால் இந்த எந்திரங்களை நூற்றுக்கணக்கில் வாங்க வேண்டும். மேக் இன் இந்தியா இந்த விசயத்தில் கொடி கட்டி பறக்கட்டும். தெர்மாகோல் தொழில் நுட்பத்தில் மூழ்கியுள்ள தமிழக அமைச்சர்கள் சற்று டயருக்கு மேலே பார்க்கட்டும்.
நிதி இல்லை என்று சொல்வார்களா? ரபேலில் ரூ.40,000 கோடி அரசு கருவூலத்துக்கு நட்டம். எஸ் 400க்கும் ரூ.40,000 கோடி செலவு செய்ய மோடி அரசாங்கம் தயாராகிவிட்டது. மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களுக்கான வளர்ச்சிக் கழகம் 2017ல் நலப்பயன்களுக்காக ரூ.179 கோடி செலவிடப்பட்டதாகச் சொல்கிறது. நிதி இருக்கிறது. போர் விமானம் வேண்டாம். ஏவுகணைகள் வேண்டாம். பன்டிகூட் வேண்டும். கர்நாடக பொறியாளர்கள் வடிவமைத்துள்ள கருவிகள் வேண்டும். மோடி விரும்பினால் இந்தக் கருவிகள் தயாரிக்கும் பணியை அம்பானிக்கும் அதானிக்கும் கூட தரட்டும். பிரான்சுடனும் ரஷ்யாவுடனும் அதற்கு ஒப்பந்தமும் போடட்டும். 20,000 ரோபோக்கள் வாங்கினால் கூட ரூ.2,000 கோடிதான் செலவாகும். ஆயிரமாயிரம் கோடிகள் விமானமேறி பறந்துவிடும்போது இந்த நிதி ஒரு விசயமே இல்லை. தூய்மை இந்தியா திட்ட நிதி இங்கு குவியட்டும்.
நாட்டின் பாதுகாப்பு பற்றி அக்கறையற்றவர்கள், தேசவிரோதிகள் என்று பொங்கி வருபவர்கள் முதலில் நாட்டுக்குள் அன்றாட வாழ்வில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்வரட்டும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் வெளியில் எங்கிருந்தும் வரவில்லை. பாசிச மோடி அரசின் நடவடிக்கைகளும் தேசவெறி, போர்வெறிக் கூக்குரலும்தான் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அண்டை நாடுகளுடன் நடத்தப்படும் ஆயுதப் போட்டிதான் அச்சுறுத்தலாக உள்ளது. அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவ தற்குப் பதிலாக பகையை மூட்டுகின்றன. அந்த வெப்பத்தில் குளிர் காய்கின்றன. புள்ளிவிவரப் பொய்கள் சொல்லி கொடூர நடவடிக்கைகளை கடந்துவிடப் பார்க்கின்றன. மனிதக் கழிவகற்றும் பணிக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் தூய்மை இந்தியா என்று பேசும் மோடி அரசாங்கமும் கணக்கெடுப்பதில் அக்கறையற்று கிடக்கும் பழனிச்சாமி அரசாங்கமும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்.
(கர்நாடக பொறியாளர்கள் வடிவமைத்துள்ள கருவிகளுக்கு யாராவது தமிழ்ப் பெயர் வையுங்களேன்)

Search