COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 31, 2018

பழனிச்சாமியின் நெடுஞ்சாலைகளால்
தமிழக அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாதா?

நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகள்படியே, அடிமை பழனிச்சாமி ஆட்சி, இருபது தொகுதி மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத ஆட்சி.
இந்த ஆட்சி பதவி விலக வேண்டும் என்பது நீண்ட நாட்களாக தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளில் அதற்கு வழியின்றி, இந்த ஆட்சி தொடர்கிறது. இந்த ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஓர் அழுகிய புண். அந்த அழுகி புரையோடுகிற புண்ணை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டியுள்ளது. ஆனால், முதலுதவி சிகிச்சை கூட தர விடாமல் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகள் முட்டுக்கட்டைகள் போடுகின்றன. அந்த அழுகிய புண் அகற்றப்படாதபோது அது உடலுக்குள் அதன் நச்சுத்தன்மையைப் பரவச் செய்கிறது. தமிழ்நாடு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறது.
முதலமைச்சர் ஊழல் எதுவும் செய்யவில்லை என்று ஊழல் தடுப்பு இயக்குநரகம் சொன்னதைக் கூட ஏற்றுக்கொள்ளாமல், முதலமைச்சர் பழனிச்சாமி மீதான முறைகேடுகள் புகாரை மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் போய் பழனிச்சாமி அந்த உத்தரவுக்கு தடை வாங்கிக்கொண்டு வந்து விட்டார். வந்தவுடன், பழைய ஓய்வூதிய முறைக்கு திரும்ப முடியாது, நிதிச் சுமை கூடும் என்கிறார். அம்மா ஆட்சி நடப்பதாக அடிக்கடி சொல்பவர், பழைய ஓய்வூதிய முறை கொண்டு வரப்படும் என்று அம்மா தந்த வாக்குறுதி, ஆட்சியைத் தந்தது என்பதை மறந்துவிட்டார்.
பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்பி அதனால் நிதிச்சுமை கூடினால்தான் என்ன? நிதிச்சுமை வேறு வேறு வழிகளில் கூடுகிறது என்றுதான் அவர் மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையில் முதலமைச்சர் பழனிச்சாமியும் அவரது உறவினர்களும் திருவிளையாடல்கள் நடத்தி உள்ளனர் என்றுதான் புகார் எழுப்பப்பட்டுள்ளது.
2011 - 2012ல் இருந்து 2018 - 2019 வரை, நேரடியாக ஜெயலலிதா தலைமையிலும் பிறகு ஜெயலலிதா ஆசியுடனும் அஇஅதிமுக ஆட்சி நடக்கிற காலகட்டத்தில் நெடுஞ்சாலை துறை பணிகளுக்காக ரூ.48,425 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011 - 2012ல் ரூ.3,403 கோடி எனத் துவங்கிய ஒதுக்கீடு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து 2018 - 2019ல் ரூ.9,261 கோடி ஆகியுள்ளது. இந்த எட்டு ஆண்டு காலமும் நெடுஞ்சாலை துறையில் தற்போதைய முதலமைச்சர் பழனிச்சாமிதான் அமைச்சராக இருந்துள்ளார்.
இந்தத் துறையில் ஆண்டுதோறும் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.6000 கோடி செலவிடப்படுகிறது என்றும் 2018 - 2019ல் ரூ.12,000 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வேலைகள் நடக்கின்றன என்றும் துறையின் கொள்கை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இதில்தான், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலை முதலில் ரூ.715 கோடி செலவில் உருவாக்கப்படும் என்று சொல்லப்பட்டு, பிறகு ரூ.1515 கோடி ஆகும் என கணக்கிடப்பட்டு பிறகு, முதலமைச்சரின் உறவினர் நடத்தும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டது என்றும் இதற்கு ரூ.200 கோடிதான் செலவாகும் என்றும் திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச் சாலை முதலில் ரூ.407.6 கோடியில் திட்ட மிடப்பட்டு பிறகு, ரூ.720 கோடி ஆகும் என்று சொல்லப்பட்டு, பழனிச்சாமியின் இன்னும் ஓர் உறவினருக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது என்றும் திமுக குற்றம் சாட்டுகிறது. திமுகவின் குற்றச் சாட்டுகளுக்கு பதில் தரும் முயற்சியில், அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள், ஒரு கி.மீக்கு ரூ.10 கோடிதான் செலவு என்று  சொல்கிறார். அவர் இப்படிச் சொன்னபோது அவருடன் அமைச்சர் ஜெயகுமார், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை உடனிருக்கின்றனர். இந்தப் பணியில் எந்த அளவுக்கு முறைகேடுகள் நடக்கும் என்பதற்கு அவர்கள் தந்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இது.
இந்தப் பணி இனி நடக்க வேண்டும். இது வரை எட்டு ஆண்டுகளாக நடந்த பணிகளில் என்ன நடந்திருக்கும்? முதலமைச்சர் உறவினருக்கு ஒப்பந்தம் தருவது மட்டும்  பிரச்சனையல்ல. ஒப்பந்தம் எப்படி நடைமுறையாகிறது என்பது முக்கியமான பிரச்சனை. 2017 - 2018 விவரங்கள் மட்டுமே அதிர்ச்சி தருகின்றன.
2017 - 2018ல் இந்தத் துறையில் ரூ.8,420 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.6,659 கோடி செலவிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ.554 கோடி, கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு ரூ.3,565.14 கோடி, கிராம சாலைகளுக்கு ரூ.308 கோடி செலவிடப்பட்டுள்ளது. நிலுவைப் பணிகள், அதாவது ரூ.1,761 கோடிக்கான பணிகள், நடந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள். 2018 - 2019ல் முறையே ரூ.808 கோடி, ரூ.4,864 கோடி, ரூ.958 கோடி செலவிடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள் ஆகியவற்றில் புதிய சாலைகள் போடுவது, பராமரிப்பது, பாலங்கள் கட்டுவது, பராமரிப்பது, அவற்றை தரம் உயர்த்துவது ஆகிய பணிகளை, தேசிய நெடுஞ்சாலை அலகு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலைகள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பிரிவு ஆகிய கட்டமைப்புகள் மூலம் செய்யப்படுகின்றன. கிராமப்புற உள்கட்டமைப்பு சாலைகள் தொடர்பான பணிகள், ரயில்வே திட்டப் பணிகள் ஆகியவையும் இந்த கட்டமைப்புகள் மூலம் நடக்கின்றன.
நடந்ததாக, நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் சாலைகள், பராமரிப்புப் பணி, பாலங்கள், அவற்றின் பராமரிப்புப் பணி என எவற்றையும் தமிழக மக்கள் கண்ணால் காண முடியவில்லை. பழனிச்சாமி பொறுப்பில் எட்டு ஆண்டுகளில் இவர்கள் சொல்லும் பணிகள் எல்லாம் உண்மையில் நடந்திருந்தால், குட்டி முதலாளித்துவ கருத்து அடிக்கடி சொல்வது போல், தமிழ்நாடு சிங்கப்பூர் ஆகியிருக்கும்.
654 கி.மீக்கு அமைக்கப்படும் சென்னை கன்னியாகுமரி தொழிற்தடச் சாலை ரூ.6,448 கோடி மதிப்பில் உருவாக்கப்படவுள்ளது. இது அஇஅதிமுக அமைப்புச் செயலர் பொன்னையன் சொல்லும் கணக்குடன் ஒத்துப்போகிறது. இதுவும் அதீத செலவு மதிப்பீடுதான். ஆனால் இதைவிட பெரிய அதிர்ச்சிகளை வேறு சில திட்ட மதிப்பீடுகளில் நமக்குத் தருகிறார்கள். 
எண்ணூர் முதல் மத்திய கைலாஷ் வரை 182 கி.மீக்கு சென்னை எல்லைச் சாலை என்று சொல்கிறார்கள். இதில் கட்டுமானத்துக்கு ரூ.7,446 கோடி. ஒரு கி.மீ சாலை போட ரூ.40 கோடிக்கும் மேல் செலவாகுமா? சாலைக்கான நிலம் எடுக்க ரூ.4,855 கோடி ஒதுக்கீடு. அதில் 1380 ஏக்கர் நிலம் எடுக்க ரூ.2,603.32 கோடி உடனடியாக செலவிடவுள்ளது. ஒரு ஏக்கர் நிலம் எடுக்க ரூ.1.88 கோடி செலவாகுமா? நிர்வாக செலவுகள் எல்லாம், இவர்கள் செலவுகள் உட்பட ஒரு ரூ.50 லட்சம் என்று கொண்டாலும் நிலம் கொடுத்தவருக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடிக்கும் கூடுதலாகவா தருகிறார்கள்?
வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை 60 கி.மீ தூரத்துக்கு சென்னை வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகள் 97% முடிந்துவிட்டதாகவும் அரசு - தனியார் பங்கேற்பில் நடக்கும் இந்தப் பணிகளுக்கு ரூ.2,160 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். 60 கி.மீ சாலை போட இவ்வளவு பெரிய தொகை எதற்கு? சாலையை தங்கத்திலா போட்டிருக்கிறார்கள்?
ஏற்கனவே இருக்கிற எண்ணூர் - மணலி 30 கி.மீ சாலையை மேம்படுத்த ரூ.600 கோடி ஒதுக்குகிறார்கள். மேம்படுத்தவே ஒரு கி.மீக்கு ரூ.20 கோடியா? இதை மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பும் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பும் சேர்ந்து செய்கிறார்கள்! இது தவிர, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் 3,170 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் ஆறு, நான்கு வழித்தடங்களாக ரூ.21,251 கோடி மதிப்பில் தரமுயர்த்தப்பட்டுள்ளன.  ரயில்வே திட்டப் பணிகளில் ஒரு ரூ.1,600 கோடிக்கும் மேல் பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இன்னும் 1,497 கி.மீ மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரமுயர்த்த கருத்துரு அனுப்பியுள்ளார்களாம். தொலைநோக்கு திட்டம் 2023படி ரூ.1,34,600 கோடி மதிப்பில் இன்னும் ஏதேதோ சாலைகள் போட வேண் டுமாம். ஆட்சி இழப்பதற்கு முன் தமிழ்நாட்டு வளங்களை எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட தெளிவான திட்டங்கள் இருப்பது அரசின் அறிக்கையில் தெரிகிறது. ஓரிரண்டு பணிகளில் ரூ.10 கோடி என்று சொன்னவர்கள், நடக்கிற பணிகளில் இந்த ரூ.10 கோடி முதல் ரூ.60 கோடி வரை என்ன செலவு என்று சொன்னால், பழனிச்சாமியும் மற்ற அமைச்சர்களும் குற்றமற்றவர்கள் என்று முடிவுக்கு வர உதவியாக இருக்கும். நீதிமன்றத்தில் அந்த உண்மைகள் முன்வைக்கப்படாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் அவர்கள் முன்வைத்தாக வேண்டும்.

Search