பரியேறும் பெருமாள் : உரையாடலின் துவக்கமா?
பிச்சை
சமீப காலங்களில் வெளிவந்த திரைப்படங்களில், அதிலும் தென்தமிழ்நாடு தொடர்பான திரைப்படங்களில், பொருள் நிறைந்த அக்கறையான விவாதத்தைத் தூண்டி கவனத்தை ஈர்த்த திரைப்படம், பரியேறும் பெருமாள்.
இயக்குனர் பா.ரஞ்சித், அட்டக்கத்தியில், மெட்ராசில் வட தமிழ்நாட்டு தலித்துகளின் வாழ்க்கையை அழகுணர்வுடனும் உண்மைக்கு நெருக்கமாகவும் காட்சிப்படுத்தினார். இயக்குனர் ரஞ்சித், கபாலி காலா என ரஜினிகாந்துக்கான படங்கள் எடுத்தார். இப்போது, தென் தமிழ்நாட்டு தலித்துகளின் இரத்தமும் வலியும் நிறைந்த வாழ்வை, மாரி செல்வராஜ் இயக்கத்தில், தம் கருத்துக்களைச் சொல்லும் படமாக எடுத்துள்ளார்; இயக்குனரும் தயாரிப்பாளரும் ஒரே அலைவரிசையில் இருந்துள்ளனர்.
கல்லூரி முதல்வராக வருபவர் அருந்ததியர் உட்பிரிவைச் சேர்ந்தவர் எனக் கருத வசனங்கள் இடம் தருகின்றன. கதைக் களத்தை கதை மனிதர்களை, படப்பாடல் காட்டுகிறது. அய்யா தூத்துக்குடி மாவட்டமாம். சிறுவைகுண்டம் தாலுகாவாம். கருங்குளம் பக்கத்துல அழகான புளியங்குளம். நாங்கள் பிறந்த ஊர், கனவோடு வாழும் ஊர்.
கொடியன்குளத்துக்கும் பக்கத்தில் உள்ள தலித் மக்களே பரியேறும் பெருமாளின் கதை மாந்தர்கள்.
டாக்டர் கிருஷ்ணசாமியின் பேட்டியும் பரியனின் நான் யார் பாடலும்
ராமர் கோயில் கட்டப் புறப்பட்ட கடப்பாரைக் கூட்டத்தின் 2014 ஆட்சியில், பழைய பாணி தலித் தலைவர்கள் ராம் விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அதாவலே, புது பாணி தலித் தலைவர் உதித் ராஜ் அமைச்சர்களாக உள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 2019ல் தமக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி விரும்புகிறார். ஆனந்தவிகடன் வார இதழுக்குத் தந்துள்ள பேட்டியில், சங் பரிவாரைக் காட்டிலும் மேலாக வலுவாக இந்துத்துவா கருத்துகளுக்கு முலாம் பூசி பளபளப்பும் மினுமினுப்பும் தர, முயன்றுள்ளார். ‘சாதிரீதியாக எந்த இழிவும் கிடையாது. அய்யர், கவுண்டர், நாடார், தேவர், தேவேந்திரர், முதலியார் என போட்டுக் கொள்வதில் எந்த தவறும் கிடையாது’. ‘இட ஒதுக்கீடு இல்லாமல் போயிருந்தால், இந்த சமூகங்கள் மேலும் முன்னேறி இருக்கும்’. ‘இட ஒதுக்கீடு, அம்பேத்கர் பெரியாரின் தவறாகும்’.
இந்து மதத்தின் புனித அதிகாரத்தால்தான், சாதி தன் அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் பெறுகிறது; சாதி அமைப்பில் மேலே செல்லச் செல்ல வழிபடுதலும் கீழே செல்லச் செல்ல மிதித்தெடுத்தலும் இழிவுபடுத்தலும் நடக்கிறது. என்ன விலை கொடுத்தாவது இந்து ராஷ்டிரா உருவாகாமல் தடுக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் பெயர் சொல்லி, அரசியல் பயணம் துவக்கியவர்கள், இன்று சாதி ஒரு விஷயமே இல்லை, இடஒதுக்கீடு வேண்டாம், பட்டியல் சாதியில் வைத்திருப்பதுதான் இழிவு என்று பேசி, தாமிரபரணி புஷ்கரனி இந்துத்துவ ரதங்களைக் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்கள்; இந்து சாமியார்களோடு குலாவி மகிழ்கிறார்கள்.
பரியனின் ‘நான் யார்’ பாடல், கிருஷ்ண சாமியின் தவறை, தலித்துகளின் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் வலிகள் வேதனைகள் பற்றிப் பேசி உணர்த்துகிறது. பரியேறும் பெருமாள் திரைப்படம், நிபந்தனை இல்லாமல், படித்து முன்னேற வேண்டிய அவசியம் பற்றி, அதற்கு இடஒதுக்கீட்டின் அவசியம் பற்றிப் பேசுகிறது.
நான் யார்?
இரயில் தேடி வந்து கொல்லும் நான் யார்?
பூக்கும் மரமெங்கும் தூக்கில் தொங்கும் நான் யார்?
நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்?
குடிசைக்குள் கதறி எரிந்த நான் யார்?
தேரு ஏறாத சாமி இங்கு நான் யார்?
உன் கை படாமல் தண்ணீர் பருகும் நான் யார்?
ஊர்ச் சுவர் கட்டி தூரம் வைக்க நான் யார்?
மலக்குழிக்குள் மூச்சை அடக்கும் நான் யார்?
அரசன் என்று சொல்வோரும் உண்டு.
அடிமை என்று நினைப்போரும் உண்டு.
ஏர் பிடித்த வாழ்வும் உண்டு.
போர் செய்த கதையும் உண்டு.
பெருமையோடு, வேட்டையாட வளர்க்கும், நாய்களைக் குளிப்பாட்டும் குட்டையில், சாதி ஆதிக்கம் சிறுநீர் கழிக்கிறது. அதுவே, சட்டக் கல்லூரியில் டாக்டராவேன், டாக்டர் அம்பேத்கராவேன் என்று குரலில் பெருமிதம் பொங்கச் சொன்ன பரியேறும் பெருமாள் பிஏபிஎல் மேல ஒரு கோடு என்ற பரியனின் முகத்தில், சிறு நீர் பெய்கிறது. அதுவே, பேருந்தின் மீது இறுகிப் பற்றி இருந்த கைப்பிடியைத் தளர்த்தியும், ஆற்று நீரில் மூச்சடக்கியும் கொல்கிறது. மேல் சாதிப் பெண்ணைக் கொல்கிறது. அவளுக்கு மொட்டை அடிக்கிறது. தலித்துகளுக்கு வேட்டை நாய் ஒரு கேடா என, கருப்பியை தண்டவாளத்தில் கட்டி ரயிலேற்றிச் சாக வைக்கிறது. கொலைகளை, தற்கொலைகள், விபத்துக்கள் என எளிதாகச் சொல்லும் அளவுக்கு, அதற்கு, அதிகாரமும் செல்வாக்கும் உள்ளது.
இந்த திரைவழிப்பட்ட ஒலி ஒளிச் செய்திகள் விவரங்கள் உண்மைகள், கிருஷ்ணசாமிக்கு வேண்டிய அதிகாரத்தின் இடஒதுக்கீட்டிற்காக, தலித்துகளின் கல்வி வேலைவாய்ப்பு பதவி உயர்வு இடஒதுக்கீட்டு உரிமையை விட்டுத் தர முடியாது, அழுத்தம் திருத்தமாய்ப் புலப்படுத்துகிற சாதி இழிவை பெருமையாகச் சுமக்க முடியாது, இந்துத்துவாவுக்குப் பல்லக்கு தூக்க முடியாது என உணர்த்துகின்றன.
கொடிய நஞ்சான இந்துத்துவா சங் அரசியல் சாமான்ய மக்கள் மத்தியில் ஊடுருவி வேர் விடப் பார்க்கும் காலத்தில், பரியேறும் பெருமாள், என்ன விலை கொடுத்தேனும் இந்து ராஷ்டிரா உருவாவதை தடுத்தாக வேண்டும் என்ற அம்பேத்கரின் அறைகூவலின் சமகாலப் பொருத்தத்தை, நன்றாகவே புலப்படுத்துகிறது.
பரியேறும் பெருமாள் படத்தை கேவலப்படுத்தலாமா?
பரியேறும் பெருமாளை, தலித் விடுதலைக்கான எழுச்சியை நீர்த்துப் போகச் செய்யும் திரை வன்மம் என்று சொல்வதோ, சாதி ஒழிப்பும் தலித் விடுதலையும் போர்க்குணத்தால் புரட்சியால் அடக்குமுறைக்கு எதிராக ஆர்த்தெழுவதால், நிகழ்வதல்ல, மாறாக, கூனி குறுகிக் கிடந்து அவமானப்பட்டு அமைதியும் பொறுமையும் சுமந்து பெறுவது என்ற கருத்தை, ஆதிக்க சாதி மன நிலையிலிருந்து விதைக்க கதை வன்மம் மூலம் மாரி செல்வராஜ் முயற்சிக்கிறார் என்று சொல்வதோ, பொருந்தாத அதிதீவிர விமர்சனங்களாகும். படத்தின் சமகாலத் தேவையை, இந்துத்துவா/சாதி வன்ம எதிர்ப்பு போராட்டத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய, பயன்படக்கூடிய ஆயுதம் என்பதை காணத் தவறுவதாகும். படத்தில் பரியன், இறுதிக் காட்சிகளில் கூட, ஆதிக்க சாதி தரப்பிலிருந்து நியாயம் பேசும், உரையாடல் துவங்கும், ஜோ என்ற பெண்ணின் தந்தை மாரிமுத்துவின் கார் கண்ணாடி மீது கோபத்துடன் கல்லெறிந்து உடைத்துவிட்டுத்தான் பேசுகிறான். பரியனின் கல்லூரி முதல்வர், சக பேராசிரியரிடம், அவமானப்படுத்தப்படும் பரியன் அறையில் போய், தூக்குப் போட்டுச் சாவதை விட, போட்டுத்தள்ளி விட்டு பிரச்சனையைச் சந்திப்பதில் ஒரு தவறும் இல்லை என்பார். பரியன், திருமணத்துக்கு அழைக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு தப்பித்து வரும் காட்சியில், 80களில் தலித் விடுதலைக் குறியீடாகக் கருதி தலித் மக்கள் வீடுகளில் ஒலிக்க வைத்த, அலைஓசை படப் பாடலே, பின்னணியின் தொலைதூரத்தில் இருந்து ஒலிக்கிறது. ‘எத்தனையோ இரத்த வரிகளை எங்கள் முதுகினில் தந்தவனே அத்தனையும் வட்டி முதலுடன் உங்கள் கைகளில் தந்திடுவோம்’, ‘போராடடா, வாளேந்தடா’ ஒடுக்கு முறையும் கொடூரங்களும் அச்சத்தை மட்டும் ஏற்படுத்தாது. எதிர்ப்பையும் வெடித்தெழச் செய்யும். படத்தின் ஒலி ஒளிக் கோர்வை, சாதி வன்மத்திற்கெதிரான பெரும் சீற்றத்தை உருவாக்கவே செய்கின்றன. கீழ்ச்சாதி மூத்தவர்களை, மேல்சாதி இளையவர்கள் பெயர் சொல்லி அழைப்பது, மனதில் உருவாக்கும் சீற்றம் பற்றி மாரி செல்வராஜ் சில வருடங்கள் முன் ஒரு கவிதை எழுதினார். பரியனின் தந்தை வேட்டி உருவப்பட்டு துடிதுடித்தபோது, பரியனின் தந் தையாக பார்வையாளரை மாறித் துடிதுடிக்க வைத்தது, திரைப்படம். அதே நேரம், பார்வை யாளரை, பரியனாகவும் அறச்சீற்றம் கொண்ட மனிதராகவும் கொதிக்க வைக்கவும் செய்தது.
மூளைக்குள் புகுந்து புழுவாய்க் குத்திக் குடையும் மாரி செல்வராஜின் 2016 கவிதை
உங்களைவிட வயதில் இளையவனொருவன்
உங்கள் தந்தையை பெயர் சொல்லி அழைப்பதை
நீங்கள் கேட்டிருக்கிறீர்களா
அப்படியொரு அகால தருணம்
உங்களுக்கு வாய்க்காதிருக்கட்டும்
ஒருவேளை கேட்டுவிட்டால்
அந்த சத்தம்
ஒரு குருட்டு கூகையின் வழி தப்பிய தூரத்து அலறலை போல
உங்களை அச்சுறுத்தும்
அந்த சத்தம்
கடவாயில் கறி எலும்பு சிக்கிய தெருநாயின் குமட்டும் இருமலாய்
வாலாட்டி உங்களை வெறுப்பேற்றும்
அந்த சத்தம்
தன் குட்டிகளையே விழுங்கிய ஒரு பூனையின்
விஷ ஏப்பத்தை போல
நெருக்கமாய் கேட்டு உங்களை தொந்தரவு செய்யும்
சரி தப்பிக்க வழி
ஒரு கல்
அது உங்கள் கைகள் எடுக்கும்
முதல் கல்லாக கூட இருக்கலாம்
ஆனால் அது கூர்மையான கல்லாக
இருத்தல் அவசியம்
கொஞ்சம் ஆத்திரம் கூடி
சொல்வதற்காக மன்னித்துவிடுங்கள்
அக்கல்லைக் கொண்டு மிக சரியாக அவ்விளையவனின் ஆதி கபாலத்தை உடைத்து திறவாமல்
உங்களால் அச்சத்திலிருந்து தப்பிக்கவே முடியாது
ஆனால் என் பிரார்த்தனையென்பது
அப்படியொரு அகால தருணம்
உங்களுக்கேனும் வாய்க்காதிருக்கட்டும் என்பதே
திரைப்படத்தின் அரசியல் என்று சொல்லப்படுவது என்ன?
பரியன் இறுதிக் காட்சியில், சாதி இந்து தரப்பில் இருந்து பேசும், பரியனை விரும்பும் பெண்ணின் தந்தையிடம் சொல்வான்:
‘நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும், நீங்க எங்கள நாயா நினைக்கிற வரைக்கும் ஒரு மாற்றமும் வராது’. இது சரியே.
ஆனால், தினகரன் வெள்ளி மலரில் மாரி செல்வராஜ் பேட்டி எனப் போடப்பட்ட விஷயத்தில், ‘நல்ல வேளையா டைரக்டர் பா.ரஞ்சித் என்னைத் தத்தெடுத்திட்டார். என் மேல முழுசா நம்பிக்கை வச்சு படத்தை தயாரிச்சிருக்காரு. இப்போ எல்லா பக்கத்திலிருந்தும் நல்ல மாதிரியாத்தான் படத்தைப் பத்திச் சொல்றாங்க. ஒடுக்குமுறைக்கு வன்முறை தீர்வாகாது, தொடர்ந்து விவாதம் செய்தே ஒடுக்கப்பட்டோரின் நியாயத்தைப் புரிய வைக்க முடியும் என்ற இந்த படத்தின் பாசிட்டிவான முடிவு, எதிர்க்கருத்துள்ளவர்களையும் விவாதிக்க வைக்கிறது’.
குடிமைச் சமூகம் என்கிற மேலோங்கிய சமூக சிந்தனை, இந்தப் படத்தை எப்படிக் காண வேண்டும் என, பார்வையாளர்களுக்கு சொல்கிறது எனக் காண்பது அவசியமானது.
அக்டோபர் 5, இந்து நாளேட்டில் செல்லப்பா என்பவர் எழுதுகிறார். ‘சாதிய இழிவை, பொது சமூகத்தின் முன் ஆக்கபூர்வமாக முன்வைக்க, கலை தன்னால் இயன்றவரை முயன்று கொண்டிருக்கிறது. பரியேறும் பெருமாளும் அப்படியொரு முயற்சியே. இது ஒடுக்கப்பட்டோருக்கான படம் அல்ல; ஒடுக்குவோருக்கான படம். இந்தப்படம், உங்கள் மனதில் சாதி ஒழிந்துவிட்டதா இல்லை ஒளிந்துள்ளதா என உரசிப் பார்க்கும் உரைகல் ஆகும்’.
‘படத்தின் காட்சி மொழி, தன்னை அடித்தவரிடமே அன்பு கொஞ்ச, நியாயம் துடிக்க, கெஞ்சலுடனும் கேவலுடனும் ஒரு குழந்தை போல் முறையிடுகிறது. எந்த வகையிலும், பொதுச் சமூகத்தால், புறந்தள்ள முடியாத இந்த உரிமைக்குரல், பொது மனச்சாட்சியை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது’.
‘ஒடுக்கும் சாதியிடமும் உரையாடலாம் என்ற நம்பிக்கையை விதைப்பது வன்முறையைத் தவிர்த்து இணக்கத்தை முன்வைப்பது என்று, இப்படம், நிகழ்காலத் தேவைகளை முன் நிறுத்துகிறது. சாதிய எதார்த்தம் பற்றி கதை சொல்லும், கல்வியின் மூலம் முன்னேறத் துடிக்கும், இணக்கத்துடன் உரையாட அழைக்கும், இந்த பரியேறும் பெருமாளும் அவனது கருப்பி நாயும் நம் மனச்சாட்சியின் முன் வீசப்பட்ட உண்மையின் கேள்விகள். அவை எப்போதும் தண்டவாளத்தின் மேல் ஓடும் ரயில் போல், நம் மனதில் கடகடத்துக் கொண்டிருக்கும்’ என எழுதி, படத்துக்கு நூறுக்கு அய்ம்பத்தெட்டு மதிப்பெண்கள் வழங்கியுள்ளது ஆனந்த விகடன் ஆசிரியர் குழு. தங்கள் கோணத்தில் இருந்தும் நலனில் இருந்தும் படத்தை சிலாகிக்கிற இந்த விமர்சகர்கள், நல்ல வேளையாக, உரையாடல் மற்றும் விவாதம் மூலம் ஊர், சேரி எல்லைக் கோடு அழியும் என்றும் யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே, சாதி மாறி காதலிக்காமல் படித்து முன்னேறினால் ஆதிக்கக் கொலை நடக்காது என படம் சொல்வதாக குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள்.
உரையாடி விவாதித்து சாதியை அழித்தொழிக்க முடியுமா?
சாதி பற்றி, அதன் வன்மம் பற்றி, அது ஆதிக்க சாதியினரையும் பிடித்தாட்டுவது பற்றி இமையம், பெத்தவன் சிறுகதையில் எழுதி இருப்பார். தலித் இளைஞனைக் காதலித்தற்காக, பாலிடால் தந்து வன்னியப் பெண்ணைக் கொன்று விட, தந்தைக்கு ஊர்ப் பஞ்சாயத்து உத்தரவிடுகிறது. அந்த தந்தை புலம்புகிறார்: ‘இது வீம்புக்கு சூரிகத்திய முழுங்குற சாதி. கட்டுறதுக்கு கோவணம் இல்லான்னாலும் சாதிய விட மாட்டேங்குது’. ஊர்ப்பஞ்சாயத்தில், கண்ணகி - முருகேசன் வன்னிய தலித் இணையர் படுகொலை செய்யப்பட்டது பற்றி நடந்த உரையாடல் என இமையும் எழுதியது, பரியேறும் பெருமாள் காலத்திலும் தொடர்கிறது.
‘இல்ல, இல்ல. நம்ம பழனி மவ மாதிரியே உன் மவ கல்லூரில நம்ம எனத்து பொண்ணு சிதம்பரத்துல படிக்கப்போச்சு. அந்த ஊரு கீழ் சாதிப் பயலும் அங்க படிச்சிருக்கான். அந்தப் பயலுக்கும் அந்த பொண்ணுக்கும் எப்படியோ சேர்மானமா ஆகிப் போச்சு. பெத்தவங்க மத்த வங்கன்னு எம்மானோ சொல்லிப் பார்த்திருக்காங்க. அந்த நாயி இரண்டும் கேக்கல. ஊர்ப் பஞ்சாயத்து சாதி பஞ்சாயத்துலயும் கட்டடயில. ரெண்டு தெருவுக்கும் கைகலப்பு வெட்டு குத்துன்னு நடந்திருக்கு.
அவங்க ரண்டு பேராலதான் ஊரு சண்டயும் சச்சரவுமா இருந்திருக்கு. ஊரு நல்லபடியா இருக்கணும்னா, அவங்க ரெண்டு பேரு கதயயும் முடிக்கணும்னு ஊர் முடிவாச்சு. அதுக்கு ரெண்டு பெத்தவங்களும் சம்மதம் சென்னாங்க. அந்த பயலும் அந்த குட்டியும் அதுக்கு ஒத்துகிட்டாங்க. ஆயிரம் ரெண்டாயிரம் பேர் கூட்டமா கூடி ரெண்டு பேரு காதுலயும் மருந்த ஊத்தி கொன்னுட்டாங்க. பொணத்த அவங்க அவங்க தெருவுக்கு எடுத்துட்டுப் போயி, அவங்கவங்க சுடுகாட்டுல பொதைச்சுட்டாங்க’.
‘அடி சக்க’.
‘மூணு நாளு கழிச்சி விசியம் வெளிய தெரிஞ்சிபோச்சு. போலீஸ் வந்து ஊர சுத்தி அடச்சுகிச்சு. இங்க நூறு பேரு அங்க நூறு பேருன்னு ஆளுங்கள பிடிச்சுட்டிப் போயிட்டாங்க. அன்னிக்கு நம்ம எனத்து வக்கீலுவோ வந்து இறங்கினாங்க பாரு... அடேங்கப்பா அய்நூறு பேருக்கு மேல இருக்கும். விருத்தாசலமே ஆடி அசைஞ்சு போச்சு. பொணத்த தோண்டி எடுத்தாலும், சாட்சி இல்லன்னு, ஊரே ஒண்ணா நின்னதால வழக்க தள்ளுபடி செய்ய வச்சாச்சி’.
உரையாடி விவாதித்து ஒழிக்க முடியாதது சாதி. அது வலியது. அது கொடியது. அது பரவிப் படர்ந்தது.
சாதி அழித்தொழிக்கப்பட
சாதிகளுக்கிடையிலான சண்டையினால் சாதி ஒழியாது. அதே நேரம், ஒடுக்கும் சாதியின் கருணையால் இரக்கத்தால் சாதி ஒழியாது. ஒடுக்கப்பட்டோரின் விடாப்பிடியான எழுச்சியுடனான சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், கருத்துப் பிரச்சாரம், ஒடுக்கும் சாதிகளில் உள்ளோர் மத்தியிலும் சமத்துவத்தின் அடிப்படையிலான அற உணர்வை, நியாய உணர்வை உருவாக்க வேண்டும். ஆதிக்க எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து சாதி உழைக்கும் மக்கள் மத்தியில் வர்க்க ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்.
உரையாடல் விவாதம் நிச்சயம் இருக்கும். அதையும் தாண்டி கூர்மையான சாதி அழித்தொழிப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களின் தீவிரமும், வேகமும், வீச்சும், மிக மிக அவசியமானவையாக மாறும்.
கருப்பு, நீலத்தை கண்டுகொள்ளவில்லை. சிவப்பு, கருப்பும் நீலமும் தனியாகத் தோன்றி வளர்வதன் அடிப்படைகளை காணவில்லை.
இன்று காவி இருள் பரவிப் படரும்போது, சிவப்பு, கருப்போடும் நீலத்தோடும் உறவாடி களமாட வேண்டும்.