COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 1, 2018

செப்டம்பர் 28, பகத்சிங் பிறந்த நாளில் 
செங்கொடி இயக்கத் தோழர்கள் சிறைவைப்பு

எஸ்.குமாரசாமி

தொழிலாளர்களுக்கு எதிராக, வெள்ளைக்கார காலனிய எசமானர்கள் கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக, கேளாச் செவிகள் கொண்ட பிரிட்டிஷாரையும் அவர்கள் அடிமைகளையும் ஒத்தூதுபவர்களையும் கேட்க வைக்க,
பகத்சிங் நாடாளுமன்றத்தில் குண்டு வீசினான். தூக்கிலேறினான்.
புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில் தோழர்கள், 2018 பகத்சிங் பிறந்த நாளில் கேளாச் செவிகளும், எல்லாவற்றையும் பறித்துக் கொள்ளும் கைகளும், எவ்வளவு விழுங்கினாலும் உட்கொள்ள வயிறும் கொண்ட பழனிச்சாமி அரசாங்கத்தைக் கேட்க வைக்க, தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் சென்றார்கள். முன்னரே அறிவித்துவிட்டு காவல்துறை நன்கறிந்த, முதல்வரை சந்திக்கும் போராட்டம் நடத்த அவர்கள் தயாரானார்கள். அவர்கள் 48 பேர். அவர்களில் மூவர் பெண்கள். அய்வர் மாணவர்கள். அவர்களில் 40 பேர் ஒப்பந்த, பயிற்சி, நிரந்தரத் தொழிலாளர்கள். தொழிலாளர் முன்னோடிகள். அவர்களோடு, அவர்களுக்கு தெரியாததுபோல் காட்டிக்கொண்டு, ரகசிய போலீசாரும் அவர்கள் சென்ற பேருந்துகளில் கூடவே போனார்கள். 28.09.2018, காலை 11.30 மணி ஆனது. பேருந்தில் இருந்து இறங்கிய தோழர்கள் 2 திசைகளில் இருந்து மனுக்களுடன் வரிசையில் நிற்கப் புறப்பட்டார்கள். நாளை முதல்வர் வீட்டை முற்றுகையிடப் போகிறார்கள், ஆகவே மனு கொடுக்க விடாமல் அவர்களை கைது செய் எனக் காவல் அதிகாரிகள் வாக்கிடாக்கியில் பேசிக்கொண்டனர்.
சுதந்திர ஜனநாயக குடியரசில், முதலமைச்சருக்கு மனு தர விடாமல் தோழர்கள், தடுக்கப்பட்டார்கள். தோழர்கள் முழக்கமிட்டார்கள். எங்களை அனுமதியுங்கள் என நடைமேடை தரையில் அமர்ந்தார்கள். அவர்கள் தனித்தனியாய் வந்தனர். கூடி வரவில்லை. அவர்கள் யார் நடமாட்டத்தையும் தடுக்கவில்லை. அவர்கள் எந்த அதிகாரியையும் பணி செய்ய விடாமல் தடுக்கவில்லை. ஆனாலும் கைது செய்யப்பட்டார்கள். பகத்சிங்கின் தோழர்கள் 40 பேர், பகத்சிங் பிறந்த நாளான செப்டம்பர் 28ல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
தோழர்கள் என்ன மனு தந்தனர்?
தமிழ்நாட்டில், 14.05.2008 நிலையாணை கள் திருத்தச் சட்டம் அட்டவணை அயிட்டம் 10 ஏ, 10 பி படி, நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்க, தமிழக அரசு புதிய நிலையாணைகள் போட வேண்டும் என தோழர்கள் கேட்டார்கள். கோவை பிரிக்கால், யமஹா, என்பீல்ட், எம்எஸ்அய் போன்ற போராடும் தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்க கேட்டார்கள். மந்த மாகவும், கூருணர்வு இல்லாமலும், முதலாளிகளுக்குச் சாதகமாகவும் தொழிலாளர் பிரச்சனைகளில் தொழிலாளர் துறை தலையிடாமல் தாமதப்படுத்துவதையும் சுட்டிக்காட்ட அவர்கள் சென்றார்கள்.
அது என்ன, மாதிரி நிலையாணைகள்?
நாம் உற்பத்தி செய்கிறோம். நாமே மக்கள் தொகையில் அதிகம் இருந்து வாக்களித்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்கிறோம். நம் வாக்குகள்படிதான் மத்திய மாநில அரசுகள் அமைகின்றன. புரடக்ஷன், பாப்புலேஷன், என்ற இரண்டு ‘பி’யில் நாமே  யாதுமாகி நிற்கிறோம். ஆனால் சொத்து (பிராபர்ட்டி) அம்பானி, அதானி, ஹ÷ண்டாய், பிரிக்கால், யமஹா, என்ஃபீல்ட், முதலாளிகளிடம் உள்ளது. ஆனால், அதிகாரம் (பவர்) முதலாளிகளிடம் உள்ளது. பேராசான் எங்கல்ஸ் சொல்வது போல், 2 முக்கிய ‘பி’ உள்ள மக்களிடம் 2 முக்கிய ‘பி’ இல்லை. அதனால்தான், பாட்டாளி வர்க்க மார்க்சிய அரசியல், ‘நாமின்றி நாடில்லை, நாடோ நமதில்லை, நாமே நாடாவோம், நாட்டை நமதாக்குவோம்’ என திரும்பத் திரும்ப முழக்கமிடுகிறது.
மேலே சொன்னவற்றை, சமகால நடப்புகளுடன் சற்று பொருத்திப் பார்க்கலாமா? கேடுகெட்ட திருமாங்கல்ய திட்ட கொடும் சுரண்டல் பயிற்சியாளர் முறை குறிப்பாக ஜவுளி தொழிலில் பெண்களை வாட்டி வதைக் கிறது; கொள்ளை நோயாய் பிற தொழில்களுக்கும் பரவுகிறது; இவை, 2007 பிரிக்கால் தொழிலாளர் எழுச்சியும், சங்கங்களும் முன்வைத்த புகார்கள். எதிர்ப்புக் குரல் நீதிமன்றத்திற்குள்ளும் நுழைந்தது.
நீதிமன்ற தலையீட்டில் 2007ல் போடப்பட்ட வழக்கு 2016லும் நீடித்தது. தமிழக அரசு வரலாறு காணாத முறையில், ஜவுளித் தொழில் பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயித்தது. பரவும் பயிற்சியாளர் முறை சுரண்டல், நிரந்தர வேலை வாங்கிக் கொண்டு குறைந்த சம்பளம் தந்து ஒட்டச் சுரண்டுகிறது. நிரந்தரமற்ற பதிலிகளை, தற்செயல், தற்காலிக, புரொபேஷன், பயிற்சித் தொழிலாளர்களைக் காக்க மத்திய நிலையாணைகள் சட்டத்தை தமிழ்நாட்டில் 14.05.2008ல் தமிழ்நாடு சட்டமன்றம் திருத்தியது. புதிய நிலையாணைகள், அந்த சட்ட அட்டவணை அயிட்டங்கள்படி மட்டுமே கொண்டு வர முடியும். அதனால் அன்றே அயிட்டம் 10ஏ, 10பியை அட்டவணையில் நுழைத்து சட்டமாக்கியது.
அயிட்டம் 10ஏ, பதிலிகள், தற்செயல், தற்காலிக, புரொபேஷன், பயிற்சி தொழிலாளர்கள் நியமனம், மறு நியமனம் மற்றும் (சம்பளம் உள்ளிட்ட) பணி நிலைமைகள் ஆகியவை பற்றி புதிய மாதிரி நிலையாணைகள் கொண்டுவர வழிசெய்தது. அயிட்டம் 10பி நிரந்தரத் தொழிலாளர்களில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் எவ்வளவு சதம் பேர் இருக்கலாம் என மாதிரி நிலையாணைகளில் கொண்டு வர வழி செய்தது.
பிறகு என்ன ஆனது?
நிரந்தர வேலை. நிரந்தரமற்ற தொழிலாளர்கள். இதுவே இன்றைய யதார்த்தம். காஞ்சி, திருவள்ளூர், திருச்சி, சென்னை, கோவை எங்கும், இப்படியே விட்டுவிட்டால், இப்போதைய நிரந்தரத் தொழிலாளர்களின் பணிக் காலம் முடிந்த பிறகு, புதிதாக எங்கும் நிரந்தரமாக மாட்டார்கள். புதிய மாதிரி நிலையாணைகள் மே 2008லேயே வர, மத்திய  அரசு திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்திருந்தால், இந்நேரம் தமிழ்நாட்டின் சில லட்சம் தொழிலாளர்கள் பயன் பெற்றிருப்பார்கள். பாஜக ஆளும் மாநில அரசுகள், தொழிலாளர்களை சுலபமாக வேலை நீக்கம் செய்யும் வகையில், மாநிலத்தில் திருத்தச் சட்டம் கொண்டுவந்தால், மத்திய அரசு அடுத்த மாதமே ஒப்புதல் தருகிறது. நிலையாணைகள் திருத்தச் சட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் வந்தாலும், 2008 முதல் 2011 வரை மத்திய அரசில் இடம் பெற்ற திமுகவால் அதற்கு ஒப்புதல் பெற முடியவில்லை. 2011 முதல் 2016 வரை ஜெயலலிதாவாலும் ஒப்புதல் பெற முடியவில்லை. தொழிலாளர் தரப்பின் விடாப்பிடியான முயற்சிகளால், மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்டு, ஒருவழியாக திருத்தச் சட்டம் 04.07.2016 அறிவிப்பாணை மூலம் அமலுக்கு வந்தது.
அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம், 20.07.2016 அன்று 3 மாதங்களில் மாதிரி நிலையாணைகள் கொண்டு வர உத்தரவிட்டது.
வந்ததா மாதிரி நிலையாணைகள் சட்டம்?
கருணாநிதியின் இறுதிச் சடங்குகளைக் கவனித்த இஆப அதிகாரி அமுதா, 2016ல் தொழிலாளர் துறை செயலராக இருந்தார். அவர் 18.10.2016 அன்று கூட்டிய அரசு, வேலை அளிப்பவர்கள், மத்திய சங்கங்கள் கூட்டத்தில் ஏஅய்சிசிடியு, ஏஅய்டியுசி, சிஅய்டியு, எச்எம்எஸ், அய்என்டியுசி, எல்பிஎஃப் சங்கங்கள் கலந்து கொண்டார்கள். நிரந்தரமற்ற தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 10% தாண்டக் கூடாது எனச் சொல்ல அரசு தயாராய் இருப்பதாக இஆப அதிகாரி அமுதா ஸ்லைட் போட்டுக் காட்டினார். பயிற்சியாளர் களுக்கு இனி நிலையாணைகள் சட்டம் பொருந்துமா என்ற அவர் சந்தேகத்திற்கு, திருப்திகரமான பதில் தந்ததற்கு நன்றி சொன்னார். அவரிடம் சொன்னபடி புதிய நிலையாணைகள் தொடர்பான முன்வைப்புகளை மய்ய சங்கங் கள் 18.10.2016 அன்று தந்தோம். அவர் சங்கங்களை அழைத்துப் பேசாமல், அரசு என்ன கருதுகிறது என்று சொல்லாமல், உயர்நீதிமன்றத்தில், 03.11.2016 அன்று 2007ஆம் வருட வழக்கில், அமல்படுத்துதல் மற்றும் தற்போதைய நிலை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் (2016ல்) மத்திய அரசு, தொழில் தகராறுகள் சட்டம் 1947, தொழிற்சங்கங்கள் சட்டம் 1926, தொழிலக வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம் 1946 ஆகிய மூன்றையும் ஒன்றாக்கி விடப் போவதாகவும், அதனால், (அட்டவணை 10ஏ, 10பி என சட்டமன்றம் கொண்டு வந்த திருத்தப்படி) புதிய நிலையாணைகள் தேவை இல்லை எனக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
அரசின் நிலை நமக்கு எப்போது தெரிந்தது? 
சட்டமன்றம் இயற்றிய திருத்தச் சட்டப் படி, மாநில அரசு புதிய மாதிரி நிலையாணைகள் போட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட டபுள்யு பி 16097/2018 என்ற ஒரு பொதுநல வழக்கில், அரசு துணைச் செயலாளர் 05.09.2018 தாக்கல் செய்த பதிலுரை மூலமே நமக்கு இந்த விவரங்கள் தெரிந்தன. அதில் அவர், 14.12.2016 அன்று உயர்நீதிமன்றம் அரசின் 03.11.2016 தேதிய அறிக்கையை ஏற்று வழக்கை முடித்துவிட்டதாக  தவறாக குறிப்பிட்டுள்ளார். அதனாலும், மத்திய அரசு தொழிற்தகராறு சட்டம், தொழிற்சங்க சட்டம், நிலையாணைகள் சட்டம் ஆகிய மூன்றையும் இணைத்து பொதுச் சட்டம் போட உள்ளதாலும், புதிய நிலையாணைகள் அவசியமில்லை என மாநில அரசு கருதுவதாகவும் சொன்னார்.
14.12.2016 அன்று, உயர்நீதிமன்றம் அரசின் நிலைப்பாட்டை ஏற்றதாகச் சொல்லவில்லை. 1. வேறு உத்தரவு போடவில்லை என்றது. 2. பாதிக்கப்பட்டவர்கள், தொழிலாளர் ஆணையரை அணுகலாம் என்றது. சில வரிகள் கொண்ட இந்த  தீர்ப்பை, லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்தியது, மிகமிக அநியாயமானதாகும். 2016 நவம்பரில் சொன்னதை 2018 செப்டம்பரிலும், இரண்டு வருடமாக அதையே சொல்கிறோமே என்ற கூச்சமில்லாமல், 3 சட்டங்கள் இணைவதால் புதிய மாதிரி நிலையாணைகள் வேண்டாம் என மந்திரம்போல் ஓதியது. 2 வருடங்களாகச் செய்யாதவர்கள், மே 2019ல் தேர்தலைச் சந்திக்க உள்ளவர்கள், சில மாதங்களில் நிலையாணைகள்  சட்டத்தையே காணாமல் போக வைப்பார்கள் என்பது ஏற்கத்தக்கல்ல. அதற்கு மசோதா வர வேண்டும். தடைகள் தாண்டி நிறைவேற வேண்டும். எல்லா மய்யச் சங்கங்களும், மூன்று சட்டங்களை ஒரு சட்டமாக ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு அதனைச் செய்ய மிகவும் தயங்க வேண்டும். சட்டமியற்றும் துறை, அரசுத்துறை, நீதித்துறை, சட்டபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட அர சாங்கம், சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டுமானம் என்றெல்லாம் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் போற்றிப் பாடுபவர்கள், நகர்ப்புற நக்சல் பூச்சாண்டி காட்டுபவர்கள், தமிழ்நாடு சட்டமன்றம் கொண்டு வந்த திருத்தச் சட்டத்தை, அரசின் மூலம் மாதிரி நிலையாணைகளாக ஆக்காதது ஏற்கத்தக்கதல்ல. இது மக்கள் தேர்ந் தெடுத்த உறுப்பினர்கள் உள்ள அவையை அவமதிப்பதாகும்.
எல்லா கட்சிகளும் சங்கங்களும் பரந்த தொழிலாளர்களும், திருத்தச் சட்டப்படியான புதிய நிலையாணைகள் உடனே போடுமாறு தமிழக அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
இகக (மாலெ)யும் அதன் மக்கள் திரள் அமைப்புகளும் 10 வருடங்களாக மத்திய மாநில அரசுகள் மீது விடாப்படியாய் அழுத்தம் தருகின்றன. அதுபோக திருத்தச்சட்டம் அமலான 04.07.2016க்குப் பிறகு 31.05.2017, 31.01.2018, 14.07.2018 தேதிகளில் போராட்டங்கள் நடத்தின. அரசு சொரணையற்று இருந்ததால்தான் முதலமைச்சரைச் சந்திக்க மனு கொடுக்கும் போராட்டத்தை 28.09.2018 அன்று நடத்தின.
நாம் கோரும் புதிய நிலையாணைகள்:
1. நிரந்தரத் தொழிலாளி என விவரிக்கும்போது, நிரந்தரத் தொழிலாளி வேலையைப் பயிற்சியாளர் பார்க்கும்போது அல்லது அதற்காகவே அவர் பணியமர்த்தப்பட்டுள்ளபோது, சம்பளம் வழங்குவதற்காக, அவர் நிரந்தர தொழிலாளியாகவே கருதப்படுவார்.
2. பயிற்சிக் காலம் ஒரு வருடம் தாண்டக் கூடாது. உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் பயிற்சி மட்டுமே தரப்படும் போது, ஓராண்டு முடிவில், அவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்பட வேண்டும்.
3. தகுதிகாண் பருவ நிலை காலம் (புரொபேஷன்) 3 மாதங்கள் தாண்டக் கூடாது. மிகவும் அவசியம் என்றால், அதிகபட்சம் 3 மாதங்கள் மட்டுமே நீட்டிக்கலாம். நீடித்து எழுத்து மூலம் உத்தரவு தரப்படாவிட்டால், அவர் நிரந்தரமானதாகக் கருதப்படும்.
4. தற்காலிகத் தொழிலாளி வருடத்தில் 240 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் ஆக்கப்பட வேண்டும். வேலை தரப்படாதவர்கள் பெயர்கள், அவர்களது வேலை, வேலை தருவது நின்ற நாள் விவரங்களோடு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட வேண்டும். புதிதாக ஆள் எடுக்கும் போது, காத்திருப்போர் பட்டியல்படியே வேலைக்கு எடுக்கப்பட வேண்டும்.
5. ஒரு தொழிலகத்தில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் நிரந்தரமற்ற தொழிலாளர் எண்ணிக்கை 5%அய் தாண்டக் கூடாது.
கூலி உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான போரில், கூலி குறைய லாபம் பெருகும், கூலி உயர லாபம் குறையும். கூலி அடிமை முறை ஒழியப் போராட, மாணவர்களை, இளைஞர்களை, தொழிலாளர்கள் விவசாயிகளிடம் போகச் சொன்ன பகத்சிங்கின் பிறந்த நாளை, நமது தோழர்கள் உயர்த்திய செங்கொடிகளுடன் போராடி, கைதாகி, சிறை சென்று சிறப்பாகவே அனுசரித்துள்ளனர்.
வழக்கறிஞர்களும் வழக்கும்
வழக்கறிஞர்கள் பாரதி, புகழ்வேந்தன், சங்கர், அதியமான், கார்க்கிவேலன், விக்னேஷ், சுரேந்திரன், சென்னகேசவன், மணிவேல், பிரபாகர் ஆகியோருடன் தோழர் குமாரசாமியும் வழக்கு நடத்தினர். இந்திய தண்டனை சட்டம் 147, 151, 188 பிரிவுகளின் கீழும் குற்றவியல் திருத்தச் சட்டம் 7(1), (ஏ) பிரிவின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தீவிரவாத அமைப்புகள், அடுத்த போராட்டத்துக்கு தயாராயுள்ளனர் என்பது போல் பல கட்டுக்கதைகள் சொன்ன காவல்துறையினர், 5ஆவது மாநகர குற்றவியல் நடுவர், நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்குப் போன பிறகே, ரிமாண்ட் செய்ய அழைத்துச் சென்றனர். வீட்டில், பெயில் கிடைப்பது கடினம் என கணக்கு போட்டனர்.
குற்றவியல் நடுவரிடம் கைது செய்ததே தவறு என்று, ரிமாண்ட் செய்வது அவசியமே இல்லை என்று, உச்சநீதிமன்ற அர்னேஷ்குமார் எதிர் பீகார் அரசு தீர்ப்பு சுட்டிக்காட்டப்பட்டது. சட்டமன்றம் இயற்றிய ஒரு திருத்தச் சட்டப்படி, மாதிரி நிலையாணைகள் போட வேண்டும் என மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளில் முதலமைச்சரிடம் மனு கொடுத்தது குற்றமல்ல என எடுத்துச் சொல்லப்பட்டது.
குற்றவியல் நடுவர் பரிவோடு விசாரித்து, தமது சிரமங்களையும் எல்லைகளையும் எடுத்துச் சொல்லி, 8 பேரை சொந்த ஜாமீனில் அனுப்பிவிட்டு மற்றவர்கள் ஜாமீன் மனுவை திங்கள் கிழமை (அக்டோபர் 1) விசாரிப்பதாக ஒத்தி வைத்துள்ளார்.
புழல் சிறையில் உள்ள 40 தோழர்களையும் தோழர் குமாரசாமியுடன் வழக்கறிஞர்கள் பாரதி, புகழ்வேந்தன், விஜய், விக்னேஷ், சங்கர் ஆகியோர் 29.09.2018 அன்று சந்தித்தனர்.
போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள்
1. தோழர் ராஜகுரு (புரட்சிகர இளைஞர் கழகம்)
2. தோழர் சீதா (புரட்சிகர இளைஞர் கழகம்)
3. தோழர் மோகன்ராஜ் (சட்ட மாணவர்) 
4. தோழர் ராஜேஷ்குமார், (புரட்சிகர இளைஞர் கழகம்)
5. தோழர் வினீத் (மாணவர்)
6. தோழர் சுரேஷ் (ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்)
7. தோழர் ஜெனிஃபர் (சட்ட அலுவலக ஊழியர்)
8. தோழர் தேவி (சட்ட மாணவர்)
9. தோழர் மோகன் (இகக மாலெ)
10. தோழர் பி.நடராஜன் (கெம்ப்டாஸ்)*
11. தோழர் ஜெயப்பிரகாஷ்நாராயணன் (கெம்ப்டாஸ்)
12. தோழர் ராஜா (கெம்ப்டாஸ்)
13. தோழர் எம்.நாகராஜன் (கெம்ப்டாஸ்)
14. தோழர் வெங்கடேசபெருமாள் (கெம்ப்டாஸ்)
15. தோழர் எம்.இரவி (கெம்ப்டாஸ்)
16. தோழர் குருமூர்த்தி (கெம்ப்டாஸ்)
17. தோழர் தினேஷ்குமார் (கெம்ப்டாஸ்)
18. தோழர் டி.கருணாநிதி (கெம்ப்டாஸ்)
19. தோழர் துரைசாமி (கெம்ப்டாஸ்)
20. தோழர் காளிச்சாமி (கெம்ப்டாஸ்)
21. தோழர் பன்னீர்செல்வம் (கெம்ப்டாஸ்)
22. தோழர் செல்வன் (கெம்ப்டாஸ்)
23. தோழர் சக்திவேல் (கெம்ப்டாஸ்)
24. தோழர் குமரய்யா (கெம்ப்டாஸ்)
25. தோழர் ஜெயகுமார் (கெம்ப்டாஸ்)
26. தோழர் ஞானசேகரன் (கெம்ப்டாஸ்)
27. தோழர் பெர்னாட் ஷா (கெம்ப்டாஸ்)
28. தோழர் பி.சுந்தர்ராஜ் (கெம்ப்டாஸ்)
29. தோழர் சந்திரகுமார் (கெம்ப்டாஸ்)
30. தோழர் நித்யானந்தம் (சான்மினா) 
31. தோழர் லோகநாதன் (சான்மினா)
32. தோழர் அர்ஜுன் (சான்மினா)
33. தோழர் கிருஷ்ணன் (நிப்பான்)
34. தோழர் பாஸ்கர் (சட்ட மாணவர்)
35. தோழர் நாகபாண்டி (ஹுண் டாய்)
36. தோழர் கே.பழனிவேல் (நிசான்)
37. தோழர் கார்த்திக் (சட்ட மாணவர்)
38. தோழர் சரவணன் (மியாங்வா)
39. தோழர் திவாகர் (மியாங்ஹுவா)
40. தோழர் செல்வகுமார் (ஹுண்டாய்)
41. தோழர் ராஜேஷ் (இகக மாலெ)
42. தோழர் ஆர்.முருகன் (மியாங்ஹுவா)
43. தோழர் ஜே.கவாஸ்கர் (கெபாரோ)
44. தோழர் செல்வகுமார் (மியாங்ஹுவா)
45. தோழர் ஜான்பால் (சவுந்தர்யா டெக்கரேடர்ஸ்)
46. தோழர் விக்டர்ராஜ் (சட்ட மாணவர்)
47. தோழர் வெற்றிச்செல்வன் (மியாங்ஹுவா)
48. தோழர் தாமோதரன் (புரட்சிகர இளைஞர் கழகம்)
இவர்களில் 3 பெண்கள், 5 மாணவர்கள் சொந்த பிணையில் 28.09.2018 அன்று விடுவிக்கப்பட்டனர். மற்ற 40 பேரும் சிறை வைக்கப்பட்டனர். (*கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கம் - கெம்ப்டாஸ்)

Search