COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 31, 2018

கனெக்ட் இந்தியா, புரொபெல் இந்தியா, செக்யூர் இந்தியா என எந்த புண்ணாக்கும் வேண்டாம்!

மோடியின் பதவிக் காலம் முடிகிற நேரம், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேன்ட் அப் இந்தியா, கிளீன் இந்தியா எல்லாம் முகம் கிழிந்து தொங்கும்போது,
கொஞ்சமும் வெட்கமின்றி, மீண்டும் கனெக்ட் இந்தியா, புரொபெல் இந்தியா, செக்யூர் இந்தியா என்று புதிதாக ஒரு கொள்கையை முன்வைக்கிறார்கள்.
மே 1, 2018 அன்று நகலாக வெளியிடப்பட்டு, ஜ÷ன் 1 வரை அவகாசம் தரப்பட்டு, செப்டம்பர் 26 அன்று மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்ட தேசிய மின்னணு தொலை தொடர்பு கொள்கையை, சமூக ஊடகத்தில் உலவும் கொசுக் கதை ஒன்றின் மூலம் எளிதாக விளக்கலாம்.
ஆண் கொசு: டார்லிங் உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவேன்.
பெண் கொசு: ஓகே ஓகே. போய் தூங்கு.
ஆண் கொசு: கண்ணே, உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பேன்.
பெண் கொசு: சரி.. சரி.. மொதல்ல தூங்கப் போ டார்லிங்..
ஆண் கொசு: உன்ன நான் மெர்சிடஸ் கார்ல உக்கார வெச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன்...
பெண் கொசு: என் மேல உனக்கு எவ்வளவு லவ்னு புரியுது டியர்... காலைல பேசலாம்... போய் தூங்கு..
ஆண் கொசு: நீ என்ன நம்ப மாட்டியா...? நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்கச் செயின் போடுவேன் பாரு...
பெண் கொசு: நான் நம்புறேன் டியர்... நீ இப்போ தூங்கப் போ...
ஆண் கொசு: உலகமே திரும்பிப் பார்க்கிற மாதிரி உனக்கு வைரத்துல நகை போடுவேன் பாரு...
இப்போது ஆண் கொசுவை ஓங்கி ஓர் அறை அறைந்த பெண் கொசு சொன்னது...
‘மோடியை கடிச்சுட்டு இங்க வந்து ஒளறாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...’
மொத்த கொள்கையும் இப்படித்தான். பொய். பில்டப். நாட்டு மக்கள் பட்டினியில் சாகிறார்கள். சர்வதேச பட்டினிக் குறியீட்டில் சின்னஞ்சிறிய அண்டை நாடுகளுக்கும் பின்னால், இந்தியா இன்னும் இன்னும் கீழே போகிறது. அனைத்தும் தழுவிய அலட்சியம் நாட்டு மக்களை வாட்டி வதைக்கும்போது, படிக்கும்போதே நமக்கு எரிச்சல் மண்டும் அளவுக்கு, வானுயர்ந்த இலக்குகள், திட்டங்கள் எல்லாம் கொள்கையின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.
ரூ.7 லட்சம் கோடி முதலீடு, 40 லட்சம் வேலை வாய்ப்புகள், நாட்டு மக்கள் அனைவருக்கும் தொலைதொடர்பு உள்கட்டுமான வசதிகளை உத்தரவாதப்படுத்துவது, மின்னணு தொடர்பில் 2017ல் 134ஆவது இடத்தில் உள்ள இந்தியாவை முதல் 50 இடங்களுக்குள் கொண்டு வருவது, நாட்டின் 50% வீடுகளுக்கு நிலையான இணைப்பில் பிராண்ட்பேன்ட் சேவை வழங்குவது, மின்னணு அந்தரங்கம் உள்ளிட்ட மின்னணு இறையாளுமையை பாதுகாப்பது என்று அந்த கொள்கை அறிக்கை அளக்கிறது.
மக்கள் சார்பு வளர்ச்சிக்கு இந்தக் கொள்கையில் கொஞ்சமும் இடம் இல்லை எனும் அதே நேரம், மக்கள் பணத்தில், உழைப்பில் பலப்பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியிருக்கிற உள்கட்டுமான வசதிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டிற்கு விட்டு விடுவதற்கான அனைத்து வழிகளும் முறைகளும் நாகரிகமான சொற்களில் கொள்கையில் சொல்லப்பட்டுள்ளன. கொள்கையில் சொல்லப்படும் ஒட்டுமொத்த வளர்ச்சி 2022ல்தான் எட்டப்படும். ஆனால், 2022ல் வரப்போகும் வளர்ச்சியை காரணம் காட்டி, அதற்கு முன்பே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போது இருக்கிற தொலைதொடர்பு உள்கட்டுமான வசதிகள் தாரை வார்க்கப்படும்.
தொடர்பு, கட்டுப்படியாகும் கட்டணம், நீடிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த ஒளிபரப்பு மற்றும் எரிசக்தி துறையின் சொத்துக்கள் இந்தச் சேவை தரும் நிறுவனங்களுக்கு தரப்படும். தற்போது இருக்கிற செயல் படுகிற, செயல்படாமல் இருக்கிற உள்கட்டுமான வசதிகளை பொதுவில் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும். தகவல்தொடர்பு, தொலை தொடர்பு, ஒளிபரப்பு துறைகளின் உள்கட்டுமான வசதிகள் ஒன்றிணைவதற்கு ஏதுவாக சட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.
எல்லா வகையான கட்டுமானப் பணிகளிலும் தொலைதொடர்பு சாதனங்கள் பொருத்துவதும் கேபிள்கள் போடுவதும் கட்டாயமாகும்போது, முகேஷ் அம்பானி உள்கட்டுமானப் பணிகளுக்கென செலவு எதுவும் செய்யாமல் தொலைதொடர்பு இணைப்புகள் மட்டுமே வழங்கி லாபம் ஈட்டுவார்.
ஒப்புதல்கள் வழங்குவதற்கு தடையாக இருக்கும் நடைமுறைகள் நீக்கப்படும். அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து, நகராட்சிகளில், கிராமப்புறங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் கம்பிக்குழாய் (டக்ட்) போடப்படும். தொலைதொடர்பு கோபுரங்கள் கட்ட சலுகைகள் விலக்குகள் அளிக்கப்படும். ஒரு நிறுவனத்துக்குச் சொந்தமான அலைக்கற்றையை இன்னொரு நிறுவனமும் பயன்படுத்த வழிசெய்யப்படும். இப்படியெல்லாம் கொள்கையில் சொல்லப்படுவதை சுருக்கமாக, தொலைதொடர்பு, தகவல்தொடர்பு, ஒளிபரப்பு துறைகள் ஆகியவை முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் இருக்கும் என ஒரு வரியில் சொல்லி விடலாம். ஆப்டிக் ஃபைபர் கேபிளுக்கு பொதுப் பயன்பாட்டுச் சேவை தகுதி வழங்கி சம்பந்தப்பட்ட சலுகைகள், விலக்குகள் மேலும் தந்து, அந்த நிறுவன தொழிலாளர்களையும் முடக்கிவிடலாம். கார்ப்பரேட் சேவையில் மோடி அரசின் தொலைநோக்கு மெய்சிலிர்க்கச் செய்கிறது. இந்த தொலைநோக்கில், அக்கறையில் ஒரு சதமேனும் மக்கள் நலனில் இருந்தாலும் நாடு பட்டினிக் குறியீட்டில் சற்று மேலே ஏறும்.
ஜியோ சந்தைக்கு வந்தவுடன், ஏர்டெல் நிறுவனம் பின்னுக்குப் போகிறது; இருப்பை தக்க வைத்துக் கொள்ள வோடாபோனும் அய்டியாவும் இணைகின்றன. சந்தையில் கடுமையான போட்டி நிலவும்போது, பொதுத்துறை நிறுவனம் நலிவடைவதாகச் சொல்லப்பட்டு, போட்டியில் இருந்து கிட்டத்தட்ட வெளியே தள்ளப்படுகிறது. அதன் உள்கட்டுமான செல்வங்களை, சந்தையில் தாக்குப்பிடிக்கும் தனியார் நிறுவனங்கள்,  முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் போன்றவை ஆதாயம் பெற தடை இன்றி பயன்படுத்தும் ஏற்பாடாகவே இந்தக் கொள்கை அமைந்துள்ளது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ரூ.8 லட்சம் கோடி வரை கடனில் உள்ளன. நாட்டின் பொதுத் துறை வங்கிகள் பெருமளவு கடனை தந்துள்ளன. வங்கிகள் நலன் காக்க இந்தக் கடனை மீட்க இந்த நிறுவனங்களுக்கு சலுகைகள், விலக்குகள் தந்ததாக மோடியும் அவரது அடிவருடிகளும் அடிமைகளும் சொல்வார்கள்.
பாஜகவின் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் ஆரவல்லி மலைத் தொடரில் 31 மலைகளைக் காணவில்லை என்றும் சட்டவிரோதமாக தாதுப் பொருட்கள் எடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவு ஆளுநர், அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட அனில் அம்பானியின் காப்பீட்டுத் திட்டம் மோசடித் திட்டம் என்று சொல்லி ரத்து செய்திருக்கிறார். மோடி, நாட்டின் செல்வங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்தெடுத்து பிய்த்தெடுத்து அம்பானிகளுக்குத் தருவதற்கு சற்று சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆட்சிக் காலம் இன்னும் ஆறு மாதங்களே மீதமுள்ளன. மொத்தமாக தந்து விட ஒரு சட்டம் போட்டு விடலாம். புதிதாக கொள்கைகள், திட்டங்கள் என்று, இந்த இந்தியா, அந்த இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டு தனித்தனியாக அறிவிக்கப்படுவனவற்றை ஆய்ந்தறிந்து, புரிந்துகொண்டு, எதிர்ப்பு தெரிவிக்கும் வேலை நமக்கும் மிச்சப்படும். காலனி ஆட்சி கூட இந்த அளவுக்கு நாட்டை கொள்ளை அடித்திருக்குமா என்ற கேள்வியே நமக்கு எழுகிறது. புதிய மின்னணு தொலை தொடர்பு கொள்கை வேண்டாம். கனெக்ட் இந்தியா, புரொபெல் இந்தியா, செக்யூர் இந்தியா என எந்த புண்ணாக்கும் வேண்டாம். மோடி அரசு இதற்கு மேல் எந்த ஆணியும் பிடுங்க வேண்டாம்.
கார்ப்பரேட் பாசிச பாஜக ஆட்சி ஒழிக!

Search