COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 15, 2018

பரியேறும் பெருமாள்

டி.குணசேகரன்

பரியேறும் பெருமாள் பார் போற்றும் பெருமாள் என்பதைவிட, மனதுக்குள் காலம் காலமாக பாரம் சுமப்பவர்கள் போற்றும் பெருமாள் என்பதில் அய்யமில்லை.
ஆயிரம் ஆயிரமாண்டுகளாக சாதியத்தால் கட்டப்பட்டுள்ள இந்த சமூகத்தை கேள்விக்குள்ளாக்கி நம்மை சிந்திக்க வைக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் பாராட்டப்பட வேண்டியவர். தமிழ்ச் சமூகத்தில் சாதிய வன்மத்துக்கு இரையான பல மனிதர்களின் துன்பத்தை எதார்த்த நிகழ்வுகளாக பரியேறும் பெருமாள் முன்னிறுத்துகிறான்.
தூத்துக்குடியின் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள புளியன்குளம் மற்றும் திருநெல்வேலி சட்டக் கல்லூரி பகுதிகளில் 2005ம் ஆண்டு வாக்கில் நிகழ்வுகள் நடப்பதாக படம் நகர்கிறது. பரியேறும் பெருமாள் கதையின் நாயகன் பரியன், தான் பாசமாக வளர்த்த கருப்பியை ஆதிக்க சாதியினர் சிலர் ரயில் தண்டவாளத்தில் கட்டிவைத்து சாகடிக்கும்போதும், பரியன் மற்றும் அவனது நண்பர்கள் தாங்கள் வளர்த்த நாய்களை குளிக்க வைக்கும் அந்த சிறிய குட்டையில் ஆதிக்க சாதியினர் சிறுநீர் கழிக்கும் போதும் படம் துவங்கும்போதே ஆதிக்க சாதி மனோபாவம் நம் நெஞ்சை பதற வைக்கிறது. சாகடிக்கப்பட்ட கருப்பிக்கு இறுதிச் சடங்கு நடத்துகிற பரியனின் துயரம் வார்த்தைகளில் அளந்துவிட முடியாததுதான்.
பரியன் சட்டக்கல்லூரியில் சேரும்போது சட்டக் கல்லூரி முதல்வரிடம் டாக்டர் அம்பேத்கர் போல் ஆவேன் என்று கூறுவது தன் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மாற்று என்ன என்பதை தெளிவாக உணர்ந்திருக்கும் ஒருவனது நம்பிக்கையாகவே உணர முடிகிறது.
கல்லூரியில் பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் வகுப்பு நடத்தும்போது தமிழ்வழியில் படித்த பரியன் தன் வகுப்பு மாணவ மாணவியர் முன்னிலையில் அவமானப்பட நேரிடும் காட்சிகள் நம்மை அவமானப்படுத்துவதாகவே உணர்வு தருகிறது.
இந்தச் சூழலில் அம்பாசமுத்திரம் மாணவி ஜோதி மகாலட்சுமி பரியனுக்கு அறிமுகமாகிறார். பரியனுடைய வெகுளித்தனமான பழக்கத்தில் ஜோதி தோழியாகி அவனுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறாள்.
பரியன் தனது 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வுகளில் காப்பி அடித்துத் தேர்ச்சி பெறுவதாக வரும் காட்சிகள் சமகாலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் நிலையையும் எடுத்துச் சொல்வதாக இருக்கிறது.
பரியனும் அவனது நண்பர்களும் நாயோடு சேர்ந்து நாய் மாதிரி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் காட்டுக்குள் இருக்கும் கோயில் உண்டியலை உடைத்து திருடியிருக்க வேண்டும் என்ற காவல்துறை அதிகாரியின் ஆணவப்பேச்சு தாழ்த்தப்பட்ட மக்களை எப்போதும் குற்றவாளிகளாகவே கருதும் மனோநிலை அது தரும் வேதனை எடுத்துச் சொல்லப்படுகிறது.
நீ வக்கீலாக வேண்டும், அப்போதுதான் ஊரார் மத்தியில் நெஞ்சு நிமிர்த்தி பேச முடியும் என்று சொல்லும் ஆர்.கே.ராஜா தாத்தாவின் வார்த்தைகள் அவரது கடந்தகால வலிகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
பரியனுக்கும் ஜோதிக்குமான பழக்க வழக்கம் எந்தவிதமான உணர்வு, எந்தவிதமான உறவு என பரியன் உணரும்முன்னரே, அவனை அறைக்குள் சிறைப்படுத்தி உள்ளமும் உடலும் உருக்குலைய வதைத்து, உடல் மேல் சிறுநீர் கழித்து சிறுமைப்படுத்தும் காட்சி மானமுள்ளவர்க்கு ரணவேதனை. நீயும் என் மகளும் ஒன்றா, இரண்டு பேரும் வேறு வேறு, உன்னை மட்டுமல்ல என் மகளையும் இவர்கள் கொன்று விடுவார்கள் என்று கூறும் ஜோதியின் தந்தை மாரிமுத்துவின் வார்த்தைகள் முந்தைய தலைமுறையினர் சாதிய சமூகத்திற்கு கட்டுப்பட்டு மிச்சசொச்சங்களை தாங்கி நிற்பதை போதுமான அளவுக்கு வெளிப்படுத்துகின்றன. கீழ்சாதி ஆணும், மேல்சாதி பெண்ணும் பழகுவது கூட இயற்கைக்கு முரணான ஒன்று என்றே நினைக்கத் தோன்றுகிறதோ சாதி ஆதிக்க சக்திகளுக்கு.
‘நான் யார்’ பாடலில் நீல நிறத்தை தாங்கி வரும் உயிர்கள் சாதி ஆதிக்கக் கொலையின் சாட்சியங்களாக தெரிகிறார்கள். தர்மபுரி இளவரசன், பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலா, மலக்குழியில் மூச்சை அடக்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் என  நினைவுகள் காட்சி படிமங்களாக நீண்டு கொண்டே செல்கின்றன.
பரியனிடம் நான் ஜாதி பார்த்தா பழகினேன், நீ என்ன காரணத்திற்கு அவனை (ஜோதியின் அண்ணனை) அடிச்சேன்னு சொல்லு, சரி என்றால் நானும் அடிக்கிறேன் யோகி பாபுவின் கோபம் பரியனுடனான நட்பின் வெளிப்பாடு.
மேஸ்திரி தாத்தா பரியனுடன் பேருந்தில் பயணிக்கும்போது, அவனது ஊர் புளியன்குளம் என தெரிந்ததும், எனக்கு கால் மூட்டுவலி, நீண்ட நேரம் உட்கார்ந்து வந்தேன் என்று எழுந்து நின்று கொள்வது என சிறு சிறு நகர்வுகளில் கூட சாதி ஆதிக்கம் செய்வதை நம்மால் உணர முடிகிறது வலியுடனே.
என் தந்தை செருப்பு தைப்பவர். அன்று என்னை அடக்க நினைத்தவர்கள் எல்லாம் இன்று என்னை அய்யா, சாமி என கும்பிடுகிறார்கள் என்று சட்டக் கல்லூரி முதல்வர் ராமு பரியனிடம் கூறுகையில் கல்வியின் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. அவர்கள் (சாதி இந்துக்கள்) எளிதில் திருந்தி விடப் போவதில்லை, அவர்களுக்கு நம்மால் எதுவும் சொல்ல முடியவில்லை, இவனுக்கு மட்டும் ஏன் சொல்ல வேண்டும், அறைக்குள் தற்கொலை செய்வதைவிட சண்டையிட்டு சாவதே மேல் என்று அவர் சொல்லும்போது எதார்த்தம் நம்மை சுடுகிறது. வட இந்தியாவில் ஆராய்ச்சி படிப்பதற்காக செல்லும் தமிழ்நாட்டு மாணவர்களின் தற்கொலைகள், நம் கண் முன் வந்து செல்கின்றன.
தெருக்கூத்து கலைஞரான பரியனின் தந்தை தங்கராஜை, தோழி ஜோதியின் அண்ணன் சங்கரலிங்கம் 9 (திருநங்கை) என்று சொல்லி அவனது நண்பர்களுடன் கல்லூரி வாசலில் அடித்து, ஆணா பெண்ணா என பார்க்க வேண்டுமென்று கூறி அவரது வேட்டியை உருவி நிர்வாணமாக சாலையில் துரத்தி கீழே தள்ளிவிடுவதை பார்க்கும்போது பரியனின் மனம் படும் துயரத்தை நாமும் சேர்ந்தே உணர்கிறோம்.
சாதி ஆதிக்கக் கொலைகளை செய்வதை குலதெய்வத்துக்காக செய்யும் வேலை எனக் கூறும் மேஸ்திரி தாத்தா போன்றவர்களை, மவுனமாக, எதுவும் செய்ய இயலாத, கையறு நிலையில் நாம் எதார்த்தத்திலும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
மருத்துவமனையில் பரியனை சந்திக்கும் தோழி ஜோதி சாதிய வன்மம் அறியா காதலில் கண்ணை மூடிக்கொண்டு அவள் பேசுகையில் பரியனின் கண்களில் மட்டுமல்ல நம் கண்களிலும் கண்ணீர் துளிகள். ஆம், சாதி சதியால் காதலர்களைக் கொல்லும். ஆனால் காதல் சாதியை வெல்லும். 
நீங்க நீங்களா இருக்கற வரைக்கும் நீங்க எங்கள நாயா நெனைக்கற வரைக்கும் எதுவுமே மாறாது என்று சொல்லும் வாய்ப்பு, பரியனும் ஜோதியின் தந்தை மாரிமுத்துவும் மனம் விட்டுப் பேசும் அந்தச் சூழல் திரைப்படத்தில் மட்டுமே பரியனுக்கு கிடைத்த வாய்ப்பு. ஆனால், எதார்த்தத்தில் பரியன் வாழும் சமூகத்தில் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. மனம் விட்டுப் பேசினால் மாற்றம் வரும், அதற்கும் காலம் பதில் சொல்லும், நேரம் வரும் என முடிவை நம் கைகளில் தந்துவிடுகிறார்கள்.
சாதிய ஏற்றத்தாழ்வுகளை, சாதிய வன்மத்தை மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சமூகம் எதிர்வினை ஆற்றினால் மட்டுமே பரியேறும் பெருமாள். 

Search