COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 31, 2018

தொழிலாளர் சட்டங்கள்
இப்படியும் திருத்தப்படலாம்

விருப்பங்களே குதிரைகளாக இருந்தால் என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அவற்றின் மீது ஏறி பறந்து விரும்பியதை எட்டி விடலாம்.
இந்தியாவில், தமிழ்நாட்டின் தொழில் பகுதிகளில் தொழிலாளர் போராட்டங்கள் தொடரும் இந்தச் சூழலில், அய்க்கிய அமெரிக்காவில் தொழிலாளர் போராட்டங்கள், புதிதாக முன் வைக்கப்படுகிற தொழிலாளர் சட்ட மசோதாகள் ஆகியவற்றைப் பொருத்திப் பார்த்தால், விருப்பங்கள் குதிரைகளாக வாய்ப்பிருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
அய்க்கிய அமெரிக்காவில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து பல்வேறு மாகாணங்களின் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட் டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது ஊதியம் அவர்களது குறைந்தபட்ச கவுரவமான வாழ்க்கையை உத்தரவாதம் செய்யவில்லை என்றும் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற இரண்டாவது வேலைக்குச் செல்ல நேர்வதாகவும் கல்விக்கு கூடுதல் ஒதுக்கீடு வேண்டும் என்றும் போர்க் குரல் எழுப்பினார்கள். இந்த ஆசிரியர்களில் பலர் ஆசிரியர் பணியை விரும்பிச் செய்பவர்கள். பல மாகாணங்களில் வேலை நிறுத்தத்துக்கு சட்டரீதியான தடை இருக்கிறது. அந்தத் தடை அவர்கள் போராட்டங்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. போராடும் தொழிலாளர்கள் தங்கள் பாதுகாப்புக்கு சட்டங்கள் உள்ளனவா என்றெல்லாம் பார்த்துக் கொண்டு போராடுவதில்லை, அதற்கு சட்டங்கள் இருந்தால் நல்லது என்கிறார் சியாட்டில் பல்கலை கழக பேராசிரியர் ஒருவர்.
இந்தப் போராட்டப் பின்னணியில் பணியிட ஜனநாயகச் சட்டம் இயற்றுவதற்காக ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சங்கம் அமைத்ததற்காக தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யும் நிர்வாகங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டம் இது. ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரிக்கு எதிராக போட்டியிட்ட பெர்னி சான்டர்ஸ் அய்க்கிய அமெரிக்க செனட்டில் முன்வைத்துள்ளார். இந்த மசோதா தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் முறையை எளிதாக்குகிறது. சங்கம் அமைக்க தொழிலாளர்களின் கையொப்பம் இருந்தால் போதுமானது. சங்கம் கோரிக்கை சாசனம் கொடுத்த பத்து நாட்களில் பேச்சுவார்த்தைகள் துவங்க வேண்டும். 90 நாட்களில் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரவில்லை என்றால் அரசு தலையிடும். சங்க நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களை பழிவாங்கும் நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், தங்கள் நிர்வாகத்தின் சப்ளையர்கள், நிதியுதவி செய்யும் நிறுவனங்களை முற்றுகையிடலாம். முன்பு இது தடை செய்யப்பட்டிருந்தது.
நவதாராளவாதக் கொள்கைகளின் ஆட்சி பீடத்தில் இந்த மசோதா தாக்குப்பிடித்து நின்று நிறைவேறி அமலாகுமா என்பது அடுத்தடுத்த கேள்வி. முதலில், இன்றைய போராட்டச் சூழலில் இப்படி ஒரு மசோதா அய்க்கிய அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதே பெரிய விசயம்தான்.
பெர்னி சான்டர்ஸ் முயற்சியில் ஸ்டாப் பெசோஸ் ஆக்ட் என்று ஒரு மசோதாவும், ரோ கன்னா என்ற செனட்டரின் ஆதரவுடன் செனட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது. மசோதாவும் அதன் பெயரும் உருவான பின்னணியும் சுவாரசியமானவை.
அய்க்கிய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பணக்காரர் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். உலகம் முழுவதும் 5.5 லட்சம் தொழிலாளர்களும் அய்க்கிய அமெரிக்காவில் 2 லட்சம் தொழிலாளர்களும் கொண்ட நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு ரூ.70 லட்சம் கோடி. நாளொன்றுக்கு அது 260 மில்லியன் டாலர் (ரூ.1,820 கோடி) அதிகரிக்கிறது. (2018 - 2019 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.24 லட்சம் கோடிதான்). ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற வகையில் ஆண்டொன்றில் 16.8 லட்சம் டாலர், வெறும் ரூ.11.76 கோடி, வருமானமாக எடுத்துக் கொள்கிறார்.
பணத்தில் புரளும் ஜெப் பெசோஸ் தனது தொழிலாளர்களுக்கு சராசரி ஆண்டு வருமானமாக 28,446 டாலர், கிட்டத்தட்ட ரூ.20 லட் சம் தருகிறார். அய்க்கிய அமெரிக்க வறுமைக் கோட்டு வரம்புக்கு மிக அருகில் இருக்கும் வருமானம் இது. எனவே அமேசான் தொழிலாளர்கள், உணவு உள்ளிட்ட தங்கள் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட அரசின் நலத் திட்டங்களையே சார்ந்திருக்கிறார்கள். அரசு சலுகைகளை அனுபவிக்கும் அமேசான் நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான கூலி கூட தருவதில்லை. மூன்றில் ஒரு அமேசான் தொழிலாளி உணவுக்கு ரேசனை நம்பியிருக்கிறார். இந்த விவரங்கள் ஆறு மாகாணங்களில் இருந்து கிடைத்துள்ளன. மெக்டொனால்ட் மற்றும் வால்மார்ட் தொழிலாளர்கள் இந்தப் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் இருக்கிறார்கள்.
40 சத அய்க்கிய அமெரிக்க குடும்பங்கள் உணவு, மருத்துவம், வீட்டு வாடகை, மற்றும் பிற அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத வறுமையில் இருப்பதாக அர்பன் இன்ஸ்டியுட் சர்வேயில் 2017ல் தெரிய வந்தது.
அமேசான் தொழிலாளர்களுடன் ஜ÷லை மாதம் பெர்னி சான்டர்ஸ் ஒரு கூட்டம் நடத்தினார். ஆகஸ்ட் மாதத்தில் இணையப் பக்கம் ஒன்றைத் துவங்கி அதில் அமேசான் தொழிலாளர்களை, தங்கள் கருத்துகளை தெரிவிக்கச் சொன்னார். கூடுதல் சம்பளம் கோரும் மனுவில் 1 லட்சம் பேர் கையெழுத்திட்டனர். ஸ்டாப் பெசோஸ் ஆக்ட் கொண்டு வர செப்டம்பரில் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாப் பேட் எம்ப்ளாயர்ஸ் பை ஜீரோயிங் அவுட் சப்சிடீஸ் ஆக்ட். சுருக்கமாக ஸ்டாப் பெசோஸ் ஆக்ட். நற்ர்ல் ஆஹக் உம்ல்ப்ர்ஹ்ங்ழ்ள் க்ஷஹ் ழங்ழ்ர்ண்ய்ஞ் ஞன்ற் நன்க்ஷள்ண்க்ண்ங்ள் அஸ்ரீற் (“நற்ர்ல் ஆஉழஞந”) மானியங்கள் தருவதை வெட்டி மோசமான முதலாளிகளை தடுத்து நிறுத்தும் சட்டம். பெசோசை தடுத்து நிறுத்தும் சட்டம் என்று சுருக்கமாக சட்டம் அழைக்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின்படி, வேலை செய்து பெறும் ஊதியம் கட்டுப்படியாகாமல் அரசின் சலுகைகளைப் பெறும் தொழிலாளர்களின் முதலாளிகளுக்கு, அந்தத் தொழிலாளர்கள் பெறும் சலுகைகளுக்கு, பொது விநியோகம், மருத்துவம், பள்ளிகளில் மதிய உணவு, வீட்டு வசதி என அனைத்துக்கும் ஈடான தொகை சிறப்பு வரியாக போடப்படும். நிரந்தரம் மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் எல்லாம் சேர்த்து 500க்கும் மேல் தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் பெருநிறுவனங்கள், அமேசான், வால்மார்ட், மெக்டொனால்ட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போன்ற பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள் இது போன்ற ஒரு சிறப்பு வரியை செலுத்த வேண்டியிருக்கும். இல்லையென்றால், இந்த நிறுவனங்கள், அரசின் திட்டங்கள் எதற்கும் தகுதி பெறாத அளவுக்கு கூடுதல் கூலியை தொழிலாளர்களுக்குத் தர வேண்டும்.
பறித்தெடுத்தல் மூலம் மூலதனக் குவிப்பு நடக்கும் இன்றைய நவதாராளவாதச் சூழலில், அரசாங்கங்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் சாமான்ய மக்களுக்குத் தருவது, மிகப் பொருத்தமான உதாரணம் என்றால், ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் போன்றவை, உண்மையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மான்யமே தவிர மக்களுக்கு அளிக்கப்படுபவை அல்ல என்று சொல்லி வருகிறோம். அய்க்கிய அமெரிக்காவில் வறுமையும் வருமான ஏற்றத்தாழ்வும் கூர்மையடையும்போது, இன்றைய மானியங்களின் அடிப்படை தன்மை என்ன என்பது பளிச்சென கண்ணுக்குத் தெரிகிறது.
கொஞ்சமும் தாமதமின்றி, கார்ப்பரேட் ஆதரவு கருத்துகளும் ஆடத் துவங்கிவிட்டன. இப்படிச் சட்டம் போட்டால், வேலை வாய்ப்பு பாதிக்கப்படும், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லத் துவங்கிவிட்டார்கள். அய்க்கிய அமெரிக்காவில் மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் நடக்கிற இந்தப் போராட்டம் 2020 அதிபர் தேர்தல்களை தீர்மானிக்கும் போராட்டமாக மாறுவதை அய்க்கிய அமெரிக்காவின் தொழிலாளர்கள் உறுதி செய்வார்களா?
தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் இப்படியும் இருக்கலாம், மோடி அவர்களே!

Search