COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 15, 2018

மக்கள் விரோத மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 
ரெட் அலர்ட், சிவப்பு எச்சரிக்கை விடுக்கிறது!

(அக்டோபர் 9 தோழர் நாகபூஷன் நினைவு நாளில் சீர்காழியில் நடந்த தோழர் பக்ஷியின் புகழஞ்சலி கூட்டத்தில் இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரையில் இருந்து. தொகுப்பு: தேசிகன்)


தோழர்களுக்கு வணக்கம்.

இன்று தமிழ்நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி ஆகிய பண்டிகைகள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. கோவையில் இதற்காக பணம் வசூலிப்பதில் தகராறு, கொலை என்ற அளவிற்கு போயிருக்கிறது. நெல்லையில் தாமிரபரணி புஷ்கரனம் என சொல்கிறார்கள். 
தமிழ்நாட்டின் டெல்டா, சவுக்கடிக்கும், சாணிப்பாலுக்கும், செங்கொடி முற்றுப்புள்ளி வைத்த பூமி. ஸ்ரீரெங்கநாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வாய்கொண்டு பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழகத்தின் பொன்னாள் என அன்று பேச முடிந்தது. ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே, தேரோட்டம் ஏனடா தியாகராஜா என்று கேட்க முடிந்தது. இன்று தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பெரிய அளவில் இல்லை. பாஜக பெரிய செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வேறு வேறு இந்துத்துவ அமைப்புகள் பெரிதாக இல்லை.  ஆனால் ஆர்எஸ்எஸ்சின் கரங்கள் அரசாங்கத்தின் மீது படர்ந்திருக்கின்றன.
ஓபிஎஸ்சும் தினகரனும் சந்தித்தார்களா, இல்லையா என்பது தமிழக அரசியலில் பெரிய  பிரச்சனை என்பதுபோல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரெட் அலர்ட் காரணம் காட்டி இடைத் தேர்தல் இல்லை என்றாகிவிட்டது.
மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மக்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். தமிழ்நாட்டின் ஆட்சி யாளர்கள் சூறையாடல், ஒடுக்குமுறை ஊழல் ஆகியவற்றால், மக்கள் விரோத நடவடிக்கைகளால் தமிழக மக்களிடம் இருந்து தனிமைப்பட்டுள்ளார்கள். இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட யாரும் இந்த அளவுக்கு மக்களிடம் இருந்து தனிமைப்பட்டதில்லை.
அதனால்தான் வானிலை மய்ய இயக்குநர் மற்றும் மாநில அரசின் தலைமைச் செயலாளர் மூலம் தமிழ்நாட்டு வானிலைக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்து, பிறகு, வானிலை காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர், இடைத்தேர்தல்களை தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதுகிறார்கள். தேர்தல் ஆணையமும் தேர்தலை தள்ளி வைக்கிறது. மாநில உரிமைகளை, தமிழக மக்கள் நலன்களை மத்திய மோடி ஆட்சிக்கு அடகு வைத்துவிட்ட தமிழ்நாட்டின் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்கள் வானிலையை காரணம் காட்டி தற்காலிகமாக மட்டுமே தப்பித்துள்ளனர்.
இந்தச் சூழலில் தோழர் நாக்பூஷன் நினைவு நாளான இன்று தோழர் பக்ஷிக்கு புகழஞ்சலி கூட்டத்தை மாநில ஊழியர் கூட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இன்று சே குவேராவின் நினைவுநாளும் கூட. சே குவோராவின் படம் உள்ள சட்டைகளை உலகெங்கும் உள்ள இளைஞர்கள் அணிந்து வருகிறார்கள். அது யார், என்ன என்று தெரியாதவர்கள் கூட அணிகிறார்கள். ஆண்கள் அணிகிறார்கள். இளம்பெண்கள் அணிகிறார்கள். புதிய தலைமுறையினர் சே குவேரா சட்டை அணிகிறார்கள்.
பக்ஷி வங்கத்தில் இருந்து வந்தார். நாகபூஷன் ஒடிஷாவில் இருந்து வந்தார். சே குவேரா நாடு விட்டு நாடு போனார். உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள், நாம் இழப்பதற்கு ஏதுமில்லை, பெறுவதற்கோ ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு அர்ஜென்டினாவில் பிறந்த சே குவேரா, மருத்துவராக இருந்த சே குவேரா, கியூபாவுக்கு வந்தார். அவன் வாழ்ந்தான். அவன் மடிந்தான். எப்படி வாழ்வது என்று கற்றுத் தந்தான். எப்படி சாவது என்றும் கற்றுத்தந்தான். அதனால்தான் உலகம் முழுவதும் இருக்கிற மக்களோடு, இளைஞர்களோடு இன்றும் சே குவேரா சேர்ந்து பயணம் போய்க் கொண்டிருக்கிறான்.
சே குவேரா கியூபா போனார். அங்கு புரட்சி முடிந்தது. சே குவேரா கியூபாவின் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அறிவிக்கப்படுகிறார். நாணயத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் கையெழுத்திடுவார்கள். சே குவேரா சே என்று கையெழுத்திடுகிறார்.  புனை பெயரில் கையெழுத்திடுவது உலகத்தில் வேறு எங்கும் இல்லாத வழக்கம். ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட சே குவேராவுக்கு உழைப்பின் கவுரவம் தெரியும். அதுதான் உலகில் தலைசிறந்தது என்று அவனுக்குத் தெரியும். உழைப்பு மதிக்கப்படவில்லை என்றால், ஒரு சமூகம் சமூகமாக இருக்கத் தகுதியில்லாத சமூகம். புரட்சியின் தலைவரான சே குவேராவை, ரிசர்வ் வங்கி ஆளுநரான சே குவேராவை, நீதான் தலைவன் என்று அந்தச் சமூகம் போற்றி மகிழ்கிறது. அவன் என்ன செய்கிறான்? மூட்டை தூக்குகிறான். அது மூட்டை தூக்குவது மட்டுமல்ல. மூட்டை தூக்கும் உடல் வலிமை எனக்கு இருக்கிறது என்பதைச் சொல்வதற்காக மட்டுமல்ல. உழைப்பின் கவுரவத்தைச் சொல்வதற் காக. ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, கியூபப் புரட்சி எல்லாம் உழைப்பின் மேன்மையை போற்றுபவை என்பதை தனது செயல் மூலம் காட்டினார். அதன் பிறகு ஆப்பிரிக்காவுக்குப் போகிறார். மக்கள் விடுதலைப் போராட்டத் தில் ஈடுபடுகிறார். பிறகு தென்அமெரிக்காவுக்குப் போகிறார்.
அய்க்கிய அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஅய்ஏ பொலிவியாவில் அவரை படுகொலை செய்கிறது. அவர் உடலைக் கூட மக்கள் பார்வையில் இருந்து மறைக்கிறது. அவரது உடலை மறைக்க முடிந்ததே தவிர அவரது உணர்வை மக்களிடம் இருந்து பிரிக்க முடியவில்லை. அவரது உணர்வு அன்று முதல் இன்று வரை மக்கள் மத்தியில் பரவியிருக்கிறது. அதனால்தான், இறவாப் புகழ் பெற்றவராக சே இன்றும் இருக்கிறார். சேயின் புகழ் முடிவிலியாக இருக்கிறது.
தோழர் நாகபூஷன். அந்த நாளில் மீரட் சதி வழக்கு என்றார்கள். அன்று கம்யூனிஸ்டுகளை சதி வழக்குகளில் வேட்டையாடினார்கள். தோழர் நாகபூஷன் மீது பார்வதிபுரம் கொலை வழக்கு இருந்தது. தோழர் நாகபூஷன் ஒடிஷா, ஆந்திரா எல்லைப் பகுதிகளில் விவசாயிகளின் போராட்டங்களை கட்டமைத்தார்.
நாம் நக்சல்பாரியில் பிறந்தோம். நக்சல்பாரியில் இருந்து வளர்ந்தோம். ஸ்ரீகாகுளம் வந்தோம். இந்தியா முழுவதும் வந்தோம். இரண்டு விதங்களில் நாம் நக்சல்பாரியை தாண்டியும் வளர்ந்துவிட்டோம்.
நேரடி ஆயுத மோதல், அரிவாள் சுத்தியல் சண்டை, புரட்சி செய்வோம், அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்ற நிலை இருந்ததாகக் கருதியதால் அன்று ஆயுதப் போராட்டம் தேவைப்பட்டது. அந்த நக்சல்பாரி உணர்வு, பெருமிதம், பாரம்பரியம் அவற்றை நாம் என் றென்றும் உயர்த்திப் பிடிக்கிறோம். அதைவிட வரலாற்றுச் சிறப்பு மிக்க வழி ஒன்று அன்று இல்லை. அதை விட சிறந்த பாரம்பரியம் இன்று இல்லை. நாம் ரத்தம் சிந்தி, லட்சக்கணக்கானவர்கள் சிறை சென்று, நமது தோழர்கள் உயிர்த் தியாகம் செய்து உருவாக்கப்பட்ட பாரம்பரியம் அது.
உலகம் முழுவதும் சக்திகளின் சமனிலை மாறுகிறது, இந்தியாவில் சக்திகளின் சமனிலை மாறுகிறது, அரசியல் வெறும் உணர்வெழுச்சி தொடர்பானது அல்ல. அரசியல் என்பது சக்திகளின் சமனிலை தொடர்பானது. இந்தியப் புரட்சியில் நேரடியாக அதே பாதையில் தொடர்ந்தால் முடியாது என்பது கட்சிக்குப் புரிகிறது. தோழர் வினோத் மிஸ்ரா இருபதாவது நினைவுநாள் டிசம்பர் 18 வருகிறது. கட்சியின் மத்திய கமிட்டி அந்த நேரத்தில் கூடுகிறது. தோழர் வினோத் மிஸ்ரா ஒரு மாறிச் செல்லும் கட்டத்தில் கட்சியை வழிநடத்தினார்.
நேரடியாக ஆயுதப் போராட்டம், நேரடியாக புரட்சி என்பதில் இருந்து புரட்சிக்கான நீண்டகால தயாரிப்பு என்பதை நோக்கி கட்சியை நகர்த்த வேண்டிய அவசியம் வருகிறது. இந்த கம்யூனிஸ்ட் பணி மிகமிகக் கடினமானது. புரட்சிகரமான நிலைமைகள் இல்லாதபோது,  புரட்சியாளர்களாக இருப்பது மிகமிகக் கடினமானது. இந்தப் பணிக்கு தோழர் வினோத் மிஸ்ரா வழிநடத்துகிறார். இந்த இரண்டு கால கட்டங்களுக்குமான இணைப்பு கண்ணியாக தோழர் நாகபூஷன் இருக்கிறார். வரலாற்றை நினைவு கூரும்போது இந்த கேந்திரமான அரசியல் பாடங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தோழர் நாகபூஷன் பார்வதிபுரம் சதி வழக்கை எதிர்கொண்டார். அன்றும் இன்றும் நக்சல்பாரி மரபுக்குச் சொந்தக்காரரான அவர் நாம் உருவாக்கிய இந்திய மக்கள் முன்னணியின் தேசியத் தலைவரானார். கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. அது போக ஒரு மக்கள் முன்னணி உருவாக்குகிறோம். பலவிதமான சக்திகளோடு உறவாட வேண்டும் என்ற தேவை எழுகிறது. அந்தத் தேவையை அவசியத்தை நிறைவு செய்கிற இடத்தில் தோழர் நாகபூஷன் இருந்தார். வாழ்விலும் சாவிலும் நான் கட்சிக்கானவன்; மக்களுக்கானவன் என்றார் நாகபூஷன். அப்படித்தான் வாழ்ந்தார். அப்படித்தான் மடிந்தார்.
தோழர் பக்ஷி. புரட்சிகரமான நிலைமைகள் இல்லாதபோது, ஒரு புரட்சியாளனாக செயல்படுவது எப்படி என்று தோழர் பக்ஷியிடம் கற்றுக் கொள்ளலாம். அதிர்ந்து பேசாதவர். அதிகாரத்துவ தொனியில் பேசாதவர். தோழர்களின் நற்பண்புகளை, உயர்வான அம்சங்களை, பலங்களை உருட்டித் திரட்டி அமைப்பு நோக்கி வழிநடத்துபவர். அவர் சிஸ்டம் பில்டர். இன்ஸ்டிடியுஷன் பில்டர். ஆர்கனைசேஷன் பில்டர். பத்திரிகை பில்டர். தமிழ்நாட்டில் நிறுவனங்கள், அமைப்புகள், முறைமைகள், பத்திரிகை ஆகியவை எல்லாம் நிறுவப்பட்டுள்ளன என்றால் எல்லாவற்றிலும் தோழர் பக்ஷி அவர்களே, உங்களுடைய பங்கு இருக்கிறது. இந்த மாநில ஊழியர் கூட்டம் வழியாக உங்களுக்கு எங்களது புகழஞ்சலியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் இன்று கட்சி வலுப்பெற்றுள்ளது என்றால், நாமும் கணக்கில் கொள்ளப் படுகிறோம், மதிக்கப்படுகிறோம் என்றால் அந்த மதிப்புக்குப் பின்னால் தோழர் பக்ஷியின் கடுமையான உழைப்பும் வழிகாட்டுதலும் உள்ளன. தோழர் பக்ஷிக்கு நாம் செலுத்துகிற அஞ்சலி அடுத்தடுத்த கடமைகளை நிறைவேற்றுவதில் இருக்கிறது.
காத்திருக்கிற கடமைகள் என்ன?
முதலாளித்துவ வளர்ச்சியை காண முடியாத அளவுக்கு நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் இருப்பதாக ரஷ்யா பற்றி லெனின் சொல்கிறார். புரட்சி வெல்ல வேண்டும் என்றால், நிலவுகிற பொருளாதார அமைப்பை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய முதலாளித்துவத்துக்கு வளர்ச்சியின்மை ஒரு பிரச்சனை. வளர்ச்சி ஒரு பிரச்சனை. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகிலேயே நான்காவது, மூன்றாவது இடங்களுக்கு இந்தியா மிக விரைவில் போய்விடும் என்று சொல்கிறார்கள். சீனம் இருக்கிறது. அய்க்கிய அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு பிற நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்தியா வந்துவிடும் என்கிறார்கள்.
எட்டு வழிச்சாலைக்கு அவர்கள் சொல் லும் முக்கியமான தர்க்கம் என்ன? வாகனங்கள் ஓடுகிற நேரம் குறையும். பயண நேரம் குறை யும். இந்தியா இஸ் ஆன் தி மூவ், தமிழ்நாடு இஸ் ஆன் தி மூவ் என்று முதலாளித்துவம் சொல்கிறது. இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது; தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. மூவிங் ஆன் வீல்ஸ். இந்த மூவ்மென்ட், இயக்கம் அந்தச் சக்கரங்களில் இருக்கிறது.
உலகம் முழுவதும் மேனுபேக்சரிங்கை, உற்பத்தித் துறையை உந்தித் தள்ளும் முக்கியமான தொழில் ஆட்டோமொபைல். அய்க்கிய அமெரிக்கா தொழில்துறையில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக அறியப்பட்டது என்றால் அதற்குக் காரணம் ஃபோர்ட். ஜெனரல் மோட்டார்ஸ். கிரைஸ்லர். இன்று தமிழ்நாட்டில், சென்னையைச் சுற்றியிருக்கிற பகுதிகளில் மட்டும் அய்க்கிய அமெரிக்க நிறுவனமான போர்ட் இருக்கிறது; தென்கொரிய நிறுவனமான ஹ÷ண்டாய் இருக்கிறது; ஜெர்மனியின் பிஎம்டபிள்யு இருக்கிறது; பிரான்சின் ரேனோ நிசான் இருக்கிறது; மிட்சுபிஷி, யமஹா என ஜப்பானிய நிறுவனங்கள் இருக்கின்றன; அப்போலோ டயர்ஸ், ராயல் என்பீல்ட் என இந்திய நிறுவனங்கள் இருக்கின்றன.
உலகம் முழுவதும் உள்ள மிகப் பெரிய ஆட்டோ உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும் உற்பத்தி மய்யங்கள் கொண்டுள்ளன. தமிழ்நாட்டின் வருங்கால அரசியல், அரசியல் பொருளாதாரம் தொடர்பாக நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் இந்த நிறுவனங்களை ஒட்டி உள்ளன. தமிழ்நாட்டு மக்கள் மீது இரட்டை நுகத்தடி சுமத்தப்பட்டுள்ளது. ஒன்று பரவி வருகிற, தீவிரமடைந்து வருகிற, மக்களை வாட்டி வதைக்கிற விவசாய நெருக்கடி. மற்றொன்று வேலையின்மை.
இளைய சமூகத்துக்கு வேலை இல்லை, உனக்கு எதிர்காலமே இல்லை என்று சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள். கிராமப்புறங்களில் வாழ முடியாமல் வெளியேற்றப்படுபவர்களுக்கு உழைத்துப் பிழைக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறது வேலையின்மை.
மறுபக்கம் தமிழ்நாட்டில் உள்ள கார் உற்பத்தி ஆலைகளில் இருபது வினாடிகளில் ஒரு கார் தயாராகிறது. ஒரு நிமிடத்தில் மூன்று கார்கள் உற்பத்தியாகின்றன. 90 வினாடிகளில் ஒரு வர்த்தக வாகனம் தயாராகிறது. 2 நிமிடங்களில் ஒரு ட்ரக் தயாராகிறது. ஒரு வினாடியில் ஆறு மோட்டார் பைக்குகள் தயாராகின்றன.
அதனால்தான் பிரிக்கால் போராட்டம் வருகிறது. யமஹா போராட்டம் வருகிறது. என்பீல்ட், அப்போலோ போன்ற நிறுவனங்களின் தொழிலாளர்கள் போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் இனி வரும் காலங்கள் போராட்ட காலங்கள். கடலுள்ள வரை அலை இருக்கும். வர்க்கங்கள் உள்ள வரை வர்க்க மோதல், வர்க்கப் போராட்டம் இருக்கும். வர்க்கப் போராட்டம் நாம் விரும்பி நடப்பதோ, நடக்காமல் இருப்பதோ அல்ல. அது நமக்கு அப்பாற்பட்டு இந்த சமூகத்தில் நிலவுவது. இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
மூத்த வழக்கறிஞர் ரவீந்திரனை, நீங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாக வேண்டும் என்று நீதிபதிகள் அழைத்தார்கள். மூத்த வழக்கறிஞரான அவர் நீதிபதி பதவி வேண்டாம் என்றார். அவரது நேர்காணல் ஆங்கில இந்து நாளேட்டில் வெளியாகி இருந்தது. சாரமான பிரச்சனைகள் என்ன என்று கேட்கிறார்கள். நிர்வாகங்களாக எங்களுக்கு இதுதான் சம்பளம் என்று சொல்வதை நிரந்தரத் தொழிலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அவர்கள் ஃபேர் வேஜஸ், நியாயமான சம்பளம் கோருகிறார்கள். பாமரத்தனமாகச் சொல்வதானால் மாதம் ரூ.50,000, ரூ.60,000 சம்பளம் வேண்டும் என்கிறார்கள். இது இயல்பாக, ஆட்டோமேடிக்காக நடக்க வேண்டும் என்கிறார்கள். முதலாளிகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதியாக வேண்டும் என்று வலியுறுத்தும் ஒரு வழக்கறிஞர், பிரிக்கால் வழக்கில் கூட நமக்கு எதிராக வழக்காடியவர், நிரந்தரத் தொழிலாளர்கள் இயல்பாக, ஆட்டோமேடிக்காக ஃபேர் வேஜஸ் கோருகிறார்கள் என்கிறார்.
பயிற்சித் தொழிலாளர், நிரந்தரமற்ற பிற வகை தொழிலாளர் அனைவரும் ஆண்டுக்கணக்கில் வேலை பார்க்கிறோம், ஆனால் நிரந்தரமாக நிரந்தரமற்றவர்களாக இருக்கிறோம், வேலைகள் நிரந்தரம், அவற்றில், வேலை பார்க்கும் நாம் நிரந்தரமில்லை என்று ஏங்கித் தவிப்பதனால் வெளித்தலைமையை நாடுகிறார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளம், பணி நிரந்தரம் தந்து, உற்பத்தித் திறன் வாங்கிக் கொள் என்று ஓர் அறிவுரை சொல்கிறார் முதலாளிகளுக்காக வழக்குகள் நடத்தும் வழக்கறிஞர் ரவீந்திரன்.
விவசாய நெருக்கடி, வேலையின்மை ஆகியவற்றுக்கு முதலாளித்துவ, வலதுசாரி பதில் வினை ஒன்று வருகிறது. இடதுசாரி பதில் வினை வேண்டும். தமிழ்நாட்டில் தொழிலக நிலையாணகள் சட்டத்துக்கு ஒரு திருத்தச் சட்டம் வந்ததென்றால், அதன் விளைவால், பதிலி, தற்காலிக, தற்செயல், தகுதிகாண் பருவநிலை, பயிற்சித் தொழிலாளி என நிரந்தரமற்ற தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட, நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கையில் குறிப் பிட்ட சதத்தில்தான் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்று சட்டத்தை உருவாக்குவதில், அதற்கான கதவுகளை திறப்பதில் ஏஅய்சிசிடியுவுக்கு, புரட்சிகர இளைஞர் கழகத்துக்கு, இககமாலெவுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது.
திருத்தச் சட்டத்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசு சில கேள்விகள் எழுப்பியது. ஒப்புதல் கேட்டு ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு பதில் எழுத வேண்டும். ஜெயலலிதா அரசாங்கம் சார்பாக மத்திய அரசுக்கு தரப்பட்ட பதிலில் நம் கருத்து வெளிப்பட்டுள்ளது. 2008ல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு 2016 ஜ÷ன் மாதம்தான் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தது. அநியாயம். தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநில அரசுகள் கொண்டு வந்த போது, இரண்டே மாதங்களில் அவற்றுக்கு ஒப்புதல் தரப்பட்டது. ஆனால், பல லட்சம் தொழிலாளர்கள் நலன் காக்கும் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் தருவது எட்டு ஆண்டுகள் தாமதமாக்கப்பட்டது. திருத்தங்களுக்கு விதிகள் இயற்றுவது பற்றி மய்ய தொழிற்சங்கங்களை அழைத்து பேசிவிட்டு, உறுதி தந்து விட்டு, பிறகு மய்ய தொழிற்சங்கங்களுக்கு எந்த தகவலும் அறிவிப்பும் தராமல் நீதிமன்றத்தில் மாற்றிச் சொல்கிறார்கள். இப்போது திருத்தம் அமல்படுத்தப்பட வேண்டுமானால் விதிகள் இயற்றப்பட வேண்டும். பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது.
இந்தப் பின்னணியில் லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், திருச்சி பெல் என எல்லா பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள், கிராமப்புற நெருக்கடியால் கிராமப்புறங்களில் இருந்து வீசியெறியப்படுகிற நாம் எங்கே போகிறோம்? ஒப்பந்தத் தொழிலாளியாகிறோம். உபரி மக்கள் தொகையின் ஒரு பகுதியாக மாறுகிறோம். இதுதானே மார்க்சியம் சொல்லும் அரசியல் பொருளாதாரம். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. சட்டம் அமலாகவில்லை. இந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு, அவற்றை முன்னிறுத்துகிற போராட்டத்துக்கு முக்கியத்துவம், புரொபைல், தோற்றம் ஆகிருதி உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் அக்டோபர் 22 முதல் பட்டினிப் போராட்டம் நடக்கவுள்ளது.
நமது ஒப்பற்ற தோழர் டிகேஎஸ் ஜனார்த்தனன், அவரது அந்திம காலத்தில் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோது, சென்னைக்கோ, கோவைக்கோ வந்து விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் தொழிலாளர் வர்க்க வேலைகள் பார்க்கலாம் என்று அழைத்தபோது, கிராமப்புற வேலைகள், விவசாய மக்கள் மத்தியிலான வேலைகள் ஆகியவற்றில் இருந்து விலகி வர உறுதியாக மறுத்துவிட்டார். அவரது நினைவு நாளான அக்டோபர் 27 அன்று அவர் இறுதி வரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த பகுதியான கும்பகோணத்தில் அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் முதல் மாநில மாநாட்டை நடத்தவுள்ளோம். மொத்த கட்சியும் இந்த மாநாட்டின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்.
டிசம்பர் 25 வெண்மணி நினைவு நாள். அந்த நாளை அனுசரிப்பது சடங்கு அல்ல. அது, கிராமப்புற வறியவர்கள், உழைக்கிற விவசாயத் தொழிலாளர்கள் அரசியல் அறுதியிடல் தொடர்பானது. இந்த சமூகத்தில் எனக்கு என்ன இடம் என்று கிராமப்புற வறியவர்கள் கேட்பது தொடர்பானது. அவிகிதொசவை அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கிற அமைப்பாக, சட்டையைப் பிடித்து நியாயம் கேட்கிற அமைப்பாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பது நோக்கி அதன் மாநில மாநாட்டை நடத்துகிறோம். அதை வெற்றிகரமாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
இந்தக் கடமைகள் எல்லாம் மனதில் இருக்கும்போது, நாம் தொடர்ச்சியாக முயற்சி எடுத்து, தொடர்ச்சியாக போராடி நமது போராட்டங்களின் விளைவாக வந்த ஒரு சட்டத் திருத்தம் செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்புகள் தெரிகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நாமும் ஒரு வழக்கு போட உள்ளோம்.
பிரிக்கால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அய்ம்பது நாட்கள் தாண்டிவிட்டது. மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் இடையிலான அந்தப் போராட்டத்தில் வைராக்கியமாக நின்று களமாடிக் கொண்டிருக்கிறோம். அந்தப் போராட்டத்திற்கு உற்சாகம் தரவும் நிரந்தரமற்றோர் நலன் காக்கும் போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவும் செல்வாக்கும் பெறவும் அக்டோபர் 22 அன்று கோவையில் பிரிக்கால் தொழிற்சங்க அலுவலகத்தில் மாதிரி நிலையாணைகளுக்கு விதிகள் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எனது தலைமையில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் துவங்கவுள்ளோம்.
விதிகள் கொண்டு வர வாய்ப்பு தெரிகிறது. இதற்காக அக்டோபர் 12, 13, 14 தேதிகளில் கோவை முதல் திருபெரும்புதூர் வரை வாகனப் பிரச்சாரம் நடத்தவுள்ளோம்.
இவை அடிப்படையான, முக்கியமான நமது சொந்த நிகழ்ச்சிநிரல். அவற்றின் மீது நமது கவனம் குவிக்கப்படுவது மிகமிக இயல்பானது. அவசியமானது. இந்தக் கடமைகளை எடுத்துச் செல்வதற்கான அழைப்பு விடுவதற்கும் இந்தக் கூட்டம் ஒரு வாய்ப்பாக மாறியிருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் வரவுள்ள இந்த கடமைகளை நிறைவேற்ற நாம் தயாராக வேண்டியுள்ளது.
இறுதியாக ஒரு விசயம். புதிய புதிய சொல்லாடல்கள் வருகின்றன. ஃபேக் நியூஸ், பொய்ச் செய்தி என்று சொல்கிறார்கள். டொனால்ட் ட்ரம்ப் வருகைக்குப் பிறகு வருகிற சொல்லாடல் இது. போஸ்ட் ட்ரூத். உண்மைக்குப் பிந்தைய விசயங்கள். இவை எல்லாமே கட்டுக்கதைகள். நியு நார்மல். புதிய சகஜ நிலை. அவசரநிலை அறிவிக்காமலேயே அவசரநிலை நிலைமைகளை உருவாக்குவது.
இந்த அவை, பெருமையோடு கவனத்தில் கொள்ளலாம். தொழிலாளர்களை நோக்கிச் செல்லுங்கள், விவசாயிகளை நோக்கிச் செல்லுங்கள் என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்த, தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல ஆட்கள் வந்தபோது, சற்று பொறுங்கள், ஒரு புரட்சியாளனோடு இன்னொரு புரட்சியாளன் உரையாடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்ன, புரட்சியாளன் பகத்சிங் பிறந்த நாளில் அவனது வாரிசுகள், நமது தோழர்கள் 48 பேர் தமிழக தொழிலாளர் கோரிக்கையை முன்னிறுத்தியதால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அக்டோபர் 1 வரை சிறையில் அடைக்கப்பட்டார்கள். முதலமைச்சரிடம் மனுக் கொடுக்கச் சென்றவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக அரசு.
கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட தோழர்கள் சொல்கிறார்கள். புழல் சிறையில் 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களில் பலர் கைகளை, கால்களை காவல் துறையினர் உடைத்திருக்கிறார்கள். யார் தந்தது இந்த அதிகாரம்? ஒரு பக்கம் சிறையில் தொலைக்காட்சி வைத்திருக்கிறார்கள், வேறு வேறு வசதிகள் அனுபவிக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. தலித் பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மத்தியில் இருந்து வறிய மக்கள்தான் புழல் சிறையில் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களில் கணிசமானவர்களுக்குத்தான் இப்படி நடந்துள்ளது. இது அரச வன்முறை. சீருடை அணிந்த வன்முறை. அதிகார வன்முறை.
இன்னொரு பக்கம் பாசிச கும்பல்களின் வன்முறை. அது இசுலாமியர்களை, தலித்துகளை குறி வைக்கிறது. பெண்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது.
இது இன்றைய இந்தியாவின் புதிய சகஜ நிலை.
மதன் பி.லோகுர், உச்சநீதிமன்றத்தில் ரஞ்சன் கோகாய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி. அவர் முன்பு ஒரு வழக்கு வருகிறது. மணிப்பூரில் எக்ஸ்ட்ரா ஜ÷டிசியல் கில்லிங்ஸ், சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள், நீதிபரிபாலனத்துக்கு அப்பால் நடத்தப்படும் படுகொலைகள் பற்றி விசாரணை வேண்டும் என்று, மோதல் படுகொலைகளில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அமைப்பு ஒரு வழக்கு போடுகிறது. 1,579 பேர் மோதல் படுகொலைகளில் கொல்லப்பட்டுள்ளார்கள். வழக்கு மத்திய புலனாய்வு துறையின் சிறப்பு விசாரணைக்கு (எஸ்அய்டி) அனுப்பப்படுகிறது. இரண்டு குற்றப்பத்திரிகைகள் முன்வைக்கப்படுகின்றன. படுகொலை செய்ததாக, சாட்சியங்களை அழிக்க முற்பட்டதாக 14 பேர் மீது வழக்கு போடப்படுகிறது. நீதிமன்றத்துக்கு வந்த சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மாவிடம், மணிப்பூரின் இம்பால் நகரில், நீங்கள் கொலை வழக்கு போட்ட 14 பேர் சுதந்திரமாகத் திரிகிறார்களே, அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று மதன் பி லோகுர் கேட்கிறார்.
இந்தக் கேள்விக்கு பதிலாக, அந்த 14 பேர் சிறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் முறையிடுகிறார்கள். எங்களால் பணியாற்ற முடிய வில்லை, எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் எங்களுக்கு படுகொலை செய்ய, பாலியல் வன்முறையில் ஈடுபட, சூறையாட உரிமை இருக்கிறது என்கிறார்கள். மத்திய அரசு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள்.
ரஞ்சன் கோகாய் இப்போது புதிய தலைமை நீதிபதி. ஒடிஷாவில் ஒரு பத்திரிகையாளர் மூடநம்பிக்கைக்கு எதிராக கேலியாக கட்டுரை எழுதுகிறார். அவர் இரண்டு சமூகங்களுக்கு இடையில் பகை உருவாக்கப் பார்க்கிறார் என்று அவரை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, முன்பிணை கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்கிறார். வழக்கு உச்சநீதிமன்றம் வரை வருகிறது. அவர் உயிருக்கு ஆபத்து என்று நீதிமன்றத்தில் முறையிடுகிறார். இந்தியாவின் தலைமை நீதிபதி, அவர் உயிருக்கு ஆபத்து என்றால் அவர் சிறையில் இருப்பதுதான் பாதுகாப்பு என்று சொல்கிறார்.
நாம் வாழ்கிற காலங்கள் எப்படி இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள இது ஓர் எடுத்துக்காட்டு. அப்படியானால், மோடி ஆட்சியில், பழனிச்சாமி ஆட்சியில், பிற மாநிலங்களில் நடக்கிற ஆட்சிகளில், குடிமக்களுக்கு, கேள்வி கேட்பவர்களுக்கு, மாற்றுக் கருத்து சொல்பவர்களுக்கு, இந்த அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களுக்கு சிறையில்தான் இடம், அங்கு தான் பாதுகாப்பு, வெளியில் பாதுகாப்பு கிடையாது என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே சொல்கிறார். இதுதான் புதிய சகஜ நிலை.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, எட்டு வழிச்சாலை எதிர்ப்புக்கு ஒடுக்குமுறை, எதிர்த்துப்  பேசாதே, கேள்வி கேட் காதே, அடங்கிப் போ, ஒடுங்கி இரு என்று சொல்வதுதான் புதிய சகஜ நிலை.
நாம் ஒரு புதிய சகஜ நிலையை உருவாக்க வேண்டும். போராடத் தயார், ரத்தம் சிந்தத் தயார், சிறை செல்லத் தயார், உயிர்விடத் தயார் என்று முழக்கங்கள் எழுப்பும் நாம், இந்த முழக்கங்களுக்கு செயல்வடிவம் தந்தாக வேண்டிய நேரம் இது.
தோழர் பக்ஷி மிக முக்கியமாக ஒன்று சொன்னார்: பாட்டாளி வர்க்க அரசியல் வலுப்பெற வேண்டும் என்றால், அதற்கென்று ஓர் அடித்தளம் வேண்டும். அடித்தளம் தானாக வராது. மக்கள் மத்தியில் கடுமையான கருத்து, அரசியல், அமைப்பு பணி அதற்கு தேவை. ஊழியர்களை வளர்த்தெடுக்க வேண் டும். அமைப்புப் பணியாற்றுவது, பல்லாயிரக் கணக்கானவர்களை திரட்டுவது, கற்பது, தெரிந்து கொள்வது, இற்றைப்படுத்திக் கொள் வது, அனைத்துக்கும் மேலாக, மக்கள் மத்தியில் பணியாற்ற நேரம் செலவழிப்பது, இவை அவசியம். எமக்குத் தொழில் கவிதை என்றான் பாரதி. தோழர் பக்ஷி எமக்குத் தொழில் புரட்சி என்று வாழ்ந்தார்.
புரட்சியாளர்கள் என்றால் அவர்கள் அன்எம்ப்ளாய்ட் பீப்பிள் அல்ல. அவர்கள் எப்போதும் புரட்சிக்கான தயாரிப்பில் ஈடுபடுபவர்கள். தோழர் பக்ஷி முனகிக் கொண்டிருக்க மாட்டார். புலம்பிக் கொண்டிருக்க மாட்டார். அவர் விளைவுகள் கொண்டு வர பணியாற்றினார். எடுத்த முடிவுகளை அமலாக்க பொறுப்பேற்றார். இருக்கிற நிலைமைகளில் மாற்றம் கொண்டு வர பணியாற்றினார். நமக்கு வசதியான நிலைமைகள் கிடைக்காது இந்த சமூகத்தில் இன்று உள்ள பாட்டாளி வர்க்கம், இந்தக் கட்சியில் இருக்கிற ஊழியர்கள், இவர்களைக் கொண்டுதான் வேலை செய்ய வேண்டும். இந்த வேலையைச் செய்வதில், நம் நேரத்தை பயனுள்ள விதத்தில், பொறுப்பான விதத்தில், புரட்சிகரமான விதத்தில் எப்படி செலவழிக்கப் போகிறோம் என்பது தொடர்பாக தோழர் பக்ஷியின் இந்த அஞ்சலி கூட்டத்தில் நாம் உறுதியேற்க வேண்டும்.
ஆளும் வர்க்கம் ஒரு புதிய சகஜ நிலை கொண்டு வரும் என்றால், நாம் மக்கள் நலனில் இருந்து ஒரு புதிய சகஜ நிலையை உருவாக்க வேண்டும். அதற்கான தேவை, அவசியம் இந்தச் சூழலில் உருவாகியுள்ளது. வருகிற காலங்கள் போராட்டங்களின் காலங்கள். இந்தப் போராட்டங்களில் நாம் முன்னணியில் இருக்க வேண்டும். திரும்பத் திரும்ப சிறைக்குச் செல்வது, திரும்பத் திரும்ப கைது செய்யப்படுவது, தாக்குதலுக்கு, பொய் வழக்கு களுக்கு ஆளாவது என்பதை நமது கட்சி வாழ்க்கையின் புதிய சகஜ நிலையாக மாற வேண்டும். அப்படி மாற்றுவதற்காக தோழர் பக்ஷி புகழஞ்சலி கூட்டத்தில் நாம் உறுதியேற்க வேண்டும்.
இந்திய வானிலை மய்யம் சொன்ன ரெட் அலர்ட் போய்விட்டது. பருவநிலையில் முன்னேற்றம் என்று சொல்லிவிட்டார்கள். மக்கள் விரோத மோடி அரசாங்கத்துக்கும் பழனிச்சாமி அரசாங்கத்துக்கும், உழைக்கும் மக்கள் சார்பாக, செங்கொடி இயக்கத்தின் சார்பாக நாம் ரெட் அலர்ட் விடுப்போம்.
மக்கள் விரோத ஆட்சியாளர்களே, உங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. இதற்காக களப்பணியாற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டும் அதன் வெகுமக்கள் அமைப்புகளும் தயாராக உள்ளன.

Search