COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 31, 2018

அழியாப் புகழ்கொண்ட பாதை உமது பாதை!

புதிய புரட்சிகர அரசு, போரை நிறுத்தும் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, ‘யுத்தம் முடிந்தது, யுத்தம் முடிந்தது’ எனத் தொழிலாளர்கள், போர்வீரர்கள் விவசாயிகள் அனைவரும், முகம் ஒளிர ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டார்கள்.
சுதந்திரத்திற்காக உயிர் நீத்தோரை நினைவு கூர்வோம் என ஒரு குரல் ஒலித்தவுடன், வெற்றியை முழங்கும், அதே நேரம் அடிமேல் அடி வைத்துச் செல்லும் அந்தத் துயரார்ந்த பாடலை, அவை முழுதும், உணர்ச்சிப் பெருக்கோடு பாடியது.
வெஞ்சமரில் உயிர் நீத்தீர்
வீரத் தியாகிகளாய், மக்கள்தம் விடுதலைக்காக,
மக்கள்தம் மானம் காக்க..........
இன்னுயிர் ஈந்தீர், உயிரனையவை யாவும் ஈந்தீர்; 
கொடுஞ்சிறையில் வதைபட்டீர்,
கொடுமைக்கோர் அளவில்லை,
கடுங்காவல் கைதிகளாய்ச் சங்கிலிகளில்
தொலைவிடங்கள் சென்றீர்......
சங்கிலி சுமந்து உடல் வருந்தினீர்,
உள்ளம் வருந்தவில்லை,
பட்டினியில் வதைந்த உம் சோதரரையே
உள்ளத்தில் நினைத்திருந்தீர்;
ஒடுக்குவோரின் வாள் வீழ்ந்துபடும்,
நீதி வெல்லுமென அஞ்சாது நின்றீர்.......
நீவிர் ஈந்த இன்னுயிரின் வெற்றி நாள்
இதோ வருகிறது;
கொடுங்கோன்மை தகர்ந்து விழும், தளையறுந்து
பேருருவினராய் எழுவர் மக்கள்!
சென்று வருக சோதரர்காள்! அழியாப் புகழ்கொண்ட
பாதை உமது பாதை!
புதுப்படை வருகிறது உமைத் தொடர்ந்து,
சாவுக்கு அஞ்சாத படை......
சென்று வருக சோதரர்காள்! அழியாப் புகழ்கொண்ட
பாதை உமது பாதை!
சூளுரைக்கிறோம் உமது சமாதியில், விடுதலைக்காக,
மக்கள்தம் இன்ப வாழ்வுக்காக,
போராட, பாடுபட சபதம், ஏற்கிறோம்....
(ஜான் ரீட், உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்)

Search