ஜார்க்கண்ட்
மக்கள் போராட்டக் களங்களில் மாலெ கட்சி
நவம்பர் 16 2011 முதல், ஜனவரி 16 2012 வரை மாலெ கட்சி ஜார்க்கண்ட் மாநிலம் நெடுக, பெருமுதலாளித்துவச் சூறையாடலுக்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு எதிராக, மக்கள் உரிமைகளுக்காக, ஒரு மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறது.
நவம்பர் 17, 2011 அன்று, கிரிடி மாவட்ட ராஜ்தன்வாரிலும், டிசம்பர் 14, 2011 அன்று கர் வாவிலும் டிசம்பர் 19, 2011 அன்று தியோரியிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட பேரணிகள் நடத்தப்பட்டன. கிரிதி மாவட்டத்தில் பகோதர், ராஜ்தன்வார், ஜமுவா, காண்டே சட்டமன்ற தொகுதிகளில் மாலெ கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர் வினோத் சிங்கும் கட்சி முன்னணிகளும் கலந்து கொண்ட பாத யாத்திரைகள் டிசம்பர் 25, 2011 முதல், ஜனவரி 10, 2012 வரை நடைபெற்றன. ஒரு நாளில் 10 மணி நேரம் கூட நடந்தனர். கூட்டங்களில் மக்கள் ஆயிரங்களில் திரண்டனர். செங்கொடிகள் காற்றில் படபடக்க, பாதயாத்திரை மக்களின் திருவிழா ஆனது.
மக்கள் போராட்டங்களையும் மாலெ கட்சியையும் ஒடுக்கச் சதி ஒரு மருத்துவ நிலையத்தை, ஒப்பந்தக்காரர்கள் விரும்பும் இடத்தில் இல்லாமல் மக்களுக்குத் தேவைப்படும் இடத்தில் நிறுவ வேண்டும் என, கார்வா மாவட்டம், பண்டாரியா ஒன்றியம், பர்கா கிராமத்தில், இககமாலெ ஊராட்சித் தலைவர் தோழர் ராம்தாஸ் மின்ஸ் தலைமையில் 21.01.2012 அன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் ஒன்றிய வளர்ச்சி அலுவலர் தங்களைச் சந்திக்க வரட்டும் என்றார்கள். அவரோடு காவல்துறையினரும் போராட்ட இடத்துக்கு விரைந்தனர். கட்சியின் ஜில்லா பரிசத் தலைவர் தோழர் சுஷ்மாவும் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் அக்தர் அன்சாரியும் அதே இடத்தை நோக்கிப் புறப்பட்டனர்.
போகிற வழியில் மாவோயிஸ்டுகள் கண்ணி வெடித் தாக்குதல் நடத்தியதில் 13 காவலர்கள் மற்றும் பகுதி காவல்நிலைய ஆய்வாளர் கொல்லப்பட்டனர். ஒன்றிய வளர்ச்சி அலுவலக வாகனமும் தோழர் சுஷ்மா வாகனமும் தப்பின. மாவோயிஸ்டுகள் தோழர் சுஷ்மாவையும் அவரோடு இருந்தவர்களையும் கடத்திச் சென்றனர். வாகனத்தில இருந்த இருவர் தலித்துகள்; இருவர் இசுலாமியர்கள். இவர்களைத்தான் மாவோயிஸ்டுகள் சமூக நீதிக் கரிசனத்துடன் கடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலக் காவல்துறை மாவோயிஸ்ட் தாக்குதலில் மாலெ கட்சிக்கு தொடர்பிருக்கிறது என அவதூறு பரப்பி கட்சியினரை வேட்டையாடத் துவங்கியுள்ளது. மாலெ கட்சி உடந்தை என்றால், மாவோயிஸ்ட்கள் தோழர்கள் சுஷ்மாவையும் அக்தரையும் ஏன் கடத்த வேண்டும் என்ற சங்கடமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கடத்தல் சம்பவத்தையே மறைக்கப் பார்த்தனர்.
இந்த கடத்தல் சம்பவம் மாவோயிஸ்ட்களின் அராஜகவாத ராணுவ நடவடிக்கைகளுக்கு இன்னும் ஓர் உதாராணம். மாலெ கட்சி தலைமையிலான மக்கள் போராட்டங்களை ஒடுக்க, ஜார்க்கண்ட் மாநில அரசு கண்ணி வெடிச் சம்பவத்தை பயன்படுத்தப் பார்க்கிறது. இந்த முயற்சிகள், மக்களைத் திரட்டி முறியடிக்கப்படும். தோழர் பகத்சிங் நினைவு நாளில் மக்கள் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் உறுதியேற்க, கொடர்மாவில் கட்சியின் மாநில மாநாடு நடைபெறும்.
(காவல்துறை பாதுகாவலர் தவிர, மற்றவர்களை மாவோயிஸ்டுகள் சில தினங்களுக்குப் பின் விடுவித்துவிட்டனர். வழக்கம் போல், ஊடகங்கள் மூலம் பேரம் பேசுகின்றனர்.)
கே.ஜி.தேசிகன்
QQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQ
ஜார்கண்ட் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மாலெ கட்சியை தொடர்புபடுத்தும் சதியை இகக(மாலெ) கண்டிக்கிறது!
கைது செய்யப்பட்டுள்ள இகக(மாலெ) செயல்வீரர்களை விடுதலை செய்!
மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டுள்ள இகக(மாலெ) தலைவர்களை
பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடு!
QQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQ