ஜெ அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மாற்றம் கொண்டு வராது
ஜி.ரமேஷ்
ஒழுங்கா சிகிச்சை தரமாட்டாங்க. பணத்தை மட்டும் நல்லா கறந்துடுவாங்க. போட்டது சரிதான். மருத்துவர்கள் வேலை
நிறுத்தத்தில் ஈடுபடலாமா? அரசாங்க
டாக்டரை தனியாக மருவத்துவமனை நடத்த
அனுமதிக்கக் கூடாது. டாக்டர் என்ன செய்ய
முடியும். மருத்துவர்களும் மனிதர்கள்தானே.
- இப்படி பல விவாதங்கள், தூத்துக்குடி
மருத்துவர் சேதுலட்சுமியின் படுகொலையைத்
தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டதற்குப் பின்னர் பக்கம் பக்கமாக
பத்திரிகைகளிலும் முகநூலிலும் ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன.
அடிப்படைக் காரணங்கள் பற்றி பேசாமல்
மேம்போக்கான விவாதங்கள் திட்டமிட்டே
கட்டமைக்கப்படுகின்றன.
மருத்துவர்கள் எந்த நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கடமைப்பட்டுள்ளார்கள். அதனால்தான் அரசு மருத்துவர்கள்
தாங்கள் பணியில் இல்லாதபோதும் தன்னை
நாடி வரும் நோயாளிகளுக்கு அவசரத்திற்கு
சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அநேக மருத்துவர்களுக்கு அவசரத் தேவைக்கு
கொடுக்கப்பட்ட பணி நிரந்தரமானதாகவும்
நிரந்தர சேவைப்பணி அவசரமானதாகவும்
இன்றைக்கு மாற்றப்பட்டுவிட்டது. இதற்கு
யார் பொறுப்பு?
பெரிய டாக்டராக வேண்டும். இஞ்சினியர் ஆக வேண்டும். கலெக்டெர் ஆக வேண்டும். இதுதான் பள்ளிக்குப் போகும் குழந்தைகளிடம் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் விதைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக
பெரிய என்கிற வார்த்தைக்கு பெருமளவில்
பணம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான்
பொருள்படுத்தப்படுகிறது. ஒரு சேகுவோராவையோ ஒரு பினாயக் சென்னையோ ஒரு
தத்தா சமந்த்தையோ ஒரு முத்துலட்சுமி ரெட்டியையோ டாக்டர்களுக்கு முன்னுதாரனமாக
எவரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அதே
நேரம் மருத்துவராக வேண்டும் என்று கனவு காணும் எல்லா குழந்தைகளுக்கும் மருத்துவப்
படிப்பு படிக்க வாய்ப்பும் கிடைப்பதில்லை.
இன்று நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளைக் காட்டிலும் தனியார் மருத்துவக்
கல்லூரிகளே அதிகம். ஆந்திராவில் 14 அரசு
மருத்துவக் கல்லூரிகளும் 23 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. கர்நாடகாவில்
24 மருத்துவக் கல்லூரிகளில் 14க்கு மேல்
தனியார் கல்லூரிகள். இந்தியாவிலேயே
அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ள தமிழ்நாட்டில் 40 மருத்துவக் கல்லூரிகளில் 14 மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகள். மீதம்
உள்ள 26ம் தனியார் கல்லூரிகள். இன்னும் 9 மருத்துவக் கல்லூரிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆக, தனியார் கல்லூரிகளில்
இருந்துதான் அதிகமான மருத்துவர்கள் வெளிவருகிறார்கள். இந்தக் கல்லூரிகளில் பல
லட்சங்களில்தான் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றன. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் பரிந்துரைக்காக
பணம் கொடுக்க வேண்டும். பெரும் செல்வந்தர்களும் ஏற்கனவே மருத்துவமனை வைத்து
நடத்திக் கொண்டிருப்பவர்களும் தங்கள்
வாரிசுகளை எப்படியாவது இக்கல்லூரிகள்
மூலம் மருத்துவர்கள் ஆக்கி விடுகிறார்கள். விளைவு கல்லூரியில் இருந்து வெளியே வருபவர்கள் நல்ல மருத்துவர்கள் என்பதற்கு மாறாக
நல்ல தொழிலதிபர்களாக மாறிவிடுகிறார்கள்.
இன்னொருபுறம் நாட்டில் உள்ள பெரிய மருத்துவமனைகள் எல்லாம் பாலி கிளினிக்குகள், மருத்துவ ஆராய்ச்சிக் கூடங்கள் என்ற
பெயரில் மருத்துவம் படிக்காத பணக்காரர்களாலும் கார்ப்பரேட் நிறுவனங்களாலும்தான்
நடத்தப்படுகின்றன. அம் மருத்துவமனைகளில்
சில மருத்துவர்கள் பங்குதாரர்களாகவும் பல
மருத்துவர்கள் சம்பளத்திற்கு பணி செய்பவர்களாகவுமே உள்ளார்கள். இந்த மருத்துவமனைகளுக்கு லாபம் ஒன்றே குறிக்கோள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது
போல் என்ன செய்தால் காசு பார்க்கலாம்
என்பதுதான் இவர்களின் நடைமுறை. அதனால்தான் கொல்கத்தாவின் அம்ரி தனியார்
மருத்துவமனையில் அடித்தளத்தில் விதிகளுக்குப் புறம்பாக எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்தபோது, உடன் தீயணைப்பு
படைக்கு செய்தி சொல்லாமல் தங்கள் தவறை
மறைக்கவே முயற்சி செய்தார்கள். இதனால்
90க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோனார்கள். பல தனியார் நிறுவனங்களில் மருந்தால்
மட்டுமே குணப்படுத்தக் கூடிய நோய்களுக்கு
தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். வெளி நோயாளிகளாக சிகிச்சை
செய்ய வேண்டியவர்களை உள் நோயாளிகளாக படுக்க வைத்து பணம் பார்க்கிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளில் இப்படி
என்றால், அரசு மருத்துவமனைகள், அரசு சுகாதார மய்யங்களில் தரமான மருத்துவம், சிகிச்சை தருவதற்கு அரசு தயாராக இல்லை. அரசாங்க மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்கûளை, ஊழியர்களை, மருந்து மாத்திரைகளை தேவையான அளவிற்கு அரசு கொடுப்பதில்லை. அதற்கான
நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை. அமைச்சரைக்
கொண்டு அழகாக போஸ் கொடுத்து அதிநவீன
கருவிகளை அரசாங்க ஆஸ்பத்திரிகளில் திறந்து
வைப்பதோடு சரி. அவை ஒழுங்காக இயங்குகிறதா? தேவைக்கு ஏற்ப இருக்கிறதா? இயங்குகிறதா? இவற்றைப் பார்ப்பதில்லை. உதாரணத்திற்கு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் இருக்கும் ஸ்கேன் சென்டர் அந்த மருத்துவமனையின் தலைவர்
கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக, அது தமிழ்நாடு அரசு மருத்துவக் கழகம் என்ற துறையின்
கட்டுப்பாட்டில் உள்ளது. ஆபத்தான நிலையில்
அடிபட்டு வருபவருக்கு ஸ்கேன் எடுக்க
மருத்துவமனை டீனே சொன்னாலும் அதில் உள்ள ஊழியர்கள் வருவதில்லை. காரணம்
அவர்கள் வேறு துறையின் கீழ் உள்ளார்கள். அப்படியே ஆட்கள் இருந்தாலும் கூட நாட்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டும். ஆயிரக்கணக்கானோர் வரும் மருத்துவமனைக்கு ஒரே
ஒரு ஸ்கேன் மட்டுமே உள்ளது. அதுவும் பழுதாகிவிட்டால்.. சொல்லவே தேவையில்லை. இப்படி அரசாங்க மருத்துவமனைக்குள்ளேயே
ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியாக
ஒப்பந்தகாரர்களிடமோ வேறு துறையின்
கீழோ பிரித்துக் கொடுத்துவிட்டு ஒருங்கிணைந்த மருத்துவம் என்பது மக்களுக்கு கிட்டாமலே செய்துவிடுகிறார்கள். த/அ மாத்திரைகள் என்றாலே தரம் அற்றது. தலை
எழுத்து அவ்வளவுதான் என்று அர்த்தப்படுத்த
வேண்டியுள்ளது. ஜெயலலிதாவின் முதல்
ஆட்சியில் இன்பசாகரன் மருந்து மாத்திரைகளில் செய்த ஊழல் காரணமாக அவர் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட
தொடர்ந்து வந்த ஆட்சிகளில் மருந்து, மாத்திரை, சிகிச்சையில் எவ்வித மாற்றங்களும்
ஏற்படவில்லை. இதுபோன்றவற்றால் அரசாங்க
மருத்துவமனையையே நம்பி இருக்கும்
அடித்தட்டு உழைக்கும் மக்களும் வேறுவழியில்லாமல் தனியார் மருத்துவமனை நோக்கி
திட்டமிட்டு தள்ளப்படுகிறார்கள். கடன்பட்டு
சிகிச்சை எடுத்து கடைசியில் பலன் இல்லாமல்
போகும்போது மருத்துவத்தைப் பற்றிய குறைந்தபட்ச அறிவு இல்லாத பாதிக்கப்பட்டவர்களால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றன.
இதற்குக் காரணம் இந்த ஆட்சியாளர்களும் அவர்களின் தனியார்மயக் கொள்கைகளுமே. அரசாங்கம் திட்டமிட்டு மருத்துவச்
சேவையை தனியார் கைகளில் ஒப்படைத்து
வியாபாரமாக்கி வருகிறது. பாரதிய ஜனதா
கட்சி ஆட்சியின் போது சுகாதாரத் துறை
அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், அரசாங்கமே அனைவருக்கும் மருத்துவ வசதி
செய்து கொடுக்க வேண்டும் என்பது சாத்தியப்படாத ஒன்று என்று வெளிப்படையாகவே
கூறினார். நம் ஆட்சியாளர்களுக்கு மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்கு எந்தளவிற்கு ரேசன்
கடைகள் தேவைப்படுகிறதோ அந்தளவிற்கு
மட்டும்தான் அரசாங்க மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படு
கின்றன.
ஆந்திராவில் ராஜ சேகர ரெட்டி ஆட்சிக்கு விவசாயிகள் தற்கொலைகள் காரணமாக
பெருமளவில் நெருக்கடி ஏற்பட்டது. ஜெயதி
கோஷ் கமிட்டியால் சுட்டிக்காட்டப்பட்ட
பொதுச் சுகாதாரச் சீரழிவு மற்றும் சத்துணவின்மை போன்றவற்றிற்கு உடனடி தீர்வு
காண வலியுறுத்தியது. குறிப்பாக ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் தர வலியுறுத்தியது.
உடனே, ரெட்டி அடிப்படையான
பொதுச் சுகாதாரம், சத்துணவு ஆகியவற்றை
விட்டுவிட்டு ஏழை மக்களைத் திசை திருப்ப
ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தை ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின்
மூலம் அமல்படுத்தினார். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களில் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குக் குறைவாக உள்ளவர்களுக்கு இத் திட்டத்தின் மூலம் பயன்
பெறலாம் என்றார்கள். பெரிய கார்ப்பரேட்
மருத்துவமனைகள், 50 படுக்கைகள் கொண்ட
தனியார் மருத்துவமனைகள், மருத்துக் கல்லூரி
மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் இக் காப்பீட்டுத்
திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என
அறிவிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.
அறுவை சிகிச்சை, லேப்ராக்ஸ்கோப்பி
போன்றவற்றிற்குத்தான் காப்பீட்டுத் தொகை
வழங்கப்படும் என்றபடியால், வாயுத் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கும் தேவையே
இல்லாமல் குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் 2010ல் எடுத்த சர்வேயில் ஆரோக்கியஸ்ரீ
திட்டத்தின் கீழ் பெரிய நகரங்களில் உள்ள
பல மருத்துவமனைகளில் பணத்திற்காக கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத்
திட்டத்தால் தனியார் காப்பீட்டு நிறுவனமான
ஸ்டார் ஹெல்த் நிறுவனமும் பல தனியார்
மருத்துவமனைகளுமே பெரும்பயன் பெற்றன.
தனியார் மருத்துவமனையில் எடுத்துக்
கொண்ட சிகிச்சைக்கு மட்டுமே காப்பீட்டு
நிறுவனம் பணம் கொடுக்க முன்வந்தது. இந்த
ஆரோக்கியஸ்ரீ திட்டத்தினை மக்களிடம்
எடுத்துச் சொல்வதற்காக ஆரோக்கியமித்ரா
எனும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில்
அமர்த்தப்பட்டார்கள். ஆரோக்கியமித்ராக்கள்
ஆரம்ப சுகாதார மய்யங்களுக்கும் அரசு மருத்துவமனைகளுக்கும் ஆரோக்கியஸ்ரீ திட்டத்தில்
பயன் பெற வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்குத் திருப்பிவிட்டார்கள்.
தமிழ்நாட்டிலும்கூட இதே ஸ்டார்
ஹெல்த் நிறுவனத்தின் மூலம் கலைஞர்
காப்பீட்டுத் திட்டம் கடந்த ஆட்சியின்போது
அமல்படுத்தப்பட்டது. அதில் பயனடைந்தவர்கள் தனியார் நிறுவனங்களே. இந்தக்
காப்பீட்டுத் திட்டத்தால் சாதாரணமக்களுக்கு
பயன் இல்லை. அரசு மருத்துவமனைகளை
மேம்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளிலேயே எல்லா மருத்துவ வசதிகளும்
கிடைக்கச் செய்ய வேண்டும் என சோசலிசவாதி போல் பேசி ஆட்சியைக் கைப்பற்றினார்
ஜெயலலிதா. இப்போது அவரும் முதலமைச்சர்
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என முன்பு
இருந்ததையே சற்று விரிவுபடுத்தி அறிவித்துள்ளார். கருணாநிதிகூட இதைப் பாராட்டுகிறார். ஆனால் இது புதிய மொந்தையில் பழையகள்ளு. அவ்வளவுதான்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இது
போன்ற காப்பீட்டுத் திட்டத்தில் கூட ஆண்டு
வருமானம் ரூ.2 லட்சம் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதாவின்
திட்டத்தில் பயனாளிகளின் ஆண்டு வருமானம்
ரூ
72,000த்திற்குக் குறைவாக இருக்க
வேண்டுமாம். அதாவது மாத வருமானம் ரூ
6000த்திற்கு கீழ் இருந்தால் மட்டுமே இதன்
மூலம் பலனைப் பெற முடியும். அப்படி என்றால் ரூ.6000த்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு நோய் வராது. அறுவை சிகிசைகள்
தேவைப்படாது என்கிறாரா?
மேலும் 2011 ஜøலை மாதம் ஜெயலலிதா
இத்திட்டத்தைப் பற்றி அறிவித்தபோது அரசு
மருத்துவமனைகளுக்கு மட்டும் பொருந்தும்
என்று அறிவித்தார். ஆனால், தற்போது தனியார் மருத்துவமனைகளும் இத்திட்டத்தில்
சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 950 வியாதிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம்
என்று சொல்லப்பட்டுள்ளது. நோய்களின்
எண்ணிக்கை கூடக்கூட மருத்துவமனையின்
வருமானம் கூடும்.
ஸ்டார் ஹெல்த் என்கிற தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்குப் பதிலாக பொதுத் துறை
நிறுவனமான யுனைட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திடம்தானே இது கொடுக்கப்பட்டுள்ளது என சிலர் வாதிடுகிறார்கள். காப்பீட்டு நிறுவனம் வேண்டுமானால் பொதுத்
துறையாக இருக்கலாம். ஆனால் பயன் பெறப்போவது தனியார் மருத்துவமனைகளே. அரசு மருத்துவமனைகளில் உள்ள அநியாயங்களுக்கு
அஞ்சி இப்போதும் மக்கள் தனியார் மருத்துவமனைகளையே நாடுவார்கள். அது மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளில் முதலில்
சேர்ந்தவுடன் பணம் கட்டிவிடுங்கள் காப்பீடு
பணம் வந்தவுடன் சரி செய்து கொள்ளலாம்
என்பார்கள். காப்பீட்டு நிறுவனம் இந்த
சிகிச்சைக்கு இவ்வளவுதான் என்று நிர்ணயித்து
வைத்துக் கொண்டு அதை மட்டுமே வழங்குவார்கள். அந்தத் தொகை நோயாளி சிகிச்சைக்கு செலவு செய்ததைவிடக் குறைவாகவே
இருக்கும். நோயாளி கடன் வாங்கி கட்டிய
பணமும் காப்பீட்டுப் பணமும் சேர்ந்து
தனியார், கார்ப்பரேட் மருத்துவமனை நிர்வாகங்களுக்குப் போய்விடும்.
மக்கள் வரிப்பணம் அரசாங்கத்தின் மூலம்
காப்பீட்டு நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டு
அப்புறம் சிகிச்சைக்கான செலவு என்ற பெயரில்
கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு கைமாற்றப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சில ஆரம்ப
சுகாதார மய்யங்களை, அரசு மருத்துவமனைகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்க
பரிந்துரைகள் செய்யப்படுகின்றன. நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளை நோக்கிப்போகச் செய்வதன் மூலம் அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். இதன் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு புதிய நோய்கள் பற்றிய அறிவு கிடைக்காமல் செய்து, உயர்தர படிப்பும் கூட தனியார் மருத்துவக் கல்லூரிகளில்தான் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கப் பார்க்கிறது அரசு. இவையெல்லாம்
மறைமுகமாக கார்ப்பரேட் நிறுவனங்களைக்
கொழுக்கச் செய்யும் நடவடிக்கைகளே.
மக்கள் நல அரசு என்று தம்பட்டம் அடிக்கும் ஜெயலலிதா அரசு மருத்துவமனைகளில்
மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க
புதிதாக 835 மருத்துவர்களை மாதம் ரூ.37,500 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்
போகிறதாம். அவர்களுக்கு வேறு எந்த சட்ட
சலுகைகளும் கிடையாது. அய்ந்தாண்டுகள்
பதவியில் இருந்து கொள்ளை அடித்து சொத்து
சேர்த்துக் கொள்ளும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கூட ஓய்வூதியம் வழங்கப்படும்போது பல ஆயிரங்கள் செலவழித்து படித்து
வரும் மருத்துவர்களுக்கு தொகுப்பூதியம்தான் வழங்கப்படும் என்றால், இது அரசு மருத்துவக்
கல்லூரிகளில் படித்து முடித்தவர்களைக் கூட
தங்கள் வருமானத்திற்காக தனியாக கிளினிக்
போடவும் தனியார் மருத்துவனைக்கு பகுதிநேர வேலைக்குச் செல்லவும்தான் வழிவகுக்கும். கத்ரினா சூறாவளிப் புயலால் கந்தல்
ஆக்கப்பட்ட அமெரிக்க மக்களுக்கு சிகிச்சை
அளிக்க சின்னச் சிறிய கியூபா அரசு 2000 மருத்துவர்களை உரிய மருந்துகளுடன்
அமெரிக்காவிற்கு அனுப்பத் தயார் என்றது. அது மட்டுமல்ல. அமெரிக்காவில் இருந்து தன்
நாட்டுக்கு வருபவர்களுக்கு இலவசமாக
மருத்துவக் கல்வி தர தயார் என்றது அந்த
மக்கள் நல அரசு. ஆனால், தானே புயலால்
தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழக
மக்களுக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலையில்
தான் தமிழக அரசு உள்ளது.
மக்கள் நலனில் உண்மையிலேயே நம்
அரசிற்கு, ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருக்குமானால், அரசாங்க மருத்துவமனைகளின்
எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும். அரசு ஆரம்ப சுகாதார மய்யங்களில், அரசு
மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளுடன்
கூடிய தரமான சிகிச்சை இலவசமாகவோ
அல்லது குறைவான கட்டணத்திலோ கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அனைத்துப் பயன்களுடன் கூடிய சம்பளத்துடன் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் தேவையான அளவு நியமனம் செய்யப்பட
வேண்டும். அதை விட முக்கியமாக, நோய்
நாடி நோய் முதல் நாடி என்பதற்கேற்ப மக்களின், குறிப்பாக தாய்மார்கள், குழந்தைகளின்
சுகாதாரத்திற்கு, ஊட்டச்சத்து உணவிற்கு, நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மருந்து, மருத்துவம் பற்றிய அறிவை, விழிப்புணர்வை
மக்களுக்கு ஏற்படுத்தவும் அரசு அதிகமான
பணத்தைச் செலவு செய்ய வேண்டும்.
தேவையில்லாமல் பல கோடி ரூபாய்கள்
ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கவும்
ஆடம்பரங்களுக்கும் செலவு செய்யப்படுவது
தவிர்க்கப்பட வேண்டும். மிகவும் முக்கியமாக
கேதன் தேசாய்களை உருவாக்கும் தனியார்
மருத்துவ கல்லூரிகள், தனியார் செவிலியர்
கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும்.
இவையெல்லாம் செய்யப்படாதவரை
மருத்துவர்களை பழி தீர்ப்பதாலும் மருத்துவ
காப்பீட்டுத் திட்டங்களாலும் எவ்வித மாற்றமும் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை.