COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, February 1, 2012

Feb-1-12

நாட்டுநடப்பு

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்கள்

கறைபடிந்த தலைவர்களின் இசை நாற்காலி விளையாட்டு

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்கின்றன. எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் சந்தர்ப்பவாத, வெளிவேட முகத்தை அப்பட்டமாக வெளியே காட்டுவதில் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆளுகிற கட்சிகள், தேர்தல்களில் ஒருதூய்மையான’ முகத்தை காட்டும்பொருட்டு, கறைபடிந்த தலைவர்கள் என்கிற சங்கடம் தரக்கூடிய தங்கள் சுமைகளை கழற்றிவிட முயற்சி செய்கிறபோது, போட்டி கட்சிகள் அதே கறைபடிந்த தலைவர்களை இணைத்துக்கொள்ள போட்டியிடுகின்றன.

தேர்தல் அறிவிப்பு வெளியானதும், உத்தரபிரதேசத்தில் மாயாவதி தனது 4 அமைச்சர்களை நீக்கினார். தனது தோற்றத்தை சரி செய்துகொள்ளும் மாயாவதியின் முயற்சியில் வெளியேற்றப்பட்ட அமைச்சர்கள் எண்ணிக்கை இப்போது 20. இப்போதும், அவருக்கு மிகவும் நெருக்கமானவரான நசீமுதீன் சித்திகி உட்பட, அவருடைய 16 அமைச்சர்கள், மற்றும் பல பகுஜன் சமாஜ் கட்சி (பசக) சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு ஊழல் வழக்குகளில் உத்தரபிரதேச லோக் ஆயுக்தாவில் விசாரணையை எதிர்கொள்கின்றனர். ஊழல், பாலியல் வன்முறை, படுகொலைகள் போன்ற குற்றங்களால் இந்த அமைச்சர்கள் இனியும் தொடர முடியாது என்ற நிலை வந்த பிறகு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு கையாலாகாத முயற்சியாகத்தான் மாயாவதி இந்த நீக்கங்கள் செய்துள்ளார். காலங்கடந்த இந்த நீக்கங்கள், மாயாவதியின் ஆட்சி கட்டுக்கடங்காத ஊழல் மற்றும் குற்றம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது என்பதையே காட்டுகின்றன. தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில் நடந்துள்ள ஊழல், நடந்த எல்லா ஊழல்களிலும் மிகவும் மோசமானது. இதில் இரண்டு தலைமை மருத்துவ அதிகாரிகள், ஒரு துணை அதிகாரி லக்னோ சிறை வளாகத்துக்குள் கொல்லப்பட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சரான பாபு சிங்குஷ்வாஹா மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று அறியப்படுபவர். உத்தரபிரதேசத்தில் நிலவுகிற மிகவும் மோசமான கிராமப்புற சுகாதார நிலைமைகளால், அதிகரித்த மூளைக்காய்ச்சல் நோயால் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தன. மாயாவதி ஆட்சியில் சென்ற ஆண்டில் மட்டும் 500 உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. குழந்தை இறப்பு அதிகரித்தது. இந்தச் சூழலில் குஷ்வாஹா கிராமப்புற சுகாதார திட்ட நிதியில் நடந்த கொள்ளைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார்.

மாநிலத்தில் தனது வாய்ப்புக்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கும் பாஜக, மாயாவதி வெளியேற்றிய குஷ்வாஹா உட்பட செல்வாக்குமிக்க தலைவர்களை உள்ளிழுத்துக் கொண்டது. பாஜகவில் இணைக்கப்பட்டவர்கள் ஊழல் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்களாக இருப்பது பற்றி கேட்ட போது, பாஜக அதிகாரபூர்வ பேச்சாளர் முக்தர் அப்பாஸ் நக்வி ‘கங்கையில் இணைந்துவிட்டால் அனைத்து அசுத்த நதிகளும் சுத்தமாகிவிடும் என்று புன்னகையுடன் குறிப்பிட்டார். வெகுசீக்கிரமே தேசிய கிராமப்புற சுகாதார திட்ட ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வு துறை குஷ்வாஹாவின் வீடுகளில் சோதனை செய்தது. குஷ்வாஹாவை இணைத்துக் கொண்ட பாஜகவின் சந்தர்ப்பவாதம் பரிகாசத்துக்கு உள்ளானபோது, கட்சிக்குள்ளேயே பல அதிருப்தி குரல்கள் எழுந்தன. ஆனால் பல மூத்த தலைவர்கள் நகைப்பிற்குரிய சாக்குபோக்குகள் சொன்னார்கள். யஷ்வந்த் சின்ஹா, குஷ்வாஹாஊழலை அம்பலப்படுத்துபவர் என்று கூட ஊடகங்களிடம் சொன்னார். சங்கடம் ஓர் உச்சத்தை அடைந்த போது, குஷ்வாஹா, குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை தான் ‘உறுப்பினராவது நிறுத்தி வைக்கப்பட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்க அறிவுறுத்தப்பட்டார்.

குஷ்வாஹா என்ற சங்கடம் தரும் சுமையை பாஜக இறக்கி வைத்திருக்கலாம். ஆனால் பாஜகவில் இணைக்கப்பட்டுள்ள பிற பசக அமைச்சர்கள், வேறு பல பாஜக வேட்பாளர்கள் அதே போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக, இப்போது பாஜக வேட்பாளர்களாக உள்ள 3 முன்னாள் பசக அமைச்சர்களான பாத்ஷா சிங், அவதேஷ் வர்மா, தத்தன் மிஸ்ரா ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. 2007ல் 17 இசுலாமிய பெண்கள் பொது மக்கள் மத்தியில் நிர்வாணமாக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் தத்தன் மிஸ்ரா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சத்ரபால் சிங் என்கிற பாஜக வேட்பாளர், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது,கேள்வி எழுப்பபணம் வாங்கிய ஊழலில் குற்றவாளி என்று நாடாளுமன்ற குழுவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாகக்ஷி மகராஜ் என்கிற பாஜக வேட்பாளர், பாலியல் வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல் குற்றத்தில் சிறையில் இருந்துள்ளார். ஊழல் எதிர்ப்பு என்பதை முக்கியமான தேர்தல் பிரச்சனையாக எழுப்ப பாஜக திட்டமிட்டிருக்கலாம். ஆனால், அது கறைபடிந்தவர்களின் புகலிடம் என்ற தோற்றத்தையே பெறுகிறது. ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிய வழக்கில் சிறையில் உள்ள நரேனி தொகுதி பசக சட்டமன்ற உறுப்பினர் புருஷோத்தம் நரேஷ் திவிவேதி, தான் பாஜகவில் சேர விரும்புவதாகவும், சேர்ந்தால் தனது ‘பாவங்கள் கழுவப்பட்டுவிடும்’ என்றும் பகிரங்கமாகவே சொல்லியுள்ளார்.

இந்த விசயத்தில் பாஜக மற்றும் குற்றவாளி அல்ல. சமாஜ்வாடி கட்சியின் பல மூத்த தலைவர்கள், அவப்பெயர் பெற்ற டி பி யாதவை தமது கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வெளிப்படையாகவே வலியுறுத்தினர். ஆனால் அவர் சேர்க்கப்படவில்லை. ஆயினும் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் பட்டியலில், கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமர்மணி திரிபாதியின் மகன் அமன்மணி திரிபாதி, ஊழல் குற்றச்சாட்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மித்ரா சென் யாதவ், 2008ல் ஒரு கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குட்டு பன்டிட் என்கிற முன்னாள் பசக சட்டமன்ற உறுப்பினரான பகவான் சர்மா ஆகியோர் பெயர்கள் உள்ளன. சுயேச்சையாக போட்டியிடுகிற, அவப்பெயர் பெற்ற நிலப்பிரபுத்துவ மாஃபியாவான ரகுராஜ் பிரதாப் சிங்குக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு தரும் வாய்ப்பும் தெரிகிறது. அந்தத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி இதுவரை யாரையும் தேர்தலில் நிறுத்தவில்லை.

பாஜக குஷ்வாஹாவை இணைத்துக் கொண்டது பற்றி அறச்சீற்றம் வெளிப்படுத்துகிற காங்கிரஸ், முசாஃபர்நகரில் இரண்டு சிறுமிகளை கடத்தி பாலியல் வன்முறைக்குள்ளாக்க முயற்சி செய்த வழக்கில் தனது உதவியாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட பின் பசகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் பசக சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் ராணாவை, காங்கிரசின் கூட்டாளியான ராஷ்ட்ரீய லோக்தள் கட்சி இணைத்துக் கொண்டது ஏன் என்று சொல்ல வேண்டும். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பவாத நடைமுறை காங்கிரசுக்கும் அந்நியமானதல்ல. பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ், அவப்பெயர் பெற்ற குற்றவாளி பப்பு யாதவை தனது கட்சியில் இணைத்துக் கொண்டது. அதேபோல் தேஜமு கூட்டாளியான நிதிஷ் குமாரும் வெளியேற்றப்பட்ட கறைபடிந்த நபர்களை பாஜக இணைத்துக் கொள்வது பற்றி வருத்தம் தெரிவிக்கிறார். ஆனால் பீகார் சட்டமன்ற தேர்தலின்போது முன்னாள் ராஷ்ட்ரீய ஜனதா தள் தலைவரான கறைபடிந்த தஸ்முலீனை அவரது கட்சி இணைத்துக் கொண்டது பற்றி, அவரது வேட்பாளர் பட்டியலில் இருந்த, சுனில் பான்டே, துமல் சிங் உட்பட, பல குற்றம் புரிந்த அரசியல்வாதிகளை பெருமையுடன் பேசியது பற்றி மறந்துவிட்டார்.

வெகுமக்கள் உணர்வில் ஊழல் ஒரு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ள இந்த கட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஊழல் எதிர்ப்பு வாகனத்தில் ஏற தமக்குள் போட்டி போடுகின்றன. ஆயினும், சட்டமன்ற தேர்தல்களை ஒட்டி, ஊழல் மற்றும் குற்றம் புரிந்த அரசியல்வாதிகள் விளையாடுகிற இசைநாற்காலி அரசியல் விளையாட்டு, ஆளும் வர்க்கக் கட்சிகள் என்று வரும்போது, அனைத்தும் ஒரே குட்டையில் ஊறுகிற மட்டைகளே என்பதையே காட்டுகிறது. அதுபோன்ற கட்சிகளின் சந்தர்ப்பவாதமும், வெளி வேடமும் சட்டமன்ற தேர்தல்களில் அம்பலப்படுத்தப்பட்டு அவற்றுக்கு பாடம் புகட்டப்பட வேண்டும்.

எம்எல் அப்டேட் தலையங்கம்
தொகுப்பு
15, எண் 3, 2012, ஜனவரி 10 - 16

Search