முழு விடுதலையின் செங்கொடித் துடிப்பில் தோழன் அப்பு ஜீவனாய்த் துடிப்பான்!
இன்குலாப்
ஏதோ ஒரு நாள்
அக்டோபர் மாசத்தில்
ஏதோ ஒரு நாள்!
ஏழை உழவன்
மூட்டும் எரிதழல்
எவனது சுடர்முகத்தை
ஏந்துகின்றதோ
அவனது ரத்தச்
சூட்டில் எரிந்தது
ஏதோ ஒருநாள்!
அக்டோபர் மாசத்தில்
ஏதோ ஒரு நாள்
மறதியின்
இருண்ட
பள்ளத் தாக்கில்
அந்தப் புரட்சிச்
சூரியனைப்
புதைத்து விட்டதாக!
அதிகாரக் கிரகணம்
ஆர்ப்பரிக்கின்றது
ஆதிக்கம்
செலுத்தும்
அட்டை இருள்கள்
பொசுங்க!
நெருப்பை உமிழ்ந்த
அந்த விடுதலைச்
சூரியன்
ஏழை உழவர்களின்
நினைவுச் சிகரங்களில்
ஆயிரம் விடுதலைக்
கதிர்களை விரிக்கிறான்
அஸ்தமிக்காமல்
இன்றும் சுடர்கிறான்!
தமிழக உழவர்
புரட்சித் தளபதி
அப்புவின் ரத்தத்தால்
அக்டோபர் மாசத்தின்
ஏதோ ஒரு நாள்
சிவந்து எரிந்தது!
முளையிலேயே
கிள்ளி எறிவதற்காக
நீண்ட ஆதிக்கத்தின்
இரும்புக் கரங்கள்
உழவர் புரட்சிச்
சம்மட்டி அடியால்
நொறுங்கும் போதெல்லாம்
நூறு நூறு
தீயின் கொழுந்துகளாய்
அப்பு சிரிக்கிறான்!
தீண்டும்
அதிகாரக்
கரங்களை எரிக்கிறான்!
தோலெல்லாம் சித்திரவதையின்
நகங்களால்
துளைக்கப்பட்டது...
ஆளும் வர்க்கத்தின்
ஆணவச் செவிகள்
உனது பதிலைப் பெறாமல்
ஏமாந்து போனது!
மரணத்தின்
விளிம்பில்
நிறுத்திய போதும்
புரட்சிப் பள்ளியில்
படித்த உன் தோழர்கள்!
இந்தக் கேள்விக்குப்
பதில் சொல்லமாட்டார்கள்!
தோழர்கள் யார்?
தோழர்கள் எவ்விடம்?
கோடானு கோடி
உழவர்களின் ரத்தத்தில்
நீச்சலடிக்கும்
நிலப்பிரபுத்துவத்தை
ஆயிரம் ஆயிரம்
தொழிலாளி ரத்தத்தை,
குடித்துத் தள்ளாடும்
முதலாளித்துவத்தை
அழிக்கப் போராடும்
வீரர்கள் யாரோ
அவர்கள் எல்லாம்
அப்புவின் தோழர்கள்!
கொழுந்து
விட்டெரியும்
உழவனின் கண்களில்
கோபத்தில் பொங்கும்
தொழிலாளி நெஞ்சத்தில்
திரிபுவாதச் சாக்கடைக்
கங்கையிலே
சமரசக் குளியலை
எதிர்த்துப் போராடி
ரத்தக் குளியல்
நடத்தும்
புரடசிச் சிந்தனையிலே
மரணத்திற்கு அஞ்சாத
மாவீரர்கள் நினைவில்
போராட்டக் களத்தில்
உறுதிக் கோஷத்தை
முழங்கும்
ரத்த சாட்சியங்களின்
உரத்த குரல்களில்
அப்புவின் தோழர்கள்
அணி திரள்கிறார்கள்!
எரியும்
ஒவ்வொரு
செந்தளம் தோறும்
அப்பு என்ற
மாவீரன் சுடர்வான்
முழு விடுதலையின்
செங்கொடித் துடிப்பில்
தோழன் அப்பு
ஜீவனாய்த் துடிப்பான்!