COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, February 1, 2012

Feb-1-5

அறைகூவல்

பிப்ரவரி 28, அகில இந்திய வேலை நிறுத்தம் வெல்லட்டும்!

அலை அலையாய் வீதிகளில் திரள்வோம்!

ஆட்சியில் இருப்போருக்கு எச்சரிக்கை விடுப்போம்!

கே.ஜி.தேசிகன்

விஷம் போல் ஏறும் விலைவாசி, தாழ்ந்த மட்டத்தில் கூலி, பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், பாதாளத்திற்கு செல்லும் வாழ்க்கை, சமூக பாதுகாப்பு பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்ற, போராட்டங்களை ஒடுக்குகின்ற மத்திய மாநில அரசுகள்.

நாட்டின் செல்வாதாரங்களை பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகள் கொள்ளையடிக்க அனுமதிக்கும் அரசுகள். லட்சம் கோடிகள் என ஊழல்கள் மலிந்து கிடக்கும் அரசாட்சி. சாமான்யர்களின் வாக்குகளை பெற்று செல்வந்தர்களுக்கு சேவை செய்யும் ஆட்சிகள். கிராமப்புறத்தில் ரூ.26 வருமானம் இருந்தால் போதும், நகர்ப்புறத்தில் ரூ.32 வருமானம் இருந்தால் போதும், அவர் வறுமைக்கோட்டுக்கு மேல் வந்துவிட்டார் என்று சொல்லும் திட்டக் கமிஷன். நாட்டின் சட்ட திட்டங்களை காலில் போட்டு மிதித்து பழகுனர், பயிற்சியாளர், காண்ட்ராக்ட், கேசுவல், திருமாங்கல்யத் திட்டம் என தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் முதலாளிகள். பெரும்பான்மை சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பதோடு, சங்கம் பதிவு செய்யப்படாமல் பார்த்துக் கொள்ளும் முதலாளி, அரசு கூட்டு சதி. பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவையெல்லாம் இந்திய, தமிழக உழைக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள்.

இந்தப் பின்னணியில் அனைத்து மய்ய தொழிற்சங்கங்களும் கூட்டாக பிப்ரவரி 28 பொது வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளன.

  • விலைஉயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
  • விதிவிலக்கின்றி தொழிலாளர் சட்டங்களை அமலாக்க வேண்டும். மீறுவோருக்கு தண்டனை வழங்க வேண்டும்.
  • தொழிலதிபர்களுக்கு தரப்படும் ஊக்க முடிப்புகள் தொழிலாளர்களின் வேலை பாதுகாப்புடன் இணைக்கப்பட வேண்டும்.
  • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான போதிய நிதி ஆதாரங்களுடன் கூடிய சமூக பாதுகாப்பு திட்டம்.
  • பொதுத் துறை பங்கு விற்பனை கூடாது
  • அனைத்து தொழிலாளர்க்கும் விலை உயர்வு குறியீட்டுடன் இணைந்த குறைந்த பட்ச கூலி ரூ.10,000 வழங்க சட்ட திருத்தம்
  • நிரந்தர தன்மை வாய்ந்த வேலைகளை ஒப்பந்தமயமாக்கக் கூடாது. ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யும்வரை அந்நிறுவனத்தில் அதே வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளியின் சம்பளம் வழங்க வேண்டும்.
  • போனஸ், வருங்கால வைப்பு நிதிக்கான தகுதி மற்றும் உச்சவரம்புகளை நீக்க வேண்டும். பணிக்கொடையை உயர்த்தி வழங்க வேண்டும்.
  • அனைவருக்கும் உத்தரவாதமான ஓய்வூதியம்.
  • விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் கட்டாய தொழிற்சங்க பதிவு.

இந்தக் கோரிக்கைகளோடு, தமிழகத்தில் ஏஅய்சிசிடியுவும் அவிதொசவும் தொடர்ந்து வலியுறுத்தும் கோரிக்கைகளையும் முன்வைத்து பிப்ரவரி 28 பொது வேலை நிறுத்தத்துக்கு தயாராகின்றன.

ஜனவரி 28 - 29 தேதிகளில் குமரியில் நடக்கவுள்ள ஏஅய்சிசிடியுவின் ஏழாவது மாநில மாநாடு பிப்ரவரி 28 பொது வேலை நிறுத்தத்தில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களை ஈடுபடுத்துவது பற்றி விரிவாக விவாதிக்க உள்ளது.

தொழிற்சங்க அங்கீகார சட்டம்

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் முன்னெடுத்துச் சென்ற தொழிற்சங்க அங்கீகார சட்ட கோரிக்கை தமிழகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையாக மாறியது. 2010ல் கோவையில் இருந்து சென்னை வரை இக்கோரிக்கை மீது நடத்தப்பட்ட நெடும் பயணம் அன்று ஆட்சியில் இருந்தோரை சட்டமன்றத்தில் பேச வைத்தது. தமிழக அரசாங்கம் தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

பயிற்சியாளர் முறைப்படுத்தும் சட்டம் 2008ல் ஜவுளி ஆலைகளில் பெண்களை கொடும்சுரண்டலுக்குதிருமாங்கல்ய திட்டம் உள்ளாக்குகிறது என்பதை அங்கீகரித்து எல்ஏ பில் 47/2008, தொழிலாளர் போராட்டங்களால் கொண்டு வரப்பட்டது. இப்போது வரை தூசு படிந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. தமிழக அரசு இந்தச் சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற விரைந்து செயல்பட வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்கள்

கட்டுமானத் தொழிலாளர் நலச்சட்டம் சொல்லும் 1% நலநிதி பிடித்தம் செய்யப்படவில்லை. வாரிய உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க, வாரியத்தை முடக்க, சங்கமாக அணிதிரள்வதை தடுக்க எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தவறுவது இல்லை. அதிமுகவின் ரூ.1000 ஓய்வூதியம் அறிவிப்பாகவே இருக்கிறது.

ஒப்பந்த தொழிலாளர் முறை நீக்குவது

நிரந்தர ஜீவநதித் தன்மை வாய்ந்த தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970ல் திருத்தங்கள் தேவை.

அமைப்புசாரா தொழிலாளர்கள்

இடம்பெயரும் தொழிலாளர்கள்

வீட்டுமனை இல்லாத அனைவருக்கும் 5 சென்ட் வீட்டுமனை என்ற கோரிக்கைக்கு ஊறு இல்லாமல் அமைப்புச்சாரா தொழிலாளிக்கு தொகுப்பு வீடு திட்டம் அமலாக்கப்பட வேண்டும்.

அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்களுக்கான மத்திய சட்டம், தமிழக விதிகள் கறாராக அமல்படுத்தப்பட வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயரும் தொழிலாளர் நலன் காக்க கூடுதல் தொழிலாளர் ஆணையர் நியமிக்க வேண்டும்.

தொடரும் விபத்துக்கள்.

பொதுத் தணிக்கை தேவை

தமிழகத்தில் ஆலை விபத்துகளில் தொழிலாளர்கள் மரணம் தொடர் செய்தி. நோக்கியாவின் அம்பிகா மரணம் முதல் கரூர் சாயப்பட்டறை கொதிகலன் வெடித்து வெளிமாநிலத் தொழிலாளர் இறப்பு என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. பணியிட பாதுகாப்பு பற்றிய பொது தணிக்கை அவசர அவசியமாகிறது.

விவசாயத் தொழிலாளர்கள்

நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் பெரும் பிரிவினரான விவசாயத் தொழிலாளர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Ø  மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்களுக்கு பதிலாக 200 நாட்கள் வேலை, ரூ.300 நாள் கூலி வேண்டும்.

Ø  குடும்பத்தில் ஆண், பெண் இருவருக்கும் வேலை கொடுக்க வேண்டும்.

Ø  சிறு, குறு விவசாய நிலங்களுக்கும் இத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இப்படி செய்யும்போது விவசாய நெருக்கடியின் தீவிரத்தை குறைக்கிற அதே வேளை கூலியின் மட்டத்தையும் உயர்த்த எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

தொமுச, அய்என்டியுசி, பிஎம்எஸ் போன்ற சங்கங்களும் நிர்ப்பந்தம் காரணமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.

இரும்பு காய்ந்து பழுத்து இருக்கும்போது அடிக்க வேண்டும் என்பது தொழிலாளர் வர்க்கத்துக்கு தெரியும். நாடு முழுவதும் விலை உயர்வு, ஊழல், தேசத்தின் செல்வம் சூறை யாடப்படுவது, ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு பிரிவு மக்களும் போராட்டக்களங்களில் நிற்கிற இந்தக் கட்டம், மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எதிராக, அவர்களின் நவதாராளவாத கொள்கைகளுக்கு எதிராக வலுவுடன் ஓங்கி அடிப்பதற்கு வாய்ப்பான கட்டம்.

நவதாராளவாதக் கொள்கைகளின் தாக்குதலால் அமெரிக்க, அய்ரோப்பிய உழைக்கும் மக்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள பெருநாசம் போன்ற ஒன்று இந்தியாவில் நிகழாமல் தடுப்பதில், இந்திய உழைக்கும் மக்களின் பொது வேலை நிறுத்தங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.

பிப்ரவரி 28 வேலை நிறுத்தம் கேந்திரமான தொழிலாளர் வர்க்கப் போராட்டம் என்ற வகையில் ஏஅய்சிசிடியுவும் அவிதொசவும் ஊக்கமுடன் பங்கேற்க வேண்டியதும், இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் பரந்த, உயர்ந்த மட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதும் இன்றியமையாப் பணியாகும்.

Search