மக்களை வஞ்சிப்பதில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா
இந்தியாவில், எங்கும் எதிலும் அரசுக்
கட்டுப்பாடு, அரசு உயர்அதிகாரிகள் ஆதிக்கம், செயலின்மை, அதனால் முதலீடு வருவதில்லை, தொழில் முன்னேறவில்லை, அதனால் நாடு பின்
செல்கிறது, அமெரிக்காவைப் பார், வளமை, காரணம் தனியார்மயம், வர்த்தக சுதந்திரம், அரசுக் கட்டுப்பாட்டில் தளர்வு என்று அமெரிக்க பெருமை பேசுபவர்களுக்கு, டில்லியில்
உள்ள இன்ஸ்டிடியுட் ஆஃப் கான்ஃப்ளிக்ட்
மேனேஜ்மென்ட் (மோதல் கட்டுப்பாட்டு
கழகம் என்று சொல்லலாம்) ஓராண்டு கால
ஆய்வுக்குப் பிறகு வெளியிட்டுள்ள விவரங்கள்
சற்று ஏமாற்றம் தரலாம்.
இந்தியாவின் மக்கள் தொகை மார்ச் 1 2011 நிலவரப்படி, 121 கோடியே ஒரு லட்சத்து
தொண்ணூற்று மூன்றாயிரத்து நானூற்று
இருபத்தி இரண்டு. அமெரிக்காவின் மக்கள்
தொகை பிப்ரவரி 11 2012 நிலவரப்படி, 31 கோடியே 29 லட்சத்து தொண்ணூற்று மூன்றாயிரம். அமெரிக்காவைப் போல் நான்கு மடங்கு
மக்கள் தொகை கொண்டது இந்தியா.
மக்கள்தொகை விகிதத்துக்கு நேர்எதிராக
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள அரசு
ஊழியர்கள் எண்ணிக்கை விகிதம் உள்ளது. அமெரிக்காவில் அரசு ஊழியர் எண்ணிக்கை
இந்தியாவில் உள்ளது போல் 5 மடங்கு. இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 1,623 அரசு
ஊழியர்கள் என்றால் அமெரிக்காவில் 1 லட்சம்
பேருக்கு 7,681 அரசு ஊழியர்கள். மத்திய அரசு
ஊழியர் எண்ணிக்கை இந்தியாவில் 1 லட்சம்
பேருக்கு 257; அமெரிக்காவில் 840.
அமெரிக்க மக்கள் மத்தியில் பெருகிவரும்
சீற்றத்துக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான
வேலையின்மை பிரச்சனைக்கு பதில் சொல்லப்
பார்க்கிறார் ஒபாமா. அமெரிக்க வேலைகள்
அவுட்சோர்சிங் செய்யப்படுவதைத் தடுக்கச்
சட்டம் கொண்டு வருகிறார். (அமெரிக்காவில்
அரசு வேலை வாய்ப்பு கூடுதலாக இருப்பதால், அவுட்சோர்சிங் தடுப்புச் சட்டம் வருவதால்
ஒபாமா அரசு மக்கள்நல அரசு ஆகிவிடாது. இன்றைய அரசியல் சூழல், தேவை அப்படி).
அரசு வேலைவாய்ப்பு பணிப்பாதுகாப்பு
தொழிலாளர் நலன் மட்டும் சார்ந்த விசயமல்ல. அரசு ஊழியர் எண்ணிக்கை ஒரு விதத்தில் அரசாங்கத்தின் மக்கள்நல நடவடிக்கைகளின்
குறியீடு. ஒரு வகையில், அது மக்கள்நல அரசு
என்பதன் அடையாளம்.
2009ல் மும்பை வெள்ளத்தில் மூழ்கிய
போது, அரசு போக்குவரத்து ஊழியர்கள்தான்
பேருந்துகளை கடுமையான சிரமங்களுக்கு
மத்தியிலும் பேருந்துகளை இயக்கிக் கொண்டிருந்தனர். அரசு மின்வாரிய ஊழியர்கள்தான்
உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும்
பொருட்படுத்தாது, மின்தடையை சீர்செய்யும்
வேலை பார்த்தனர். தனியார் நிறுவனங்கள்
வேடிக்கை மட்டுமே பார்த்தன.
தானே புயலால் கடலூர், விழுப்புரம்
மாவட்டங்கள் தாக்கப்பட்டபோது, சேதக்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பக்கத்து
மாவட்டங்களில் இருந்து ஊழியர்களை
கொண்டு சென்று மிகக் குறுகிய காலத்தில்
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது
உலக சாதனை என்று ஜெயலலிதா பேசுகிறார். ஜெயலலிதா போற்றிப் பாதுகாக்கும் எந்தத்
தனியார் நிறுவனமும் இந்தப் பணிகளுக்காக
தனது ஊழியர்களை அனுப்பவில்லை. பேரிடர்
காலங்களில் எந்தத் தனியார் நிறுவனமும்
எந்தப் பொறுப்பும் எடுப்பதில்லை.
இந்தியாவில் மக்கள் தொகை உயரஉயர
அரசு ஊழியர் எண்ணிக்கை குறைந்துகொண்டு
வருகிறது. முதலீடு அகற்றுவது என்ற பெயரில்
அந்த எண்ணிக்கையை இன்னும் குறைக்க வழி
பார்க்கிறார்கள் அய்முகூ ஆட்சியாளர்கள்.
நாளைய இந்தியாவின் கல்வியில் இந்திய
அரசாங்கத்தின் அக்கறையின்மைதான் துணை
ஆசிரியர்கள், தொகுப்பூதிய, மதிப்பூதிய
ஆசிரியர்கள் என்று வெளிப்படுகிறது. இந்திய
மக்களின் மருத்துவம், ஆரோக்கியம் பற்றிய
அக்கறையின்மைதான் ஆஷா தொழிலாளர்கள்
வடிவெடுக்கிறது. பெருமுதலாளிகள் நலன்
பேணும் போக்குதான் முதலீடு அகற்றுவதற்கு
இட்டுச் செல்கிறது. இந்த குற்றமய அலட்சிய
நடவடிக்கைகள் தொழிலாளர்களையும்
மக்களையும் வஞ்சிக்கும் நடவடிக்கைகள்.
ஆகவே, தனியார்மய ஆதரவாளர்களே, அமெரிக்கப் பிரியர்களே, அமெரிக்கா ஆடும்
போது, நாம் கவனமாக இருக்க வேண்டாமா? அரசுக் கட்டுப்பாடு அவசியமல்லவா?