ஜெ ஆட்சி எதிர்ப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக்குவோம்!
அதிமுக தலைவரும் முதலமைச்சருமான ஜெயலலிதா கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது, ‘அடுத்த பிரதமரை தீர்மானிக்கிற தருணம் கனிந்து கொண்டிருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். அடுத்த பிரதமர் நான்தான் என்று சொல்லாததற்காக இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்! எப்படியும் மத்திய ஆட்சியில் பங்குபெற்றே தீருவது என்ற அவரது தீர்மானம் அவரது பேச்சில் பளிச்சிடுகிறது. ‘அனைத்திந்திய’ என்றே துவங்கும் நம் பெயருக்கேற்ப தேசிய அரசியலிலும் ஒரு பொற்காலத்தை 1998லேயே உருவாக்கினோம். வாஜ்பாயை பிரதமராக்கி பாரதிய ஜனதா கட்சிக்கு முதன் முதலாக இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததில் நம் பங்கு அளவற்றது’ என்று வரலாற்றை நினைவுபடுத்தியுள்ள அம்மா, இப்போதும் அதனை மேலும் பலப்படுத்தி ‘இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப்போகிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறது’ என அவரது அரசியல் வியூகத்தை தொண்டர்களுக்கு காட்டியிருக்கிறார். இதற்குரிய காரணத்தையும் சொல்லியிருக்கிறார்.
மத்தியில் அதிகாரத்தைப் பங்கிட்டு கொள்ளும் வேலையை செவ்வனே செய்து முடித்துவிட்டால், தமிழகத்தின் உரிமைகளுக்காக, நீர் ஆதார வளங்களை பாதுகாப்பதற்காக, தற்காப்பதற்காக கையேந்திப் போராடுகிற.. நிலை நமக்கு வராது. தீர்மானிக்கிற இடத்தில் குன்றிமணி அளவுக்கு இழப்போ, குறைபாடோ ஏற்படாமல் முடிவெடுக்கிற சூழலை உருவாக்க முடியும்.. ..செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கடந்து செங்கோட்டையிலும் கழகத்தின் கொடி பறக்க கழக கண்மணிகளும் உடன்பிறப்புகளும் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார்.
காங்கிரசுடன் கைகோர்த்து ஆட்சி செய்த திமுகவால் தமிழகத்தின் உரிமைகளை, உடைமைகளை காக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டும் ஜெ, பாஜகவோடு கரம் கோர்த்து என்னால் பாதுகாக்க முடியும் என்கிறார். ஊழல் பெரும் சேற்றில் சிக்கி, மாநில ஆட்சி அதிகாரத்தை இழந்து கிடக்கும் திமுகவை மத்திய அதிகாரத்திலிருந்தும் இறக்கியே தீர வேண்டும் என்ற கொலைவெறியில் இருக்கிறார் ஜெயலலிதா என்பது தெளிவாகத் தெரிகிறது.
காங்கிரசுக்கு எதிரான மக்களது மனோநிலை மத்திய அரசுக்கு எதிரான மக்களது போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு அணை, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு, விலைவாசி உயர்வு, ஊழல், இலங்கைத் தமிழர் பிரச்சினை, மூவர் தூக்கு, உள்ளிட்ட இன்னும் பல விசயங்களில் மத்திய அரசு எதிர்ப்பு - காங்கிரஸ் எதிர்ப்பு தீவிரமடைந்து வருகிறது.
தமிழக மக்களின் இந்த மனோநிலையை அதிமுகவுக்கு சாதகமாக திருப்ப பார்க்கிறார். சமீபத்திய அவரது குரல், ஆகக் கூடுதலாக ‘மாநில உரிமை’, ‘மத்திய அரசு எதிர்ப்பு’ என்பதாக ஒலிக்கிறது. எழுந்து வரும் பல மக்கள் பிரச்சினைகளில் - கூடங்குளம், முல்லைப்பெரியாறு போன்ற பிரச்சினைகளில் - தன்னை நல்லவராகவும் மத்திய அரசை வில்லனாகவும் நிறுத்திக் காட்டிக்கொள்கிறார்! முல்லைப்பெரியாறு பிரச்சனையில் பல்லாயிரக்கணக்கில் எழுந்துவரும் விவசாயிகளின் மத்திய அரசு எதிர்ப்பு உணர்வை வளைத்துப்போடும் திட்டத்துடன்தான் பென்னி குயிக்குக்கு மணிமண்டபம் என்கிறார். பென்னி குயிக் எந்த அரசு அதிகாரத்தையும் எதிர்பார்த்து தனது சொத்தை விற்று முல்லைப்பெரியாறு அணையைக் கட்டவில்லை. ஆனால் ஜெயலலிதா மத்திய அதிகாரத்தை எதிர்பார்த்து காய் நகர்த்துகிறார்.
ஜெயலலிதாவின் வியூகத்தை அறிந்து கொள்ள கருணாநிதியும் நாடாளுமன்ற தேர்தலைப் பற்றி ஆலோசிக்க பிப்ரவரியில் பொதுக்குழுவைக் கூட்டியுள்ளார். ஆக 2014ல் வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுகவும் திமுகவும் இப்போதே தயாராகி விட்டன. தேர்தல் இவ்விரு கட்சிகளுக்கும் வாழ்வா சாவா போராட்டமாக இருக்கும்.
அரசியல் பொற்காலம் என்று சித்தரிக்கும் பாஜக ஆட்சி காலத்தின் கோரக் கொடூரங்களை, இந்திய மக்களுக்கு எதிரான மூர்க்கத்தனமான பொருளாதார சீர்திருத்தங்களை, குஜராத் படுகொலைகளை, பாஜக வுடன் இனி ஒருபோதும் கூட்டணி சேரமாட்டேன் என்று ஜெயலலிதா சொன்னதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடமாட்டார்கள். ‘ஒரு மரத்தை வெட்ட 10 மணி நேரமாகும் என்றால் அதில் ஒன்பது மணி நேரத்தை கோடாரியை கூர்படுத்துவதற்கே செலவு செய்வேன்’ என்று சாக்ரடீஸ் சொன்னதையும் தன் உடன்பிறப்புகளுக்கு நினைவுபடுத்தி பேசியிருக்கிறார். இந்திய மரத்தை வெட்டுவதற்கு பாஜக கோடாரியை கூர் தீட்டுகிறாரோ ஜெயலலிதா? பாஜகவுடன் சேராமல், ஒருவேளை காங்கிரசுடன் கை கோர்த்தால் என்றுகூட பலர் கேட்கலாம். அவர் எப்படியும் மாறலாம். ஆனால் ஏகாதிபத்திய – நவதாராளவாதக் கொள்கையால் நடத்தப்படும் மத்திய அரசாங்கத்தில் பங்கு பெற வேண்டுமென்ற அவரது கொள்கை உறுதி மாறப்போவதில்லை. மக்கள் விரோத கோடாரியை கூர்தீட்டும் ஜெ ஆட்சிக்கெதிராக மக்கள் எதிர்ப்பியக்கத்தை நடத்துவதென்ற மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் அரசியல் முடிவு மிகச் சரியானது, மிக மிக அவசியமானது. இந்த இயக்கத்தை அனைத்து வகையிலும் மக்கள் இயக்கமாக்க முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டியது சூழ்நிலையின் அவசரம்.