COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, February 1, 2012

Feb-1-3

அம்பலம்

வரலாற்றுச் சிறப்புமிக்க 25 தீர்மானங்கள்!

பாலசுந்தரம்

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு கூடிய அதிமுக முதல் செயற்குழு பொதுக்குழுவில் 25 ‘வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பிப்ரவரி 24 அன்று வரவிருக்கும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை (முதல் தீர்மானம்) வாழ்த்தி, அவர் எடுக்கிற அனைத்து முடிவுகளுக்கும் உறுதுணையாக இருக்க சூளுரைத்தது; ஏழு மாதகால ஆட்சியின் சாதனைகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து 18 தீர்மானங்கள், மத்திய அரசைக் கண்டித்தும், சில கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரே ஒரு தீர்மானம் (தீர்மானம் 3) அதிமுகவை ஆட்சிக்கு அனுப்பிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறது. ஓர் அரசியல் கட்சி என்ற வகையில் மகத்தான ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது முதலாவது தீர்மானமாக இருந்திருக்க வேண்டும் ஆனால் அதிமுகவுக்கு ஜெயலலிதாதான் முதல், இரண்டாவது. மக்கள் மூன்றாவது நான்காவதுதான்.

விடுதலை பெற்ற இந்தியாவில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு தேர்தல் களத்தில் ஓர் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கிய ஜெயலலிதாவின் அரசியல் மதி நுட்பத்தையும்அற்புதமான தேர்தல் வியூகங்களையும் (2வது தீர்மானம்) பாராட்டுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதற்காக, முல்லைப்பெரியாறு உரிமைக்குமுதல் குரல்(?) எழுப்பியதற்காக, இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு, மூவர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றியதற்காக, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்ற கோரிய துணிச்சலுக்காக, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்காக, இலங்கை பிரச்சனையை வல்லரசு அமெரிக்கா தீர்க்க வேண்டும் என்று சக்தி வாய்ந்த அமெரிக்க அமைச்சர் ஹிலாரியிடம் வலியுறுத்தியதற்காக, கச்சத்தீவை மீட்க எடுத்த முயற்சிக்காக, 69% இடஒதுக்கீட்டில் நடத்தியசமூக நீதி புரட்சிக்காக, திமுகவினரிடமிருந்து 800 ஏக்கர் நிலங்களை மீட்டதற்காக, சாயப்பட்டறை பிரச்சனையைத் தீர்த்ததற்காக, சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக மேட்டூர் அணையை ஜூன் மாதம் 6ம் தேதியே திறந்ததற்காக (!), சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி தனிமனித சுதந்திரத்தை பாதுகாத்தற்காக, நுழைவுத்தேர்வு கூடாது என்று முடிவு செய்த கல்விப்புரட்சிக்காக, பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை உருவாக்கியதற்காக, சிறுபான்மை மக்களுக்கு செய்த சேவைக்காக என்று 18 தீர்மானங்களும் ஜெயலலிதாவை பாராட்டுகின்றன!

இத்தனை தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள பொதுக்குழு கூடங்குளம் அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக பாராட்டு தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஒரு தீர்மானத்தில்கூடங்குளம் அணு உலை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை என்று மட்டுமே குறிப்பிடுகிறது கூடங்குளம் அணு உலையை மூடவேண்டுமென்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டுமென்று போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மக்களது அச்சம் தீரும் வரை பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்ற ஏற்கனவே எடுத்த நிலையை வலியுறுத்துவதற்கு கூட பொதுக்குழு தயாராக இல்லை

அதேபோல சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை தமிழ்நாட்டில் செயல்படுத்தமாட்டோம் என்று கர்ஜனை செய்ததற்காக ஏனோ அம்மாவை பொதுக்குழு பாராட்டவில்லை இருபத்தைந்து ஆண்டு காலம் தனது இடுப்பில் இடுக்கி வைத்துக் கொண்டிருந்த உடன்பிறவா சகோதரி சசிகலாவை அவரது துரோகம் பொறுக்காமல் தூக்கியெறிந்தற்காக அம்மாவை ஏனோ பொதுக்குழு பாராட்டவில்லை.

மேட்டூரில் தண்ணீர் திறந்ததற்கு கூட முதலமைச்சரை பாராட்டிய பொதுக்குழு மேற்கூறிய விஷயங்களுக்காக நன்றி தெரிவித்து பாராட்டவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.

வேறு பல பாராட்டு தீர்மானங்களையும் பொதுக்குழு நிறைவேற்றியிருக்கலாம். தனியார் கல்வி முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்தமாட்டேன் என்று அடம் பிடித்த ஜெயாவின் துணிச்சலை பாராட்டியிருக்கலாம். பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 6 தலித்துகளை கொன்று சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டியதற்காக பாராட்டியிருக்கலாம். நூறு சதவீதம் பஸ் கட்டணம், பால் கட்டணத்தை உயர்த்தி வாக்களித்த மக்களின் நம்பிக்கை யையும் எதிர்பார்ப்பையும் துளியும் குறையாமல் நிறைவேற்றியதற்காக அம்மாவை பாராட்டியிருக்கலாம். மக்கள் நலப் பணியாளர் 13,500 பேர்களை தெருவில் தூக்கியெறிந்த சமூக நீதி சாதனைக்காக நன்றி தெரிவித்து பாராட்டியிருக்கலாம். இப்படி பல கேள்விகள் பலருக்கும் தோன்றலாம்.

30ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பொதுக்குழு நடந்துள்ளது. அன்று காலையே புயல் பெரும் நாசத்தை விளைவித்துவிட்டது. 26 பேர் பலியாகி உள்ளனர். முதலமைச்சருக்கு இந்த தகவல்களெல்லாம் வந்து சேர்ந்திருக்கும் அதிமுகவின் தலைவியும் முதலமைச்சருமான ஜெயலலிதா புயல் சேதம் பற்றியோ மரண மடைந்தவர்கள் பற்றியோ ஏன் பேசவில்லை? நியாயப்படி பார்த்தால் பொதுக்குழுவை தள்ளிவைத்து விட்டு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளை புயல் தாக்கும் அபாயமுள்ள பகுதிக்கு அனுப்பியிருக்கவேண்டும். ஏன் அனுப்பவில்லை? கட்சித் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசு உட்பட 148 பேருக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதே தானே புயலால் இறந்தவர்களுக்கு அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றப்படவில்லையே ஏன்? அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களை படித்தவர்களுக்கு இப்படி பல கேள்விகள் தோன்றலாம்.

இப்படி ஏதும் கேள்விகளோ, சந்தேகமோ வந்துவிடக்கூடாது என்பதற்காகவே முக்கியமான ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறதுதொண்டர் நலன், கட்சி நலன், தமிழக நலன் கருதி புரட்சித் தலைவி அம்மா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆதரித்து, அவரது கரங்களை வலுப்படுத்தி உயிருள்ளவரை விசுவாசமாக இருப்பது என்று தீர்மானம் 24 சூளுரைக்கிறது!

Search