ஆயிரம் டன் அரிசி எங்கே?
ஜி.ரமேஷ், மஞ்சுளா
“ஒரு ரூபாயில் ஒரு பைசா மட்டுமே
ஏழைகளுக்குச் செல்கிறது. அரசு திட்டங்களின்
பணம் ஏழைகளைச் சென்றடைய வேண்டுமேயொழிய இடைத்தரகர்களுக்கும் அரசு
அதிகாரிகளுக்கும் போகக் கூடாது”. “சுறா
மீன்களைப் பற்றி நமக்குத் தெரியும். இந்த
அமைப்பு முறைக்குள் மாமிசம் தின்னும்
மீன்களும் உள்ளன என்பதை மக்கள் மறந்து
விட்டார்கள்”. இப்படி சொன்னது இந்திய
உச்சநீதிமன்றம்தான்.
சம்பூர்ண கிராமின் ரோஜ்கார் யோஜனா
(SGRY) திட்டம் ஏழைகளுக்கு பயன் பெறாமல்
இடைப்பட்டவர்களும் அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும் பணம் பண்ணுகிற திட்டமாக
மாறிவிட்டது குறித்து, உச்சநீதிமன்றம் தனது
கவலையைத் தெரிவித்துள்ளது மட்டுமின்றி
மத்திய மாநில அரசுகளுக்கு கடும்எச்சரிக்கையும்
விடுத்துள்ளது.
சம்பூர்ண கிராமின் ரோஜ்கார் யோஜனா
(SGRY), ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வராஜ்கார்
யோஜனா (SGRY) என பல திட்டங்கள்
கிராமப்புற அடித்தட்டு மக்களுக்கு குறைந்தபட்ச கூலியும் உணவும் கிடைக்க வேண்டும்
என்பதற்காக, பல்வேறு மக்கள் போராட்டங்களின் காரணமாக உருவாக்கப்பட்டன. சம்பூர்ண கிராமின் ரோஜ்கார் யோஜனா
என்கிற முழுமையான கிராம வேலைவாய்ப்புத்
திட்டம் (SGRY) அல்லது வேலைக்கு உணவு
திட்டம் 2001ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி
அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே அமலில்
இருந்த வேலை உறுதித்திட்டம் மற்றும்
ஜவகர் கிராம சம்ரிதி யோஜனா திட்டம்
ஆகியவற்றை ஒன்றிணைத்து இத்திட்டம்
உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் நோக்கமே கிராமப்புற
மக்களுக்கு வேலைவாய்ப்பு, குறைந்தபட்சக்
கூலி மற்றும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதே. அதனால்தான் இதற்குப்
பெயர் வேலைக்கு உணவுத் திட்டம். இந்த
வேலைக்கு உணவுத் திட்டத்தின் கீழ் வேலை
செய்யும் கிராமப்புற வறியவர்களுக்கு கூலியில்
70% உணவுத் தானியங்களாகவும் மீதம் 30% பணமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மற்றொரு நோக்கம் கிராமங்களுக்குத் தேவையான குளம், கால்வாய், சாலை போன்ற அடிப்படை வசதிகள், மராமத்து பணிகளைச் செய்து
கிராமங்களை மேம்படுத்துவது. ஆனால், நடைமுறையில் இந்தத் திட்டம் எந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதோ அவற்றிற்கு
நேர்மாறாக முழுக்கமுழுக்க ஊழல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இடைப்பட்டவர்களும் கொள்ளையடிக்கும் திட்டமாக மாறி
விட்டது.
வேலைக்கு உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் எல்லா மாநிலங்களிலும் இதில்
ஊழல்கள் நடந்தன. 2003ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் ஒரிசாவில்
இத்திட்டத்தில் நடக்கும் ஊழல் தொடர்பாக
அறிக்கை சமர்ப்பிக்க ஒரிசா உயர்நீதிமன்ற
வழக்கறிஞர் திரு. பிகாஷ் தாஸ், மாவட்ட
ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இருவரைக்
கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு சுந்தர்கார்
மாவட்டம் பிர்ஸ்ரா ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிகாஷ் தாஸ் 30.07.2003 தேதிய தனது அறிக்கையில் கீழ்க்கண்ட
விவரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிர்ஸ்ரா ஒன்றியம் மிகவும் பின்தங்கிய
பழங்குடி மக்கள் வசிக்கக் கூடிய வறண்ட
பகுதி என்று இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பகுதியாகும். அந்த கிராமத்தில் வேலைக்கு உணவு திட்டத்தின் தொழிலாளர்கள் தொடர்பான மஸ்டர் ரோல் பிச்சா ஓரம்
என்பவரால் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அவர் கொஞ்சம் கூட படித்தவர்
கிடையாதாம். மேலும் அங்கு உள்ளவர்கள், மஸ்டர் ரோல் என்றால் என்ன அதில் என்ன
எழுதியிருக்கும் என்று தெரியாது என்று கமிட்டியினரிடம் கூறியுள்ளார்கள். வேலை செய்த
பலருக்கு உரிய கூலி கொடுக்கப்பட்டிருக்கவில்லை. வேலை நாட்களும் கூலியும்
குறைத்துக் காட்டப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
பத்து சவுக்கு வெட்டிய முனி முன்டா
என்ற 15 வயது சிறுமிக்கு வெறும் 50 கிலோ
அரிசியை மட்டும் கொடுத்துள்ளனர். உண்மையில் அவருக்கு 70 கிலோ அரிசியும் 70 ரூபாயும்
கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது மாதிரி
பல ஏமாற்று வேலைகள். இதைவிடக்
கொடுமை தங்களுக்கான அரிசியை 14 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள காண்ட்ராக்டர்
வீட்டிற்குச் சென்று வாங்கிக் கொள்ள
வேண்டும். ஆனால், இந்திய உணவுக் கழக
கிடங்குகளில் இருந்து அரிசியை சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து கூடங்களுக்குக்
கொண்டு வர ஒரு குவிண்டாலுக்கு 50 ரூபாய்
(2003ல்) என இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட போக்குவரத்துச் செலவை மட்டும்
அவர்கள் அபேஸ் செய்து விட்டுள்ளார்கள்.
செருபேடா என்ற கிராமத்தில் சாலை
போட ரூ 14000 மட்டும் செலவழித்துவிட்டு
ரூ50,000
என செலவுக்கணக்கு காட்டியுள்ளார்கள். மேலும் 23 நாட்கள் மட்டுமே வேலை
கொடுத்துள்ளார்கள். வேலை பார்த்தவர்களுக்கு தினம் ரூ 40 மட்டும் கூலியாகக்
கொடுத்துவிட்டு அரிசியை கொடுக்க மறுத்து
விட்டார் டிடி.பானர்ஜி என்ற காண்ட்ராக்டர். இந்த அநியாயத்தை தட்டிக் கேட்ட மர்சலான்ஹரி என்பவரின் 15 வயது பள்ளிக்கூடச்
சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டப்
பிரிவுகள் 147, 148, 341, 323, 435,
149 மற்றும் ஆயுதச் சட்டம் பிரிவு 25/27 ஆகியவற்றின் கீழ்
வழக்குப் போட்டு அச்சிறுவனை எம்.சி.சி
(நக்ஸலைட்) என முத்திரை குத்திவிட்டார்கள். இதை கமிட்டியிடம் முறையிட்டபோது
அருகில் இருந்த காவல்துறை அதிகாரி அப்படி
எதுவும் இல்லை என்று கூறினார். அதைவிடக்
கொடுமை என்னவென்றால், கமிட்டி உறுப்பினரான மாவட்ட ஆட்சித்தலைவர் குற்ற வழக்குகளை இந்தப் பிரச்சனையோடு
தொடர்புப்படுத்திப் பேசவேண்டாம் என்று
கூறினார். பஞ்சாயத்து அலுவலகங்களில்
திட்டம் தொடர்பான கூலி உள்பட அனைத்து
விவரங்களும் அறிவிப்பு செய்யப்பட்டிருக்க
வேண்டும். அதேபோல், வேலை நடக்கும்
இடத்தில் குடிநீர், ஓய்வு எடுப்பதற்கான கூரை, குழந்தைகளுக்கான தொட்டில் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிக்க வேண்டும். இவை
எதுவும் எங்கும் செய்து கொடுக்கப்படுவதில்லை. இதுபோன்ற பல அநியாயங்களை
இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
2001 ஜெயலலிதா ஆட்சியின் போது
வேலைக்கு உணவுத் திட்டத்தில் பல ஊழல்கள் முறைகேடுகள் நடந்தன. வேலை செய்த
தொழிலாளர்களுக்கு அவர்களின் 70% கூலிக்கான அரிசி பெற்றுக்கொள்ள கூப்பன்
வழங்கப்படும். அக்கூப்பனை கூட்டுறவு
அங்காடிகளில் கொடுத்து அவர்கள் அரிசியைப்
பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், அரசு
அதிகாரிகள், பஞ்சாயத்துத் தலைவர்கள்
வேலைக்கு உணவு திட்டத்தின் கீழ் செய்யப்பட வேண்டிய பஞ்சாயத்து வேலைகளை
ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைத்து கமிஷன்
வாங்கிக் கொள்வார்கள். ஒப்பந்தக்காரர்கள்
வேலைக்கான ஆட்களை ஏற்பாடு செய்து
அதிகாரிகளிடம் கூலியையும் அரிசியையும்
பெற்று தொழிலாளர்களுக்கு கொடுப்பார்கள்.
இந்த நடைமுறையில் வேலைக்கு உணவு
திட்டத்தின் கீழ் வேலையை காண்ட்ராக்ட்
எடுத்து முடித்து தொழிலாளர்களுக்கு கூலியைக் கொடுத்தப் பின்பு திட்டப்படி தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய
அரிசியை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்
கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளை அடித்தார்கள். இது ஜெயலலிதா ஆட்சி முடிந்து
கருணாநிதி ஆட்சி காலத்திலும் தொடர்ந்தது. அவ்வாறு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும்
இத்திட்டத்தின் கீழ் 2006 - 2007ம் ஆண்டு
செய்யப்பட்ட வேலைக்கான 1000 டன் அரிசி
இன்றுவரை வேலை செய்த தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.
இகக(மாலெ) அந்தத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அரிசியை
பெறுவதற்காக பல போராட்டங்களை நடத்தியது. 2007 - 2008 காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் வேலைக்கு
உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது என்றும் ரூ.6892.49 லட்சம் முழுமையாகச்
செலவு செய்யப்பட்டு 22,581 சொத்துக்கள்
கிராமப்புற பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. ஆனால், வேலை செய்த தொழிலாளர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய அரிசி மட்டும் கிடைத்த
பாடில்லை.
கருணாநிதி ஆட்சியில் நடைபெற்ற நில
மோசடி, நில அபகரிப்பு ஆகியவற்றின் மீது
நடவடிக்கை எடுத்து வழக்குகள் பதிவு செய்து
வருதாக பெருமை பேசும் ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சியில் வேலைக்கு உணவுத்
திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வந்து சேர வேண்டிய அரிசிக்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தயாராக
இல்லை. இன்று வரை அந்த ஆயிரம் டன் அரிசி
எங்கே இருக்கிறது என்று மக்களுக்கு
தெரியவில்லை. ஜெயலலிதா நினைத்தால்
கண்டுபிடித்து அதை சேர வேண்டியவர்களிடம் சேர்க்கலாம். தானேயால் தாக்கப்பட்டு
வாழ்விழந்துள்ள விழுப்புரம் மாவட்ட வறிய
மக்களுக்கு அது பேருதவியாக இருக்கும். கையருகே நெய்யிருக்க மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது என்று வெண்ணெய்யை
தேடுகிறார் ஜெயலலிதா.
இத்திட்டத்தின் நோக்கமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டவர்களுக்கு அதாவது கிராமப்புற
வறிய மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர், ஆபத்தான வேலையில் இருந்து மீட்கப்பட்ட
குழந்தைத் தொழிலாளர்களின் பெற்றோர்
மற்றும் சிறப்புத் திறனற்ற, உடலுழைப்புத்
தொழிலாளர்களுக்கு நேரடியாக பயன்
சென்றடைய வேண்டும் என்பதுதான். திட்டப்
பிரிவு 1.3 இதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும்
பிரிவு 5.16.1 ஒப்பந்தமுறையையும் காண்ட்ராக்டர்கள் நியமிப்பதையும் தடை செய்கிறது. ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும்
விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு உழைத்தவர்களுக்கு சேர வேண்டியதை கொள்ளையடித்தார்கள்.
இதனால் 2008ம் ஆண்டிற்குப் பிறகு
இத்திட்டம் மாற்றப்பட்டு தமிழ்நாடு ஊரக
வேலை உறுதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இது தேசிய ஊரக வேலை
உறுதித் திட்டத்தின் ஒரு பகுதியே. இந்தத்
திட்டத்திலும் ஊழல்கள் பெருக்கெடுத்து ஓடுகிறது. தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் உள்ள முறைகேடுகளை, புகார்களை புறந்தள்ளிவிட முடியாது என காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்தியே திருவாய் மலர்ந்துள்ளார். ஊழலின் காரணகர்த்தாக்களே ஊழலை
ஒழிப்பவர்கள்போல் பேசுவதுதான் வேடிக்கை.
சம்பூர்ண கிராமின் ரோஜ்கார் யோஜனா
அமலாக்கம் மற்றும் அதில் நடக்கிற முறைகேடுகள் பற்றி அது அமலாக்கப்படும் எல்லா
மாநிலங்களிலும் விசாரணை நடத்த வேண்டும்
என்று உச்சநீதிமன்றம் பணித்துள்ளது.
இந்திய வறிய மக்கள் பசித்திருக்கும்போது
இந்திய உணவுக் கழகக் கிட்டங்கிகளில்
உணவு தானியங்கள் அழுகிப் போகின்றன. எலிகளுக்கு உணவாகின்றன. உணவுப் பாதுகாப்பு
பற்றி அய்முகூ பேசுகிறது, பேசுகிறது, பேசிக்
கொண்டே இருக்கிறது. நாடாளுமன்றத்தில்
உணவுப் பாதுகாப்பு மசோதா முன்வைக்கப்பட்டபோது, உலகிலேயே எங்கும் இல்லாதச்
சட்டம் இந்தியாவில் வரப்போகிறது என்று
அய்முகூ ஆட்சியாளர்கள் கூரையில் ஏறாமாலே
கூப்பாடு போட்டார்கள். திட்டத்துக்கு நிதி
ஒதுக்கீடு எவ்வளவு என்பதை மட்டும் இன்னும்
ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
மசோதா நாடு முழுக்க இருக்கிற உணவுப்
பாதுகாப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று
ஒரு பக்கம் ஜனநாயக சக்திகள் குரல் எழுப்பிக்
கொண்டே இருக்க மறுபக்கம் மான்டெக் சிங்
அலுவாலியா, உணவுப் பாதுகாப்புக்கு சட்டம்
தான் வரப் போகிறதே, மானியங்களை வெட்டுங்கள் என்றார்.
வறிய மக்களுக்கு நல்லது நடக்கும் என்று
அறிவிப்பு வெளியிட்டாலே அலுவாலியாக்களுக்கு
இருப்புக் கொள்வதில்லை. பெயரளவிலான
திட்டங்கள் கூட, சென்று சேர வேண்டியவர்களுக்குச் சேராமல், வேறுவழி திரும்பிவிடுகின்றன என்பதுதான் தேஜமுவின் வேலைக்கு
உணவுத் திட்டத்திலும் நடக்கிறது. அய்முகூவின் வேலை உறுதித் திட்டத்திலும் நடக்கிறது.
மத்திய அரசிடம் இருந்து தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை வாங்காமல்
விடமாட்டேன் என்று சட்டமன்ற அமர்வில்
ஜெயலலிதா பேசியபோது, அவர் உருவில்
அண்ணாத்துரையை நேரில் கண்டதாக பாலபாரதி சொன்னார். நிறுத்தப்பட்ட திட்டத்தை
ஜெயலலிதா மத்திய அரசிடம் மீண்டும்
கேட்டுப் பெற்றால் நல்லது. தமிழ்நாட்டுக்கு
வந்தபின் காணாமல் போன ஆயிரம் டன் அரிசியைக் கண்டுபிடித்தால் மேலும் நல்லது.