COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, February 16, 2012

Feb-2-4

கட்டுரை

எளிது எளிது, பெரியதொரு முறைகேட்டை சிறிதாக்குவது எளிது!

மஞ்சுளா

அவ்வையும் வள்ளுவனும் சேர்ந்து அய்முகூ அரசாங்கம் பற்றி எழுதினால் வரும் குறளாத்திச்சூடி: எளிது எளிது, பெரியதொரு முறைகேட்டை சிறிதாக்குவது எளிது; அதனி னும் பெரிய முறைகேடு செய்யப் பெறின்.

பெரியதொரு முறைகேடு

பெரியதொரு முறைகேட்டில் அரசாங்கத்துக்கு ரூ.1,76,000 கோடி இழப்பு. இந்தப் பெரியதொரு முறைகேடு ‘முறைப்படுத்தப்பட’ சில முயற்சிகள் நடக்கின்றன.

2 ஜி வழக்கில், சிதம்பரம் தலை மட்டும் தண்ணீருக்கு மேல் நிற்கிறது. அவரை விசாரணை செய்ய வேண்டும் என்பதில் தெளிவான பதில் சொல்லாத உச்சநீதிமன்றம், 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதற்குப் பிறகும் சிதம்பரமும் மன்மோகனும் குற்றமற்றவர்கள் என்று சொல்ல அடிப்படை ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற குரல் நாடு முழுக்க வலுக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்படுகிற, நிலவர்த்தக நிறுவனங்களுடன் தொலை தொடர்பு தொழில் செய்ய உடன்பாடு மேற்கொண்ட டெலினார், எடிசலாட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், மாட்டிக் கொள்ளாமல் முறைகேடு செய்ய உங்களுக்குத் தெரியாததற்கு நாங்கள் தண்டம் அழ வேண்டுமா என்று கேட்கின்றன. ரூ.14,000 கோடிக்கும் மேல் இந்தத் தொழிலில் முதலீடு செய்துள்ள டெலினார் நிறுவனம் விவரங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்தது என்று சொல்வதும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு நட்டமே இல்லை என்று கபில் சிபல் சொல்வதும் ஒன்றுதான். எடிசலாட் நிறுவனமும் ரூ.4,500 கோடி கொடுத்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது.

மன்மோகன் தன் மனக்கொந்தளிப்பை வெளிக்காட்டாமல், லாபவெறி உந்தித்தள்ள இந்திய இயற்கை வளத்தை கொள்ளையிட உள்ளே நுழைந்த பன்னாட்டு நிறுவனங்களிடமும் அட்டார்னி ஜெனரலிடமும் தீர்ப்புப் பற்றிக் கருத்துக் கேட்கிறார். இந்தத் தீர்ப்பு திருத்தப்படலாம். ஏனென்றால் அய்முகூ அரசாங்கத்தின் தலையாய பணியான மூலதனச் சேவை அதனால் பாதிக்கப்படலாம்.

2 ஜி உரிமங்களை முறைகேடாகப் பெற்றதாகச் சொல்லப்படுகிற நிறுவனங்களுக்கு, அய்டியா செல்லுலார், டாடா டெலிகாம், யூனினார், வீடியோகான் ஆகிய நிறுவனங்களுக்கு அவை பெற்ற உரிமங்களின் பேரில், அந்த உரிமங்கள் மூலம் உருவாக்கப்படவுள்ள சொத்துக்களின் பேரில் கொடுத்துள்ள ரூ.2,888 கோடி உட்பட, இந்திய பொதுத் துறை வங்கிகள், இந்திய மக்கள் பணத்தில் இருந்து ரூ.14,345 கோடி வரை கடன் அளித்துள்ளன. கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி கடன் கொடுத்துள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மட்டும், 2 ஜி உரிமங்களை முறை கேடாகப் பெற்ற நிறுவனங்களுக்கு ரூ.4500 கோடி கடன் கொடுத்துள்ளது.

பார்தி ஏர்டெல், வோடாஃபோன், ரிலையன்சின் ஆர்காம், அய்டியா செல்லுலர் உட்பட 5 தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, அவை 2006 முதல் 2008 வரை, வருவாய் பகிர்வு முறையில் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தை தவிர்க்க வருவாயைக் குறைத்துக் காட்டியதாகவும் இந்த நிறுவனங்கள் அரசுக்கு ரூ.1,637 கோடி செலுத்த வேண்டும் என்றும் ஜனவரி 31 அன்று தொலை தொடர்பு அமைச்சகம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

இந்தப் பணமெல்லாம் யானை வாய்க்குள் போன கரும்பு. திரும்பாது.

ஆன்ட்ரிக்ஸ்: அதனினும் பெரிய முறைகேடு

சர்வதேச வர்த்தக மய்யத்தின் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் தேவாஸ் மல்டிமீடியா லிமிடெட் நிறுவனம் வழக்கு தொடர்வதைத் தடுக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவான, ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் பெங்களூரு நகர நீதி மன்றத்தை அணுகியுள்ளது.

2011 பிப்ரவரியில் ரத்து செய்யப்பட்ட எஸ் பேண்ட் ஒதுக்கீட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என்று கேட்டு ஜ÷ன் 2011லேயே தேவாஸ் நிறுவனம் சர்வதேச நடுவர் நீதிமன்றம் சென்றுவிட்டது. சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை அணுகுவதே ஒப்பந்தத்துக்குப் புறம்பானது என்று ஆன்ட்ரிக்ஸ் அடித்துக் கொள்கிறது. ஆன்ட்ரிக்ஸ் தெரிவித்துள்ள கடுமையான ஆட்சேபணைகளையும் மீறி சர்வதேச நடுவர் நீதிமன்றமும் அவசரஅவசரமாக நடுவர் தீர்ப்பாயம் அமைத்து அரசு நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் லிமிடெட் லட்சத்து 50 ஆயிரம் டாலர், அதாவது, ரூ.3 கோடியே 25 லட்சம், வழக்குச் செலவுக்கான முன்தொகை செலுத்த வேண்டும் என்று சொல்லியுள்ளது.

2008ல் நடந்த பெரியதொரு முறைகேட்டை சிறியதாக்கும் அதனினும் பெரிய, 2005ல் நடந்த இந்த முறைகேடு இன்று சர்வதேச நடுவர் நீதிமன்றத்துக்கு வழக்குச் செலவுக்கு இந்திய அரசாங்கம் முன்பணம் செலுத்த வேண்டும் என்ற கட்டத்துக்கு வந்துள்ளது. விதிகளுக்குப் புறம்பாக எட்டப்பட்ட ஓர் ஒப்பந்தத்தால், இந்திய அரசின் நிறுவனம் ஒப்பந்த மீறல் வழக்கைச் சந்திக்க நேர்ந்துள்ளது. 2005க்கும் 2011க்கும் இடையில் நடந்தவை அனைத்தும் விதிமீறல்கள்.

ரூ.1 லட்சம் முதலீடு செய்து, உழைப்பு எதையும் போடாமல், சில ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்ட முடியுமா? அதுவும் ஆறே ஆண்டுகளில்? இந்தியாவில் சில மேன்மை தங்கிய உயர்அரசு அதிகாரிகள் நினைத்தால் முடியும்.

2004 டிசம்பரில் இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் முன்னாள் அதிகாரி வேணுகோபால் ரூ.90,000, உமேஷ் ரூ.10,000 முதலீடு செய்து துவங்கப்பட்ட தேவாஸ் நிறுவனத்துடன் 2005 ஜனவரியில் ஆன்ட்ரிக்ஸ் போட்ட ஓர் ஒப்பந்தப்படி இந்த நிறுவனம் அரிய இயற்கைச் செல்வமான, பாதுகாப்பு பயன்பாடுகளுக்காக இருக்கிற எஸ் பேண்ட் அலைக்கற்றையை வாழ்நாள் குத்தகைக்குப் பெறுகிறது.

அதனால் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர, வெளிநாட்டு நிறுவனங்கள் தேவாசின் பங்குகளை வாங்க, ரூ.1 லட்சம் பல ஆயிரம் கோடிகளாக மாறத் துவங்குகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் விஞ்ஞானி எம்.ஜி.சந்திரசேகருக்கு 19% பங்குகள் உள்ளன. 2010ல் அந்நிய நாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளுக்கான முன்தொகையாக மட்டும் ரூ.578 கோடியை தேவாஸ் பெற்றது.

அதற்கு மேல் கதை நீள்வதற்குள் மத்திய தணிக்கை அதிகாரி எச்சரிக்கை மணி அடிக்க ஆட்டம் வேறு திருப்பங்கள் எடுத்தது. தேவாஸ் நிறுவனத்துடன் ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் எட்டியதில் அரசாங்கத்துக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் இழப்பு என மத்திய தணிக்கை அதிகாரி சொல்ல, மத்திய கண்காணிப்பு ஆணையர் பிரத்யுஷ் சின்ஹா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும் திட்டக் குழு உறுப்பினர், பி.கே.சதுர்வேதி மற்றும் விண்வெளிக் குழு உறுப்பினர் ரோதம் நரசிம்மா குழு உயர் அதிகார பரிசீலனைக் குழுவும் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்களின் அறிக்கைகள் பல அதிகாரிகள் செயல்பாட்டில் குறைபாடுகள் இருப்பதாகவும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சொல்கின்றன.

விதிமீறல் 1: இந்த ஒப்பந்தம் போடுவது, போட்டது பற்றி மத்திய நிதி அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை.

விதிமீறல் 2: தேவாஸ் நிறுவனம் மட்டுமே மொத்த விசயத்திலும் சம்பந்தப்பட்டிருக்கும்போது, செயற்கைக் கோள் ஆற்றலை வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்த பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் பொய்த் தோற்றம் காட்டியது.

விதிமீறல் 3: செயற்கைக் கோள்களை வர்த்தகரீதியாக தனியார் பயன்பாட்டுக்கு விடுவது பற்றி பரிந்துரைப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள இன்சாட் ஒருங்கிணைப்புக் குழு 2004ல்தான் கடைசியாகக் கூடியது. இன்சாட் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தேவாஸ் ஒப்பந்தம் பற்றி தெரிவிக்கப்படவில்லை.

விதிமீறல் 4: இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் ஜிஎஸ்எடி – 6எ நிறுவ 2005லும், ஜிஎஸ்எடி - 6எ நிறுவ 2009லும் விண்வெளித் துறையிடமும் மத்திய அமைச்சகத்திடமும் அனுமதி கேட்ட போது இந்த ஒப்பந்தம் பற்றி குறிப்பிடவில்லை.

விதிமீறல் 5: அமெரிக்கா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இதே போன்ற சேவைகளுக்கு வழங்கப்படும் அலைக்கற்றை அளவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தேவாஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது மிகமிக அதிகம்.

விதிமீறல் 6: பிப்ரவரி 2006ல் ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தபோது, இரண்டாவது செயற்கைக் கோளை நிறுவ விண்வெளித் துறையிடம் நிதி இல்லை. நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் ஒப்பந்தம் போட்டது தவறு. விண்வெளிக் குழுவில் நிதியமைச்சக செயலாளரும் ஓர் உறுப்பினர். விண்வெளிக் குழுவுக்கு ஒப்பந்தம் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தால் அது நிதியமைச்சகத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கும். ஆக செயற்கைக்கோளை நிறுவுவது, அதற்கான செலவினம் ஆகியவற்றுக்கு நிதிரீதியான எந்த அதிகாரபூர்வ ஒப்புதலும் பெறப்படவில்லை.

விதிமீறல் 7: ஆன்ட்ரிக்சும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமும் ரூ.800 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. இதைத் தவிர வழக்கத்துக்கு மாறான பல்வேறு சலுகைகளும் தேவாசுக்குத் தரப்பட்டுள்ளன.

விதிமீறல் 8: பரிசோதிக்கப்படாத தொழில் நுட்பத்தில் நிதிரீதியாக பலவீனமான ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இன்னும் கூட பல்வேறு விதிமீறல்கள் பற்றி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த ஒப்பந்தப்படி உருவாக்கப்படும் செயற்கைக் கோள்களால் நட்டம் ஏற்பட்டால் அது விண்வெளித் துறைக்கு. லாபம் வந்தால் செலவுகள் அனைத்தும் விண்வெளித் துறைக்கு. இதில் தேசத்தின் பாதுகாப்பு சிக்கல்களும் உள்ளன. இப்போது அதை காரணம் காட்டித்தான் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் நாராயணசாமி சொல்கிறார். அத்துடன் தேவாஸ் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கியதற்கு பொறுப்பானவர்களாக அறிக்கைகள் சொல்கிற 4 மூத்த முன்னாள் அதிகாரிகளை வேறு பதவி வகிக்க தடை விதிக்கப்ட்டுள்ளது. இன்னும் சில அதிகாரிகள் மீது ஓய்வூதிய விதிகள் படியும், பணி விதிகள் படியும் நடவடிக்கை எடுக்கவும் அறிக்கைகள் பரிந்துரைத்துள்ளன.

மீண்டும் அதே வாதங்கள்

2 ஜி ஒதுக்கீட்டில் நட்டமே இல்லை என அய்முகூவினர் வாதாடிக் கொண்டிருந்ததைப் போல் இப்போது, எஸ் பேண்டில் இழப்பே இல்லை எனவும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. செயற்கைக் கோள்கள் பயன்படுத்தும் விண்வெளி அலைக்கற்றை வேறு, அலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்தும் புவிசார்ந்த அலைக்கற்றை வேறு என்றும், வீணாகப் போகும் விண்வெளி அலைக்கற்றையை அலையும் சேவைகளுக்கு பயன்படுத்த தேவாஸ் முயற்சி செய்ததாகக் கூட சொல்லப்படுகிறது. அப்படியானால், மத்திய அரசு தேவாசுடனான ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும்? ஏன் முன்னாள் உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்? சர்வதேச நடுவர் நீதிமன்றத்துக்கு ஏன் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்?

2011 டிசம்பர் வரை இந்திய அரசு வாங்கியுள்ள கடன் ரூ.32,76,368 கோடி. 2 ஜியில் இழப்பு ரூ.1,76,000 கோடி. அதற்குப் பிறகும் இழப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. எஸ் பேண்டில் இழப்பு ரூ.2 லட்சம் கோடி. இந்தப் பணம் இருந்திருந்தால் இந்தியக் கடன் மொத்தத்தையும் திருப்பிச் செலுத்தலாம். மிச்சமும் பார்க்கலாம்.

ஆனால், முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு மூலதனச் சேவையே பிரதானம். அதனால் அடுத்தடுத்துச் சென்றுகொண்டே இருப்பார்கள். 2 ஜி, ஆன்ட்ரிக்ஸ் என்று ஒரு பக்கம் நாட்டின் செல்வம் நாசமாய் போய்க் கொண்டிருந்தாலும் இன்னும் நாசகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். டஸ்ஸôல்ட் ரஃபால் கதை அதுதான்.

டஸ்ஸால்ட் - ரஃபால் அவசியமா?

அடிமை சமூகத்தில் அடிமை ஆண்டானை தேர்ந்தெடுக்க முடியாது. முதலாளித்துவ சமூகத்தில் கூலி அடிமை முதலாளியை தேர்ந்தெடுத்துக் கொள்வார். மனித சமூகத்தின் வளர்ச்சியில் ஏற்படுகிற மாற்றம் போல், இந்தியாவிலும் மாற்றம் ஏற்படும். அன்று யாருக்கு அடிமையாக இருப்பது என்று இந்திய மக்களால் தேர்ந்தெடுக்க முடியாது. பிரிட்டிஷார் அடிமைப்படுத்தினர். சுதந்திர இந்தியாவின் அரசாங்கத்துக்கு யாருக்கு அடிமையாக இருப்பது என்று தேர்ந்தெடுக்க முடியும். அந்த உரிமையை கேள்விக்குள்ளாக்குகிறது காலனிய உரிமையை அனுபவித்த இங்கிலாந்து. பிரான்சுக்கு அடிமையாக இருக்க இந்திய அரசாங்கம் முடிவெடுத்து விட்டதால், பவுண்டு பவுண்டாக கொட்டிக் கொடுத்தோமே, மறந்துவிட்டீர்களா என்று கேட்கிறது இங்கிலாந்து.

வாழ்வாதாரத்துக்காக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இந்திய, தமிழக அரசாங்கங்களால் பாதுகாக்க முடியவில்லை. ஆனால் 20 பில்லியன் டாலர், (ரூ.1 லட்சம் கோடி) செலவில் உருவாகப் போகும் 126 போர் விமானங்களுக்கு இந்தியர்கள் நாம் சொந்தக்காரர்களாகப் போகிறோம். அதை பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்க நமதருமை ஆட்சியாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து உடனடியாக செயல்படக் கூடிய நிலையில் முதலில் 18 ரஃபால் போர் விமானங்கள் வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் நிறுவப்படும். இதற்கு ரூ.1 லட்சம் கோடி செலவாகும்.

ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ளபடி தொழில்நுட்பத்தை பிரான்ஸ் வழங்கும் என்று பிரான்ஸ் அதிபர் சர்கோசி அறிவித்துள்ளார். ஆயினும் இந்தியாதான் அவற்றை குறிப்பாகக் கேட்டுப் பெற வேண்டும். அதாவது, தொழில்நுட்பத்துக்கு நம்நாடு அந்த நாட்டு நிறுவனத்தை காலத்துக்கும் சார்ந்து இருக்க வேண்டும்.

இப்படி ஒரு அடிமை நாடு கிடைக்கும் வாய்ப்பு கைநழுவிப் போனதை இங்கிலாந்து அரசாங்கத்தால் தாங்க முடியவில்லை. அதை பிரான்சிடம் இருந்து தட்டிப் பறிக்கக் கடும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து 40 போர் விமானங்கள் வாங்கும் போது, இந்தியா பிரான்சிடம் இருந்து 126 போர் விமானங்கள் வாங்கவில்லை என்றால், பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்துவிடாதா? ‘மாறி வருகிற போரின் இயல்பு’ என்று அமெரிக்கா பேசத்துவங்கியுள்ள இந்த நேரத்தில், அமெரிக்கா நடத்துகிற போர்களில் அக்கம்பக்கமாக நிற்க வேண்டாமா?

இந்திய விமானப் படையில் போர் விமானங்கள் மட்டும் 560. இவை தவிர போக்குவரத்து, சரக்கு, பயிற்சி என்று இன்னும் சில நூறு விமானங்கள் வைத்துள்ளோம். ஹெலிகாப்டர் வகையில் தாக்குதலுக்கானவற்றின் எண்ணிக்கை 20. இந்திய கப்பற்படையிடம் 38 விமானங்கள் தாக்குதல் பயன்பாட்டுக்காக உள்ளன. இப்போது வாங்கப் போவது பல்வினை தாக்குதல் போர் விமானம். பறந்துபறந்து அடிக்கும். யாரை அடிக்கும் என்பதுதான் பிரச்சனை. நம்நாட்டின் துணை ராணுவப் படைகள் நாட்டில் எழுகிற ஜனநாயக எதிர்ப்புக்களை சமாளிக்கத்தான் பயன்படுத்தப்படுகின்றன.

ராணுவச் செலவுகளை, அதன் செயல்பாடுகளை கேள்வி கேட்க முடியாது. அந்தப் புனிதப்பசு சவப்பெட்டி வாங்குவதில் முறைகேடு, மறைந்த ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு வீடுகள் தருவதில் முறைகேடு, ராணுவத்துக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்பது என என்ன செய்தது, செய்கிறது என பலவற்றைப் பார்த்துவிட்டோம்.

டஸ்ஸால்ட்டின் ரஃபாலைப் பொறுத்தவரை அதற்கான அவசியம் என்ன என்பதே எழுப்பப்பட வேண்டிய கேள்வி. அவசியமே இல்லை என்பது பெறப்பட வேண்டிய பதில். போர் மேகம் எதுவும் இந்திய மண்ணுக்கு மேல் இல்லை. அமெரிக்கா கூட ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறப் போவதாகச் சொல்கிறது. யாருக்காக ரஃபால்? டஸ்ஸால்ட் லாபம் சம்பாதிப்பது தவிர இதில் உடனடி இலக்கு வேறேதும் இல்லை.

2010 - 2011ல் இந்திய உழைக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய செல்வத்தின் மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.48,85,954 கோடி. இந்தியாவின் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த, பயிற்சி, அமைப்புசாரா, விவசாய தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து, சித்தரவதை செய்து, உரிமைகள் பறித்து, அடக்கி ஒடுக்கி, உருவாக்கப்பட்ட செல்வம் இது. 2009 - 2010ல் இந்திய உழைக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய செல்வத்தை விட இது ரூ.3,72,317 கோடி கூடுதல்.

இந்த செல்வத்தை உருவாக்கிய உழைக்கும் மக்கள் இந்த செல்வத்தில் இருந்து அந்நியப்படுத்தப்படுவார்கள். டஸ்ஸால்ட் நிறுவனமும் டைஃபூன் நிறுவனமும் போர் விமானம் தருகிறேன், தொழில்நுட்பம் தருகிறேன் என்று தமக்குள் போட்டிபோட்டுக் கொண்டு இந்த செல்வத்தில் பெரும்பகுதியை சர்வசாதாரணமாக அள்ளிக்கொண்டு போகும்.

உணவுப்பாதுகாப்புக்கு நிதி இல்லை, மருத்துவம், கல்வி, அடிப்படை வசதிகள் தர நிதி இல்லை, வேலை வாய்ப்பு உருவாக்க நிதி இல்லை என்று மத்திய மாநில ஆட்சியாளர்கள் பாட்டாகப் பாடுகிறார்கள். ரஃபாலுக்கு மட்டும் எங்கிருந்து நிதி வரும்?

வரும். முதலாளித்துவத்தில் லாபத்துக்கான உற்பத்திதான் நடக்கும். தேவைக்கான உற்பத்தி நடக்காது. பட்டினியால், கடன்  சுமையால் சாகும் இந்திய மக்கள், போருக்கு இலக்காகி சாகும் ஆப்கானிஸ்தான் மக்கள் பிணங்கள் மேல் இந்தப் பெருநிறுவன லாபக் குவிப்பில் முறைகேடுகள் தலைவிரித்தாடும்.

அடுத்து வருவது.......

கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் ரிலையன்சின் களிநடனம்...

Search