COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, February 1, 2012

Feb-1-14

களம்

முறையான புயல் நிவாரண நடவடிக்கைகள் கோரி போராட்டம்

துயர்துடைப்பு பணிகளில் ஆட்சியாளர்களின் அதிகாரிகளின் அலட்சியங்களை, மெத்தனப் போக்கை கண்டித்து விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை, மக்களை திரட்டி கட்சி போராடி வருகிறது.

அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்

சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ஜனவரி 14 அன்று புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கைக்காக ஜனவரி 15 அன்று சேந்தநாட்டிலும் ஜனவரி 16 அன்று திருக்கோவிலூரிலும் போராட்டங்கள் நடந்தன. கட்சி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் மற்றும் அவிதொச மாவட்ட தலைவர்கள் பங்கேற்று வழிநடத்தினார்கள்

கெடிலத்தில் ஜனவரி 23 அன்று மூன்றாவது கட்டமாக அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில் திருநாவலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.25,000 என நிவாரணம் உயர்த்தப்பட வேண்டும், கணக்கெடுப்பில் மோசடி செய்வதை தடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயத்துக்கு ஏக்கருக்கு கூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டும் என கோரி நடந்த போராட்டத்தை அதிகாரிகள் அலட்சியம் செய்ததால் போராட்டம் சாலை மறியலாக மாறியது. பின் அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து கோரிக்கையை பரிசீலிக்கிறோம் என திரும்பவும் வாக்குறுதி அளித்த பின் போராட்டம் தற்காலிகமாக முடிந்தது. போராட்டத்தில் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தேன்மொழி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பங்கேற்று பேசினார்கள். விருதாச்சலத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் புயல் நிவாரணம் உயர்த்தி வழங்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் அம்மையப்பன் பங்கேற்று பேசினார்.

ஏஅய்சிசிடியு மாநில மாநாட்டு பிரச்சாரக் கூட்டங்கள்

சென்னையில் ஏஅய்சிசிடியு மாநில மாநாட்டை விளக்கி பிரச்சார பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. அம்பத்தூரில் நடந்த கூட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநில செயலாளர்கள் தோழர் எஸ்.ஜவகர், பழனிவேல், உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் மோகன், மாணவர் கழக தலைவர் தோழர் பாரதி உரையாற்றினார்கள் கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர்கள் தோழர் .சேகர் முன்னிலையில் நடந்த கூட்டத்திற்கு தோழர் ஜி.முனுசாமி தலைமை தாங்கினார்.

ஜனவரி 23 அன்று செங்குன்றத்தில் நடந்த கூட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநில துணை பொதுச் செயலாளர் தோழர் .எஸ்.குமார், உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாவட்ட தலைவர்கள் தோழர்கள் மோகன், திருநாவுக்கரசு, ஜெயராஜ் உரையாற்றினார்கள்.

ஜனவரி 24 அன்று மாதவரத்தில் நடந்த கூட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநில பொதுச் செயலாளர் தோழர் .எஸ்.குமார், உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாவட்ட தலைவர்கள் தோழர்கள் ஜெயராஜ், திருநாவுக்கரசு உரையாற்றினர்.

நிலப்பறியைக் கண்டித்து பட்டினிப் போராட்டம்

22.01.2012 அன்று கள்ளக்குறிச்சியில் தங்க நாற்கர சாலை அமைக்க நிலம் இழந்த விவசாயிகளை கண்டு கொள்ளாத அரசுகளை கண்டித்தும் இழப்பீடு கோரியும் அகில இந்திய விவசாயிகள் மகாசபா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. கட்சி மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம் சிறப்புரையாற்றினார் மாநில கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் டிகேஎஸ். ஜனார்த்தனன், .சந்திரமோகன், அம்மையப்பன் மற்றும் வெங்கடேசன் உரையாற்றினர்.

களச் செய்திகள் தொகுப்பு: எஸ்.சேகர்

Search