‘என்ன செய்ய வேண்டும்’
லெனின்
பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்
பொருளாதாரப் போராட்டமே அரசியல்
கிளர்ச்சிக்கு மிக விரிவாகச் செயல்படுத்தத்தக்க சாதனம், பொருளாதாரப் போராட்டத்துக்கே அரசியல்தன்மை
கொடுப்பது முதலியவைதான் இன்று நம் பணி, என்றெல்லாம் ரபோச்சியே தேலோ அறைந்து கூறும்
கூற்றுக்களை நாம் பகுத்தாய்ந்தோம் அல்லவா? அவை
நம் அரசியல் பணிகளைப் பற்றி மட்டுமல்லாமல்
அமைப்புத் துறைப் பணிகளைப் பற்றியும் ஒரு குறுகிய
கருத்து வெளியிடுகின்றன.
‘முதலாளிகளுக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான
பொருளாதாரப் போராட்டத்துக்கு’
ஒரு மய்யப்படுத்தப்பட்ட அனைத்து ருஷ்ய அமைப்பு தேவையில்லை; எனவே அரசியல் எதிர்ப்பையும் கண்டனத்தையும் சீற்றத்தையும் குறிக்கும் எல்லா வெளிப்பாடுகளையும் ஒரே பொதுவான தாக்குதலிலே இணைக்கக்
கூடியதாய் அமைந்த ஓர் அமைப்பை, முழுநேரப்
புரட்சியாளர்களைக் கொண்டதாய் மக்கள் முழுவதின்
உண்மையான அரசியல் தலைவர்களின் தலைமையிலே இயங்கக்கூடியதாயுள்ள ஓர் அமைப்பை, இந்தப் போராட்டம் என்றைக்கும் உண்டாக்க முடியாது.
இது நியாயந்தான். எந்த ஓர் அமைப்பின் தன்மையும் அதன் நடவடிக்கையின்
உள்ளடக்கத்தால் நிர்ணயிக்கப்படுவது இயல்பு, தவிர்க்க முடியாததும் கூட. எனவே, மேலே
நாம் பகுத்தாய்ந்த வன்கூற்றுக்களின் மூலமாக ரபோச்சியே தேலோ அரசியல் நடவடிக்கையின்
குறுகிய தன்மையை மட்டுமின்றி அமைப்புப் பணியின் குறுகிய தன்மையையும் புனிதப்படுத்தி
நியாயப்படுத்துகிறது.
என்றும் போலவே இவ்வழக்கிலும் ரபோச்சியே தேலோ தன்னியல்புக்கு அடிபணிகிற
உணர்வு படைத்த பத்திரிகையாகவே தன்னைக் காட்டிக்கொள்கிறது. தன்னியல்பாக வளரும்
அமைப்பு வடிவங்களுக்கு அடிபணிவது, நம் அமைப்புப் பணியின் குறுகிய தன்மையையும்
பக்குவமின்மையையும் உணரத் தவறுவது, மிக முக்கியமான இத்துறையில் உள்ள நம்
‘கைத்தொழில் வகைப்பட்ட வழிமுறைகளின் குறுகிய தன்மையையும் பக்குவமின்மையையும்
உணரத் தவறுவது, - இது உண்மையிலே ஒரு நோய். இந்த நோய் நம் இயக்கத்தைப்
பீடித்துள்ளது என்று கூறுகிறேன். இது நலிவையொட்டி வருகிற நோய் அல்ல, வளர்ச்சியையொட்டி வருகிற நோய் என்பது உண்மையே.
என்றபோதிலும், தன்னியல்பான சீற்றத்தின் அலையானது இயக்கத்தின் தலைவர்களாகவும்
அமைப்பாளர்களாகவும் உள்ள நம் தலை மேலே வீசியடித்துவரும் இந் நேரத்தில்தான் பிற்பட்ட
நிலையைத் தாங்கிப் பேசுவதை எதிர்த்தும், இந்த விஷயத்தில் குறுகிய தன்மையை
நியாயப்படுத்துவதை எதிர்த்தும் சமரசத்திற்கிடமற்ற போராட்டம் நடத்த வேண்டும்.
நம்மிடையே நிலவும் தேர்ச்சிநயமின்மை குறித்து அதிருப்தியும் அதை நம்மிடமிருந்து
போக்கிக் கொள்ள வேண்டும் எனும் அசைக்க முடியாத மன உறுதியும் நடைமுறைப் பணியில்
ஈடுபடுகிற அல்லது ஈடுபடத் தயாராகிக் கொண்டிருக்கிற எல்லோரிடமும் எழுப்புவது குறிப்பாக
அவசியமாகும்.
தொடரும்