மேற்கு வங்கத்தில் மம்தாவின் தீய நடவடிக்கைகளும் மரணத்தின் நடனமும்
பர்தமான் மாவட்டத்தின் கல்டிகுரி கிராமத்தைச் சேர்ந்த கடுமையான உழைப்பாளியான சஃபர் மல்லா என்கிற விவசாயி தனது
சிறுவயதிலேயே தந்தையை இழந்த பிறகு
கடுமையான துன்பங்களுக்கு இடையில் தனது
குடும்பத்தை பராமரித்து வருகிறார். நீர்ப்பாசனம் உட்பட, இடுபொருட்கள் விலை அனைத்தும் உயர்ந்துவிட்டதால், அவர் கடன் வாங்க
நேர்ந்தது. வேறு சில கட்டணங்களை அவர்
செலுத்தவில்லை. நல்ல விளைச்சல் வந்தவுடன்
அனைத்தையும் திருப்பிச் செலுத்திவிடலாம்
என நம்பியிருந்தார். உண்மையில் நல்ல விளைச்சல்தான் கிடைத்தது. ஆனால் அவரால் மகிழ்ச்சி
அடைய முடியவில்லை. அவர் சாகுபடி செய்த
பயிருக்கான செலவைவிட மிகக்குறைவாக
சந்தை விலை இருந்தது. அரசாங்கத்திடம்
இருந்தும் எந்த உதவியும் இல்லாததால், கடன்
எதையும் திருப்பிச் செலுத்த முடியாததால், தன் குடும்ப மானத்தைக் காப்பாற்ற அவருக்கு
வேறு வழி தெரியவில்லை. தான் மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்ட பயிருக்காக
அவர் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்தை
நவம்பர் 18 அன்று குடித்துவிட்டார். அவருக்கு
வயது 17 மட்டுமே. அவருக்கு முன்பும் அவருக்குப் பிறகும் சாகுபடியாளர்கள் உட்பட
கிட்டத்தட்ட 30 விவசாயிகள் இதே போன்ற
நிலைமைகளால், கடந்த ஆண்டு அக்டோபர்
முதல் தற்கொலை செய்து கொண்டனர்.
கொல்கத்தா ட்ராம்வே கார்ப்பரேசனைச்
சேர்ந்த விக்ரம் சிங், கடந்த நான்கு மாதங்களாக ஊதியமோ, ஓய்வுகாலப் பயன்கள்
போன்ற பிற சலுகைகள் பெறாமல் இருக்கிற
மேற்கு வங்கத்தின் 5 அரசு போக்குவரத்து
கழகங்களின் தொழிலாளர்களில் ஒருவர். இந்த
போக்குவரத்து கழகங்களுக்கு திடீரென அரசு
மானியம் நிறுத்தப்பட்டது. கடன் வாங்கி
வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த
விக்ரம், புதிய, விவசாய ஆதரவு என்று வெளியில் தெரிகிற அரசிடம் இருந்து நிவாரணம்
கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார். ஆனால், நிறுவனங்களை இழப்பில் இருந்து மீட்காமல், தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைக்காமல், தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்ற போக்குவரத்து அமைச்சரின்
அறிவிப்புதான் கிடைத்தது. ஒரு செய்தி
ஒளிபரப்பில் இந்த அறிவிப்பைக் கேட்ட அந்த
28 வயது தொழிலாளி, கருவுற்றிருந்த தனது
மனைவி மற்றும் மகளை விட்டுவிட்டு, உடனே தூக்கில் தொங்கினார்.
சஃபர், விக்ரம், இன்னும் இதுபோன்றவர்களின் துயரக் கதைகள் ‘மாற்றத்துக்குப்’ பிந்தைய மேற்கு வங்கத்தின் விவசாயிகளின்
தொழிலாளர்களின் வகைமாதிரி நிலையாகும். பசியில் வாடும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நிலைக்கு மாநில அரசாங்கத்தின் அப்பட்டமான பொறுப்பற்ற கொள்கையே காரணம். மாநிலத்திலும் மத்தியிலும் உள்ள அடுத்தடுத்த
அரசாங்கங்களால் உருவான ஆழமான விவசாய
நெருக்கடியால் மனஉளைச்சலுக்கு ஆளான
விவசாயிகள் பலியாகிறார்கள். அவர்களுக்கு
உதவும் அரசியல் விருப்பம் எதுவும் திரிணாமூல்
தலைமையிலான அரசாங்கத்துக்கு இல்லை. குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து
நெல்லை அரசு கொள்முதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் தனியார் அரிசி ஆலை சொந்தக்காரர்கள், அவர்கள்
முகவர்கள் முன் கையேந்த வேண்டியிருந்தது. உற்பத்திச் செலவைவிட மிகக்குறைவான
குறைந்தபட்ச ஆதார விலையை விடக்
குறைவாக விற்க அவர்கள் விவசாயிகளை நிர்ப்பந்திக்கிறார்கள். குறைந்தபட்ச ஆதார
விலையை மத்திய அரசு நிர்ணயிப்பதால் தாம்
அவர்களுக்கு உதவும் நிலையில் இல்லை
என்று மம்தா கூறியுள்ளார். வேறு சில பிரச்சனைகளில் அவர் மத்திய அரசுக்கு வெற்றிகரமாக நிர்ப்பந்தம் கொடுத்ததாக மம்தா சொல்லிக்கொள்கிறார். அதேபோல் குறைந்தபட்ச
ஆதார விலையையும் சரியாக நிர்ணயிக்க
அவர் ஏன் செய்யக் கூடாது? சாகுபடியாளர்களை பாதுகாக்க, பிற மாநில அரசாங்கங்கள்
செய்வது போல் மாற்று ஏற்பாடாக, குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஏன் அவர்
போனஸ் வழங்கக் கூடாது? கடுமையான நிதி
நெருக்கடி உள்ளதாக அவர் சொல்கிறார். கடற்கரை விழாக்கள், இளைஞர் மன்றங்களுக்கு சலுகைகள் வழங்குவது, அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்
ஊதியத்தையும் அன்றாட படிகளையும் உயர்த்துவது ஆகியவற்றுக்கு பதிலாக, இருக்கிற
நிதியை மக்கள் உயிர்களை காப்பாற்ற அவர்
ஏன் பயன்படுத்தக் கூடாது?
இதுபோன்ற பொருத்தமான கேள்விகளுக்கு பொருத்தமான பதில் தர முடியாமல், வெட்கக்கேடான விதத்தில் அந்தச் சாவுகளை
மறுக்கிறார் மம்தா. மனித உயிர்களைப் பாதுகாக்க, அரசு மருத்துவமனைகளில் அச்சுறுத்துகிற எண்ணிக்கையில் குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்க முறையான நடவடிக்கைகள்
எடுப்பதற்கு பதில், மம்தா ஊடகங்களை, எதிர்க்கட்சிகளை, தனது கூட்டாளியான காங்கிரசைக் கூட, பிரச்சனைகளை பெரிதுபடுத்து
வதாகக் குற்றம் சுமத்துகிறார். ஒரே ஒரு
சம்பவம் தவிர, விவசாயிகள் முழுக்கமுழுக்க
சொந்தக் காரணங்களால் தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும் கடன் சுமையோ, கட்டுப்படியான விலை கிடைக்காததோ
காரணம் இல்லை என்று சொல்கிறார்.
மனித உயிர்களை பாதுகாப்பதில் வெளிப்படும் குற்றமய அலட்சியத்துக்கு ஈடாக, போராடும், அமைப்பு உருவாக்கும் மக்கள்
உரிமைகள் மீதும் அரசு தனது தாக்குதல்களை
அதிகரிக்கிறது. காவல்துறையினரும், அரசு
ஊழியர்களும் இனி அரசாங்கத்துக்கு எதிராக
சங்கம் உருவாக்கவோ, பேரணிகள் நடத்தவோ அனுமதிக்கப்பட மாட்டா என தொழிலாளர் அமைச்சர் அறிவித்துள்ளார். மறுபக்கம், அரசு போக்குவரத்து நிறுவனங்கள், அந்த நிறுவனங்களுக்கு ஆண்டுக்கணக்காக உழைத்து
வருகிற முறைசாரா/தற்காலிக/ஒப்பந்தத்
தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கும்
வேலையை துவங்கிவிட்டது.
இதுபோன்ற தாக்குதல்களால் தொழிலாளர்களும் ஊழியர்களும் போராடத் துவங்கி
விட்டனர். வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில்
உள்ள வடக்கு வங்க அரசு போக்குவரத்து
நிறுவனத்தின் பலூர்காட் டிப்போவின் ‘தற்காலிகத்’ தொழிலாளர்கள், சிஅய்டியு, அய்என்டியுசி சங்கங்கள் உட்பட்ட கூட்டுப் போராட்ட
மேடை உருவாக்கி, நிரந்தரத் தொழிலாளர்களின் முழுஆதரவுடன் வேலை நிறுத்தம் செய்தனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல இடங்களில், சணல், உருளை, நெல் விவசாயிகள் உற்பத்தி விலைக்குக்
கூட விற்க முடியாத தங்கள் விளைச்சலை
அழித்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
உண்மையில் இது ஒரு துவக்கம் மட்டுமே. புதிய அரசாங்கம் தன்னைத் தானே
வெகுவேகமாக அம்பலப்படுத்திக் கொள்கிறது. தொழிலாளர் விரோத, விவசாயிகள்
விரோத அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக, உண்மையான
இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு எதிர்ப்புப் பதாகையை உயர்த்துவதற்கான நேரம் எதிர்பார்த்ததைவிட விரைவாகவே வந்துவிட்டது.
எம்எல் அப்டேட், 07 - 13, பிப்ரவரி, 2012
முற்போக்கு
பெண்கள்
கழக
முன்முயற்சிகள்
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுத்த முடிவுகள்படி
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் ஆறாவது தேசிய மாநாட்டு தயாரிப்பு வேலைகளை திட்டமிட
சென்னை, நாமக்கல், நெல்லை, கோவை, விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சை, கடலூர், குமரி, மதுரை
மாவட்டங்களில் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மதுரை தவிர மற்ற மாவட்டங்களில் மாநிலத் தலைவர்
தோழர் தேன்மொழி கலந்துகொண்டார்.
சென்னை மற்றும் நெல்லையில் பிப்ரவரி 6 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையில்
நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதிகரித்துவரும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக, இருளர் பெண்கள்
வன்புணர்ச்சி குற்றம் புரிந்த காவலர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரியும் முழக்கங்கள்
எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டத் தலைவர்களில்
ஒருவரான தோழர் எம்.லில்லி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் தோழர்கள் தேவகி, குப்பாபாய், மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் ரேவதி, விஜயகுமாரி, மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர்
தோழர் எ.எஸ்.குமார், ஏஅய்சிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் ஜவகர், உழைப்போர் உரிமை இயக்கத்தின்
மாவட்டத் தலைவர் தோழர் மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நெல்லையில் நடந்த
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி மற்றும் தோழர்கள் அன்புச்செல்வி, சையதலி பாத்திமா ஆகியோர் கண்டன உரையாற்றினர். தேசிய மாநாட்டில் சென்னை, கோவை, நாமக்கல், கடலூர் நெல்லை, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய
மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.