அங்கே 2 ஜி... 3 எக்ஸ்...
இங்கே யாருக்கும் வெட்கமில்லை!
காம்ரேட்
காங்கிரஸ் தலைமையிலான அய்முகூ
அரசு, அடி மேல் அடி வாங்குகிறது. உச்ச
நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில்
மிகவும் கவனமாக, பிரதமர் அலுவலகத்தை
மட்டும் குற்றம் சொல்லி, பிரதமரைப் போன்றவர் அப்படி தவறு செய்திருக்க மாட்டார் என, வினோதமாக வாதிட்டு, வக்காலத்து வாங்கி
உள்ளது. சிதம்பரம், இந்தச் சுற்றில், குற்றவியல்
வழக்கிலிருந்து, மயிரிழையில் தப்பிவிட்டார். அவரது கொள்கை முடிவுக்கும், ஏதோ ஓரிரு
குற்றச்செயல்களுக்கும் தொடர்பு இருப்பதாலேயே, அவர் குற்றச் சதியில் ஈடுபட்டதாகச்
சொல்ல முடியாது என சிபிஅய் நீதிமன்றம், அவரை விட்டுவிட்டது. இந்த வில்லங்கங்கள்
தாண்டி, தேசத்தின் செல்வங்களைப் பெரு
முதலாளித்துவச் சூறையாடலுக்கு உட்படுத்தும் அரசுக் கொள்கைகளை உச்சநீதிமன்றம்
சாடியுள்ளது. 122 அலைக்கற்றை உரிமங்கள்
ரத்து செய்யப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகச் சொன்ன உச்சநீதிமன்றம், அவர்களில்
‘ஆதாயம் பெற்ற சிலர், பங்குகளில் மாற்றம்
அல்லது அந்நிய நிறுவனங்களில் புது முதலீடு
நுழைவு என்ற பெயரால், தமது பங்குகளை
விற்று பிரும்மாண்டமான லாபங்கள் ஈட்டியுள்ளனர்’ எனச் சாடியுள்ளது.
ஆ.ராசா, விண்ணப்பம் தரும் கடைசி
நாளை (கட் ஆஃப் டேட்) அக்டோபர் 1, 2007ல் இருந்து செப்டம்பர் 25, 2007 என மாற்றியதையும், முதலில் வந்தவருக்கே முதல்
உரிமை என்ற கொள்கை வகுத்ததையும் கண்டித்துள்ளது, ‘முதலில் வந்தவர்க்கு முதல்
உரிமை என்ற கொள்கை, அதன் அமலாக்கம்
பற்றி முன்னமே தகவல் தெரிந்தவர் மட்டுமே
ஆதாயம் அடைவதற்கான, ஒரு நாடகமாக
அரங்கேற்றப்பட்டது என்பதில் சந்தேகத்திற்கு
இடமேயில்லை’ எனச் சொல்லப்படுகிறது. முதலீடுகள் போட்டுள்ளோம், நுகர்வோர்
நலன்களைப் பார்க்க மாட்டீர்களா என்ற
வாதங்களையெல்லாம் புறந்தள்ளி, உரிமம் வழங்கப்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, முறைகேடான ஊழல்களில் பிறந்த அலைக்
கற்றை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, நாட்டுக்கு நல்ல செய்தியே. பெருமுதலாளித்துவப் பொருளாதாரத்துக்கும், பெருமுதலாளித்துவ அரசியலுக்கும், சாரமான பாலமே
ஊழல் என்ற, மார்க்சிய கருத்தை ஏதோ ஒரு
விதத்தில் உறுதி செய்யும். உச்சநீதிமன்றத்
தீர்ப்பு, நாடுதழுவிய ஊழல் எதிர்ப்புப் பேரலை
என்ற பின்புலத்தில் வழங்கப்பட்டுள்ளது
என்பதையும், தீர்ப்பு ஊழல் எதிர்ப்பு இயக்கங்களுக்கு வலுச்சேர்க்கும் என்பதையும் காண
வேண்டும்.
அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட
முடியாது என்பதை வாடிக்கையாகச் சொல்லி
வந்த உச்சநீதிமன்றம், பொதுநலன் கோட்பாடு
மீறப்படும்போது நீதிமன்றம் தலையிட முடியும்
என அறுதியிட்டுள்ளது. ‘பொது நலன் கோட்பாடு, அரசாங்கம், வளங்களைப் பொதுமக்கள்
அனுபவிக்கும் வகையில் பாதுகாக்கக் கோருகிறது. தனியார் உடைமை அல்லது வர்த்தக
நோக்கங்களுக்காக, அவற்றைப் பயன்படுத்த
அனுமதிக்கக் கோரவில்லை.’
உலகமய பொருளாதாரத்திற்கு ஆதரவான
ஊழல் அரசியல் என்ற தேசவிரோத குற்றத்தோடு, மத்திய அரசு நின்று விட்டதா? காஷ்மீரில் படுகொலை, பாலியல் வன்முறை போன்ற
குற்றச் செயல்களில் ஈடுபட்ட ராணுவத்தினர்
மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வந்த 42 மனுக்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது. அது பற்றி, உச்சநீதிமன்ற நீதிபதிகள்
பி.எஸ்.சவுகானும் சுவதந்திர குமாரும் மத்திய
அரசிடம் கேள்வி எழுப்பினர். ‘நீங்கள் ஆயுதப்
படைகள் சிறப்பதிகாரங்கள் சட்டத்தின் கீழ்
சென்ற ஓரிடத்தில், நீங்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாலோ, படுகொலை செய்தாலோ, குற்றவியல் வழக்கு தொடுக்க, எதற்காக அனுமதி வேண்டும்?’ மத்திய அரசு அனுமதி தராததால், காஷ்மீரில் உண்மையும் நீதியும், இராணுவத்தினரால் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. இதே மத்திய அரசின் நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜிக்கு, இந்திய நாட்டு மக்களின்
உணவுப் பாதுகாப்புக்காக, ரூ.1லட்சம் கோடி
மானியம் ஒதுக்க வேண்டும் என்பதை நினைத்தாலே, இரவுகளில் தூக்கம் தொலைந்து
போகிறதாம்.
காங்கிரஸ் எதிர்ப்பில் குளிர்காயப் பார்க்கும் பாரதிய ஜனதா கட்சி, கர்நாடகாவில்
குஜராத்தில் திரும்பத்திரும்ப வசமாகச் சிக்கிக்
கொள்கிறது. அந்நியக் கலாச்சாரத்திலிருந்து இந்தியக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ளவர்கள் எனச் சொல்லி, பல அத்து
மீறல்களை நிகழ்த்திய சங் பரிவார் கூட்டத்தின்
3 பாஜக அமைச்சர்கள், வறட்சி பற்றி கர்நாடக
சட்டமன்றம் விவாதித்துக் கொண்டிருந்த
போது, டிரிபிள் எக்ஸ் (3 எக்ஸ்) எனச் சொல்லப்படும் ஆபாசப் படங்களைச் சட்டமன்ற அமர்வில் கண்டுகளித்துக் கொண்டிருந்ததை, வீடியோ படங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. சுரங்க ஊழல் பாஜகவின், பாலியல் மற்றும் அறங்கள் சார்ந்த போலித்தனங்கள் அம்மணமாய் நிற்கின்றன. வருங்காலப் பிரதமர்
கனவு கண்டு கொண்டிருக்கும் நரேந்திர
மோடியின் தலையில் குஜராத் உயர்நீதி
மன்றம் குட்டு வைத்துள்ளது. (சம்மட்டி அடி
விழுந்திருக்க வேண்டும்) ‘1200 பேர் மரணத்திற்கு இட்டுச் சென்ற கலவரம், தடையின்றி
பல நாட்கள் அராஜகம் நிலவ வைத்தது. இவற்றைக் கட்டுப்படுத்த குஜராத் அரசாங்கம் போதுமான அளவுக்கு எதுவும் செய்யவில்லை. செயல்படாமலும் இருந்தது’ எனக் கண்டனம்
தெரிவித்த நீதிமன்றம், இசுலாமியர்களின் 500 வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதற்கு, குஜராத் அரசாங்கம் நட்ட ஈடு தர வேண்டும்
என உத்தரவிட்டுள்ளது.
பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் தன்
இயற்கையான கூட்டாளி ஜெயலலிதா எனக்
காய்கள் நகர்த்துகிறது. திருவாளர் சோவின்
நிகழ்ச்சியில், அத்வானியும் மோடியும், ஜெயலலிதாவின் தேசிய வருகைக்கு சிவப்புக் கம்பளம் விரித்தார்கள். இப்போது கர்நாடகா அட்வகேட் ஜெனரல், (அரசு தலைமை வழக்கறிஞர்) திரு.பி.வி.ஆச்சார்யா பாஜக மத்தியத்
தலைமை நிர்ப்பந்தம் தருவதால், கர்நாடக
அரசு, தம்மை ஜெயலலிதாவுக்கு எதிரான
சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றத்தில் நடத்துவதிலிருந்து விலகுமாறு வற்புறுத்துவதாக, குட்டை உடைத்துள்ளார். தாம்
ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு
வழக்கு சிறப்பு பப்ளிக் பிராசிக்யூட்டர் எனத்
தெரிந்தே, தம்மை அட்வகேட் ஜெனரலாக
நியமித்த அரசு, இப்போது ஒருவர் இரு பதவிகளில் இருக்கலாமா எனக் கேட்பது நியாயமல்ல என்கிறார். தலைமை நீதிபதி தம்மை
ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டராக நியமித்ததால், தாம் அப்பதவியில் தொடர்வதாகவும், அட்வகேட் ஜெனரலின் பதவி தமக்கு வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார். நாடாளும்
கட்சியும், நாடாளத் தயாராகும் கட்சியும்
மேலும்மேலும் அம்பலப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சட்டமன்ற விவாதங்களில், ஜெயலலிதா விஜயகாந்தோடு கூட்டணி சேர்ந்ததற்கு தாம் வெட்கப்படுவதாகவும், விஜயகாந்த் ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்ததற்கு தாம் வெட்கப்படுவதாகவும், மாறிமாறிப்
பேசுகின்றனர்.
ஜெயலலிதா, மின்வெட்டைக் கடுமையாகச் சாடி, திமுகவிற்கு எதிராக வாக்குகள்
கேட்டார். இப்போதோ தமிழகமெங்கும் 8 மணி நேரம், 10 மணி நேரம் மின்வெட்டு. இந்த
மின் வெட்டு வீராங்கனை, மின் கட்டண உயர்வுக்குத் திட்டமிட்டுள்ளார். மின் கட்டணத்தை தமது அரசு உயர்த்துவதாகச் சொல்வது சரியல்ல, மின்சார ஆணையமே உயர்த்தும்
எனப் புத்திசாலித்தனமான பாடம் வேறு சட்டமன்றத்தில் நடத்துகிறார். முகம் முழுக்க, மூளையைப் பூசிக் கொண்டார்.
தினமலர் தனக்கே உரிய வக்கிரத்துடன், ஜெ அட்டகாச முடிவு, மின் வெட்டு இனி
குறையும், உதயகுமார் கும்பல் ஓடும், சபாஷ்
என்ற தலைப்பில், முதல் பக்கச் செய்தி வெளியிடுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையப்
பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்க, ஜெயலலிதா, பேராசிரியர்கள் சீனிவாசன், அறிவுஒளி, இனியன் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்
பணி அதிகாரி விஜயராகவன் ஆகிய நால்வரைக்
கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளார். இக்குழுவின் தீர்ப்பு, ஓநாய் ஆட்டுக்கு வழங்குகிற
தீர்ப்பாக இருக்குமென, தினமலர் குதூகலம்
அடைந்து கும்மாளம் போடுகிறது. ஜெயலலிதா ஒரு திசையில் சாமர்த்தியமாக, கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவுவதை நோக்கி, காய்களை நகர்த்திவிட்டார். கருணாநிதியும்தம் பங்கிற்கு ஆடிப் பார்க்கிறார். ராசா சிறை
மீளாத மர்மம் பற்றி, உட்கட்சிப் பூசல் பற்றி, மவுனம் சாதிக்கும் கருணாநிதி, கூடங்குளம்
பகுதி மக்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பாளரான வழக்கறிஞர் பூசைதுரை கைதின்
பின்னாலுள்ள மர்மம் என்ன எனக் கேள்வி
எழுப்புகிறார். மாறன் சகோதரர்கள், அமலாக்கப் பிரிவின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பிக்க பிரணப் முகர்ஜியிடம் பரிதாபமாகக்
கெஞ்சியும் பயன் கிடைக்கவில்லை. இந்தப்
பின்னணியில், கருணாநிதிக்கு மதவாத எதிர்ப்பு
பற்றி அக்கறை, பொங்கி வருகிறது. மத்திய
அரசிடம் எப்படியும் தொங்க வேண்டியுள்ளது. ஆக இரண்டு பேருமே தந்திரமாகவும் பாதுகாப்பாகவும், அணுஉலை பாதுகாப்பு பற்றிய
மக்கள் அச்சங்களைப் போக்குக எனச்
சொல்லிக் கொண்டே, அணுமின் நிலையம்
அமைத்தே தீர வேண்டும் என்ற, மத்திய
அரசின் முடிவுக்கு ஆதரவாக நகர்கிறார்கள். மின் வெட்டிலிருந்து தீர்வு வேண்டும் என்ற
மக்கள் உணர்வோடு, கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைத்தே ஆக வேண்டும்
என்ற விஷயத்தை, முடிச்சுப் போடும் முயற்சிக்கு, ஜெயலலிதா துணை போவதாகவே
தெரிகிறது. ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் மூவருமே, வெளிநாட்டு நோக்கியா, ஹூண்டாய் கம்பெனிகளுக்கு மட்டும் தடையற்ற மின்சாரம் ஏன் என்ற கேள்விக்குள்
நுழைய மறுக்கின்றனர்.
சமச்சீர் கல்வி, மக்கள் நலப்பணியாளர்கள்
வழக்கு ஆகியவற்றில் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தைச் சந்தித்தார். இப்போது கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்திற்கு ஏன் சட்டப்படியான நலநிதியை வசூலிக்கவில்லை என உச்சநீதிமன்றம் ஜெயலலிதா
அரசை கேள்வி கேட்டு, ரூ.10,000 செலவுத்
தொகை கட்டுமாறு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும்
சாமான்ய மக்கள் வாழ்க்கை நிலைமைகளை
அறிய, ஒரு சான்று போதும். விழுப்புரம்
மாவட்டம் திருவாக்கரையில் கல்குவாரி நடத்தும் துரை என்பவர், தம்மிடம் வேலை செய்யும்
வெள்ளையன் என்பவர் தமது சக தொழிலாளியோடு சேர்ந்து சுத்தியல் ஒன்றைத் திருடிவிட்டதாகக் குற்றம் சுமத்தி, இருவரையும்
படு மோசமாகத் தாக்கினார். அதனோடு
திருப்தி அடையாமல், மனித மலத்தைத் தின்னவைத்தார். குரூரமான முறையில், இக்
காட்சியைத் தன் கைப்பேசியில் புகைப்படம்
எடுத்துள்ளார். வெள்ளையனின் மனைவி பூபதிஅம்மாளையும் அடித்துத் தள்ளியுள்ளார். வெள்ளையனின் சக தொழிலாளி வீரப்பன் மீது
குவாரி உரிமையாளர், கொடுத்த புகாரின்
மேல், காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாம்! ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் போன்றோருக்கு, இச்சம்பவம்
பற்றி பேசவோ, கவலைப்படவோ எதுவும்
இல்லை. தமிழ்நாட்டின் இந்த நிலைக்குக்
காரணமான தமது அரசியல் பற்றி, அந்த
அரசியல் சேவை செய்யும் தமிழகத்தின்
பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதை பற்றி, அவர்களில் எவருக்கும் வெட்கமில்லை.