40 கேட்கும் ஜெயாவுக்கு
2004அய் பரிசாகத் தருவோம்!
ஜெயலலிதா தன் ரத்தத்தின் ரத்தங்களிடம் பிறந்தநாள்
பரிசாக நாற்பதுக்கு நாற்பது கேட்கிறார்.
தமிழ்நாட்டில் பல பிரிவு மக்களும் ஜெயலலிதாவிடம் பல
விசயங்கள் கேட்கிறார்கள். (இந்தப் பதவி இன்னும் எத்தனை
நாட்களுக்குத் தொடரும் என்று தமிழக அமைச்சர்களும்
அதிகாரிகளும் மனதுக்குள் கேட்கிறார்கள்).
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தானே புயலால்
தாக்கப்பட்டு வாழ்விழந்த மக்கள் ரூ.2,500 வைத்து என்ன
செய்ய, எங்களுக்கு கவுரவமான மறுவாழ்வு நடவடிக்கைகள்
வேண்டும் எனக் கேட்கிறார்கள்.
விசைத்தறி தொழிலாளர்கள், சர்க்கரை ஆலைத்
தொழிலாளர்கள், திரைப்பட துறை தொழிலாளர்கள் எல்லாம்
தாறுமாறாக ஏறுகிற விலைஉயர்வை சமாளித்து கவுரவமான
வாழ்க்கை வாழ கூலி கேட்கிறார்கள். நிரந்தரமாக நிரந்தரமற்ற
தொழிலாளர்களாக நாங்கள் இருக்க வேண்டுமா என்று தமிழக
தொழிலாளர் வர்க்கம் கேட்கிறது. சலுகைகளை பன்னாட்டு
நிறுவனங்கள் அனுபவிக்க ஒடுக்குமுறையும் உரிமை மறுப்பும்
எங்களுக்கா என்று கேட்கிறது.
கூடங்குளம் மக்கள் இப்போதுள்ள தலைமுறையையும்
அடுத்தடுத்த தலைமுறைகளையும் பாதிக்கக் கூடிய ஆபத்தான
அணுஉலையை மூடச் சொல்லிக் கேட்கிறார்கள்.
பரமக்குடியில் தலித் மக்களும் விழுப்புரத்தில் இருளர்
பெண்களும் நீதி கேட்கிறார்கள்.
ஆசிரியர்கள் கொல்லப்படுகிறார்கள்; மாணவர்கள்
துன்புறுத்தப்படுகிறார்கள்; தேர்வை எதிர்கொள்ள முடியாமல்
தற்கொலை செய்துகொள்கிறார்கள்; உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். படிக்கிற வயதில்
அரசியல் எதற்கு என்று கேட்கிறீர்களே, படிக்கிற வயதில்
பட்டினியும் அவமானமும் மட்டும் எதற்கு என்று மாணவர்கள்
கேட்கிறார்கள். கல்விச் சூழல் நச்சுச் சூழலாகிவிட்ட நிலையில்
கல்வி தனியார்மயத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று
மாணவர்கள் கேட்கிறார்கள்.
வெற்று அறிவிப்புகள் வெளியிடுவது, மத்திய அரசுக்கு
கடிதங்கள் எழுதுவது என்ற சடங்குத்தனமான நடவடிக்கைகள்
தவிர மீனவர் வாழ்வு காக்க என்ன நடவடிக்கை எடுக்கப்
போகிறீர்கள் என்று தமிழக மீனவர்கள் கேட்கிறார்கள்.
முல்லைப்பெரியாறு மீது தமிழர் உரிமையை நிலைநாட்ட
பாடுபடுவதாய் போடும் வேடம் இருக்கட்டும், விவசாய
நெருக்கடியில் சிக்கிச்சீரழியும் தமிழக விவசாயத்தை, விவசாய
சமூகத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை என்று சிறுகுறு
விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கிராமப்புற
வறியவர்களும் கேட்கிறார்கள்.
வெற்று வாக்குறுதிகள், வீண்அறிவிப்புகள்
வேண்டாம், வாழ வீடும், உழுவதற்கு நிலமும்
வேண்டும் என வீடற்றவர்கள், நிலமற்றவர்கள்
கேட்கிறார்கள்.
ஜெயலலிதா தலையில் அடுத்தடுத்து
குட்டு வைக்கிற உச்சநீதிமன்றம் தமிழகத்தின்
கட்டுமானத் தொழிலாளர் நலன் காக்க சட்டம்
சொல்வதுபடி நலநிதி பிடித்தீர்களா என்று
கேட்கிறது.
தமிழக சாமான்ய மக்களின், உழைக்கும்
மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க
அவர்கள் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் விடை
சொல்லாமல், தீர்வு காணாமல், கருணாநிதியும்
காங்கிரசும் செய்த தவறுகளை மட்டும் நம்பி
இருந்தால் 40 மட்டும் எப்படி கிடைக்கும்? 2011ல் தமிழக அளவில் நடந்த அதிசயம் 2014ல்
இந்திய அளவில் நடக்கும் என்று ஜெயலலிதா
எதிர்ப்பார்க்கிறார்.
2011ல் தமிழ்நாட்டில் அதிசயம் நடத்திய
தமிழக மக்கள் 2014லிலும் நடத்துவார்கள். தமிழக மக்கள் எழுப்பும் எந்தக் கேள்விக்கும்
ஜெயலலிதா முறையான, பொருத்தமான பதில்
சொல்ல முடியாது. அவர் அமல்படுத்தி வருகிற
நவதாராளவாத கொள்கைகளில் அந்தக்
கேள்விகளுக்கே இடமில்லை.
ஜெயலலிதாவுக்கு 2004 மறந்துபோகாது. அப்போதும் அவர் ஆட்சியில் இருந்தார். அவர்
முதலமைச்சராக இருந்தபோது அஇஅதிமுக
மக்களவை தேர்தலை சந்தித்தது. கடுமையான
கோடையில் நடந்த தேர்தலில் தமிழக மக்கள்
ஜெயலலிதா அரசாங்கம் மீது கொண்டிருந்த
கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தினார்கள். அஇஅதிமுக தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும்
அனைத்து தொகுதிகளிலும் தோற்றது. அன்றும்
பிரதமர் கனவுகளில் மிதந்து கொண்டிருந்த
ஜெயலலிதாவுக்கு டில்லி பக்கம் வேலையே
இல்லை என்றானது.
அது ஜெயலலிதா பதவியேற்று மூன்று
ஆண்டுகள் கழித்து நடந்த தேர்தல். அந்த
மூன்று ஆண்டுகளில் நடத்திய மக்கள் விரோத, எதேச்சதிகார ஆட்சியின் தொடர்ச்சியை, திரட்சியை இப்போது, இந்த குறுகிய காலத்தில்
எட்டே மாதங்களில் அனுபவித்து பெரும்
பாதிப்புக்களுக்கு உள்ளாகிவிட்ட தமிழக
சாமான்ய மக்கள் ஜெயலலிதாவுக்கு தங்கள்
பொருத்தமான பதில் தர சரியான நேரம்
பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு 2004அய் பரிசாகத்
தருவார்கள்.
தூக்கம்
வருவதில்லை!
உணவு மானியத்துக்கான நிதிஒதுக்கீட்டை
நினைத்தால் மத்திய நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜிக்கு தூக்கம் வருவதில்லையாம்.
யார்யார் எந்தெந்த பிரச்சனையில் தூக்கம்
இழப்பார்கள்?
L மத்திய அமைச்சர்களை நினைத்தால்
மன்மோகனுக்கு தூக்கம் வருவதில்லை.
L சுப்ரமணியம் சுவாமியை நினைத்தால்
சிதம்பரத்துக்கு தூக்கம் வருவதில்லை.
L ஹர்வீந்தர் சிங்கை நினைத்தால் சரத்
பவாருக்கு தூக்கம் வருவதில்லை.
L அடுத்தப் பொதுக் கூட்டத்தில் உளறல்
ஏதும் இல்லாமல் பேச வேண்டுமே என்று
நினைத்தால் ராகுல் காந்திக்கு தூக்கம்
வருவதில்லை.
L மேற்குவங்க தனியார் மற்றும் அரசு, மருத்துவமனைகளை நினைத்தால் மம்தாவுக்கு தூக்கம் வருவதில்லை.
L நடந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளை நினைத்தால் மாயாவதிக்கு தூக்கம்
வருவதில்லை.
L கர்நாடகாவை நினைத்தால் சங்பரிவாரத்துக்கே தூக்கம் வருவதில்லை.
L தன்னைச் சுற்றி இருப்பவர்களை நினைத்தால்
ஜெயலலிதாவுக்கு தூக்கம் வருவதில்லை.
L அழகிரியை நினைத்தால் கருணாநிதிக்கு
தூக்கம் வருவதில்லை.
L அடுத்து யார் எங்கு என்ன மோசடியில்
கைதாவார் என்று நினைத்தால் ஸ்டாலினுக்கு
தூக்கம் வருவதில்லை.
L அடுத்து என்ன செய்வது என்று நினைத்தால் தூக்கம் விஜயகாந்துக்கு வருவதில்லை.
L அன்புமணியின் எதிர்காலத்தை நினைத்தால் தூக்கம் ராமதாசுக்கு வருவதில்லை.
L வருகிற மக்களவை தேர்தலில் யாருடன்
கூட்டணி என்று நினைத்தால் அதிகாரபூர்வ
இடதுசாரிகளுக்கு தூக்கம் வருவதில்லை.
L அன்னா ஹசாரே இனி பட்டினி இருக்க
முடியாது என்பதை நினைத்தால் அன்னா
குழுவினருக்கு தூக்கம் வருவதில்லை.
திருவாளர் பொதுஜனத்துக்கு இவர்களை
எல்லாம் நினைத்து தூக்கம் போய் நெடுநாட்கள்
ஆகிவிட்டன.