தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இககமாலெ பல ஆண்டுகளாக வேலை செய்கிறது. நாம் மாவட்டக்குழு என வைத்திருப்பது, நம் கட்சி அமைப்புச் சட்டத்திற்குப் பொருத்தமான தகுதிகள் உடையவை என்ற அளவில் தான் உள்ளன. மாநகரம் முழுவதும் பரந்து விரிந்த கட்சி, சகல பிரிவினர் மத்தியிலும் செல்வாக்குடைய கட்சி என்ற நிலை இல்லை. குறிப்பாக, நகரின் இதயப் பகுதியில் நமது வேலைகள் இல்லை. மாணவர் இளைஞர்கள் படிப்பாளிப் பிரிவினர் மத்தியில் நமது வேலைகள் துவக்க நிலையில் உள்ளன என்றும் கூட தயக்கத்தோடே சொல்ல வேண்டி உள்ளது.
ஆனால் நம் பாரம்பரிய வலிமை, தொழிலாளர்கள் மத்தியிலான நமது வேலையிலேயே உள்ளது. அம்பத்தூர், திருவொற்றியூர், திருபெரும்புதூர் பகுதிகளில் உள்ள வேலைகளே, சென்னை மாநகர வேலைகள் என அறியப்படுகின்றன. சென்னை நகருக்குள் சில பத்தாண்டுகள் கால தொழிற்சங்க வேலைகள் உள்ளன. அம்பத்தூர், சமீபத்தில் சென்னை மாநகராட்சிக்குள் கொண்டு வரப்பட்டதால், சென்னை மாநகராட்சி குடியிருப்புப் பகுதிகளில் வேலை செய்கிறோம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
திருபெரும்புதூர், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள நமது வேலைகளை அடிப் படையாகக் கொண்டே, திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம். சென்னையில், டிசம்பர் 2013 கணக்குப்படி, கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 1100. ஏஅய்சிசிடியு உறுப்பினர் எண்ணிக்கை 45,000. தீப்பொறி சந்தாதாரர் எண்ணிக்கை 1,100. மாதம் இருமுறை தீப்பொறி தனி இதழ் விற்பனை 100. மாதம் 1500 இதழ்கள் ஒருமைப்பாடு விநியோகிக்கப்படுகின்றன.
அடுத்தச் சுற்று வேலைகளைப் பற்றி, பொதுவாக சென்னை வேலைகளின் வர்க்க பூகோள இயல்பைப் பற்றிப் புரிந்து கொள்ள, 2014 தீப்பொறி சந்தா இலக்குகளைப் பார்ப்பது உதவும். படிப்பாளிப் பிரிவினர், வழக்கறிஞர்கள் மத்தியில் 100, திருபெரும்புதூர் தொழிலாளர் மத்தியில் 300, பிஎஸ்என்எல் ஊழியர்கள் மத்தியில் 50, சென்னை தொழிலாளர்கள் மத்தியில் 350, சென்னை உள்ளூர் கமிட்டி பகுதி மக்கள் மத்தியில் 100, அம்பத்தூர் தொழிலாளர்கள் மத்தியில் 400, அம்பத்தூரில் உள்ள உள்ளூர் கமிட்டிகள் பகுதி மக்கள் மத்தியில் 600. மொத்தம் 1900.
அறிவாளிப் பிரிவினர், படிப்பாளிப் பிரிவினர் மத்தியில் வேலை என்பது நமக்குத் தொடர்ந்து பலவீனமாகவே உள்ளது. மாநகரின் மய்யப் பகுதியில் மாணவர்கள் மத்தியில் வேலை இல்லை. ஆனால் கடந்த ஓராண்டாக, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் மூலம், உயர் நீதிமன்ற வளாகத்தில் விடாப்பிடியாகவும் தொடர்ச்சியாகவும் துணிச்சலாகவும் ஜனநாயகக் கோரிக்கைகள் மீது போரட்டங்கள் நடத்தி வருகிறோம். கடைசியாக, பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றி விசாரிக்கும் குழுவை சென்னை உயர்நீதி மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்து கிறோம்.
நம் இளைஞர்கள் வேலையை, இளம் தொழிலாளர் மத்தியிலான வேலையாக மாற்றி உள்ளோம். திருபெரும்புதூரில் நமது வேலை தொழிற்சங்க வேலையாகச் சுருங்காமல் இருக்க, ஆரோக்கியமற்ற தொழிற்சங்கப் போட்டி எதிலும் நாம் நுழையாமல், சில லட்சம் இளம் தொழிலாளர்கள் பிரச்சனையை, ஓர் அரசியல் பிரச்சனையாக்க முயற்சிக்கிறோம்.
ரஷ்யப் புரட்சி தினமான நவம்பர் 7ல், ஒரு கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளோம். குறைந்தபட்ச சம்பளம் ரூ.15,000, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும் தொழிற்சங்க சட்டத்திருத்தம், ரெகுலர் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் தொடர்பான நிலையாணைகள் திருத்தச் சட்டம் 47/2008க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுதல் போன்ற கோரிக்கைகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஒரு லட்சம் கையெழுத்துக்கள் தொட்டுவிடும் தூரம்தான் என்ற நம்பிக்கை தந்துள்ளன. இயக்கம் துவங்கிய பிறகு, ஒரு நிறுவனம் தொடர்ந்த சிவில் வழக்கில் ஆட்டோ பாகம் தயாரிக்கும் தொழில் பொதுச் சேவை நிறுவனம் எனக் குறிப்பிட்டதை விசாரிக்கத் துவங்கி, ஜெயலலிதா அரசு ஆட்டோமொபைல் தயாரிப்பு தொழிலை பொது சேவை என அறிவித்துள்ளதையும், ஆறு மாதத்திற்குப் பிறகு நீடிக்காததையும், தெரிந்து கொண்டோம். ஆட்டோ மொபைல் தயாரிப்பு ஆட்டோமொபைல் உதிரி பாகத் தயாரிப்பு தொழில்களை பொது சேவையாக அறிவிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் சேர்த்துக் கொண்டுள்ளோம்.
நோக்கியா, நோக்கியா தொடர்புடைய 30,000 தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு நியாயம் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். தமிழக அரசு நோக்கியா முதலாளிக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒரு வருடத்திற்கு ஒரு ரூபாய் குத்தகைக்கு தந்துள்ளபோது, முதலீடு போடும் அளவுக்கு வரிச்சலுகை தந்துள்ளபோது, 30,000 தொழிலா ளர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்ற கேள்வியை எழுப்புகிறோம்.
திருப்பெரும்புதூரில் ஒரு நாள் வேலை நிறுத்தம் என்ற விதையைத் தூவுகிறோம். பாடுபட்டுப் பயிர் செய்தால் அறுவடை நிச்சயம்.
வெகுமக்கள் அரசியல் வழி - கவனம் குவிக்கப்பட்ட வேலைப் பகுதி - மேலிருந்து கீழ் வரை வலைப்பின்னல் என்பவற்றிற்குச் செயல் வடிவம் தர அம்பத்தூரில் முயற்சி செய்கிறோம்.
இயக்கத்தின் செயல்பரப்பை எப்போதும் விரிவுபடுத்துவது, அதே நேரம் வேர்க்கால் மட்ட கட்சியமைப்பை செயலூக்கப்படுத்துவது - பார்த்த மாத்திரத்திலான இந்த எதிர்மறை களின் அய்க்கியமே - கம்யூனிஸ்ட் வேலை நடையின் சாரம் என்கிறார் தோழர் வினோத் மிஸ்ரா.
நமக்கு அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் மத்தியிலான வேலையில், குடியிருப்புப் பகுதி வேலையில் ஒரு நீடித்த நிலைத்த அடித்தளத்தைப் பெறுவதும், செயல்துடிப்புள்ள ஓர் அமைப்பு வலைப்பின்னலை உருவாக்குவதும் சவாலாகவே உள்ளன. அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்து கொண்டே, கருவான ஓர் ஊழியர் குழாம் கொண்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து வேலை செய்து கொண்டே, தீர்வுக்கான தேடலில் இருக்கிறோம்.
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுமாராய் 6 லட்சம் பேர் இருப்பதாகவும் சுமாராய் வாக்காளர்கள் 4 லட்சம் பேர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் இருப்பதாக ஒரு கணக்கு வைக்கலாம். 1.25 லட்சம் குடும்பங்கள் வறியவர்கள், கீழ் நடுத்தர வர்க்கம் என்றே இருக்கிறார்கள். (விவரங்கள் அனைத்தும் தோராயமானவை, வேலை தீவிரமடைய விவரங்கள் துல்லியமாகும்). இவர்களுடைய தேவைகள் விருப்பங்கள் கவலைகளோடு உறவாடுவது, அவற்றை அரசியல் தளத்தில் விவாதத்திற்குரிய கோரிக்கைகளாக மாற்றுவது என்பதையே, வெகுமக்கள் அரசியல் வழி என்றும், இப்படி செய்வதன் மூலமே வெகுமக்கள் செல்வாக்கு விரிவடையும் என்றும் சொல்ல முடியும்.
உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.15,000, வீடற்ற அனைவருக்கும் ஜெயலலிதா வாக்குறுதிப்படி வீட்டுமனை, அம்பத்தூரில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, அம்பத்தூரில் அரசு கல்லூரி, மேல்நிலைப் பள்ளிகள், அம்பத்தூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் போன்ற கோரிக்கைகள் மீதான கையெழுத்து இயக்கம், நிச்சயம் மக்கள் மனங்களுக்கு நெருக்கமானவை. குப்பை அகற்றுதல், தையல் தொழிலாளர் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்தல் கோரிக்கைகளை சேர்த்துக் கொள்ள முடியும். மக்களுடைய வருமானம், கல்வி, மருத்துவம், வீட்டுமனை, கவுரவம், உரிமைகள் போன்றவை அடிப்படையான ஜனநாயக மற்றும் வாழ்வுரிமைகள் ஆகும். மத்தியிலும் மாநிலத்திலும் அரியணையில் உள்ள கொள்கைகள், மக்களுக்கு எதிரானவை, பெரும்தொழில் குழுமங்களுக்கு ஆதரவானவை என்பதை நாம் இந்த இயக்கத்தில் எடுத்துச் சொல்ல உள்ளோம்.
பாஜக மோடி கைகளில் அதிகாரக் கடிவாளங்கள் செல்வது, நாட்டிற்கும் நாட்டு மக்களுக் கும் நல்லதல்ல என்பதையும், தமிழகத்தில் பெரும்தொழில் குழுமங்களையும் மதவாத சாதீய சக்திகளையும் பாதுகாப்பதில் ஜெயலலிதாவே முதன்மையானவர் என்பதையும், நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இருக்கிறோம். இகக, இககமா ஜெயலலிதாவுக்கு வெண் சாமரம் வீசப் புறப்பட்டுவிட்ட நேரத்தில், நாம் துணிச்சலாக புரட்சிகர போராடும் இடதுசாரி குரலை உரத்து எழுப்ப உள்ளோம்.
யார் மூலம் எப்படி இந்த வேலைகளைச் செய்ய உள்ளோம்? அம்பத்தூரில் ஏஅய்சிசிடியு வில் சங்கமாக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மத்தியில் ஒரு துடிப்பும் வேகமும் தோன்றி உள்ளது. மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகள், வாரத்தில் 3 தினங்கள், சங்கப்பணி தாண்டி சமூக மாற்றப் பணியில் ஈடுபடும் வகையில் நமது தொழிலாளர் முன்னணிகளை, கட்சி உள்ளூர் கமிட்டிகளுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர்மட்ட கமிட்டிகளை, அவற்றின் கீழுள்ள கிளைகளை, உறுப்பினர்களை இதற்கு தயார் செய்கிறோம். இந்த திசையில் ஒருகட்ட உறுப்பினர் சந்திப்பு நடந்துள்ளது.
டிசம்பர் 22 நடக்கவுள்ள மாவட்ட மாநாட்டிற்குள், உள்ளூர் கமிட்டி மாநாடுகள், கிளைப் பேரவைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கையெழுத்து இயக்கக் கோரிக்கைகள் மீது 2014 ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி துவக்கத்தில் 2000 பேர் வரை ஓர் அணிதிரட்டல் செய்ய முயற்சிக்கிறோம்.
கையெழுத்து இயக்கம் நடக்கும்போதே, உழைப்பவர் உரிமை இயக்க உறுப்பினர் சேர்ப் பில் இறங்குவது எனவும், அந்த நேரத்திலேயே உழைப்பவர் உரிமை இயக்கத்திற்கு இயன்ற வரை தெருவாரியாக கிளைகள் போடுவது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் வேலை என்பதையே குடியிருப்புப் பகுதி வேலை/நகர்ப்புற வறியவர்கள், கீழ் நடுத்தரப் பிரிவினர் வேலை என்று செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
ஜனவரி அல்லது பிப்ரவரி நடைபெறும் அணிதிரட்டல், நாடாளுமன்றத் தேர்தல் வேலை, வாக்கு சேகரிப்பு ஆகிய அனைத்து வேலைகளையும், கட்சி உள்ளூர் கமிட்டிகள் கிளைகள், உழைப்பவர் உரிமை இயக்கம் மூலம் செய்வது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சி மற்றும் தொழிற்சங்கத் தோழர்கள் அனைவரையும், இக்கடமைகளை நோக்கித் திரட்டிக் கொள்ளும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.