....வளர்ச்சியின் அடிப்படை கொள்கை என்பது, வளங்களின் மீது மக்களின் கட்டுப்பாட்டை உத்தரவாதம் செய்வது மற்றும் அந்த வளங்களிலிருந்து பெறும் வருவாயை மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்துவதை உத்தரவாதம் செய்வது என்பதாக மறுவரையறை செய்யப்பட வேண்டும்.....
....புவி வெப்பமடைதலில் இருந்து, தொழிற்சாலை மாசு, நீராதாரம் மற்றும் வனவளங்கள் குறைவது வரையான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர்கள் முன்வைக்கும் தீர்வு, இந்தப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும் சந்தை மற்றும் லாப வரையறைகளை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. மேலும், இதற்காக முன்வைக்கப்படும் தீர்வுகள் மூலம் சுற்றுச்சூழல் தரந்தாழ்ந்து போவது மற்றும் சுற்றுப்புறவியலின் சேதம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பரம ஏழைகள் மற்றும் சமூகத்தின் ஓரஞ்சாரத்தில் இருக்கும் மக்கள் பிரிவினர் ஆகியோரே சுற்றுச்சூழல் பாதிப்பின் மொத்த பளுவையும் சுமக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். புரட்சிகர இயக்கம் இந்த வரையறையை எதிர்த்துப் புறம்தள்ளுகிற அதே வேளை, சமூகத்தின் மறுக்கப்பட்ட மற்றும் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பிரிவினரின் நலன்களில் ஊன்றி நின்று, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுப்புறவியல் பற்றிய முற்றிலும் மாறுபட்ட வரையறையை வலுவாக முன்னெடுக்க வேண்டும்.
(இகக மாலெ 9ஆவது காங்கிரஸ் அறிக்கையில் இருந்து)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியைப் பாதுகாக்க, அதன் சுற்றுச்சூழலை புத்துருவாக்கம் செய்ய, அந்தப் பகுதியில் தாக்குப்பிடிக்கக் கூடிய வளர்ச்சியை திட்டமிட, மேற்கு தொடர்ச்சி மலையில் நுட்பமான சுற்றுச் சூழல் பகுதியை வரையறுக்க, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மாதவ் காட்கில் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழு அமைத்தது. 2011 ஆகஸ்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை 2012 மே மாதம்தான் அரசு வெளியிட்டது.
இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கை மீது சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் தெரிவித்த கருத்துக்களை (எதிர்ப்புக்களை) கணக்கில் கொண்டு, நீடித்த மற்றும் சமமான வளர்ச்சிக்கான அனைத்தும் தழுவிய அணுகுமுறையை வளர்த்தெடுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் உயர்மட்ட செயற்குழு அமைத்தது. 2013 ஏப்ரல் மாதம் இந்தக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு நகல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட பிறகு இறுதி அறிவிப்பாணை வெளியிடப்படும் எனச் சொல்லியுள்ளது.
நுட்பமான சுற்றுச்சூழல் பகுதி
கஸ்தூரிரங்கன் அறிக்கையில், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் 60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நுட்பமான சுற்றுச் சூழல் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் குஜராத், கோவா, தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லாத ஆட்சிகள் நடக்கின்றன. இவை காங்கிரஸ் அல்லாத ஆட்சிகளே தவிர கார்ப்பரேட் எதிர்ப்பு ஆட்சிகள் அல்ல. மகாராஷ்டிராவில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் அமைத்துள்ள கூட்டணி ஆட்சியில் உள்ளது.
கஸ்தூரிரங்கன் அறிக்கை, மொத்த மேற்கு மலைத்தொடர் 1,64,280 சதுர கிமீ என்று அறிக்கை வரையறுக்கிறது. இதில் 96,031 சகிமீ பாரம்பரிய நிலப்பரப்பு என்றும் 68,249 சகிமீ இயற்கை நிலப்பரப்பு என்றும் இந்த இயற்கை நிலப்பரப்பில் 59,940 சகிமீ நுட்பமான சுற்றுச் சூழல் பகுதி என்றும் வரையறுக்கிறது. இந்த வரையறையை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.
மகாராஷ்டிராவில் 2,159 கிராமங்கள், கேரளாவில் 123 கிராமங்கள், தமிழ்நாட்டில் 235 கிராமங்கள், கோவாவில் 99 கிராமங்கள் குஜராத்தில் 64 கிராமங்கள் கர்நாடகாவில் 1576 கிராமங்கள் கஸ்தூரிரங்கன் அறிக்கை சொல்லும் நுட்பமான சுற்றுச்சூழல் பகுதிக்குள் வரும்.
அறிக்கைக்கு ஆதரவு
அறிக்கை திருத்தப்பட வேண்டும் என்றும் களநிலைமைகளை கணக்கில் கொண்டு இன்னும் சில பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உம்மன் சாண்டி சொல்கிறார். ராகுல் காந்தியும் உம்மன் சாண்டி சொல்வதைப் பற்றி தானும் விவாதிப்பதாக உறுதியளித்துள்ளார். கர்நாடகா அரசாங்கம் அனைத்து கட்சி குழு அமைத்து விவாதிக்கப் போவதாக சொல்கிறது. கர்நாடகாவில் வளர்ச்சி நடவடிக்கைகள் தடைபட்டுவிடும் என்று சட்ட அமைச்சர் சொல்லியுள்ளார்.
அறிக்கை அமலாக்கப்பட வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் சொல்கிறது. அறிக்கைக்கு ஆதரவான மற்றொரு கருத்து அறிக்கையால் பாதிக்கப்படுபவர்கள் மணல் மற்றும் கனிம குவாரி சொந்தக்காரர்கள்தான் என்கிறது.
நுட்பமான சுற்றுச் சூழல் பகுதியான 37% பகுதியில்தான் முல்லைப் பெரியாறு அணையும் வருகிறது, அதனால் கட்டுமானப் பணிகளுக்கு அங்கு வாய்ப்பில்லை, அணை மீது கேரள அரசாங்கம் கைவைக்க முடியாது என்பதால் அறிக்கையை அமலாக்க வேண்டும் என்று வைகோ சொல்கிறார். எதிர்நிலையில் இருந்து, இதே காரணத்துக்காக, இந்தப் பிரச்சனை உரிய மேடைகளில் எழுப்பப்பட வேண்டும் என்று கேரள நீர் வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் சொல்கிறார்.
அறிக்கைக்கு எதிர்ப்பு
கஸ்தூரிரங்கன் அறிக்கை கேரளாவில் எதிர்ப்பைச் சந்திக்கிறது. இககமா போராட்டம் நடத்துகிறது. கேரள மக்களின் முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழகப் போக்குவரத்து பாதிக்கிறது. கேரள மலைவாழ் மக்கள் 30 லட்சம் பேர் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு அறிக்கை வழிவகுக்கிறது. சில லட்சம் கேரளவாழ் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் குரல்கள் எழுகின்றன.
கஸ்தூரிரங்கன் குழுவுக்கு முன்பு அமைக்கப்பட்ட காட்கில் குழு பரிந்துரைகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்று காட்கில் குழு தலைவர் மாதவ் காட்கில் சொல்கிறார்.
அறிக்கை அமலானால் ஏற்படக்கூடிய விளைவுகள்
நுட்பமான சுற்றுச்சூழல் பகுதியான 37% பகுதியில் சுரங்க நடவடிக்கைகள், மணல் குவாரிகள், ஆக்கிரமிப்புகள், அனல்மின் நிலையங்கள், எண்ணெய், சிமிண்ட், வேதிப்பொருள் ஆலைகள், அணைகள் ஆகிய செயல்பாடுகளை அறிக்கை தடை செய்கிறது. இங்கு வாழும் மக்களும் வெளியேற்றப்படுவார்கள். 60% பகுதியில் என்னமும் செய்து கொள்ளலாம்.
மக்கள் வாழும் 60% பகுதியில் மணல் மற்றும் கனிம குவாரிகள் இயங்குகின்றன. கோவாவில் இந்தப் பகுதியில்தான் ரூ.35,000 கோடிக்கு சுரங்க ஊழல் நடந்தது என காட்கில் தனது திறந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 37% பகுதியில் பூங்காக்கள், அடர்வனங்கள், பாரம்பரிய நிலப்பகுதிகள் உள்ளதால் அந்தப் பகுதி ஏற்கனவே மத்திய மாநில சட்டங்களின் பாதுகாப்பின் கீழ் வருகிறது.
காட்கில் குழு அடையாளப்படுத்திய நுட்பமான சுற்றுச்சூழல் பகுதியை விட கஸ்தூரிரங்கன் குழு வரையறுத்துள்ள நுட்பமான சுற்றுச் சூழல் பகுதியின் அளவு குறைவு. காட்கில் குழு மொத்த பகுதியையும் நுட்பமான சுற்றுச்சூழல் மண்டலம் 1, 2, 3 என அடையாளப்படுத்தி அவற்றில் சுற்றுச் சூழலை பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாகவும் படிப் படியாகவும் ரத்து செய்ய வேண்டும் என்று முன்வைத்தது.
கஸ்தூரிரங்கன் அறிக்கை வெறும் 37% பகுதியை மட்டும் நுட்பமான சுற்றுச்சூழல் பகுதி என்று அறிவித்ததோடு, காட்கில் குழு ஒப்புதல் மறுத்த அதிரப்பள்ளி அணை மற்றும் குன்டியா புனல்மின் நிலையம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்யலாம் என சொல்கிறது. மகாராஷ்டிராவின் சிந்தூர்துர்க் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் எந்த சுரங்க நடவடிக்கையும் கூடாது என காட்கில் அறிக்கை சொன்னதில் இருந்து கஸ்தூரிரங்கன் அறிக்கை மாறுபட்டு இந்த இரண்டு மாவட்டங்களில் நுட்பமான சுற்றுச் சூழல் பகுதிக்குள் வரும் இடங்களில் மட்டும் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கிறது.
இந்த 37% பகுதியிலும் சுரங்கமோ, வேறு தொழிலோ செய்ய நிலம் வேண்டும் என்றால், பகுதி மக்கள் மத்தியில் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்கள் ஒப்புதல் இருந்தால் செய்து கொள்ளலாம். நிலம் அபகரிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் பொதுவாக எப்படி நடக்கின்றன என்பது பற்றி நமக்கு நல்ல அனுபவம் உண்டு.
வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் எனவே அமல்படுத்தக் கூடாது என்று ஒரு சாராரும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் குவாரி முதலாளிகள்தான் பாதிக்கப்படுவார்கள் எனவே அறிக்கை அமலாக வேண்டும் என இன்னொரு சாராரும் சொல்லிக் கொண்டிருக்க, தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு செய்தி குவாரி முதலாளிகளுக்கு அறிக்கை ஒரு வகையில் பாதுகாப்பு அளிக்கிறது என்று சொல்கிறது.
அறிக்கையின் வழிகாட்டுதல்கள், 2013 ஏப்ரல் 17க்கு முன் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு விலக்கு அளிக்கிறது. அதன்படி, கேரளாவில் இடுக்கி பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் கேரளாவின் மாநில சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் அனுமதி மறுத்த, காட்கில் தலைமையிலான மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழு நுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் என அறிவித்த பகுதியில் வருகிற அய்ந்து கிரானைட் குவாரிகளுக்கான விண்ணப்பங்களை இப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். அந்த குவாரிகள் கஸ்தூரிரங்கன் அறிக்கை வரையறுக்கிற நுட்பமான சுற்றுச் சூழல் பகுதிகளிலேயே வரக்கூடும் என்றாலும் இப்போது, அந்த குவாரிகளுக்கு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நியூட்ரினோ ஆய்வுக் கூடம்
கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களின் 235 கிராமங்களை அறிக்கை நுட்பமான சுற்றுச்சூழல் பகுதியாக அறிவிக்கிறது. தேனி மாவட்ட மக்களின் வாழ்வை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிற நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிற பகுதிகள் இந்த வரையறைக்குள் வரவில்லை.
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் அங்கமே நியூட்ரினோ திட்டம். அணுசக்திக்கு அடிப்படையான நவீன (துகள்) அறிவியலில் அமெரிக்கா முன்னேற முயற்சிக்கிறது. சிகாகோவில் ஃபெர்மிலேப் எனப்படுகிற இயற்பியல் கூடம் அய்க்கிய அமெரிக்க அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படுகிற ஆற்றல் மிக்க நியூட்ரினோ கற்றைகளை பெற்றுக் கொள்ள, புவி உருண்டையின் நேர்எதிர் பக்கத்தில், மேற்கு மலைத்தொடரில் ஆய்வுக் கூடம் தேவைப்படுகிறது. ஃபெர்மி லேபிற்கு பங்களிப்பு செய்வதே இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம்.
தேனி மாவட்டம் போடி மேற்கு மலைப்பகுதியில் உத்தமபாளையம் தாலுகாவில், தேவாரம், பொட்டிபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள அம்பரப்பர் மலை/அம்பரசர்கரடு எனப் படுகிற 1300 மீட்டர் உயரமுள்ள குன்றில் 1 கி.மீ. அடியில் மலையைக் குடைந்து பாதாள ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது.
இந்திய அணுசக்தி துறை, அமெரிக்க உதவியுடன் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க சாலைகள், வேலிகள் அமைக்கும் பணியை துவங்கிவிட்டது.
திட்டத்தில் பாறைகள் அகற்றப் பயன்படுத்தப்படும் ஜெல்லட்டின்கள், மேற்கு மலைத் தொடரில் நிலநடுக்கங்களை தூண்டும், மாசுபடுத்தும், கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 12 அணைகளை பாதிக்கும், 2018ல், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், சிகாகோ ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்பட்டு போடி ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் நியூட்ரினோ கற்றை இந்திய ஆய்வகத்தின் சுற்றுப்புறத்தில் கதிர்வீச்சையும், கழிவுகளையும் ஏற்படுத்தும், 50 லட்சம் தமிழக, கேரள மக்களின் வாழ்வுரிமை பாதிக்கும், மேற்குத் தொடர் மலைகளை பேராபத்திற்குள் தள்ளிவிடும் என விஞ்ஞானி வி.டி.பத்மநாபன் சொல்கிறார்.
பகுதி மக்களின் வாழ்வுரிமைக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும்கேடு விளைவிக்கக்கூடிய இந்தத் திட்டத்திற்கு, ஜெயா அரசாங்கம், 2011ல் அனுமதி வழங்கியுள்ளது. அய்முகூ எதிர்ப்புப் போராளியான ஜெயலலிதா, தமிழ்நாட்டின் 235 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நிலையிலும் கஸ்தூரிரங்கன் அறிக்கைக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
கஸ்தூரிரங்கன் அறிக்கை வேண்டாம்
மொத்தத்தில், கஸ்தூரிரங்கன் அறிக்கை வளர்ச்சியின் பெயரில் மக்கள் வாழ்வுரிமையை பறித்து கார்ப்பரேட்களை கொழுக்க வைக்கும் அய்முகூ அரசின் ஆதாரக் கொள்கையை நடைமுறையை மறுஉறுதி செய்கிறது. நிலம் பறிப்பு, வாழும் இடங்களில் இருந்து வெளியேற்றப் படுவது, வாழ்வுரிமை இழப்பது, சுற்றுச்சூழல் கேடுகளுக்கு ஆளாவது என்று, லட்சக்கணக்கான மலைவாழ் மக்கள் வாழ்வு பறிபோவதோடு அவர்களின் அடுத்தடுத்த சந்ததியினர் வாழ்வும் சிதைக்கப்படுவதற்கான திட்ட முன்வரைவாகவே அறிக்கை உள்ளது.
ராகுல் காந்தியும் ஆர்எஸ்ஸ÷ம் ஆதரிக்கிற ஜெயலலிதா மவுனம் காக்கிற ஒரு திட்டத்தில் இந்திய, தமிழக சாமான்ய மக்களுக்கு கேடு தவிர வேறென்ன இருக்க முடியும்? கஸ்தூரிரங்கன் அறிக்கை வேண்டாம் என உழைக்கும் மக்கள் உரக்கச் சொல்ல வேண்டும்.